“மூணு நாளாப் பார்க்க முடியலையே… வெளியூருக்கு எங்கேயாவது போயிட்டீங்களா? ஹெல்த் பிராப்ளம் ஒண்ணுமில்லையே?”
காலை நடை நண்பர்களின் அன்பான விசாரிப்புக்கு நன்றி தெரிவித்தேன். “வெளியூருக்கெல்லாம் போகலை. வயிறுதான் என்னவோ ஒரு எதிர்ப்புப் போராட்டம் நடத்திருச்சு… வெளிய வரவோ, ரொம்ப நேரம் நடக்கவோ முடியாமப் போயிடுச்சு.”
“அடடா… இப்ப நல்லா குணமாயிடுச்சா?”
“ஆமா, போராட்டத்துக்குப் பணிஞ்சு, சாப்பாட்டை மாத்தினேன், மருந்தும் எடுத்துக்கிட்டேன்.”
“இதனாலதான் உங்க ரியாக்ஸன் எதையும் பார்க்க முடியலையா? என்னடா இது, திமுக–வை விமர்சிக்கிற மாதிரி சிபிஎம் கட்சியைக் கிண்டலடிச்சிருக்காங்க, இவரு பதில் சொல்லாம இருக்காரேன்னு நினைச்சேன்.”
இரண்டாவது நண்பர் எங்களுடன் பேச்சிலும் இணைந்துகொள்ள, நடைக்கு இடைக்கால ஓய்வளித்துப் பூங்கா இருக்கையில் அமர்ந்தோம்.
“எதைச் சொல்றீங்க…?”
“உங்க நண்பர் சாவித்திரி கண்ணன் ஃபேஸ்புக்ல எழுதியிருக்கிறதைப் பார்க்கலையா நீங்க? ரீசன்ட்டா நடந்த ‘அறம்’ ஃபங்ஷன்ல கலந்துக்கிட்டதா சொன்னீங்க, அதனால அவரோட கிரிட்டிசிசத்தைக் கண்டுக்காம விட்டுட்டீங்களா? இல்லாட்டி அதுல ஸ்டஃப் இருக்குதுன்னு சைலன்ட்டாயிட்டீங்களா?”
“இருங்க இருங்க, ஒரு முக்கியமான காரணத்தை ஏற்கெனவே சொல்லிட்டேன். அப்புறம் உடம்பு சரியில்லாம வீட்டுல இருந்தேனே தவிர, சும்மா இருக்கலை. ரெண்டு முக்கியமான கட்டுரையை முடிச்சு அனுப்ப வேண்டியிருந்துச்சு… இணையவழிக் கூட்டம் ஒண்ணும் இருந்துச்சு. அந்தத் தயாரிப்பு வேலைகளும் சேர்ந்துக்கிட்டதாலதான்…”
“அப்ப அவரோட ஸ்டேட்டஸ்சைப் படிச்சிட்டீங்களா?”
“முதலமைச்சர் ஸ்டாலினின் சிறப்பம்சம்னு ஒண்ணையாவது சொல்லுங்கன்னு நண்பர்களும் வாசகர்களும் கேட்கிறதாவும், இப்போதைக்கு ஒண்ணைச் சொல்றேன்னும் சொல்லி ஒரு பதிவு போட்டிருக்கிறாரே, அதுதானே? படிச்சேன்…”
“உங்களுக்குக் கோபம் வந்திருக்குமே?’
“ஊடகவியலாளர்களோட கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறவன் நான், எதுக்காகக் கோபப்படணும்? ஆனா, வருத்தப்பட்டேன். கவலைப்பட்டேன்.”
“என்ன வருத்தம்? என்ன கவலை?”
‘சாவித்திரி கண்ணன் எழுதியிருக்கிற முக்கியமான கருத்துகள் ஒண்ணொண்ணா பார்க்கலாம். சரியா? முதல்லயே ஒண்ணைச் சொல்லிடுறேன், அவர் என்னுடைய மதிப்புக்குரிய ஒரு முன்னுதாரணப் பத்திரிகையாளர். அவர் நடத்துற ‘அறம்’ தளத்துல மாதத்துக்கொரு கட்டுரை எழுதிட்டு வர்றேன், அதிலே எனக்கு ஒரு பெருமையும் இருக்கு. இப்ப முகநூல் பதிவுக்கு வருவோம். ஒருத்தரோட சிறப்பம்சம் எது, சிறப்பில்லாதது எதுன்னு தன்னோட கண்ணோட்டப்படி முடிவு செய்றது ஒவ்வொருத்தரோட உரிமை. அதுக்குள்ள நான் போகலை…”
“ஆனா, ‘கம்யூனிஸ்ட்டுகளின் வீரியத்தைக் காணாமலடித்ததில் ஸ்டாலின் மிகப் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார் என்பதை நானே ஒரு கம்யூனிச ஆதரவாளன் என்ற வகையில் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்’னு எழுதியிருக்கிறாரே சார்...’’
பேசிக்கொண்டிருக்கும்போதே தனது கைப்பேசியை இயக்கி, முகநூலுக்குள் சென்று அந்தக் கட்டுரையைத் திறந்து வைத்திருந்த நண்பர் இந்த வரிகளை வாசித்துக் காட்டினார்.
“கம்யூனிச ஆதரவாளர்ங்கிறதுக்கு என்ன வரையறைன்னு சொல்ல முடியாது. கம்யூனிச ஆதரவாளரா இருக்கிறதுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளரா இருக்கிறதுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு. பொதுவா அவர் கம்யூனிஸ்ட்டுகளோட தோழமையா இருக்கிறவர்தான். ஆனா, இன்னிக்கு நாட்டோட நிலைமையில, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு முறைக்கும், மக்கள் நல்லிணக்கத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிற சூழல்ல, அதெல்லாம் எப்படியோ நாசமாப் போகட்டும்னு விட்டுட்டு வீரியத்தைக் காட்டிகிக்கிட்டு இருக்க முடியாதுல்ல? அரசியல் களத்தில், வலதுசாரிகளுக்கு எதிரா மக்களைத் திரட்டுறதுல, தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் திமுக–வுக்கு இருக்கிற முக்கியமான பங்கை மறுக்க முடியாதுல்ல? சொல்லப்போனா இப்படிப்பட்ட அரசியல் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் ஒரு கட்டாயத் தேவைங்கிற நிலைமையை திமுக–வுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் மத்த கூட்டணிக் கட்சிகளுக்கும் ஏற்படுத்தியிருக்கிறதே ஆர்எஸ்எஸ், பாஜக வியூகங்கள்தானே? அதுக்கேத்த மாதிரி பக்குவமான அணுகுமுறையைக் கையாளுறாங்க, அதை வீரிய இழப்புங்கிறாரு இவரு. இதை யோசிக்க முடியலையான்னு நினைக்கிறப்ப வருத்தம் ஏற்படத்தான் செய்யுது.”
“அது முக்கியமானதுதான் சார், ஆனா அதுக்காக மத்த முக்கியமான இஷ்யூக்கள்ல காம்ப்ரமைஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறதுல என்ன தப்பு?”
“எதுல அப்படி விட்டுக்கொடுத்துருக்காங்க? கூட்டணியிலே இருந்தாலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் போல பல இடங்கள்லேயும் போராடுறவங்க பக்கம்தானே நிக்கிறாங்க? தமிழ்நாட்டிலே சாதி ஆணவக் கொலைகள் நடக்கிறதை அரசு ஒப்புக்கிடணும், அதைத் தடுக்கத் தனிச் சட்டம் கொண்டுவரணும்னு வலியுறுத்திக்கிட்டு இருக்காங்களே?...”
“நான் தினசரி தீக்கதிர் படிக்கிறேன்னு எழுதியிருக்கிறாரு…”
“அந்தத் தீக்கதிரிலேயே பல உள்ளூர்ப் பிரச்சினைகள்லேயிருந்து மாநில அளவிலான விவகாரங்கள் வரைக்கும் திமுக அரசின் நிலைப்பாட்டுக்கு, அல்லது சரியான நடவடிக்கை எடுக்காம இருக்கிறதுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சு நடக்கிற இயக்கங்கள் பத்தின செய்தி வந்துக்கிட்டுதானே இருக்கு? அதையெல்லாம் பார்க்க மாட்டாரு போல…”
“அதில்லை சார், தினமும் தீக்கதிர் படிக்கிறதைச் சொல்லிட்டு, ஒரு முக்கியமான போராட்டம் தொடர்பா, சுப்ரீம் கோர்ட் தமிழ்நாடு கவர்மென்ட்டைப் பிடிபிடின்னு பிடிச்சிருக்குது, அந்தச் செய்தியைத் தீக்கதிர் தவிர்த்துவிட்டதுன்னு சொல்லியிருக்கிறார்…”
“செவிலியர்கள் கோரிக்கை தொடர்பான வழக்குல, மாநில அரசு தாக்கல் செஞ்ச மேல்முறையீட்டுல உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துகளைக் கூறியிருக்குது. அதைப் பத்தின செய்தி வரலைன்னு சொல்றதுக்கும், தவிர்த்துட்டாங்கன்னு சொல்றதுக்கும் வேறுபாடு இருக்குது. சொற்களின் அரசியல் சம்பந்தப்பட்ட வேறுபாடு அது. ஏதோ திட்டமிட்டு அதை மூடி மறைத்துவிட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிற சொல் அரசியல் அது.”
கொஞ்சம் வேகமாகச் சொல்லியிருப்பேனோ? “இப்ப நீங்க கடுமையான கருத்தைச் சொல்றீங்க சார். ரிலாக்ஸ்டா பேசுங்க,” என்றார் நண்பர்.
“இதிலே பல காரணங்கள் இருக்கலாம். நான் அங்கே வேலை செஞ்சிக்கிட்டிருந்தப்ப கூட பல செய்திகள் விடுபட்டிருக்கு. நீதிமன்றம் தொடர்பான குறிப்பிட்ட செய்தி வர்றப்ப பணியிலே இருந்தவங்க அதைக் கவனிக்கத் தவறியிருக்கலாம். நீதிமன்றத்தோட இறுதித் தீர்ப்பா வராம, விசாரணை நடக்கிறப்பவே சொல்ற கருத்தா இருக்கலாம், அப்படி இருந்தா இறுதித் தீர்ப்பு வர்றப்ப திட்டவட்டமான செய்தியா போடலாம்னு அந்த நேரத்திலே வேலையிலே இருந்தவங்க முடிவு பண்ணியிருக்கலாம். தொழிலாளர் போராட்டம் தொடர்பான வழக்குன்னு வர்றப்ப, விசாரணை நடக்கிறப்ப நீதிபதிகள் கருத்தா சொல்றது ஒண்ணாவும், இறுதித் தீர்ப்பு அதுக்கு நேர்மாறாவும் இருந்த கதைகள் நிறைய இருக்கு. மூத்த பத்திரிகையாளருக்கு இது தெரியாம இருக்காது. இடைக்காலத்திலே நீதிபதிகள் சொல்ற விமர்சனத்தையும் செய்தியாக்கணும்கிறதுதான் என் நிலைப்பாடு. ஆனா, அதை வேணும்னே தவிர்த்துட்டாங்கங்கிறதோ, வீரியத்தை விட்டுட்டதால இப்படிக்கிறதோ வம்படி வாதம்தான்.”
“கூல்… கூல்… நானே கூட பார்த்திருக்கிறேன். பல முக்கியமான நியூஸ் பத்திரிகைகள்ல மிஸ்ஸாகியிருக்கும். ரெண்டு மூணு நாள் கழிச்சுக் கூட வரும். இது அவருக்குத் தெரியாதா என்ன?”
“நல்லா தெரிஞ்சிருக்கும். ஆனா இப்படியொரு கோணத்திலே பதிவு போடணுன்னு ஒருத்தரு முடிவு செய்றாருன்னா, அப்புறம் அதெல்லாம் ஞாபகம் வராதுல்ல. ஒரு வாதத்துக்காக, நாகரிகமான சொற்களிலேயே கேட்கிறேன், அறம் தளத்திலே பதிவாகாமல் விட்டுப்போன செய்திகள், எழுதப்படாத பிரச்சினைகள்னு பெரிய பட்டியலே தயாரிக்க முடியும்; அதனால அறம் வழுவிட்டாங்கன்னு சொல்லலாமா?”
“..............”
“இன்னொண்ணையும் சொல்றேன். 2022இல கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பா ஒரு செய்திக்கட்டுரை எழுதினதுக்காக சாவித்திரி கண்ணனை வீட்டிலே இருந்து இழுத்து வந்து கைது பண்ணி வழக்குப் பதிவு செஞ்சாங்க. முதலமைச்சர் உறுதியளிச்சதுக்கு மாறா இருக்குதுன்னு அப்ப சிபிம் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டன அறிக்கை வெளியிட்டார். வீரியம் காணாமப் போனதாலதான் அப்படி அவர் கண்டனம் தெரிவிச்சாரா?”
“..............”
“என்ன இப்ப நீங்க மௌனமாகிட்டீங்க?”
“இல்லையில்லை, ஃபேஸ்புக்ல அவர் எழுதியிருந்த இன்னொரு பாயின்டைத் தேடிட்டிருந்தேன்… ஆங்… இதோ… ‘தீக்கதிர் பல நேரங்களில் முரசொலி சாயலில் இருப்பதை கண்டு வியக்கிறேன். நான்தான் இப்படி நினைக்கிறேனா என்று வேறு சில மூத்த பத்திரிகையாளர்களிடமும் கேட்டபோது அவர்களும் அவ்வாறே உணர்வதாகச் சொன்னார்கள்’னு எழுதியிருக்காரு.”
“ஊழியர்கள் ஊதியம், பத்திரிகைக் காகிதம், எந்திரப் பராமரிப்பு, வாகனங்கள், மின்சாரம், பெட்ரோல், டீசல், கட்டட வாடகை, மருத்துவ உதவி… இப்படி ஒரு பதிவு பெற்ற நிறுவனமாகவும் இயங்குகிறபோது செய்தாக வேண்டிய செலவுகள் நிறைய இருக்கு. அதையெல்லாம் ஓரளவுக்காவது சமாளிக்க விளம்பர வருவாய் ஒரு முக்கியமான தேவை. விளம்பரம் வெளியிடுவது புனிதத்துக்குக் கேடுன்னுல்லாம் தீக்கதிர் நினைக்கிறதில்லை. அரசாங்க விளம்பரங்களும் வர்றப்ப வெளியிடுறாங்க. திமக அரசு செயல்படுத்துகிற, மக்களுக்குப் பயன்படக்கூடிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிடுறாங்க. கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஒத்திசைவா இருக்கிற அறிக்கைகளை முதலமைச்சர் வெளியிடுகிறபோது முதல் பக்க முக்கியத்துவம் கொடுக்கிறாங்க…”
“சரிதான். அதை முரசொலி மாதிரின்னு சொல்றது ஓவர்தான்.”
“அடிப்படையான திமுக அசூயை நிலைப்பாட்டிலிருந்து, தோழமைக் கட்சிகளுக்குக் கொம்பு சீவிவிட முயல்றவங்க நிறையப்பேர் இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தரா இருக்கிறாரோன்னு கவலை ஏற்படுது. ‘அறம்’ விழாவிலே ஒரு வாசகர், அடுத்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்களான்னு கேட்டார். அதுக்கு இவர், பாஜக–வைத் தடுத்தாகணும். அதுக்கேத்த மாதிரி வாக்களிப்பேன். அதிலே திமுக பலனடையும்னா அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாதுன்னாரு. அங்கே அப்படிப் பேசிட்டு, இங்கே இப்படி எழுதிக்கிட்டிருந்தா, அது யாருக்குப் பலனளிக்கும்னு யோசிக்கிறப்ப, கவலை ஏற்படுது… ஆனா அவரோட பதிவினால ஒரு சின்ன மகிழ்ச்சியும் ஏற்படுது…”
“என்ன மகிழ்ச்சின்னு எனக்குத் தெரியும் சார்.”
“சொல்லுங்க பார்க்கலாம்.”
“இந்தக் கருத்தையெல்லாம் எங்ககிட்ட ஷேர் பண்ண முடிஞ்சதுங்கிற மகிழ்ச்சிதானே! இன்னிக்குக் கொஞ்சம் டெப்தா பேசினோம், அதனால காஃபியோட வாக்கிங்கை முடிப்போம்.”
[0]
முகநூல் பதிவு (செப்.19, 2025)
No comments:
Post a Comment