Monday, 8 September 2025

முப்படைகளைத் தயார்ப்படுத்த அமெரிக்கா கட்டளை - ட்ரம்ப் ஏவிய ‘வரி வேட்டை நாய்’ குரைக்குமா, குதறுமா?


 

 இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80-ம் ஆண்டு                 நிறைவைக் கொண்டாட சீனத் தலைநகரில் பிரமாண்ட பேரணி     நடைபெற்றது. இந்த நிலையில், அமெரிக்காவில்     முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க டொனால்டு     ட்ரம்ப் ஆணையிட்டிருக்கிறார்.

“அமைதிக்கால சவால்களிலிருந்து தப்பிக்க முயலும் கோழைத்தனமான செயல்தான் போர்.” –இதைச் சொன்னவர் ஜெர்மன் எழுத்தாளர் தாமஸ் மான். தனது ‘படன்புரூக்ஸ்’ என்ற சமூக உளவியல் நாவலுக்காக 1929இல் நோபல் விருது பெற்றவர். பிற்காலத்தில் ஹிட்லரின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெர்மனியிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதியாகக் குடியேறியவர்.


“ஒரு நாட்டின் வலிமைக்கான இறுதி மதிப்பீடு அதன் ராணுவ ஆற்றல் அல்ல, மாறாக அறநெறித் துணிவுதான்.” இதைக் கூறியவர் அந்த அமெரிக்காவின் ராபர்ட் எஃப் கென்னடி.  மனித உரிமைகளுக்காக வாதாடியவரான அவர் அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டவர். அவருடைய சகோதரர் ஜான் எஃப் கென்னடி, அரசுத் தலைவராகவே இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டவர்.


ராணுவ வலிமையைக் காட்டி அடக்க முயலும் மனநிலைக்கு எதிராக ஒரு எழுத்தாளரும் ஒரு அரசியல்வாதியும் கூறிய இந்தக் கருத்துகளை  மேற்கோள் காட்டுவதற்கு இப்போது என்ன தேவை ஏற்பட்டுவிட்டது? 


அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைத் தலைமையகமான பென்டகன் முப்படைகளையும் தயார்நிலையில் வைத்திருப்பதற்கான  நடவடிக்கைகளைத் தொடங்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் ஆணையிட்டிருக்கிறார். இதனை  துறை அமைச்சர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியிருக்கிறார். ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் இதைத் தெரிவித்திருக்கிறார்.


ரஷ்யாவையும் சீனாவையும் “தடுப்பதற்காக” பென்டகன் தயாராக இருக்க வேண்டும் என்று டிரம்ப் பணித்திருப்பதாக ஹெக்செத் கூறியிருக்கிறார். உலகில்  பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் டிரம்ப் இவ்வாறு ஆணையிட்டிருப்பதாக உலகின் பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.


பின்னணியில் ஒரு பேரணி


இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80ஆம் ஆண்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செப்டம்பர் 3 அன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. சீன குடியரசுத் தலைவர் ஜி ஜின்பிங் முன்னிலையில் நடைபெற்ற முப்படை அணிவகுப்பில் ரஷ்யாவின் விளாடிமிர் புடின், வடகொரியாவின் கிம் ஜோங் உன், வியட்நாமின் லுவோங் குயாங், மலேசியாவின் அன்வர் இப்ராஹிம், பாகிஸ்தானின் ஷெஹ்பாஸ் ஷரீஃப், ஈரானின் மசூத் பெசஸ்கியான் உள்பட 24 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 




அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக அரசுகள் அழைப்பைப் புறக்கணித்தன.  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்காகச் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனத் தலைவருடன் நேரடிப் பேச்சும் நடத்தினார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசினார்கள். ஆனால் பெய்ஜிங் பேரணியில் இந்தியப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை.

இரண்டாம் உலகப் போர் பற்றிச் சொல்வதென்றால், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து அமைத்த நேசப்படையுடன், அன்றைய சோவியத் யூனியன் இணைந்த பிறகு ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் படைகள் முறியடிக்கப்பட்டு, ஜப்பான் சரணடைந்ததோடு போர் முடிவுக்கு வந்தது. அந்த நேசப்படையில், புரட்சிக்கு முந்தைய, குவாவிமங்டான் கட்சியின் சியாங் கை ஷேக் அரசு இணைந்திருந்தது. அந்த வெற்றியை இன்றைய சீனா கொண்டாடுகிறபோது மேற்கத்திய அரசுகள் ஏன் புறக்கணித்தன?


உலகம் காப்பாற்றப்பட்டதன் 80ஆம் ஆண்டுவிழா  பேரணியில் சீனாவின் முப்படை அணிவகுப்பு இடம்பெற்றது. வானில் சீறிப்பாய்ந்த விமானங்கள், விரிந்த பதாகைகளை ஏந்திப் பறந்த ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட வழக்கமான தளவாடங்களுடன், அதிவேக ஏவுகணைகள், கடலடி ட்ரோன்கள் ஆகியவையும் வரிசை கட்டின. இறுதியில் 80 ஆண்டுகள் நிறைவையும்  அமைதி நாட்டத்தையும் குறிப்பிடும் வகையில் 80,000 அமைதிப் பறவைகள் பறக்கவிடப்பட்டன  


ஆயினும் இதன் மூலம், சீனா தனது படை பலத்தைக் காட்ட முயல்வதாக மேற்கத்திய அரசுகள் கருதுகின்றன என்று கூறப்படுகிறது. பேரணியில் புடின் உள்ளிட்டோர் கலந்துகொண்டது, உலக நிலவரங்களில் மேற்கத்திய ஆதிக்கத்திற்கு அணை போடுவதை உணர்த்துவதாகவும், உருவாகும் ஒற்றுமையை உயர்த்துவதாகவும் இருக்கிறது.


செரிமானச் சிக்கல்


இது டிரம்ப் நிர்வாகத்திற்கு செரிமானக் கோளாறை ஏற்படுத்தியுள்ளது. ‘நியூஸ் ஃபாக்ஸ்’ பேட்டியில் அமைச்சரும் பென்டகன் தலைவருமான பீட் ஹெக்செத், “காட்சிப்படுத்துவதும் அணிவகுப்புகளும் நல்லதுதான். ஆனால் இவை உண்மையான ஒரு ராணுவ மோதலாக மாறாது என்று அமெரிக்கா நம்புகிறது,” என்று சொன்னதன் மூலம் அந்தச் செரிமானமின்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.


ஆனாலும் முப்படைகளும் தயாரிப்புப் பணிகளில் இறங்குவதற்கு டிரம்ப் ஆணையிட்டிருக்கிறார். இதைப் பற்றிய கேள்விக்கு, “எந்த நாட்டுடனும் மோதலை வாஷிங்டன் விரும்பவில்லை. ஆனால் ஒரு வலிமையான தடுப்பு நிலையைப் பராமரிக்க விரும்புகிறது,” என்று ஹெக்செத் பதிலளித்திருக்கிறார். அதாவது, ரஷ்யாவும் சீனாவும் படையெடுக்க முற்பட்டால், அவர்களுக்கு அமெரிக்காவின் தயார்நிலையைக் காட்ட வேண்டும் என்று டிரம்ப் நினைக்கிறார்.


இதில் இவர்களுடைய உள்நாட்டு அரசியலும் இருக்கிறது. ஹெக்செத் அந்தப் பேட்டியில், “கெடுவாய்ப்பாக, முந்தைய ஆட்சி நிர்வாகத்தின் பலவீனம் ரஷ்யாவையும் சீனாவையும் நெருங்கி வர வைத்துவிட்டது. அமெரிக்காவுக்கு அப்போது சரியான தலைமை இல்லாமல் போனதால் இந்த மோசமான நிகழ்வுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது,” என்று கூறியிருக்கிறார். இது அந்த அரசியலைத் தெளிவாகக் காட்டுகிறது.

அத்துடன் ரஷ்யாவும் சீனாவும்  நெருங்குவதை டிரம்ப் நிர்வாகம் விரும்பாதது அப்பட்டமாகத் தெரிகிறது. தனது நாட்டாமையை ஏற்காத  நாடுகள் தங்களுக்குள் நெருங்குவதை எப்போதுமே அமெரிக்க அரசு சகித்துக்கொண்டதில்லை.


ஒரு பக்கம் இந்தியா–பாகிஸ்தான் இடையே மூண்ட போர் முடிவுக்கு வந்தது தன்னால்தான் என்று திரும்பத் திரும்பப் பேசுகிறார் டிரம்ப்.  இன்னொரு பக்கம் பாலஸ்தீனத்தின் காஸா முழுமையாகக் கைப்பற்றப்படும் அங்கே கடலோர உல்லாச நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கிறார்.



மற்றொரு பக்கம் ரஷ்யா–உக்ரைன் போர் நிறுத்தம் பற்றிப் பேசிக்கொண்டே, ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும் முயற்சிகளை எடுக்கிறார். இந்திய இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கும் நடவடிக்கையே, ரஷ்யப் பொருள்களை இந்தியா வாங்குவதால் கிடைக்கும் பணத்திலிருந்து உக்ரைனைத் தாக்குவதற்கான ஆயுதங்களை ரஷ்யா வாங்குதைத் தடுப்பதற்காகத்தான் என்பதாகவும் பேசுகிறார்.


போர்வீரர் மனநிலை


இப்போது நேரடியாகவே தொடை தட்டிக் காட்டுவது போல பென்டகனுக்கு ஆணையிட்டிருக்கிறார். முந்தைய ஜோ பைடன் ஆட்சியைக் குற்றம் சொன்ன ஹெக்செத், “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழிகளில் ராணுவத்தை மறுகட்டுமானம் செய்வதற்கும், போர்வீரர் மனநிலையை மீட்டமைப்பதற்கும், தடுப்புத் திறனை மறுபடி நிறுவுவதற்கும்  தயாராக இருக்க வேண்டுமென்று டிரம்ப் எங்களுக்குப் பொறுப்பளித்திருக்கிறார்,” என்று கூறியிருக்கிறார். 


அதேவேளையில், “அமெரிக்காவின் தயார்நிலைகள் இயல்பாகவே தற்காப்புக்கானவைதான். ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இதைத்  தெளிவுபடுத்தியிருக்கிறோம்.  அவர்கள் எதை நம்புகிறார்கள். அவர்கள் யார் என்பதையெல்லாம் நாங்கள் அறிவோம். எங்கள் வலிமை எவ்வளவு, ராணுவ சாதகங்கள் என்ன என எங்களுக்குத் தெரியும். ஏனென்றால், தயாராக இருப்பது மோதலைத் தடுக்கும்,” என்று ஹெக்செத் கூறியிருக்கிறார். ஆக, அமெரிக்க வியூகத்தின் மையமாக இருப்பது “ராணுவ சாதக” நிலைமைகள்தான் என்று அப்பட்டமாகிறது. 


“விண்ணிலும் ஆகாயத்திலும் கடலிலும் நீருக்கடியிலும் நெடுந்தொலைவு ஆயுதங்களுடன் இந்த ராணுவ சாதகங்களைப் பராமரிப்பதுதான் எங்கள் பணி. எங்கள் திறன்களின் ‘தங்கக் கோபுரம்’, அதைப் போல ஒன்றைக் கட்ட முடியாது என்று சீனாவுக்குத் தெரியும். இதையெல்லாம் இந்த நிர்வாக அமைப்புக்கு உட்பட்டுச் செய்வோம்,” என்று அதை மேலும் உறுதிப்படுத்துகிறார்.


தயார்நிலை தவறா?


ஒரு நாடு தனது சொந்த பாதுகாப்புத் திறனை உரசிப் பார்ப்பதும், முன்தயாரிப்புகளை மேற்கொள்வதும் தவறா? சீனா கூட தனது முப்படை வளர்ச்சியைக் காட்டித்தானே வெற்றி விழாவைக் கொண்டாடியிருக்கிறது, அது மட்டும் சரியா?


உலகத்தின் போராயுதங்கள் அனைத்தும் குழிதோண்டிப் புதைக்கப்பட வேண்டியவையே. புதைத்தால் கூட மேலெழ வாய்ப்பிருப்பதால் எரித்துச் சாம்பலாக்கப்பட வேண்டியவையே. ஒவ்வொரு நாடும் ராணுவத்திற்காகவும் ஆயுதங்களுக்காகவும் ஆண்டுதோறும் செலவிடும் தொகையை மடை மாற்றினால் உலக மக்கள் பெரும் பயடைவார்கள்.. 


உலகெங்கும் ராணுவச் செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி  2024ஆம் ஆண்டில் 2.718 டிரில்லியன் டாலர்களாக (சுமார் 239.84 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது உலக வரலாற்றில் பதிவான மிக அதிகமான ராணுவச் செலவாகும். 2023ஆண்டில் செய்யப்பட்ட செலவினத்தை விட 9.4% அதிகம். ஸ்டாக்ஹோம் நாடுகளிடை அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்ஐபிஆர்ஐ) தனது அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது.


அந்தச் செலவை நிறுத்தினால்


உலகளாவிய வறுமையை ஒழிக்க ஆண்டுக்கு சுமார் 175 பில்லியன் டாலர் (15.5 லட்சம் கோடி ரூபாய்) தேவைப்படும். இது ஒட்டுமொத்த ராணுவச் செலவில் 6.4% மட்டுமே. ஐ.நா. சபையும், உலக சுகாதார நிறுவனமும், சுற்றுச் சூழல் அமைப்புகளும் தெரிவிக்கும் இதர ஒப்பீடுகள் வருமாறு:


பல கொடிய நோய்கள் பரவுவதற்குப் பாதுகாப்பற்ற குடிநீர் ஒரு காரணம். எங்கும் தூய்மையான, பாதுகாப்பான, நிறைவான குடிநீர் வழங்குவதற்கு 30 பில்லியன் டாலர் (2.65 லட்சம் ரூபாய்) போதுமானது. இது 1% அளவுக்கும் குறைவானது. அனைவருக்கும் அடிப்படை சுகாதார/மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்வதற்கு 35 பில்லியன் டாலர் (3.1 லட்சம்  கோடி ரூபாய்), 1.28%  மட்டுமே தேவைப்படும். உலகெங்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தொடக்கக் கல்வி கிடைக்கச் செய்ய ஓராண்டில் தேவைப்படுவது 11 பில்லியன் டாலர் (97,000 கோடி ரூபாய்), 0.4மட்டுமே.


இயற்கைக்கு எதிராகச் செயற்கையான போர் தொடுத்ததற்குப் பரிசாகப் பீடித்துள்ள புவி வெப்பமாதலை இயல்பான அளவுக்குக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் 1.8 டிரில்லியன் டாலர் (159 லட்சம் கோடி ரூபாய் தேவை. மொத்த ராணுவச் செலவுக்குப் பக்கத்தில் வருவது போலத் தெரிந்தாலும் அதைவிடக் குறைவுதான்.


இப்படியெல்லாம் நிகழ்வது ஒரு நெடுங்கனவாகவே, ஏக்கப் பெருமூச்சாகவே தொடர்கிறது. வலுத்தவன் தன் கையில் வாளெடுத்துச் சுழற்றினால், அடுத்தவன் தன் கையில் அரிவாளை எடுக்கத்தானே வேண்டியிருக்கிறது? இளைத்தவன் ஒரு கத்தியையாவது பிடிக்கும் நிலை ஏற்படத்தானே செய்கிறது?


போரின் மூலக் காரணமே…


இங்கே ஒன்றைக் கவனத்திற்குக் கொண்டு வந்தாக வேண்டும். செப்டம்பர் 3 பேரணி இரண்டாம் உலகப் போர் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்டது அல்லவா? அந்தப் போர் மூண்டதற்கான மூலக் காரணங்களில் ஒன்று அமெரிக்க அரசின் மோசமான சொதப்பல்.


1920களில் அமெரிக்கப் பங்குச் சந்தையில்  ஊக பேர வணிகம் உச்சத்திற்குப் போனது. மக்களுக்கு மிதமிஞ்சிய லாபம் பற்றிய எதிர்பார்ப்பு ஊட்டப்பட்டது. அவர்கள் கடன் வாங்கியாவது பங்குகளைக் குவிக்க முண்டியடித்தார்கள். விரைவிலேயே அந்த நீர்க்குமிழி உடைந்துபோக, பெரும் இழப்புகளுக்கு உள்ளான மக்கள் இப்போது  வங்கிச் சேமிப்புகளைத் திரும்பப் பெற முண்டியடித்தார்கள்.  ஆயிரத்துக்கு மேற்பட்ட வங்கிகள் திவாலாகின. வங்கிக் கடன்கள் தடைப்பட்டதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.  வேலையின்மை பெருகியது. மக்களின் வாங்கும் திறன் வெகுவாக அடிபட்ட்து. உள்நாட்டுத் தயாரிப்புகள் தேக்கடைந்தன.


தொடக்கத்தில் இதையெல்லாம் அனுமதித்து வேடிக்கை பார்த்த ஹெர்பர்ட் ஹூவர் தலைமையிலான குடியரசுக் கட்சி அரசு, நிலைமையைச் சமாளிக்க ஒரு சட்டம் கொண்டுவந்து,  இறக்குமதிகளுக்கு 1930இல் கடுமையான வரிகளை விதித்தது. ஆம், அன்றைய டாரிஃப் யுத்தம்தான்.


பாதிக்கப்பட்ட மற்ற நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு வரிகளை ஏற்றின. உலகச் சந்தையே ஆட்டம் கண்டது. (நிலைமையை மோசமாகக் கையாண்ட ஹூவர் அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ஆட்சிக்கு வந்த ரூஸ்வெல்ட் 1934 இல் இருதரப்பு ஒப்பந்தச் சட்டம் கொண்டுவந்து டாரிஃப் சட்டத்தைச் செயலற்றதாக்கினார்). இப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருந்த ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர், இத்தாலி பாசிசவாதி முசோலினி, ஜப்பான் அரசர் ஹிரோஹிட்டோ ஆகியோர் உலகச் சந்தையை ஆக்கிரமிக்க 1939இல் மூட்டிய மோதல்கள் உலகப் போராக மாறின. அதை நிறுத்துவதற்கு உலகம் எட்டரைக் கோடி மனிதர்களையும், பெரும் சீரழிவுகளையும் விலையாகக் கொடுக்க நேர்ந்தது.


உலகப் பதற்றம்


இப்போதும், ஹெர்பர்ட் ஹூவர் கட்சியைச் சேர்ந்த டிரம்ப் ஏவியுள்ள டாரிஃப் வேட்டை நாயின் குரைப்பும் குதறலுமே உலகில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் பின்னணியைத் தெரிந்துகொண்டால், உலகப்போர் வெற்றிப் பேரணி அணிவகுப்புக்கான தேவையையும், டிரம்ப் கட்டளையின் உட்பொருளையும் புரிந்துகொள்ள முடியும். ஏற்கெனவே, ரஷ்யாவுக்கும் ரஷ்யாவுக்குத் துணை நிற்கும் நாடுகளுக்கும் டிரம்ப் “கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்ற மிரட்டல்களை விடுத்து வந்திருக்கிறார். 




“அமெரிக்காவுக்கே முதலுரிமை” என்ற டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையோடு தொடர்புடையது இது. முன்பு ஆட்சியில் இருந்த ஜனநாயகக் கட்சியைப் பொறுப்பாக்குகிற அரசியல் சகதி ஆட்டமும் இதில் கலந்திருக்கிறது.



இந்த ஆட்டம் இத்தோடு நின்றுவிடாது. பெரிய நாடு, சிறிய நாடு எல்லாமே தங்களுடைய ராணுவத் திறனையும், ஆயுத வலிமையையும் பல மடங்கு பெருக்குவதற்கு இட்டுச் செல்லும். அதன் விளைவாக, உள்நாட்டில் உணவு, வேலை, குடியிருப்பு, கல்வி, மருத்துவம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக வெட்டப்படும். சொந்த மக்கள் மீது வரிச் சுமைகள் ஏற்றப்படும். நெருக்கடிகளைச் சமாளிப்பதன் போர்வையில் கருத்துச் சுதந்திரம் உள்பட ஜனநாயக உரிமைகள் முடக்கப்படும். உலகம் முழுவதும் மக்கள் மனங்களில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம், வாழ்க்கை சிதறலாம் என்ற அச்சம் ஊன்றப்படும். 


போர்களின் கதைகளை அறிந்தவர்களுக்கு, இந்த எச்சரிக்கைகள் எதுவுமே வெறும் கற்பனையல்ல என்று சக மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய காலக் கடமை ஏற்பட்டிருக்கிறது.

[0]

-விகடன் ப்ளஸ் டிஜிட்டல் பதிப்பில் (செப் 7) எனது கட்டுரை

No comments: