குற்றவியல் சட்டத்திலிருந்து அவதூறு நீக்கப்பட வேண்டிய காலம் வந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றத்திலிருந்து எழுந்துள்ள குரல் நாடு தழுவிய விவாதத்திற்கு ஒரு தொடக்கப் புள்ளியை வைத்திருக்கிறது. அந்தப் புள்ளியை வைத்திருப்பவர் உச்சநிதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்.
தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தொடர்பாக ‘தி வயர்’ இணையத்தள ஊடகம் வெளியிட்ட ஒரு செய்திக் கட்டுரைக்காக அதன் ஆசிரியர், கட்டுரையாளர் மீது தில்லி பெருநகர நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அனுப்பப்பட்ட அழைப்பாணைகளை (சம்மன்) விலக்கக் கோரி, ஊடக நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதனை எம்.எம். சுந்தரேஷ், எஸ்.சி. சர்மா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
செப். 22இல் மேல்முறையீட்டை எடுத்துக்கொண்டபோது, “இவையனைத்தையும் குற்றமற்றதாக்க சரியான காலம் இது,” என்று சுந்தரேஷ் கருத்துக் கூறியிருக்கிறார். அப்படியானால் தனி மனிதர்கள் பற்றியோ அரசியல் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் பற்றியோ அவதூறாகப் பேசலாமா, எழுதலாமா? குடிமக்கள் ஒவ்வொருவரின் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய நீதிமன்றமே அவதூறுத் தாக்குதல்களைத் தண்டனைகளிலிருந்து விடுவிக்கலாமா?
ஒரு கட்டுரை…
இதற்குள் போவதற்கு முன், இந்தக் குறிப்பான வழக்கின் கதையைப் பார்க்கலாம். 2016ஆம் ஆண்டில் ‘தி வயர்’ தளத்தில், “ஜேஎன்யு வளாகம் திட்டமிட்ட பாலியல் மோசடிக் கூடாரமாகிவிட்டது எனக் கூறுகிறது ஒரு ஆவணத் தொகுப்பு; வெறுப்புப் பிரச்சாரம் என்கிறார்கள் மாணவர்களும் பேராசிரியர்களும்” என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அரசியல் பிரிவு ஆசிரியர் அஜோய் ஆசீர்வாத் மஹாபிரஷாஸ்தா அதை எழுதியிருந்தார்.
2015ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்த ஆவணத் தொகுப்பு (டோசியர்) சட்டத்துறை பேராசிரியர் அமிதா சிங் தலைமையில் 11 ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டதாகக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பாகிய ஏபீவிபி ஆதரவாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகத்திற்குள் தேசவிரோதச் செயல்கள் நடைபெறுகின்றன; காஷ்மீர் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவும் நாட்டின் உயர்தன்னாளுமைக்கு எதிராகவும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன; நக்சலைட்டுகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஆதரவான நடவடிக்கைகளால் நாட்டை உறுதியற்ற நிலையில் வைத்திருக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன; அதற்கான துண்டறிக்கைகளும் சுவரொட்டிகளும் விநியோகிக்கப்படுகின்றன; கருத்தரங்குகள், வீதி நாடகங்கள், ஊர்வலங்கள், வேலைநிறுத்தங்கள், பட்டினிப் போராட்டங்கள் என நடத்தப்படுகின்றன; இதற்கு சில பேராசிரியர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்று அந்த ஆவணத் தொகுப்பில் கூறப்பட்டிருப்பதாகக் கட்டுரை தெரிவிக்கிறது.
ஆண்கள் விடுதியில் பெண்கள் வரக்கூடாது என்ற விதி இருந்தாலும் சோதனைகளின்போது பல அறைகளில் பெண்கள் இருந்திருக்கிறார்கள்; பாலியல் தொழில் நடைபெறுகிறது, உணவகப் பணியாளர்களாக பாலியல் தொழில் பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்; தாராளமாக மது புழங்குகிறது; மாட்டுக்கறி வழங்கப்படுகிறது; புதிய மாணவர்கள் பணம், போதைப்பொருள், பாலியல் மோகங்கள் ஏற்படுத்தப்பட்டு இவற்றில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்றும் கட்டுரை கூறுகிறது.
தொகுப்பைத் தயாரித்தவர்களில் ஒருவர், “உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக ஜேஎன்யு உருவெடுப்பதற்கு இத்தகைய நிலைமைகள் தடையாக இருக்கின்றன. கல்விச் செயல்பாடுகள் மட்டுமே தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்று பேட்டியளித்திருப்பதும் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
ஆவணத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலோர் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கூறியிருக்கிறார்கள். ஜேஎன்யு–வின் கருத்துச் சுதந்திரச் சூழலுக்கு எதிரான ஹிந்துத்துவா பிரச்சாரத்தின் ஒரு பகுதியே அது என்றும் கூறியிருக்கிறார்கள். சமுதாயத்தில் பேசப்படும் அனைத்து அரசியல், சமூகக் கருத்துகள் பற்றியும் அச்சமின்றி விவாதிப்பது இந்தக் கல்வி வளாகத்தின் பாரம்பரியம், ஆவணத்தில் குறிப்பிடப்படும் துண்டறிக்கைகள் வெளிப்படையாக விநியோகிக்கப்பட்டவைதான், கூட்டங்கள் முறையான அறிவிப்போடு நடத்தப்படுபவைதான் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
கல்வி என்றால் பாடப் புத்தகங்களின் முன் அட்டைக்கும் பின் அட்டைக்கும் இடையே அகப்பட்டுக்கொண்ட, மனப்பாட எந்திரங்களை உருவாக்குவதல்ல. அரசியல், சமூகம், அறிவியல், பொருளாதாரம், வரலாறு, பண்பாடு என மக்கள் வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களைப் பற்றிய பன்முக அறிவுதான் மெய்யான கல்வி. கல்விக்கூட வளாகங்கள் அந்த மெய்யறிவை வளர்க்கிற இடங்களாக இருக்க வேண்டும் என்று கல்வி உரிமைப் போராளிகள் எப்போதுமே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அத்தகைய ஒரு சூழலை உருவாக்கியிருக்கிற பல்கலைக்கழகத்தின் தன்மையை ஏற்க மறுக்கும் மனநிலையிலிருந்தே இப்படிப்பட்ட ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன எனலாம்.
நீதிமன்றங்களுக்கிடையே…
இந்நிலையில்தான், பணி ஓய்வு பெற்றுவிட்ட பேராசிரியர் அமிதா சிங், 2016இல் தில்லி பெருநகர நீதிமன்றத்தில் ‘தி வயர்’ மீதும், அதன் நிறுவன ஆசிரியர், கட்டுரையாளர் ஆகியோர் மீதும் அவதூறு வழக்கு தொடுத்தார்.
அந்தக் கட்டுரை தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறது, பல பல்கலைக்கழகங்களில் தனக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கலவி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டது, பணி ஓய்வுக்குப் பிந்தைய புதிய வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டன என்று அமிதா தனது புகாரில் கூறியிருக்கிறார். அப்படியொரு ஆவணம் நிர்வாகத்திடம் அளிக்கப்படவில்லை, அதைத் தயாரித்ததில் தனக்குத் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகமும் தன்னிடம் அத்தகைய ஆவணம் எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறியது.
தில்லி பெருநகர நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 2017இல் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியது. அதை விலக்கிக்கொள்ள ஆணையிடக் கோரி ’தி வயர்’ குழுவினர் தில்லி உயர்நீதிமன்றத்திற்குச் சென்றனர். உயர்நீதிமன்றம் 2023இல் அதை விலக்கி ஆணையிட்டது. அதை எதிர்த்து அமிதா உச்சநீதிமன்றத்தை நாடினார். அதை ஏற்ற உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டு ஜூலை 24இல், உயர்நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய்தது.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ
இதில் ஒரு சுவையான தகவல் இருக்கிறது. அப்போது இந்த அவதூறு வழக்கில் அவ்வாறு தீர்ப்பளித்த அமர்வில், இப்போது குற்றவியல் சட்டத்திலிருந்தே அவதூறை விலக்க வேண்டுமெனக் கருத்துக் கூறியுள்ள நீதிபதி சுந்தரேஷ்வரும் இடம்பெற்றிருந்தார்!
அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, பெருநகர நீதிமன்றம் மறுபடியும் அழைப்பாணைகளை அனுப்பியது. அதை எதிர்த்து ‘தி வயர்’ குழுவினர் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. திரும்பவும் அவர்கள் உச்சநிதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். அவர்களின் மேல்முறையீடு மீதான விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் சுந்தரேஷ்வர் அந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார்.
சிறையும் தண்டமும்
முன்னதாக, 2016 மே 13 அன்று, உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'சுப்ரமணிய சுவாமி எதிர் ஒன்றிய சட்ட அமைச்சகம் மற்றும் இதரர்கள்’ என்ற வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 499 (அவதூறு), 500 (அவதூறுக்கான தண்டனை), குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 199 ஆகிய பிரிவுகள் அரசமைப்பு சாசனப்படி செல்லும் என உறுதி செய்தது. குற்றம் நிறுவப்படும் நிலையில் இரண்டு ஆண்டுகள் வரை சிறை, அல்லது தண்டம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கலாம் என்று பிரிவு 500 கூறுகிறது.
கடந்த 2023இல் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) விலக்கப்பட்டு, பாரதிய நீதிச் சட்டத்தொகுப்பு (பாரதிய நியாய சன்ஹிதா) (பீஎன்எஸ்) ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் 356, 357 பிரிவுகள் குற்றமுறு அவதூறுக்கான தண்டனைகளைக் கூறுகின்றன.
இந்தியக் குடியரசின் அடிவாரமாகிய அரசமைப்பு சாசனத்தில் கருத்துச் சுதந்திரத்தைக் காக்கிறது 19வது சட்ட உரை. ஒவ்வொருவரின் நற்பெயர் உரிமையைக் காக்கிறது 21ஆவது சட்ட உரை. இவ்விரண்டுக்குமான சமநிலை குறித்த உரையாடலுக்கு வழி வகுத்திருக்கிறது நீதிபதி சுந்தரேஷ்சின் புதிய கருத்து.
தொடரும் அச்சுறுத்தல்
குற்றவியல் பிரிவாக அவதூறு இருப்பது அச்சுறுத்தல்தான் என்று ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஒருவர் தன்னை விமர்சிக்கக்கூடிய எந்தக் கருத்தையும் அவதூறென்று வழக்குத் தொடுக்கலாம். தனது செயல்பாடு பற்றிய எந்தச் செய்தியையும் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டதாக வாதிடலாம்.
நீதிமன்றத்தில், செய்திக்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய முடியாத நிலைமை இருக்கக்கூடும். ஏனென்றால், ஊடவியலாளர்கள் தகவல்களை வழங்கியவரிடம் அவர் யார் என்று ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்துதான் உண்மைகளைத் திரட்டுகிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பது அடிப்படையான ஊடக அறம். அதற்குத் தங்களை ஒப்படைத்துக்கொண்டவர்கள் சிறை செல்லவும் தயாராக இருப்பார்களேயன்றி, காட்டிக்கொடுத்துத் தப்பிக்க முயலமாட்டார்கள்.
செய்திகளுக்கான மூலாதாரங்களை வெளிப்படுத்துவது தொடர்பாக வரையறுக்கப்பட்ட சட்டவிதி ஏதுமில்லை. இந்திய பத்திரிகைகள் மன்றத்தில் (பிரஸ் கவுன்சில்) அப்படியொரு விதி இருக்கிறது, நீதிமன்றங்களுக்கு அது பொருந்தாது. ஆயினும், பத்திரிகைச் சுதந்திரத்திற்குத் தகவல் மூலாதாரங்களைப் பாதுகாப்பது ஓர் அடிப்படைத் தேவை என உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது (2021இல் தலைவர்கள், நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைப்பேசி வழியாக வேவு பார்க்கப்பட்ட ‘பெகாசஸ்’ உளவுச் செயலி விவகாரம் உள்ளிட்ட சில வழக்குகள்).
ஊடகங்களுக்கு இந்தச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் உரிய திருத்தம் செய்வதற்கு இந்திய சட்ட ஆணையமே பலமுறை பரிந்துரைத்திருக்கிறது. ஒருமுறை கூட அதை அரசாங்கங்கள் பரிசீலித்ததில்லை.
நழுவலுக்குக் காரணமாக
இந்நிலையில், பல ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கத் தயங்குகிறார்கள். அதிகார பீடங்களுக்கு ஆத்திரமூட்டும் செய்திகளை வெளியிடவும் வேண்டாம், சாமரம் வீசவும் வேண்டாம், வம்பில்லாத பொழுதுபோக்கு சங்கதிகளை வாசகர்களுக்குக் கொடுத்தால் போதும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். விதிவிலக்குகளாக உள்ள ஊடகங்கள் தவிர்த்து மற்றவற்றில் கூர்மையான அரசியல்/சமூக/கார்ப்பரேட் விமர்சனங்கள் வராததற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆக, நேர்மையான செய்திகளை வெளியிடச் செய்வது என்ற நோக்கம் தடம் மாறுகிறது. மக்களுக்கு உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் வழி அடைபடுகிறது. எதிர்க் கருத்துகளை ஒடுக்குவதற்கான ஆயுதங்களாக இந்தச் சட்டப் பிரிவுகள் கையாளப்படுகின்றன.
உண்மையிலேயே குற்றமுறு நோக்கமுள்ள செய்திகள் வருமானால், உரிமையியல் (சிவில்) சட்டங்களின் மூலமே தீர்வு பெற முடியும். பத்திரிகைகள் மன்றத்தை அணுக முடியும். புகாரில் நியாயம் இருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரிகை மன்னிப்புக் கோர மன்றம் ஆணையிடும். குறிப்பிட்ட செய்தி எந்தப் பக்கத்தில் எந்த அளவில் வெளியிடப்பட்டதோ அதே பக்கத்தில் அதே அளவில் மன்னிப்புக் கோரலை வெளியிட ஆணையிடப்பட்ட நிகழ்வுகள் உண்டு.
தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆர். ஆர். ரவிச்சந்திரன் ‘நக்கீரன்’ பத்திரிகையில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிய சில செய்திகளை எழுதியதற்காக அவதூறு வழக்குகள் போடப்பட்டன. நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடிய அவர் இறுதியில் உச்சநீதிமன்றப் படியேறினார். 2016இல் அந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மாநில அரசைக் கடுமையாகச் சாடியது. “அரசாங்கம் குற்றமுறு அவதூறு சட்ட விதியைத் தவறாகப் பயன்படுத்துகிறது. ஒருவர் தனிப்பட்ட முறையில் தான் தாக்கப்பட்டிருப்பதாகக் கருதுவாரானால் தனிமனிதராகக்தான் வழக்குத் தொடுக்க வேண்டுமேயல்லாமல், அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது,” என்று அந்தத் தீர்ப்பில் கூறியது.
அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சியினர் மீதும் ஊடகங்கள் மீதும் போடப்பட்ட அவதூறு வழக்குகள் விலக்கப்படும் என்று அறிவித்திருந்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு மு.க. ஸ்டாலின் அரசு பாராட்டத்தக்க வகையில் அவ்வாறே செய்தது. ஆனால் பின்னர் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது குற்றமுறு அவதூறு வழக்குகள் போட்டிருக்கிறது.
ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் ஆகிய தனி மனிதர்கள் மீதும் அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன். ஒரே பேச்சுக்காக வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செயப்படுகின்றன. அதன் நோக்கம், அவர்களை அலைய விடுவதும், தொடர்ந்து பேச விடாமல் தடுப்பதும்தான். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் மீது இப்படிப் பல புகார்கள் செய்யப்பட்டிருப்பது தெரிந்ததே.
துப்பாக்கியை எறிந்துவிட்டால்
அவதூறு வழக்கு எனும் துப்பாக்கி முதுகைக் குறிவைத்தபடி கருத்தாளர்களின் பின்னால் நீண்டிருக்கிறது. அந்தத் துப்பாக்கி பிடுங்கி எறியப்படுமானால், அரசு எந்திர ஊழல் உள்பட முறைகேடுகளை அரங்கத்துக்குக் கொண்டுவருவது, சாதியமும் மதவாதமும் சார்ந்த இருண்மைகள் மீது வெளிச்சம் பாய்ச்சுவது, கல்வி, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் (நீதித்துறையிலுமே கூட) நிலவும் அநீதிகளை பொது விசாரணைக்கு உட்படுத்துவது… இவையெல்லாம் அச்சமின்றி நடைபெறும். இதன் ஒட்டுமொத்த நன்மை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்குமல்லவா வந்து சேரும்?
நீதிமன்றங்களுக்கே கூட ஒரு பலன் இருக்கிறது. முக்கியமான பிரச்சினைகள் உள்பட கிட்டத்தட்ட 5.3 கோடி வழக்குகள் தேங்கியிருக்கும் நிலையில், குற்றமுறு அவதூறு வழக்குகள் தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்றுகின்றன. குற்றமுறு அவதூறிலிருந்து விலக்கி, உரிமையியல் சட்டங்களுக்கு மாற்றும்போது, நீதிமன்றங்களின் சுமை குறையும், நேரம் சேமிப்பாகும். அவதூறு வழக்கு போடுகிற தனிமனிதர்கள் பலர், இழக்கப்பட்ட தங்களின் மானத்திற்கு ஈடாகப் பெருந்தொகையாகப் பணத்தைத்தான் கோருகிறார்கள். உரிமையியல் நீதிமன்றங்களே அந்த வழக்குகளை நடத்தித் தீர்ப்பளிக்க முடியுமே?‘
உலகக் களத்தில்
பல நாடுகளில் குற்றமுறு அவதூறு சட்டம் நீக்கப்பட்டுவிட்டது, அல்லது அரிதாகப் பயன்படுத்தப்படுகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜமைக்கா, ருமேனியா, மால்டா, அயர்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் குற்றமுறு அவதூறு விதி முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. மெக்சிகோவில் மைய ஆட்சியளவில் மட்டுமே அந்த விதி இருக்கிறது. நியூஜிலாந்து அரசு வாக்காளர்களுக்கு இணையத்தளங்கள் மூலம் பொய்த் தகவல்கள் பரப்புவது உள்ளிட்ட அதீதமான செயல்களை மட்டும் குற்றமுறு அவதூறாக அறிவித்திருக்கிறது.
கம்போடியா அரசு அவதூறுக்கு சிறைத் தண்டனை கிடையாதென சட்டத்திருத்தம் செய்திருக்கிறது. இந்தோனேசியாவில் அவதூறு வழக்குப் போடுவதற்கான வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் மிக அரிதாகவே குற்றமுறு வழக்காகப் பதிவு செய்யப்படுகிறது.
அதேவேளையில், ஆசிய நாடுகள் பெரும்பாலானவற்றில் குற்றமுறு அவதூறு சட்டங்கள்தான் கையாளப்படுகின்றன. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் பல முன்னணி ஊடக நிறுவனங்கள் மீதும், தனிப்பட்டவர்கள் மீதும் அவதூறு வழக்குகள் போட்டிருக்கிறார்.
பல நாடுகளில் குற்றமுறு அவதூறு சட்டத்தை விலக்குவது அல்லது பயன்பாட்டைக் குறைப்பது பற்றிய அதிகாரப்பூர்வ விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆயினும், பெரும்பாலான நாடுகள் அந்தத் துப்பாக்கியைத் தோட்டாவோடு வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியத் துணைக் கண்டத்தில் இந்தியா, துப்பாக்கியைக் கீழே போடுவதற்கு முன்னுதாரணம் படைக்க முடியும். அதற்கான உரத்த குரல்கள் எங்கும் கேட்க வேண்டும். அதற்கான ஒலிவாங்கியாக நீதிபதி சுந்தரேஷ் கருத்தைக் கையில் பிடிக்கலாம்.
[0]
விகடன் ப்ளஸ் (செப்டம்பர் 28) கட்டுரை
No comments:
Post a Comment