Monday, 29 September 2025

அவதூறு சட்டமெனும் ஒரு ஆயுதம் - உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கிறதா?

 


குற்றவியல் சட்டத்திலிருந்து அவதூறு நீக்கப்பட வேண்டிய காலம் வந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றத்திலிருந்து எழுந்துள்ள குரல் நாடு தழுவிய விவாதத்திற்கு ஒரு தொடக்கப் புள்ளியை வைத்திருக்கிறது. அந்தப் புள்ளியை வைத்திருப்பவர் உச்சநிதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்.


தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தொடர்பாக ‘தி வயர்’ இணையத்தள ஊடகம் வெளியிட்ட ஒரு செய்திக் கட்டுரைக்காக அதன் ஆசிரியர், கட்டுரையாளர் மீது தில்லி பெருநகர நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அனுப்பப்பட்ட அழைப்பாணைகளை (சம்மன்) விலக்கக் கோரி,  ஊடக நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதனை எம்.எம். சுந்தரேஷ், எஸ்.சி. சர்மா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.


செப். 22இல் மேல்முறையீட்டை எடுத்துக்கொண்டபோது, “இவையனைத்தையும் குற்றமற்றதாக்க சரியான காலம் இது,” என்று சுந்தரேஷ் கருத்துக் கூறியிருக்கிறார். அப்படியானால் தனி  மனிதர்கள் பற்றியோ அரசியல் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் பற்றியோ அவதூறாகப் பேசலாமா, எழுதலாமா? குடிமக்கள் ஒவ்வொருவரின் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய நீதிமன்றமே அவதூறுத் தாக்குதல்களைத் தண்டனைகளிலிருந்து விடுவிக்கலாமா?

ஒரு கட்டுரை…

இதற்குள் போவதற்கு முன், இந்தக் குறிப்பான வழக்கின் கதையைப் பார்க்கலாம். 2016ஆம் ஆண்டில் ‘தி வயர்’ தளத்தில், “ஜேஎன்யு வளாகம் திட்டமிட்ட பாலியல் மோசடிக் கூடாரமாகிவிட்டது எனக் கூறுகிறது ஒரு ஆவணத் தொகுப்பு;  வெறுப்புப் பிரச்சாரம் என்கிறார்கள் மாணவர்களும் பேராசிரியர்களும்” என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அரசியல் பிரிவு ஆசிரியர் அஜோய் ஆசீர்வாத் மஹாபிரஷாஸ்தா அதை எழுதியிருந்தார்.


2015ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்த ஆவணத் தொகுப்பு (டோசியர்) சட்டத்துறை பேராசிரியர் அமிதா சிங் தலைமையில் 11 ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டதாகக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பாகிய ஏபீவிபி  ஆதரவாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 


                                        ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்


பல்கலைக்கழகத்திற்குள் தேசவிரோதச் செயல்கள் நடைபெறுகின்றன; காஷ்மீர் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவும் நாட்டின் உயர்தன்னாளுமைக்கு எதிராகவும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன; நக்சலைட்டுகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஆதரவான நடவடிக்கைகளால் நாட்டை உறுதியற்ற நிலையில் வைத்திருக்கும் முயற்சிகள்  மேற்கொள்ளப்படுகின்றன;  அதற்கான துண்டறிக்கைகளும் சுவரொட்டிகளும் விநியோகிக்கப்படுகின்றன;  கருத்தரங்குகள், வீதி நாடகங்கள், ஊர்வலங்கள், வேலைநிறுத்தங்கள், பட்டினிப் போராட்டங்கள் என நடத்தப்படுகின்றன;  இதற்கு சில பேராசிரியர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்று அந்த ஆவணத் தொகுப்பில்  கூறப்பட்டிருப்பதாகக் கட்டுரை தெரிவிக்கிறது.


ஆண்கள்  விடுதியில் பெண்கள் வரக்கூடாது என்ற விதி இருந்தாலும் சோதனைகளின்போது பல அறைகளில் பெண்கள் இருந்திருக்கிறார்கள்; பாலியல் தொழில் நடைபெறுகிறது,   உணவகப் பணியாளர்களாக பாலியல் தொழில் பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்;    தாராளமாக மது புழங்குகிறது;  மாட்டுக்கறி வழங்கப்படுகிறது; புதிய மாணவர்கள் பணம், போதைப்பொருள், பாலியல் மோகங்கள் ஏற்படுத்தப்பட்டு இவற்றில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்றும் கட்டுரை கூறுகிறது. 

தொகுப்பைத் தயாரித்தவர்களில் ஒருவர், “உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக ஜேஎன்யு  உருவெடுப்பதற்கு இத்தகைய நிலைமைகள் தடையாக இருக்கின்றன. கல்விச் செயல்பாடுகள் மட்டுமே  தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்று பேட்டியளித்திருப்பதும்  கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.


ஆவணத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள மாணவர்கள்,  ஆசிரியர்கள் பெரும்பாலோர் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கூறியிருக்கிறார்கள். ஜேஎன்யு–வின் கருத்துச் சுதந்திரச் சூழலுக்கு எதிரான ஹிந்துத்துவா பிரச்சாரத்தின் ஒரு பகுதியே அது என்றும் கூறியிருக்கிறார்கள். சமுதாயத்தில் பேசப்படும் அனைத்து அரசியல்,  சமூகக் கருத்துகள் பற்றியும் அச்சமின்றி விவாதிப்பது இந்தக் கல்வி வளாகத்தின் பாரம்பரியம், ஆவணத்தில் குறிப்பிடப்படும் துண்டறிக்கைகள் வெளிப்படையாக விநியோகிக்கப்பட்டவைதான், கூட்டங்கள் முறையான அறிவிப்போடு நடத்தப்படுபவைதான் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

கல்வி என்றால் பாடப் புத்தகங்களின் முன் அட்டைக்கும் பின் அட்டைக்கும் இடையே அகப்பட்டுக்கொண்ட, மனப்பாட எந்திரங்களை உருவாக்குவதல்ல. அரசியல், சமூகம், அறிவியல், பொருளாதாரம், வரலாறு, பண்பாடு என மக்கள் வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களைப் பற்றிய பன்முக அறிவுதான் மெய்யான கல்வி. கல்விக்கூட வளாகங்கள் அந்த மெய்யறிவை வளர்க்கிற இடங்களாக இருக்க வேண்டும் என்று கல்வி உரிமைப் போராளிகள் எப்போதுமே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அத்தகைய ஒரு சூழலை உருவாக்கியிருக்கிற பல்கலைக்கழகத்தின் தன்மையை ஏற்க மறுக்கும் மனநிலையிலிருந்தே இப்படிப்பட்ட ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன எனலாம்.

நீதிமன்றங்களுக்கிடையே…

இந்நிலையில்தான்,  பணி  ஓய்வு பெற்றுவிட்ட பேராசிரியர் அமிதா சிங், 2016இல் தில்லி பெருநகர நீதிமன்றத்தில் ‘தி வயர்’  மீதும், அதன் நிறுவன ஆசிரியர், கட்டுரையாளர் ஆகியோர் மீதும் அவதூறு வழக்கு தொடுத்தார்.

அந்தக் கட்டுரை தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறது, பல பல்கலைக்கழகங்களில் தனக்கு எதிராகப் போராட்டங்கள்  நடத்தப்பட்டன, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கல்வி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டது, பணி ஓய்வுக்குப் பிந்தைய புதிய வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டன என்று அமிதா தனது புகாரில் கூறியிருக்கிறார். அப்படியொரு ஆவணம் நிர்வாகத்திடம் அளிக்கப்படவில்லை, அதைத் தயாரித்ததில் தனக்குத் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகமும் தன்னிடம் அத்தகைய ஆவணம் எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறியது. 

தில்லி பெருநகர நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 2017இல் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியது. அதை விலக்கிக்கொள்ள ஆணையிடக் கோரி ’தி வயர்’ குழுவினர் தில்லி உயர்நீதிமன்றத்திற்குச் சென்றனர். உயர்நீதிமன்றம் 2023இல் அதை விலக்கி ஆணையிட்டது. அதை எதிர்த்து அமிதா உச்சநீதிமன்றத்தை நாடினார். அதை ஏற்ற உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டு ஜூலை 24இல், உயர்நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய்தது.


                                                    நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ

இதில் ஒரு சுவையான தகவல் இருக்கிறது.  அப்போது இந்த அவதூறு வழக்கில் அவ்வாறு தீர்ப்பளித்த அமர்வில், இப்போது குற்றவியல் சட்டத்திலிருந்தே அவதூறை விலக்க வேண்டுமெனக் கருத்துக் கூறியுள்ள நீதிபதி சுந்தரேஷ்வரும் இடம்பெற்றிருந்தார்!

அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, பெருநகர நீதிமன்றம் மறுபடியும் அழைப்பாணைகளை அனுப்பியது. அதை எதிர்த்து ‘தி வயர்’ குழுவினர் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. திரும்பவும் அவர்கள் உச்சநிதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். அவர்களின் மேல்முறையீடு மீதான விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் சுந்தரேஷ்வர் அந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார்.

சிறையும் தண்டமும்



முன்னதாக, 2016 மே 13 அன்று, உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'சுப்ரமணிய சுவாமி எதிர் ஒன்றிய சட்ட அமைச்சகம் மற்றும் இதரர்கள்’ என்ற வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 499 (அவதூறு),  500 (அவதூறுக்கான தண்டனை), குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 199 ஆகிய பிரிவுகள் அரசமைப்பு சாசனப்படி செல்லும் என உறுதி செய்தது. குற்றம் நிறுவப்படும் நிலையில் இரண்டு ஆண்டுகள் வரை  சிறை, அல்லது தண்டம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கலாம் என்று பிரிவு 500 கூறுகிறது. 

கடந்த 2023இல் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) விலக்கப்பட்டு, பாரதிய நீதிச் சட்டத்தொகுப்பு (பாரதிய நியாய சன்ஹிதா) (பீஎன்எஸ்)  ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் 356, 357 பிரிவுகள் குற்றமுறு அவதூறுக்கான தண்டனைகளைக் கூறுகின்றன.

இந்தியக் குடியரசின் அடிவாரமாகிய அரசமைப்பு சாசனத்தில் கருத்துச் சுதந்திரத்தைக் காக்கிறது 19வது சட்ட உரை. ஒவ்வொருவரின் நற்பெயர் உரிமையைக் காக்கிறது 21ஆவது சட்ட உரை. இவ்விரண்டுக்குமான சமநிலை குறித்த உரையாடலுக்கு வழி வகுத்திருக்கிறது நீதிபதி சுந்தரேஷ்சின் புதிய கருத்து.

தொடரும் அச்சுறுத்தல்   

குற்றவியல் பிரிவாக அவதூறு இருப்பது அச்சுறுத்தல்தான்  என்று ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஒருவர் தன்னை விமர்சிக்கக்கூடிய எந்தக் கருத்தையும் அவதூறென்று வழக்குத் தொடுக்கலாம். தனது செயல்பாடு பற்றிய எந்தச் செய்தியையும் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டதாக வாதிடலாம்.

நீதிமன்றத்தில்,  செய்திக்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய முடியாத நிலைமை இருக்கக்கூடும். ஏனென்றால், ஊடவியலாளர்கள் தகவல்களை வழங்கியவரிடம் அவர் யார் என்று ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்துதான் உண்மைகளைத் திரட்டுகிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பது அடிப்படையான ஊடக அறம். அதற்குத் தங்களை ஒப்படைத்துக்கொண்டவர்கள் சிறை செல்லவும் தயாராக இருப்பார்களேயன்றி, காட்டிக்கொடுத்துத் தப்பிக்க முயலமாட்டார்கள்.


செய்திகளுக்கான மூலாதாரங்களை வெளிப்படுத்துவது தொடர்பாக வரையறுக்கப்பட்ட சட்டவிதி ஏதுமில்லை. இந்திய பத்திரிகைகள் மன்றத்தில் (பிரஸ் கவுன்சில்) அப்படியொரு விதி இருக்கிறது, நீதிமன்றங்களுக்கு அது பொருந்தாது. ஆயினும், பத்திரிகைச் சுதந்திரத்திற்குத் தகவல் மூலாதாரங்களைப் பாதுகாப்பது ஓர் அடிப்படைத் தேவை என உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது (2021இல்  தலைவர்கள், நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைப்பேசி வழியாக வேவு பார்க்கப்பட்ட ‘பெகாசஸ்’ உளவுச் செயலி விவகாரம் உள்ளிட்ட சில வழக்குகள்).

ஊடகங்களுக்கு இந்தச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் உரிய திருத்தம் செய்வதற்கு இந்திய சட்ட ஆணையமே பலமுறை பரிந்துரைத்திருக்கிறது. ஒருமுறை கூட அதை அரசாங்கங்கள் பரிசீலித்ததில்லை. 

நழுவலுக்குக் காரணமாக 

இந்நிலையில், பல ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கத் தயங்குகிறார்கள். அதிகார பீடங்களுக்கு ஆத்திரமூட்டும் செய்திகளை வெளியிடவும் வேண்டாம், சாமரம் வீசவும் வேண்டாம், வம்பில்லாத  பொழுதுபோக்கு சங்கதிகளை வாசகர்களுக்குக் கொடுத்தால் போதும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். விதிவிலக்குகளாக உள்ள ஊடகங்கள் தவிர்த்து மற்றவற்றில் கூர்மையான அரசியல்/சமூக/கார்ப்பரேட் விமர்சனங்கள் வராததற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆக, நேர்மையான செய்திகளை வெளியிடச் செய்வது என்ற நோக்கம் தடம் மாறுகிறது. மக்களுக்கு உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் வழி அடைபடுகிறது. எதிர்க் கருத்துகளை ஒடுக்குவதற்கான ஆயுதங்களாக இந்தச் சட்டப் பிரிவுகள் கையாளப்படுகின்றன.

உண்மையிலேயே குற்றமுறு நோக்கமுள்ள செய்திகள் வருமானால், உரிமையியல் (சிவில்) சட்டங்களின் மூலமே தீர்வு பெற முடியும். பத்திரிகைகள் மன்றத்தை அணுக முடியும். புகாரில் நியாயம் இருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரிகை மன்னிப்புக் கோர மன்றம் ஆணையிடும். குறிப்பிட்ட செய்தி எந்தப் பக்கத்தில் எந்த அளவில் வெளியிடப்பட்டதோ அதே பக்கத்தில் அதே அளவில் மன்னிப்புக் கோரலை வெளியிட  ஆணையிடப்பட்ட நிகழ்வுகள் உண்டு.

தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான  ஆர். ஆர். ரவிச்சந்திரன் ‘நக்கீரன்’ பத்திரிகையில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிய சில செய்திகளை எழுதியதற்காக அவதூறு வழக்குகள் போடப்பட்டன. நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடிய அவர் இறுதியில் உச்சநீதிமன்றப் படியேறினார். 2016இல் அந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மாநில அரசைக் கடுமையாகச் சாடியது. “அரசாங்கம் குற்றமுறு அவதூறு சட்ட விதியைத் தவறாகப் பயன்படுத்துகிறது. ஒருவர் தனிப்பட்ட முறையில் தான் தாக்கப்பட்டிருப்பதாகக் கருதுவாரானால்  தனிமனிதராகக்தான் வழக்குத் தொடுக்க வேண்டுமேயல்லாமல், அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது,” என்று அந்தத் தீர்ப்பில் கூறியது.

அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சியினர் மீதும் ஊடகங்கள் மீதும் போடப்பட்ட அவதூறு வழக்குகள் விலக்கப்படும் என்று அறிவித்திருந்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு மு.க. ஸ்டாலின் அரசு பாராட்டத்தக்க வகையில் அவ்வாறே செய்தது. ஆனால் பின்னர் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது குற்றமுறு அவதூறு வழக்குகள் போட்டிருக்கிறது.

ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆகிய தனி மனிதர்கள் மீதும்  அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன். ஒரே பேச்சுக்காக வெவ்வேறு  நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செயப்படுகின்றன. அதன் நோக்கம், அவர்களை அலைய விடுவதும், தொடர்ந்து பேச விடாமல் தடுப்பதும்தான். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர்  மீது இப்படிப் பல புகார்கள் செய்யப்பட்டிருப்பது தெரிந்ததே.

துப்பாக்கியை எறிந்துவிட்டால்

அவதூறு வழக்கு எனும் துப்பாக்கி முதுகைக் குறிவைத்தபடி கருத்தாளர்களின் பின்னால் நீண்டிருக்கிறது. அந்தத் துப்பாக்கி பிடுங்கி எறியப்படுமானால், அரசு எந்திர ஊழல் உள்பட முறைகேடுகளை அரங்கத்துக்குக் கொண்டுவருவது, சாதியமும் மதவாதமும் சார்ந்த இருண்மைகள் மீது வெளிச்சம் பாய்ச்சுவது, கல்வி, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் (நீதித்துறையிலுமே கூட) நிலவும் அநீதிகளை பொது விசாரணைக்கு உட்படுத்துவது… இவையெல்லாம் அச்சமின்றி நடைபெறும். இதன் ஒட்டுமொத்த நன்மை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்குமல்லவா வந்து சேரும்?

நீதிமன்றங்களுக்கே கூட ஒரு பலன் இருக்கிறது. முக்கியமான பிரச்சினைகள் உள்பட கிட்டத்தட்ட 5.3 கோடி வழக்குகள் தேங்கியிருக்கும் நிலையில், குற்றமுறு அவதூறு வழக்குகள்  தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்றுகின்றன. குற்றமுறு அவதூறிலிருந்து விலக்கி, உரிமையியல் சட்டங்களுக்கு  மாற்றும்போது, நீதிமன்றங்களின் சுமை குறையும், நேரம் சேமிப்பாகும். அவதூறு வழக்கு போடுகிற தனிமனிதர்கள் பலர், இழக்கப்பட்ட தங்களின் மானத்திற்கு ஈடாகப் பெருந்தொகையாகப் பணத்தைத்தான் கோருகிறார்கள். உரிமையியல் நீதிமன்றங்களே அந்த வழக்குகளை நடத்தித் தீர்ப்பளிக்க முடியுமே?‘

உலகக் களத்தில்

பல நாடுகளில் குற்றமுறு அவதூறு சட்டம் நீக்கப்பட்டுவிட்டது, அல்லது அரிதாகப் பயன்படுத்தப்படுகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜமைக்கா, ருமேனியா, மால்டா, அயர்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் குற்றமுறு அவதூறு விதி முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. மெக்சிகோவில் மைய ஆட்சியளவில் மட்டுமே அந்த விதி இருக்கிறது. நியூஜிலாந்து அரசு வாக்காளர்களுக்கு இணையத்தளங்கள் மூலம் பொய்த் தகவல்கள் பரப்புவது உள்ளிட்ட அதீதமான செயல்களை மட்டும் குற்றமுறு அவதூறாக அறிவித்திருக்கிறது.

கம்போடியா அரசு அவதூறுக்கு சிறைத் தண்டனை கிடையாதென சட்டத்திருத்தம் செய்திருக்கிறது. இந்தோனேசியாவில் அவதூறு வழக்குப் போடுவதற்கான வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில்  மிக அரிதாகவே குற்றமுறு வழக்காகப் பதிவு செய்யப்படுகிறது.

அதேவேளையில், ஆசிய நாடுகள் பெரும்பாலானவற்றில் குற்றமுறு அவதூறு சட்டங்கள்தான் கையாளப்படுகின்றன. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் பல முன்னணி ஊடக நிறுவனங்கள் மீதும், தனிப்பட்டவர்கள் மீதும் அவதூறு வழக்குகள் போட்டிருக்கிறார்.

  பல நாடுகளில் குற்றமுறு அவதூறு சட்டத்தை விலக்குவது அல்லது பயன்பாட்டைக் குறைப்பது பற்றிய அதிகாரப்பூர்வ விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆயினும், பெரும்பாலான நாடுகள் அந்தத் துப்பாக்கியைத் தோட்டாவோடு வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியத் துணைக் கண்டத்தில் இந்தியா, துப்பாக்கியைக் கீழே போடுவதற்கு முன்னுதாரணம் படைக்க முடியும். அதற்கான உரத்த குரல்கள் எங்கும் கேட்க வேண்டும். அதற்கான ஒலிவாங்கியாக நீதிபதி சுந்தரேஷ் கருத்தைக் கையில் பிடிக்கலாம்.

[0]

விகடன் ப்ளஸ் (செப்டம்பர் 28) கட்டுரை


Thursday, 25 September 2025

தண்டகாரண்யத்துக்காக மட்டுமல்ல… (முக்கியமாகத் தோழர்களுக்காக)

 


முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன் – பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்குச் சென்று, அதைவிடப் பெருமளவுக்கு நொந்துபோய் திரும்பிவந்த படங்களில் ஒன்றாகிவிட்டது தண்டகாரண்யம்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் செய்திகளாக வந்த, அப்படியே மறக்கடிக்கப்பட்டுவிட்ட, நக்சலைட் ஒழிப்புப் படை என்ற பெயரில் போலிப் பயிற்சி முகாம் நடத்தி அரசின் நலத்திட்ட நிதி கொள்ளையடிக்கப்பட்ட மோசடியை மையக் கதையாக்கியிருக்கிறார்கள். அந்த முகாம்களில் இருந்த நிலைமையைத் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

வனப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி பழங்குடி மக்கள் வஞ்சிக்கப்பட்டது, வனப் பொருட்கள் ஏல ஒப்பந்ததாரர், அதிகாரிகள் கள்ளக் கூட்டு வைத்திருந்தது ஆகியவையும் இணைக்கப்பட்டு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட அநீதிகள் பற்றி முதல் முறையாகத் தெரியவருகிறவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள்.

‘தண்டகாரண்ய’ காடுகளின் இருள் கவ்விய அடர்த்தியை அனுபவித்து உணர வைக்கிற அளவுக்கு ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்கள். பழைய பாடல்களோடு இணைந்து அந்த உணர்வோடு கலந்திடச் செய்யும் பின்னணி இசையைச் சேர்த்திருக்கிறார்கள். பழங்குடி மக்களின் சடங்குமுறைகளோடு கூடிய வழிபாட்டை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வளவும் இருந்தும், இவ்வளவு போதுமா ஒரு நல்ல சினிமாவுக்கு என்று கேட்கவும் வைத்திருக்கிறார்கள். ஒருவேளை நான்தான் கலையாக்கம் தொடர்பான கருத்துகளால் மரத்துப்போய்விட்டேனா என்று தெரியவில்லை – ஒரு காட்சி கூட மனதைத் தொடவில்லை.

தொடக்கத்திலிருந்தே நேர்த்தியற்ற முறையில் சித்தரித்திருக்கிறார்கள். கதை இப்படியிப்படித்தான் போகும் என்று ஊகிக்கிறோம், அவ்வாறு ஊகித்ததற்கு ஏமாற்றம் ஏற்படாமல் தந்திருக்கிறார்கள்.

சிவப்புச் சிந்தனையுடனான உரையாடல்கள் இருக்கின்றன – ஆனால், அந்த அரசியல் புரிதல் உள்ளவன் என்ற முறையில்தான் என்னிடம் வருகின்றனவே தவிர, இயல்பான திரை ரசிகன் என்ற முறையில் நெருங்கவைக்கத் தவறியிருக்கிறார்கள். பெண் கதாபாத்திரங்கள் முக்கியத்துவமின்றி உருவாக்கப்பட்டுள்ள விதத்தில் “நீலம்” தயாரிப்புகளில் இப்படியெல்லாம் இருக்காதே என்று கேட்கும்படி செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக நான், முற்போக்கான கதைப் படங்களை, குறிப்பாகச் சொல்வதானால் சிவப்புச் சிந்தனைகளைப் பகிரும் படங்களை விரும்பி வரவேற்கிறவர்களோடுதான் பேச விரும்புகிறேன். அப்படியான இடங்கள் ஒரு திரைப்படத்தில் இருக்கின்றன என்பதற்காக மட்டுமே அவற்றைச் சிறந்த படைப்புகள் என்று கொண்டாடுவதில் நியாயமிருக்கிறதா?

கருத்து நேர்மை எவ்வளவு முக்கியமோ அதற்குக் கொஞ்சமும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்தது கலை நேர்மை.

அது இல்லாத தயாரிப்புகள் என்று தெரிந்தும், “இத்தகைய படங்களை ஆதரிப்பது நமது கடமை” என்று கூறும்போது, உண்மையில் கலை நேர்த்தியுடன் உருவாக்கும் பொறுப்பிலிருந்து அவர்கள் கழற்றிவிடப்படுகிறார்கள். கடமைக்காகப் பார்க்க வேண்டும் என்று சொல்வதே, சம்பந்தப்பட்ட படம் மக்கள் விரும்பிப் பார்க்கத்தக்கதாக இல்லையென்று காட்டிக் கொடுப்பதாகிவிடுகிறது.

அண்மையில் வந்த ‘வீர வணக்கம்’ படமும் அப்படித்தான் இருந்தது. மனதில் எழுச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டிய, கேரளத்தின் ஒரு முன்னோடி கம்யூனிஸ்ட் தலைவர் பி. கிருஷ்ணப்பிள்ளை வாழ்க்கைக் கதை அது. ஆனால், இயக்கம் சார்ந்தவர்களின் நினைவுகளையும் உணர்வுகளையும் வேண்டுமானால் கொஞ்சம் கிளறிவிட்டிருக்குமே தவிர, திரைக்கதையோ, காட்சியமைப்புகளோ கொஞ்சமும் உணர்வார்ந்த அனுபவத்தைத் தரவில்லை.

ஒரேயொரு ஆறுதல், அவருடைய காலத்தில் இயக்க மேடைகளில் பாடிய அம்மையார் தமது 97வது வயதில் அதே கதாபாத்திரத்தில், அந்த நாட்களை நினைவுகூர்கிறவராக வருகிறார். ஆனால் படத்தில், கிருஷ்ணப்பிள்ளையோடு சேர்ந்து மேடையேறிப் பாடுகிற இளவயதுத் தோழரைக் காட்டவே இல்லை.

அதே போல், கிருண்ணப்பிள்ளை, தங்கம்மா இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால், அதற்குப் பிறகு அந்த அம்மையார் என்ன ஆனார் என்றே படம் காட்டவில்லை. கிருஷ்ணப்பிள்ளையின் இறப்பு கூட ஏதோ பின்னணிச் செய்தியாகத்தான் சொல்லப்படுகிறது.

இப்படி புரட்சிகரமான, முற்போக்கான செய்திகள் உள்ள, ஆனால் கலையும் கலகலப்பும் கைவிடப்பட்ட பல படங்களைச் சொல்ல முடியும். கூட்டம் வராததால் அப்படிப்பட்ட படங்கள் திரையரங்குகளிலிருந்து தூக்கப்படும்போது, மாறுபட்ட படங்களை ஆதரிக்க மறுக்கிறார்கள் என்று மக்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. உண்மை என்னவென்றால், மக்களை நெருங்கவிடாத தயாரிப்புகளால், முற்போக்கான செய்தி சொல்லும் படங்களே ஓடாது, மசாலா படமாகவே எடுத்து நாலு காசு சம்பாதிப்போம் என்ற எண்ணத்தை மற்ற தயாரிப்பாளர்களுக்கு இவர்கள்தான் ஏற்படுத்துகிறார்கள்.

புரட்சிகர உள்ளடக்கமும் மக்களை ஈர்க்கும் திரைமொழியும் கொண்டு வெற்றி பெற்ற படங்கள் பல இருக்கின்றன. ஒரு ‘விடுதலை –பாகம் 1’ போல, ஒரு ‘சர்பட்டா பரம்பரை’ போல, ஒரு ‘கர்ணன்’ (2021) போல, ஒரு ‘அசுரன்’ போல…

ஆகவே முற்போக்காளர்களே, கலை இல்லையென்று தெரிந்தே, கடமைக்காக ஆதரிக்காதீர்கள். கடமைக்காக ஆதரிக்க வேண்டுகோள் விடுக்காதீர்கள். என்னைப் போன்றவர்களின் இப்படிப்பட்ட கலைக் கண்ணோட்ட விமர்சனங்கள்தான் நல்ல படங்களின் தோல்விக்குக் காரணம் என்று சொல்ல நினைக்கிறீர்கள் என்றால், அந்த எதிர்க்கருத்துச் சுதந்திரத்துக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை.

[0]
எனது முகநூல் பதிவு (செப்.25)

Saturday, 20 September 2025

கம்யூனிச ஆதரவும் கம்யூனிஸ்ட்டுகள் வீரியமும்


 

“மூணு நாளாப் பார்க்க முடியலையே… வெளியூருக்கு எங்கேயாவது போயிட்டீங்களா? ஹெல்த் பிராப்ளம் ஒண்ணுமில்லையே?”


காலை நடை நண்பர்களின் அன்பான விசாரிப்புக்கு நன்றி தெரிவித்தேன். “வெளியூருக்கெல்லாம் போகலை. வயிறுதான் என்னவோ ஒரு எதிர்ப்புப் போராட்டம் நடத்திருச்சு… வெளிய வரவோ, ரொம்ப நேரம் நடக்கவோ முடியாமப் போயிடுச்சு.”


“அடடா… இப்ப நல்லா குணமாயிடுச்சா?”


“ஆமா, போராட்டத்துக்குப் பணிஞ்சு, சாப்பாட்டை மாத்தினேன், மருந்தும் எடுத்துக்கிட்டேன்.”


“இதனாலதான் உங்க ரியாக்ஸன் எதையும் பார்க்க முடியலையா? என்னடா இது, திமுக–வை விமர்சிக்கிற மாதிரி சிபிஎம் கட்சியைக் கிண்டலடிச்சிருக்காங்க, இவரு பதில் சொல்லாம இருக்காரேன்னு நினைச்சேன்.”


இரண்டாவது நண்பர் எங்களுடன் பேச்சிலும் இணைந்துகொள்ள, நடைக்கு இடைக்கால ஓய்வளித்துப் பூங்கா இருக்கையில் அமர்ந்தோம்.


“எதைச் சொல்றீங்க…?”


“உங்க நண்பர் சாவித்திரி கண்ணன் ஃபேஸ்புக்ல எழுதியிருக்கிறதைப் பார்க்கலையா நீங்க? ரீசன்ட்டா நடந்த  ‘அறம்’ ஃபங்ஷன்ல கலந்துக்கிட்டதா சொன்னீங்க, அதனால அவரோட கிரிட்டிசிசத்தைக் கண்டுக்காம விட்டுட்டீங்களா? இல்லாட்டி அதுல ஸ்டஃப் இருக்குதுன்னு சைலன்ட்டாயிட்டீங்களா?”


“இருங்க இருங்க, ஒரு முக்கியமான காரணத்தை ஏற்கெனவே சொல்லிட்டேன். அப்புறம் உடம்பு சரியில்லாம வீட்டுல இருந்தேனே தவிர, சும்மா இருக்கலை. ரெண்டு முக்கியமான கட்டுரையை முடிச்சு அனுப்ப வேண்டியிருந்துச்சு… இணையவழிக் கூட்டம் ஒண்ணும் இருந்துச்சு. அந்தத் தயாரிப்பு வேலைகளும் சேர்ந்துக்கிட்டதாலதான்…”


“அப்ப அவரோட ஸ்டேட்டஸ்சைப் படிச்சிட்டீங்களா?”


“முதலமைச்சர் ஸ்டாலினின் சிறப்பம்சம்னு ஒண்ணையாவது சொல்லுங்கன்னு நண்பர்களும் வாசகர்களும் கேட்கிறதாவும், இப்போதைக்கு ஒண்ணைச் சொல்றேன்னும் சொல்லி ஒரு பதிவு போட்டிருக்கிறாரே, அதுதானே? படிச்சேன்…”


“உங்களுக்குக் கோபம் வந்திருக்குமே?’


“ஊடகவியலாளர்களோட கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறவன் நான், எதுக்காகக் கோபப்படணும்? ஆனா, வருத்தப்பட்டேன். கவலைப்பட்டேன்.”


“என்ன வருத்தம்? என்ன கவலை?”


‘சாவித்திரி கண்ணன் எழுதியிருக்கிற முக்கியமான கருத்துகள் ஒண்ணொண்ணா பார்க்கலாம். சரியா? முதல்லயே ஒண்ணைச் சொல்லிடுறேன், அவர் என்னுடைய மதிப்புக்குரிய ஒரு முன்னுதாரணப் பத்திரிகையாளர். அவர் நடத்துற ‘அறம்’ தளத்துல மாதத்துக்கொரு கட்டுரை எழுதிட்டு வர்றேன், அதிலே எனக்கு ஒரு பெருமையும் இருக்கு. இப்ப முகநூல் பதிவுக்கு வருவோம். ஒருத்தரோட சிறப்பம்சம் எது, சிறப்பில்லாதது எதுன்னு தன்னோட கண்ணோட்டப்படி முடிவு செய்றது ஒவ்வொருத்தரோட உரிமை. அதுக்குள்ள நான் போகலை…”


“ஆனா, ‘கம்யூனிஸ்ட்டுகளின் வீரியத்தைக் காணாமலடித்ததில் ஸ்டாலின் மிகப் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார் என்பதை நானே ஒரு கம்யூனிச ஆதரவாளன் என்ற வகையில் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்’னு  எழுதியிருக்கிறாரே சார்...’’


பேசிக்கொண்டிருக்கும்போதே தனது கைப்பேசியை இயக்கி, முகநூலுக்குள் சென்று அந்தக் கட்டுரையைத் திறந்து வைத்திருந்த நண்பர் இந்த வரிகளை வாசித்துக் காட்டினார்.


“கம்யூனிச ஆதரவாளர்ங்கிறதுக்கு என்ன வரையறைன்னு சொல்ல முடியாது. கம்யூனிச ஆதரவாளரா இருக்கிறதுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளரா இருக்கிறதுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு. பொதுவா அவர் கம்யூனிஸ்ட்டுகளோட தோழமையா இருக்கிறவர்தான். ஆனா, இன்னிக்கு நாட்டோட நிலைமையில, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு முறைக்கும், மக்கள் நல்லிணக்கத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிற சூழல்ல, அதெல்லாம் எப்படியோ நாசமாப் போகட்டும்னு விட்டுட்டு வீரியத்தைக் காட்டிகிக்கிட்டு இருக்க முடியாதுல்ல? அரசியல் களத்தில், வலதுசாரிகளுக்கு எதிரா மக்களைத் திரட்டுறதுல, தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் திமுக–வுக்கு இருக்கிற முக்கியமான பங்கை மறுக்க முடியாதுல்ல? சொல்லப்போனா இப்படிப்பட்ட அரசியல் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் ஒரு கட்டாயத் தேவைங்கிற நிலைமையை திமுக–வுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் மத்த கூட்டணிக் கட்சிகளுக்கும் ஏற்படுத்தியிருக்கிறதே ஆர்எஸ்எஸ், பாஜக வியூகங்கள்தானே?  அதுக்கேத்த மாதிரி பக்குவமான அணுகுமுறையைக் கையாளுறாங்க, அதை வீரிய இழப்புங்கிறாரு இவரு. இதை யோசிக்க முடியலையான்னு நினைக்கிறப்ப வருத்தம் ஏற்படத்தான் செய்யுது.”


“அது முக்கியமானதுதான் சார், ஆனா அதுக்காக மத்த முக்கியமான இஷ்யூக்கள்ல காம்ப்ரமைஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறதுல என்ன தப்பு?”


“எதுல அப்படி விட்டுக்கொடுத்துருக்காங்க? கூட்டணியிலே இருந்தாலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் போல பல இடங்கள்லேயும் போராடுறவங்க பக்கம்தானே நிக்கிறாங்க? தமிழ்நாட்டிலே சாதி ஆணவக் கொலைகள் நடக்கிறதை அரசு ஒப்புக்கிடணும், அதைத் தடுக்கத் தனிச் சட்டம் கொண்டுவரணும்னு வலியுறுத்திக்கிட்டு இருக்காங்களே?...”


“நான் தினசரி தீக்கதிர் படிக்கிறேன்னு எழுதியிருக்கிறாரு…”


“அந்தத் தீக்கதிரிலேயே பல உள்ளூர்ப் பிரச்சினைகள்லேயிருந்து மாநில அளவிலான விவகாரங்கள் வரைக்கும் திமுக அரசின் நிலைப்பாட்டுக்கு, அல்லது சரியான நடவடிக்கை எடுக்காம இருக்கிறதுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சு நடக்கிற இயக்கங்கள் பத்தின செய்தி வந்துக்கிட்டுதானே இருக்கு? அதையெல்லாம் பார்க்க மாட்டாரு போல…”


“அதில்லை சார், தினமும் தீக்கதிர் படிக்கிறதைச் சொல்லிட்டு, ஒரு முக்கியமான போராட்டம் தொடர்பா, சுப்ரீம் கோர்ட் தமிழ்நாடு கவர்மென்ட்டைப் பிடிபிடின்னு பிடிச்சிருக்குது, அந்தச் செய்தியைத் தீக்கதிர் தவிர்த்துவிட்டதுன்னு சொல்லியிருக்கிறார்…”


“செவிலியர்கள் கோரிக்கை தொடர்பான வழக்குல, மாநில அரசு தாக்கல் செஞ்ச மேல்முறையீட்டுல உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துகளைக் கூறியிருக்குது. அதைப் பத்தின செய்தி வரலைன்னு சொல்றதுக்கும், தவிர்த்துட்டாங்கன்னு சொல்றதுக்கும் வேறுபாடு இருக்குது. சொற்களின் அரசியல் சம்பந்தப்பட்ட வேறுபாடு அது. ஏதோ திட்டமிட்டு அதை மூடி மறைத்துவிட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிற சொல் அரசியல் அது.”


கொஞ்சம் வேகமாகச் சொல்லியிருப்பேனோ? “இப்ப நீங்க கடுமையான கருத்தைச் சொல்றீங்க சார். ரிலாக்ஸ்டா பேசுங்க,” என்றார் நண்பர்.


“இதிலே பல காரணங்கள் இருக்கலாம். நான் அங்கே வேலை செஞ்சிக்கிட்டிருந்தப்ப கூட பல செய்திகள் விடுபட்டிருக்கு. நீதிமன்றம்   தொடர்பான குறிப்பிட்ட செய்தி வர்றப்ப பணியிலே இருந்தவங்க அதைக் கவனிக்கத் தவறியிருக்கலாம். நீதிமன்றத்தோட இறுதித் தீர்ப்பா வராம, விசாரணை நடக்கிறப்பவே சொல்ற கருத்தா இருக்கலாம், அப்படி இருந்தா இறுதித் தீர்ப்பு வர்றப்ப திட்டவட்டமான செய்தியா போடலாம்னு அந்த நேரத்திலே வேலையிலே இருந்தவங்க முடிவு பண்ணியிருக்கலாம்.  தொழிலாளர் போராட்டம் தொடர்பான வழக்குன்னு வர்றப்ப, விசாரணை நடக்கிறப்ப நீதிபதிகள் கருத்தா சொல்றது ஒண்ணாவும், இறுதித் தீர்ப்பு அதுக்கு நேர்மாறாவும் இருந்த கதைகள் நிறைய இருக்கு. மூத்த பத்திரிகையாளருக்கு இது தெரியாம இருக்காது. இடைக்காலத்திலே நீதிபதிகள் சொல்ற விமர்சனத்தையும் செய்தியாக்கணும்கிறதுதான் என் நிலைப்பாடு. ஆனா, அதை வேணும்னே தவிர்த்துட்டாங்கங்கிறதோ, வீரியத்தை விட்டுட்டதால இப்படிக்கிறதோ வம்படி வாதம்தான்.”


“கூல்… கூல்… நானே கூட பார்த்திருக்கிறேன். பல முக்கியமான நியூஸ் பத்திரிகைகள்ல மிஸ்ஸாகியிருக்கும். ரெண்டு மூணு நாள் கழிச்சுக் கூட வரும். இது அவருக்குத் தெரியாதா என்ன?”


“நல்லா தெரிஞ்சிருக்கும். ஆனா இப்படியொரு கோணத்திலே பதிவு போடணுன்னு ஒருத்தரு முடிவு செய்றாருன்னா, அப்புறம் அதெல்லாம் ஞாபகம் வராதுல்ல. ஒரு வாதத்துக்காக, நாகரிகமான சொற்களிலேயே கேட்கிறேன், அறம் தளத்திலே பதிவாகாமல் விட்டுப்போன செய்திகள், எழுதப்படாத பிரச்சினைகள்னு   பெரிய பட்டியலே தயாரிக்க முடியும்; அதனால அறம் வழுவிட்டாங்கன்னு சொல்லலாமா?”


“..............”


“இன்னொண்ணையும் சொல்றேன். 2022இல கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பா ஒரு செய்திக்கட்டுரை எழுதினதுக்காக சாவித்திரி கண்ணனை வீட்டிலே இருந்து இழுத்து வந்து கைது பண்ணி வழக்குப் பதிவு செஞ்சாங்க. முதலமைச்சர் உறுதியளிச்சதுக்கு மாறா இருக்குதுன்னு அப்ப சிபிம் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டன அறிக்கை வெளியிட்டார். வீரியம் காணாமப் போனதாலதான் அப்படி அவர் கண்டனம் தெரிவிச்சாரா?”


“..............”


“என்ன இப்ப நீங்க மௌனமாகிட்டீங்க?”


“இல்லையில்லை, ஃபேஸ்புக்ல அவர் எழுதியிருந்த இன்னொரு பாயின்டைத் தேடிட்டிருந்தேன்… ஆங்… இதோ… ‘தீக்கதிர் பல நேரங்களில் முரசொலி சாயலில் இருப்பதை கண்டு வியக்கிறேன். நான்தான் இப்படி நினைக்கிறேனா என்று வேறு சில மூத்த பத்திரிகையாளர்களிடமும் கேட்டபோது அவர்களும் அவ்வாறே உணர்வதாகச் சொன்னார்கள்’னு எழுதியிருக்காரு.”


“ஊழியர்கள் ஊதியம், பத்திரிகைக் காகிதம், எந்திரப் பராமரிப்பு, வாகனங்கள், மின்சாரம், பெட்ரோல், டீசல், கட்டட வாடகை, மருத்துவ உதவி… இப்படி ஒரு பதிவு பெற்ற நிறுவனமாகவும் இயங்குகிறபோது செய்தாக வேண்டிய செலவுகள் நிறைய இருக்கு. அதையெல்லாம் ஓரளவுக்காவது சமாளிக்க விளம்பர வருவாய் ஒரு முக்கியமான தேவை. விளம்பரம் வெளியிடுவது புனிதத்துக்குக் கேடுன்னுல்லாம் தீக்கதிர் நினைக்கிறதில்லை. அரசாங்க விளம்பரங்களும் வர்றப்ப வெளியிடுறாங்க. திமக அரசு செயல்படுத்துகிற, மக்களுக்குப் பயன்படக்கூடிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிடுறாங்க. கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஒத்திசைவா இருக்கிற அறிக்கைகளை முதலமைச்சர் வெளியிடுகிறபோது முதல் பக்க முக்கியத்துவம் கொடுக்கிறாங்க…”


“சரிதான். அதை முரசொலி மாதிரின்னு சொல்றது ஓவர்தான்.”


“அடிப்படையான திமுக அசூயை நிலைப்பாட்டிலிருந்து, தோழமைக் கட்சிகளுக்குக் கொம்பு சீவிவிட முயல்றவங்க நிறையப்பேர் இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தரா இருக்கிறாரோன்னு கவலை ஏற்படுது. ‘அறம்’ விழாவிலே ஒரு வாசகர், அடுத்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்களான்னு கேட்டார். அதுக்கு இவர், பாஜக–வைத் தடுத்தாகணும். அதுக்கேத்த மாதிரி வாக்களிப்பேன். அதிலே திமுக பலனடையும்னா அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாதுன்னாரு. அங்கே அப்படிப் பேசிட்டு, இங்கே இப்படி எழுதிக்கிட்டிருந்தா, அது யாருக்குப் பலனளிக்கும்னு யோசிக்கிறப்ப, கவலை ஏற்படுது… ஆனா அவரோட பதிவினால ஒரு சின்ன மகிழ்ச்சியும் ஏற்படுது…” 


“என்ன மகிழ்ச்சின்னு எனக்குத் தெரியும் சார்.”


“சொல்லுங்க பார்க்கலாம்.”


“இந்தக் கருத்தையெல்லாம் எங்ககிட்ட ஷேர் பண்ண முடிஞ்சதுங்கிற மகிழ்ச்சிதானே! இன்னிக்குக் கொஞ்சம் டெப்தா பேசினோம், அதனால காஃபியோட வாக்கிங்கை முடிப்போம்.”


[0]

முகநூல் பதிவு (செப்.19, 2025)


Thursday, 18 September 2025

வரிப் போர்களின் வரலாற்று அத்தியாங்கள்


ந்தியாவுக்கு எதிராக இறக்குமதி வரி (டாரிஃப்) யுத்தத்தைத் தொடங்கியிருக்கும் டொனால்டு டிரம்ப் பல காரணங்களைக் கூறுகிறார். சீனாவுடனும் ரஷ்யாவுடனும் இந்தியா வர்த்தக உறவுகளைப் பேணுவதைத் தாக்குகிறார். தனிப்பட்ட முறையிலான ஒரு காரணமும் இருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது.


இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் விருது தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்படுகிறாராம். தன்னுடைய தலையீட்டால்தான் இந்தியா–பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததென்று சொல்லி வருகிறார் இல்லையா? பாகிஸ்தான் பிரதமர் அதை ஆமோதித்தது போல இந்திய அரசும் வெளிப்படையா ஒப்புக்கொண்டால், அந்த விருதுக்கான கதவு எளிதாகத் திறக்குமென்று கருதுகிறாராம். இந்தியா ஒப்புக்கொள்ளாததால் அந்தக் கதவைத் திறப்பது கடினமாகிவிட்டது என்ற கோபமும் அவருக்கு இருக்கிறதாம்.

வேறு பல நாடுகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள இந்த டாரிஃப் யுத்தம் எப்படிப் போகிறதென்று வரும் நாட்களில் பார்ப்போம். உலக வரலாற்றில் இடம்பெற்ற சில வரிப் போர்களைப் பார்க்கலாம்.

பங்குச் சந்தை வீழ்ச்சி

1929ஆம் ஆண்டில் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு ஒரு புதிய டாரிஃப் சட்டத்தையே கொண்டுவந்தது. உலகம் முழுவதையும் பாதித்த அந்த நிலைமைக்குக் காரணமே அமெரிக்கப் பங்குச் சந்தைதான். 1920களில் மிதமிஞ்சிய அளவுக்கு ஊக வணிகம் வீங்கியது. செயற்கையான லாப ஆசை ஊட்டப்பட்ட மக்கள் கடன் பெற்றாவது பங்குகளை வாங்கிப்போட முண்டியடித்தனர்.

1929, அக்டோபர் 24-ல் பங்குச் சந்தை சரிவடைந்தது. அந்த நாள் ‘கறுப்பு வியாழன்’ என்று பங்குச் சந்தை வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. அக்டோபர் 29இல் (கறுப்பு செவ்வாய்) நிலைமை மேலும் மோசமடைந்தது. பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் நிதி இழப்பைச் சந்தித்தார்கள். நாடு முழுவதும் ஏராளமானோர் வங்கிகளிலிருந்து சேமிப்புகளைத் திரும்ப எடுக்க முயன்றார்கள். ஆயிரக்கணக்கான வங்கிகள் திவாலாகின. வணிகக் கடன் தடைப்பட்டதால் தொழில்கள் முடங்கின.

1914இல் தொடங்கிய முதல் உலகப்போர் 1918இல் முடிந்திருந்த நிலையில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பொருட்களை உற்பத்தி செய்தன. ஆனால், மக்களிடையே வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்திருந்தது. பொருள்களுக்கான பயன்பாட்டுத் தேவை இருந்தாலும் அவற்றை வாங்குவதற்கான வணிகத் தேவை உருவாகவில்லை. எண்ணற்ற நிறுவனங்களை மூடும் நிலை ஏற்பட்டது. எங்கும் வேலையிழப்பு பரவியது.

மூட்–ஹாவ்லி சட்டம்

நிலைமையை சமாளிக்க, அமெரிக்காவின் ஹெர்பர்ட் ஹூவர் தலைமையிலான குடியரசுக் கட்சி அரசு மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மீது 1930இல் அதிக வரிகளை விதித்தது. அதற்கான சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்லிஸ் ஸ்மூட். ஹோலி ஹாவ்லி ஆகியோரின் பெயரில் ‘ஸ்மூட்–ஹாவ்லி சட்டம் 1930’ என்றே அது அடையாளம் பெற்றது. 20,000 பொருள்கள் மீதான இறக்குமதி வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டன.

அதனால் பாதிக்கப்பட்ட பிற நாடுகள் அமெரிக்கப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தன. சங்கிலித் தொடராக ஐந்து கண்டங்களிலும் பாதிப்பு பரவியது. அமெரிக்காவில் வேலையின்மை 25% உயர்ந்தது. சுமார் 1.30 கோடி மக்கள் வேலையிழந்தனர். ஏற்கெனவே நெருக்கடியில் இருந்த ஜெர்மனியில், அமெரிக்க வங்கிகளின் கடன் நிறுத்தப்பட்டதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன (அந்தச் சூழலை ஹிட்லர் தனது நாஜி கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டது துணைக்கதை).

உலக வர்த்தகம் முடங்கியதால் பிரிட்டனின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் விவசாய விளை பொருட்களின் விலை சரிந்தது. விவசாயிகளின் கடன் பளு எகிறியது.

அமெரிக்காவில், நிலைமையைக் கையாளுவதில் தோல்வியடைந்த ஹூவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 1934இல் ரூஸ்வெல்ட் வெள்ளை மாளிகையில் நுழைந்தார். உடனடியாக அவருடைய அரசு இருதரப்பு வர்த்தக உடன்பாட்டுச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. டாரிஃப் சட்டம் செயலற்றதானது.

சோவியத் வலிமை

அப்போது சமாளித்து நின்றவை சில நாடுகள்தான். திட்டமிட்ட பொருளாதார அமைப்பு ஒரு வலிமையான அரணாக அமைந்த சோவியத் யூனியன் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. ஜப்பான் அரசு நாணய மதிப்பைக் குறைத்தும், ஏற்றுமதியை அதிகரித்தும் பொருளாதாரத்தை ஓரளவு மீட்டெடுத்தது.

அந்தப் பொருளாதார மந்த நிலை, உலகத்தையே குதறிப்போட்ட இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கான காரணிகளில் ஒன்றாகவும் அமைந்தது. குறிப்பாக ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர், இத்தாலி சர்வாதிகாரி முசோலினி, ஜப்பான் அரசர் ஹிரோஹிட்டோ உள்ளிட்டோர் உலகச் சந்தையை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் கிளப்பிய சண்டைகள் 1939இல் உலகப் போராக மாறின. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அன்றைய சீனா உள்ளிட்ட அரசுகள் நேசப்படை அமைத்ததும், அதில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் இணைந்ததன் பலனாக நாஜிப் படைகள் முறியடிக்கப்பட்டதும் உலகறிந்த வரலாறு.

அமெரிக்கா–ஜப்பான் மோதல்

டாரிஃப் யுத்த வரலாற்றின் அடுத்த அத்தியாயமாக 1980களில் மூண்ட அமெரிக்கா–ஜப்பான் வர்த்தகப் போர் சுட்டிக்காட்டப்படுகிறது. அப்போது ஜப்பானில் தயாரிக்கப்பட்ட கார்களும் எலக்ட்ரானிக் பொருட்களும் அமெரிக்கச் சந்தையில் வெள்ளம்போல் பாய்ந்தன. இதனால் அமெரிக்க நிறுவனங்களின் வணிகப் போட்டித் தகுதிகளும் உழைக்கும் மக்களின் வேலைவாய்ப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு 100% டாரிஃப் விதித்தது. அதன் கெடுபிடிகளுக்குப் பணிந்த ஜப்பான் அரசு, தனது நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் கார்களுக்கும் மின்னணுப் பொருள்களுக்கும் “தன்விருப்ப ஏற்றுமதி வரி” விதித்தது.

பாதுகாப்புத் துறையைப் பொறுத்தமட்டில் அமெரிக்காவைச் சார்ந்திருந்த ஜப்பான் தொடக்கத்தில் வர்த்தகக் கொள்கைகளில் பல மாற்றங்களைச் செய்தது. அது ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் தேக்கத்தை ஏற்படுத்தியது

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்

டொனால்ட் டிரம்ப் முதல் சுற்று ஆட்சியின்போது 2018ஆம் ஆண்டில், சீனப் பொருள்களுக்குப் பல பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு டாரிஃப் விகிதங்களை விதித்தது. சீனா உடனடியாக பதிலடி கொடுத்தது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய விளைபொருள்களுக்கும் பன்றி இறைச்சிக்கும் இதர பல பொருள்களுக்கும் புதிய வரி விகிதங்களை விதித்தது. அமெரிக்க அரசுக்கு ஒரு “செக்” வைக்கப்பட்டது என்றாலும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் இரு நாடுகளிலுமே பாதிப்பை ஏற்படுத்தியது.

2020இல் சி ஜின்பிங் தலைமையிலான சீன அரசும், அமெரிக்காவின் டிரம்ப் அரசும் “கட்டம் 1” எனும் ஒப்பந்தத்திற்கு வந்தன. வர்த்தகப் போர் முடிந்தது என்றாலும், முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. அமெரிக்காவின் வெவ்வேறு கெடுபிடிகள் தொடர்வது போலவே சீனாவின் கேடய நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

இந்தியாவுக்கு எதிராக

1998இல் பொக்ரான் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை பில் கிளின்டன் அரசு அறிவித்தது. இந்திய அரசு சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, அதே வேளையில் 1990களில் தொடக்கத்தில் கொண்டுவரப்பட்ட தாராளமய நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக்கப்பட்டன. அமெரிக்காவிலும், குறிப்பாக விவசாய உற்பத்தியாளர்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, பல கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.

இந்த செப்டம்பர் 1 முதல் டிரம்ப்பின் 50% டாரிஃப் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்திய அரசு பலமுனைத் தற்காப்பு உத்திகளைக் கையாள்கிறது. உள்நாட்டுப் பொருள்களை வாங்குமாறு மக்களுக்கும், விற்குமாறு வணிகர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். உள்நாட்டுத் தேவைகளை விரிவுபடுத்தித் தொழில்களை ஊக்குவிப்பதே அந்த வேண்டுகோளின் நோக்கமெனக் கூறப்படுகிறது..

செப்டம்பர் 3, 4 தேதிகளில். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தைத் தொடர்ந்து பல பொருள்களுக்கான வரிகள் 5%-18% விகிதக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி வழிப்பறியை எதிர்த்து நடந்த போராட்டங்களும் இதன் பின்னணியில் இருக்கின்றன. டிரம்ப்பின் டாரிஃப் யுத்தம் இதற்கு இட்டுவந்துள்ளது.

ஆயினும், அடிப்படையில் மக்களின் வாங்கும் திறனை வலுப்படுத்தாமல், அதற்கேற்ப தனிமனிதர் வருவாயை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தாமல் எந்த அளவுக்கு நோக்கம் நிறைவேறும்?
[0]

‘தீக்கதிர்’ செப்டம்பர் 18 இதழில் எனது கட்டுரை


Saturday, 13 September 2025

ராஜஸ்தான் மதமாற்றத் தடைச் சட்டம்: யாருக்கெல்லாம் ஆபத்து? -Explamined




ராஜஸ்தான் மாநில பாஜக அரசாங்கத்தால் “சட்டவிரோத மதமாற்றத் தடுப்புச் சட்ட முன்வரைவு –2025” கடந்த செவ்வாயன்று (செப்டம்பர் 9) சட்டப்பேரவையில், காங்கிரஸ்  உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புடன், நிறைவேற்றப்பட்டது.  ஆளுநரால் ஏற்கப்பட்டு (ஏற்க மாட்டாரா என்ன?) சட்டமாக நடைமுறைக்கு வருமானால், யாரையேனும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றியதாகக் குற்றம் சாட்டப்படுகிற ஒருவருக்கு, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிறுவப்படும் நிலையில், 7 முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும். குறைந்தது 5 லட்சம் ரூபாய் தண்டத் தொகையும் விதிக்கப்படும்.  


மதம் மாற்றப்படுகிறவர்  பெண்ணாகவோ, சிறாராகவோ, பட்டியல் சாதிகளையும் பழங்குடிகளையும் சேர்ந்தவராகவோ இருப்பாரானால், அவரை மதமாற்றம்  செய்தவருக்கு 20 ஆண்டுகள் வரையில் சிறைவாசமும், ரூ.10 லட்சம் வரையில் தண்டமும் அதிகரிக்கப்படும்.  வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது சட்டவிரோத அமைப்புகளிடமிருந்து பணம் வாங்கியிருந்தால் 10 முதல் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.20 லட்சம் தண்டம். ஒரு கூட்டமாக மதமாற்றம் நடந்திருந்தால், ஆயுள் சிறை, ரூ.25 லட்சம்  தண்டம்.

மதமாற்றமும் திருமணம் செல்லாது

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களின் திருமணம் தொடர்பானது. இருவரில் ஒருவர்  வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாக  குற்றச்சாட்டு நிறுவப்படுமானால், நீதிமன்றம் அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவிக்க முடியும். அத்துடன்,  குற்றம் சாட்டப்பட்டவர்தான் அப்படிக் கட்டாயப்படுத்தியோ, பணம் கொடுத்தோ, வேலைவாய்ப்பு அல்லது வேறு ஆசைகள் காட்டியோ, பொய்யான தகவல்கள் சொல்லியோ திருமணம் நடக்கவில்லை, இரு தரப்பு ஒப்புதலின் அடிப்படையில்தான் நடந்தது  என்று நிறுவ வேண்டும்.


இப்படி ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றப்படுவதைக் கடும் தண்டனைக்குரிய குற்றமாகக் கூறுகிற அந்தச் சட்ட முன்வரைவு, வேறு வகையான கட்டாய மதமாற்றத்தை ஏற்புக்குரிய செயலாக அங்கீகரிக்கிறது. அதாவது, பூர்வீக மதத்திற்கே திரும்புவது மதமாற்றம் ஆகாது. இதை “கர் வாபஸி” (தாய்வீடு திரும்புதல்) என்கிறார்கள்.


மதமாற்றத்திற்காக நடத்தப்படும் திருமணம் அல்லது திருமணத்திற்காகச் செய்யப்படும் மதமாற்றம் இரண்டுமே செல்லாது என்று அறிவிக்கப்படும் என்றும் அது கூறுகிறது. சட்ட முன்வரைவின் முந்தைய வடிவில், கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவரோ, அவரது ரத்தத் தொடர்பு உறவினரோதான் புகார் செய்ய வேண்டும் என்று இருந்தது.  தற்போதைய வடிவில், “உறவினர்கள் உட்பட எந்த நபரும்” என்று  மாற்றப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது (தி பிரிண்ட், செப்.10). 


ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள் இப்படியொரு சட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றன.  “லவ் ஜிஹாத்” விவகாரங்களைக் கிளப்பியிருக்கின்றன. கடந்த ஜூலையில் விஎச்பி தலைவர் அலோக் குமார் மாநில முதலமைச்சர் பஜன் லால் ஷர்மாவைச் சந்தித்து இதை கொண்டுவர வலியுறுத்தினார்.


“ராஜஸ்தான் சட்டமன்றம் மாநிலத்தில் மத மாற்றத்திற்கு முடிவு கட்டும் ஒரு கறானரான சட்டத்தைக் கொடுக்கும் வேலையைச் செய்திருக்கிறது,” என்று மாநில உள்துறை அமைச்சர் ஜவஹர் சிங் பேதாம் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். மதமாற்ற விவகாரங்களை விசாரிப்பதற்கென்றே நீதித்துறை ஆணையம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முன்வைத்திருக்கின்றன. 

சட்டத்தை மாற்றிய ஜெயலலிதா

ஏற்கெனவே குஜராத், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், இமாசல பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள்  இருக்கின்றன. கர்நாடகத்தில் 2022இல் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அது செயல்படுத்தப்படவில்லை, அது விலக்கிக்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் அரசு அறிவித்திருக்கிறது. வேறு நான்கு மாநிலங்களின் சட்ட முன்வரைவுகள் ஏற்கப்படவில்லை.


தமிழ்நாட்டில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2002இல் இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவந்தது. கண்டன அலைகளில் எதிர்நீச்சல் போட முடியாமலும், தேர்தல் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்ற நிலையிலும் 2004இல் அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து, மதம் மாறும் உரிமையைப் பறிக்கும் சட்டத்தை அவர் விலக்கிக்கொண்டார்.


மதம் மாறலாமா, கூடாதா? மாறுவது அவமானமா? மாற்றுவது குற்றமா?  இதுவரை கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் நேரடியாக மதம் மாறுவதைத் தடை செய்யவில்லைதான். மாறுவதற்கு உதவுவதைத் தண்டனைக்கு உரியதாக அறிவிக்கவில்லைதான். அப்படி நேரடியாக அறிவிக்க முடியாததற்குக் காரணம் இந்திய அரசமைப்பு சாசனத்தின் வலிமை. ஆகவே, “ஆசை காட்டியோ, பணம் கொடுத்தோ, மோசடி செய்தோ மாற்றுவதைத் தடை செய்வதில் என்ன தவறு,” என்று நினைக்கும் வகையில் “கட்டாய” என்ற வார்த்தையை “மதமாற்ற” என்ற சொல்லுக்கு முன்னால் ஒட்டவைக்கிறார்கள்.


நடைமுறையில், வேறு மதத்தைத் தழுவியவரின் பெற்றோர், உடன் பிறந்தவர், உறவினர் என யாரேனும் புகார் செய்கிறபோது, கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாகவே பதிவு செய்கிறார்கள், வழக்குத் தொடுக்கிறார்கள். தண்டனைக்கு வழி செய்கிறார்கள். ஒருவேளை நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்யுமானால் கூட, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதும், சட்ட அலைச்சலில் பணத்தை இழந்ததும், அரிய காலத்தைப் பறிகொடுத்ததும் கடும் தண்டனையாக அமைந்துவிடுகிறது. அதன் மூலம், மற்றவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் – அடிப்படையான நோக்கமே அதுதான் என்று சட்டத்தை எதிர்ப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தள்ளுபடி செய்த நாடாளுமன்றம்


மதம் மாற முடிவு செய்கிற ஒருவர், மாவட்ட ஆட்சியருக்குத் தெரியப்படுத்தி அனுமதி பெற வேண்டும் என்று ஒரு விதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இது, தனக்கான மதத்தைத் தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மறுப்பதாக இருக்கிறது என்று மனித உரிமைக்காக வாதாடுவோர் விமர்சிக்கிறார்கள்.


இந்து மதத்துக்காக மட்டும் சொல்லவில்லையே, எந்த மதத்திலிருந்தும் மாற்றப்படுவதற்குத்தானே தடை என்றும் வாதிடலாம். ஆனால், பெரும்பாலும் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களை நாடுவதற்கு வரலாறு நெடுகிலுமான எதிர்ப்பின் தொடர்ச்சியே இது என்பது புரியாத புதிரல்ல.

மத மாற்றத் தடைச் சட்டக்  கோரிக்கையின் வயதைச் சொல்வது கடினம்.  நாட்டின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கியபோதே அதைச் சேர்ப்பதற்காக வைக்கப்பட்ட வாதங்கள் அரசமைப்பு சாசன சபையால் ஏற்கப்படவில்லை.பின்னர், சட்ட அமைப்பு சார்ந்து வலியுறுத்துகிற முதல் முயற்சி 1954ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் தனிப்பட்ட முயற்சியாக, “இந்திய மத மாற்றத் தடைச் சட்ட முன்வரைவு” ஒன்றைத் தாக்கல் செய்தார். மக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றும் உரிமையை மட்டுமல்லாமல், அதை மாற்றிக்கொள்ளும் உரிமையையும் நாட்டின் உயிரோட்டப்   பண்புகளில் ஒன்றாக மதித்த நாடாளுமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது.


ஆயினும், குறிப்பாக நாடு தழுவிய அளவில் ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், மாநிலங்களில் தமிழகத்தின்  இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் இதைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளன. இந்து மக்கள் மதம் மாறுவதால் சிறுபான்மை மதங்களின் மக்கள்தொகை அதிகரிக்கும், பின்னொரு யுகத்தில் இந்து மதம் சிறுபான்மையாகிவிடும் என்ற பரப்புரைத்து வந்துள்ளன. “லவ் ஜிஹாத்” போன்ற பிரச்சினைகளைக் கிளப்பிக் கொண்டே இருந்திருந்திருக்கின்றன.


சத்திஸ்கர் மாநிலத்தில கேரளத்தைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்துவக் கன்னித் துறவியர் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக பஜ்ரங் தள் அமைப்பினர் பிரச்சினை செய்தனர்.  இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது சத்திஸ்கர் உயர்நீதிமன்றம் அவர்களுக்குப் பினை விடுதலை அளித்திருக்கிறது என்றாலும், நல்லிணக்கம் செழித்த கேரளத்தில் கிறிஸ்துவர்களின் ஆதரவைத் திரட்ட முயன்று கொண்டிருக்கும் பாஜக–வுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகவும், சமாதான முயற்சிகளில் மாநில பாஜக தலைவர்கள் இறங்கியிருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

மதம் மாற எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு

ராஜஸ்தானிலோ, பாஜக எம்எல்ஏ கோபால்  சர்மா, காங்கிரஸ் கட்சியின் ரஃபீக் கான், அமின் காஜி இருவரையும் அவர்களுடைய மூல மதத்திற்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கொறடாவான ரஃபீக் கான், “எனது உணர்வுகளை சர்மா புண்படுத்துகிறார். எனது மூல மதம் நான் எந்த மதத்தில் பிறந்தேனோ அதுதான். கர் வாபஸி என்பது தாங்களாக விரும்பி மாறுகிறவர்களுக்குத்தான். மற்றவர்களை விடுங்கள், ஒரு எம்எல்ஏ–யையே மதம் மாறச் சொல்கிறார் என்றால், இவர்கள் கொண்டுவந்திருக்கிற சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றங்களை அவர் செய்கிறார் என்றுதான் அர்த்தம்,” என்று கூறியிருக்கிறார். “எதிர்காலத்தில் சட்டம் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதையே சர்மாவின் பேச்சு காட்டுகிறது,” என்றும் கான் கூறியிருக்கிறார் (‘தி வயர், செப்.10).


குடிமக்களின் மத உரிமை குறித்துப் பேசுகிற இந்திய அரசமைப்பு சாசனத்தின் சட்ட உரை  25, ஒவ்வொருவரும் அவரது மனச்சான்றின்படி முடிவு செய்கிற, தேர்வு செய்த மதத்தை நம்புகிற, அவ்வாறு நம்பும் மதத்தைக் கடைப்பிடிக்கிற, அதைப் பரப்புகிற சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. மனச்சான்று என்கிறபோது  எந்த மதத்தையும் பின்பற்றாமலிருக்கும் சுதந்திரமும் உறுதியாகிறது.


பரப்புவதற்கான சுதந்திரம் என்றால் அதை வளர்ப்பதற்கும் அதை நோக்கி ஈர்ப்பதற்குமான சுதந்திரம்தான். அரசியல் கட்சியையோ, மனித நேயத்தையோ பரப்புவது போலத்தான். சாதியை யாரும் பரப்புவதில்லை, ஒரு சாதியில் வேறு சாதிக்காரர் இணைய முடியாது என்பதால்! 


முன்பு இந்து மதத்தில் இருந்து மதம் மாறிச் சென்றவர்களைத் திரும்ப அழைக்கும் கர் வாபஸி பரப்புரை இயக்கம் ஒன்று இங்கே தொடங்கப்பட்டது. 2014இல் ஆக்ரா நகரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகவே நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 300 பேர் இந்து மதத்திற்குத் திரும்பினார்கள். வீட்டு மனை,  வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித்தே அவர்கள் வரவழைக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அதை மறுத்தார்கள்.


ஆயினும் அதற்குப் பிறகு அந்த இயக்கம் பெரிய அளவுக்குத் தொடரவில்லை. வேறு மதத்திற்குச் சென்றவர்கள் திரும்புகிறபோது, அவர்களின் முந்தைய சாதி எதுவோ அதிலேயே சேர்ப்பது இயலாது, அவர்களும் அதை ஏற்க மாட்டார்கள் என்ற சிக்கல் இருக்கிறது.

மூல காரணம்

வரலாற்றுப்பூர்வமாகக் கவனித்தால், இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்களுக்குப் பலர் மாறியதே கூட, சாதிப் பாகுபாடுகளிலிருந்தும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடுவதற்காகத்தான். இந்தியாவிலேயே புத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்கள் உருவானதற்கே கூட அடிப்படையான காரணங்களில் ஒன்று சாதி வேற்றுமைகளும் தீண்டாமைக் கொடுமைகளும்தான்.  


இந்து மதத்திலேயே பல சீர்திருத்தவாதிகள் தோன்றி சாதியத்தை எதிர்த்திருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் வர்ண ஏற்பாடு தொழில் அடிப்படையிலானதுதான் என்று கூறினாலும் சாதிப் பாகுபாட்டை விமர்சித்தார். 11ம் நூற்றாண்டில் ராமானுஜர், தாழ்ந்த சாதியினர் என்று ஒதுக்கப்பட்ட மக்களின் ஆலய நுழைவு உள்ளிட்ட உரிமைகளுக்காக வாதிட்டார். 12ஆம் நூற்றாண்டின் பசவண்ணா வீரசைவ இயக்கம் என்று தொடங்கினார். 19ஆம் நூற்றாண்டில் ஜோதிபா புலே பிராமணியத்திற்கு எதிராகவும் அனைவரது கல்வி உரிமைக்காகவும் இயக்கம் மேற்கொண்டார். மகாத்மா காந்தி, வர்ணாஸ்ரம அமைப்பை ஏற்றுக்கொண்டவராக, தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார். டாக்டர் அம்பேத்கர் மதத்திற்குள் இருந்தே போராடிப் பார்த்துவிட்டுதான் புத்தத்திற்கு மாறுவதை ஒரு இயக்கமாகவே மேற்கொண்டார்.


தமிழ் மண்ணில் சித்தர்கள் சாதியத்தைச் சாடினார்கள். கடவுளை அடைய இடைவழியாகப் புரோகிதமோ சடங்குகளோ தேவையில்லை என்ற பக்தி இயக்கம் இங்கிருந்துதான் புறப்பட்டது. 19ம் நூற்றாண்டின் வள்ளலார் சாதி எதிர்ப்பின் அடிப்படையில்தான் சமரச சுத்த சன்மார்க்க இயக்கத்தை உருவாக்கினார். இன்றைக்கும், இந்து மதத்தின் மீது பற்று இருந்தாலும், சாதி வன்மங்களை எதிர்க்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.


இப்போது, நாடுதழுவிய அளவில் மதமாற்றத் தடைச் சட்டம் தேவையெனக் கோருகிறவர்கள், விவாதங்களின்போது சாதிப் பாகுபாடுகளை ஏற்கவில்லை என்கிறார்கள். ஆனால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சராகலாம் என்பது உள்ளிட்ட சமூக மாற்றத்திற்கான முயற்சிகளையும், கலப்புத் திருமணங்களையும் ஆதரிப்பதில்லை. மதத்தை சாதி தூக்கிப் பிடிக்கிறதா, சாதியை மதம் காப்பாற்றுகிறதா என்ற வரலாற்றுக் கேள்வி இன்னமும் இறுதியான பதிலைக் கண்டுபிடிக்காமல்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது.

உரிமைகளைக் குறிவைக்கும் ஆயுதம்

மனித அடையாளத்துடன் மட்டுமே பிறந்து பூமிக்கு வருகிறது குழந்தை. ஆசீர்வதிப்பதன் பேரில் அதன் நெற்றியில் திருநீறாக, நாமமாக, தலையில் குல்லாவாக, கழுத்தில் சிலுவையாக இன்ன பிறவாக அந்தக் குழந்தை மதத்திற்குள் கொண்டுவரப்படுகிறது –அதாவது மதத்திற்கு மாற்றப்படுகிறது. அடிப்படையான இந்த மத மாற்றத்துக்கும் தடை கோரப்படுமா? பதினெட்டு வயதில் நாட்டையே ஆளும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் போல, தனிப்பட்ட வாழ்வில் தன் மதத்தையும் தேர்வு செய்கிற – அதாவது தனது கடவுளைத் தானே முடிவு செய்கிற –  உரிமையை உறுதிப்படுத்தத் தயாரா?


கடவுள் நம்பிக்கை என்பது ஆழமானது. அதை மாற்றிக்கொள்ள ஒருவர் முடிவு செய்வது சாதாரணமானதல்ல. சொல்லப்போனால், கடவுள் நம்பிக்கையே இல்லாத மதங்கள் கூட இருக்கின்றன. அந்த மதங்களுக்கும் மாறலாம், மதமே வேண்டாமென்றும் வாழலாம். இந்தச் சுதந்திரத்தையும் உரிமையையும் அங்கீகரிப்பதல்லவா உன்னதமான பண்பாடு?


அதை மறுத்து, கட்டாயப்படுத்தி மாற்றுகிறார்கள், அச்சுறுத்தி மாற்றுகிறார்கள், ஆசை காட்டி மாற்றுகிறார்கள், திருமணத்திற்காக மாற்றுகிறார்கள் என்பதெல்லாம் சொந்த பலவீனங்களை மறைக்கிற, சமத்துவத்தை நிராரிக்கிற கோட்பாட்டின் வெளிப்பாடுதான்.


அரிதாக இங்கும் அங்குமாக இப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடக்கின்றன என்ற உண்மையை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், அதை தற்போதுள்ள சட்டங்களைக் கொண்டே  கையாள முடியும்.


மாறாகத் தனிச்சட்டம் கோருவதிலும் கொண்டுவருவதிலும்  தன் மதத்தின் மீதான நம்பிக்கையின்மையே வெளிப்படுகிறது. இப்படிப்பட்டதொரு சட்டம் குடிமக்கள் ஒவ்வொரும் தன் மதத்தைத் தேர்வு செய்வதற்கும், அதைப் பரப்புவதற்கும் அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்தும் உரிமைகளைக் குறிவைக்கும் ஆயுதமாகவே கையில் எடுக்கப்படும் என்ற அச்சத்தைப் புறக்கணிப்பதற்கில்லை.

[0]

விகடன் ப்ளஸ் டிஜிட்டல் பதிப்பு (செப்டம்பர் 12, 2025)