Thursday, 18 September 2025

வரிப் போர்களின் வரலாற்று அத்தியாங்கள்


ந்தியாவுக்கு எதிராக இறக்குமதி வரி (டாரிஃப்) யுத்தத்தைத் தொடங்கியிருக்கும் டொனால்டு டிரம்ப் பல காரணங்களைக் கூறுகிறார். சீனாவுடனும் ரஷ்யாவுடனும் இந்தியா வர்த்தக உறவுகளைப் பேணுவதைத் தாக்குகிறார். தனிப்பட்ட முறையிலான ஒரு காரணமும் இருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது.


இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் விருது தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்படுகிறாராம். தன்னுடைய தலையீட்டால்தான் இந்தியா–பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததென்று சொல்லி வருகிறார் இல்லையா? பாகிஸ்தான் பிரதமர் அதை ஆமோதித்தது போல இந்திய அரசும் வெளிப்படையா ஒப்புக்கொண்டால், அந்த விருதுக்கான கதவு எளிதாகத் திறக்குமென்று கருதுகிறாராம். இந்தியா ஒப்புக்கொள்ளாததால் அந்தக் கதவைத் திறப்பது கடினமாகிவிட்டது என்ற கோபமும் அவருக்கு இருக்கிறதாம்.

வேறு பல நாடுகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள இந்த டாரிஃப் யுத்தம் எப்படிப் போகிறதென்று வரும் நாட்களில் பார்ப்போம். உலக வரலாற்றில் இடம்பெற்ற சில வரிப் போர்களைப் பார்க்கலாம்.

பங்குச் சந்தை வீழ்ச்சி

1929ஆம் ஆண்டில் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு ஒரு புதிய டாரிஃப் சட்டத்தையே கொண்டுவந்தது. உலகம் முழுவதையும் பாதித்த அந்த நிலைமைக்குக் காரணமே அமெரிக்கப் பங்குச் சந்தைதான். 1920களில் மிதமிஞ்சிய அளவுக்கு ஊக வணிகம் வீங்கியது. செயற்கையான லாப ஆசை ஊட்டப்பட்ட மக்கள் கடன் பெற்றாவது பங்குகளை வாங்கிப்போட முண்டியடித்தனர்.

1929, அக்டோபர் 24-ல் பங்குச் சந்தை சரிவடைந்தது. அந்த நாள் ‘கறுப்பு வியாழன்’ என்று பங்குச் சந்தை வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. அக்டோபர் 29இல் (கறுப்பு செவ்வாய்) நிலைமை மேலும் மோசமடைந்தது. பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் நிதி இழப்பைச் சந்தித்தார்கள். நாடு முழுவதும் ஏராளமானோர் வங்கிகளிலிருந்து சேமிப்புகளைத் திரும்ப எடுக்க முயன்றார்கள். ஆயிரக்கணக்கான வங்கிகள் திவாலாகின. வணிகக் கடன் தடைப்பட்டதால் தொழில்கள் முடங்கின.

1914இல் தொடங்கிய முதல் உலகப்போர் 1918இல் முடிந்திருந்த நிலையில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பொருட்களை உற்பத்தி செய்தன. ஆனால், மக்களிடையே வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்திருந்தது. பொருள்களுக்கான பயன்பாட்டுத் தேவை இருந்தாலும் அவற்றை வாங்குவதற்கான வணிகத் தேவை உருவாகவில்லை. எண்ணற்ற நிறுவனங்களை மூடும் நிலை ஏற்பட்டது. எங்கும் வேலையிழப்பு பரவியது.

மூட்–ஹாவ்லி சட்டம்

நிலைமையை சமாளிக்க, அமெரிக்காவின் ஹெர்பர்ட் ஹூவர் தலைமையிலான குடியரசுக் கட்சி அரசு மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மீது 1930இல் அதிக வரிகளை விதித்தது. அதற்கான சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்லிஸ் ஸ்மூட். ஹோலி ஹாவ்லி ஆகியோரின் பெயரில் ‘ஸ்மூட்–ஹாவ்லி சட்டம் 1930’ என்றே அது அடையாளம் பெற்றது. 20,000 பொருள்கள் மீதான இறக்குமதி வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டன.

அதனால் பாதிக்கப்பட்ட பிற நாடுகள் அமெரிக்கப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தன. சங்கிலித் தொடராக ஐந்து கண்டங்களிலும் பாதிப்பு பரவியது. அமெரிக்காவில் வேலையின்மை 25% உயர்ந்தது. சுமார் 1.30 கோடி மக்கள் வேலையிழந்தனர். ஏற்கெனவே நெருக்கடியில் இருந்த ஜெர்மனியில், அமெரிக்க வங்கிகளின் கடன் நிறுத்தப்பட்டதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன (அந்தச் சூழலை ஹிட்லர் தனது நாஜி கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டது துணைக்கதை).

உலக வர்த்தகம் முடங்கியதால் பிரிட்டனின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் விவசாய விளை பொருட்களின் விலை சரிந்தது. விவசாயிகளின் கடன் பளு எகிறியது.

அமெரிக்காவில், நிலைமையைக் கையாளுவதில் தோல்வியடைந்த ஹூவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 1934இல் ரூஸ்வெல்ட் வெள்ளை மாளிகையில் நுழைந்தார். உடனடியாக அவருடைய அரசு இருதரப்பு வர்த்தக உடன்பாட்டுச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. டாரிஃப் சட்டம் செயலற்றதானது.

சோவியத் வலிமை

அப்போது சமாளித்து நின்றவை சில நாடுகள்தான். திட்டமிட்ட பொருளாதார அமைப்பு ஒரு வலிமையான அரணாக அமைந்த சோவியத் யூனியன் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. ஜப்பான் அரசு நாணய மதிப்பைக் குறைத்தும், ஏற்றுமதியை அதிகரித்தும் பொருளாதாரத்தை ஓரளவு மீட்டெடுத்தது.

அந்தப் பொருளாதார மந்த நிலை, உலகத்தையே குதறிப்போட்ட இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கான காரணிகளில் ஒன்றாகவும் அமைந்தது. குறிப்பாக ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர், இத்தாலி சர்வாதிகாரி முசோலினி, ஜப்பான் அரசர் ஹிரோஹிட்டோ உள்ளிட்டோர் உலகச் சந்தையை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் கிளப்பிய சண்டைகள் 1939இல் உலகப் போராக மாறின. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அன்றைய சீனா உள்ளிட்ட அரசுகள் நேசப்படை அமைத்ததும், அதில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் இணைந்ததன் பலனாக நாஜிப் படைகள் முறியடிக்கப்பட்டதும் உலகறிந்த வரலாறு.

அமெரிக்கா–ஜப்பான் மோதல்

டாரிஃப் யுத்த வரலாற்றின் அடுத்த அத்தியாயமாக 1980களில் மூண்ட அமெரிக்கா–ஜப்பான் வர்த்தகப் போர் சுட்டிக்காட்டப்படுகிறது. அப்போது ஜப்பானில் தயாரிக்கப்பட்ட கார்களும் எலக்ட்ரானிக் பொருட்களும் அமெரிக்கச் சந்தையில் வெள்ளம்போல் பாய்ந்தன. இதனால் அமெரிக்க நிறுவனங்களின் வணிகப் போட்டித் தகுதிகளும் உழைக்கும் மக்களின் வேலைவாய்ப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு 100% டாரிஃப் விதித்தது. அதன் கெடுபிடிகளுக்குப் பணிந்த ஜப்பான் அரசு, தனது நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் கார்களுக்கும் மின்னணுப் பொருள்களுக்கும் “தன்விருப்ப ஏற்றுமதி வரி” விதித்தது.

பாதுகாப்புத் துறையைப் பொறுத்தமட்டில் அமெரிக்காவைச் சார்ந்திருந்த ஜப்பான் தொடக்கத்தில் வர்த்தகக் கொள்கைகளில் பல மாற்றங்களைச் செய்தது. அது ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் தேக்கத்தை ஏற்படுத்தியது

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்

டொனால்ட் டிரம்ப் முதல் சுற்று ஆட்சியின்போது 2018ஆம் ஆண்டில், சீனப் பொருள்களுக்குப் பல பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு டாரிஃப் விகிதங்களை விதித்தது. சீனா உடனடியாக பதிலடி கொடுத்தது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய விளைபொருள்களுக்கும் பன்றி இறைச்சிக்கும் இதர பல பொருள்களுக்கும் புதிய வரி விகிதங்களை விதித்தது. அமெரிக்க அரசுக்கு ஒரு “செக்” வைக்கப்பட்டது என்றாலும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் இரு நாடுகளிலுமே பாதிப்பை ஏற்படுத்தியது.

2020இல் சி ஜின்பிங் தலைமையிலான சீன அரசும், அமெரிக்காவின் டிரம்ப் அரசும் “கட்டம் 1” எனும் ஒப்பந்தத்திற்கு வந்தன. வர்த்தகப் போர் முடிந்தது என்றாலும், முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. அமெரிக்காவின் வெவ்வேறு கெடுபிடிகள் தொடர்வது போலவே சீனாவின் கேடய நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

இந்தியாவுக்கு எதிராக

1998இல் பொக்ரான் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை பில் கிளின்டன் அரசு அறிவித்தது. இந்திய அரசு சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, அதே வேளையில் 1990களில் தொடக்கத்தில் கொண்டுவரப்பட்ட தாராளமய நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக்கப்பட்டன. அமெரிக்காவிலும், குறிப்பாக விவசாய உற்பத்தியாளர்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, பல கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.

இந்த செப்டம்பர் 1 முதல் டிரம்ப்பின் 50% டாரிஃப் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்திய அரசு பலமுனைத் தற்காப்பு உத்திகளைக் கையாள்கிறது. உள்நாட்டுப் பொருள்களை வாங்குமாறு மக்களுக்கும், விற்குமாறு வணிகர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். உள்நாட்டுத் தேவைகளை விரிவுபடுத்தித் தொழில்களை ஊக்குவிப்பதே அந்த வேண்டுகோளின் நோக்கமெனக் கூறப்படுகிறது..

செப்டம்பர் 3, 4 தேதிகளில். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தைத் தொடர்ந்து பல பொருள்களுக்கான வரிகள் 5%-18% விகிதக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி வழிப்பறியை எதிர்த்து நடந்த போராட்டங்களும் இதன் பின்னணியில் இருக்கின்றன. டிரம்ப்பின் டாரிஃப் யுத்தம் இதற்கு இட்டுவந்துள்ளது.

ஆயினும், அடிப்படையில் மக்களின் வாங்கும் திறனை வலுப்படுத்தாமல், அதற்கேற்ப தனிமனிதர் வருவாயை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தாமல் எந்த அளவுக்கு நோக்கம் நிறைவேறும்?
[0]

‘தீக்கதிர்’ செப்டம்பர் 18 இதழில் எனது கட்டுரை


No comments: