Tuesday, 27 January 2026

பெரியவங்க சொன்னபடி...


 

“பொண்ணுங்க படிச்சா குடும்பத்துக்கு நல்லதாச்சேன்னுதான் காலேஜுக்கு அனுப்புறோம். ஆனா அதுங்க என்னடான்னா நாலு புக்கு படிச்சதும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறாங்க.”


நண்பர் வீட்டுக் கல்யாண சாப்பாடு முடிந்து, பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துக் காலை நீட்டி உட்கார்ந்து சற்றே கண்ணயராலாமா என்று முயன்றுகொண்டிருந்ததேன். பக்கத்தில் நாற்காலி வட்டம் அமைத்து பீடா அரைத்தபடி அரட்டையில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரது இந்தப் பேச்சு காதில் நுழைந்தது. அப்புறம் என்னத்தைத் தூங்குறது? கழற்றிச் சட்டைப் பையில் போட்டிருந்த காது கேட்பு உதவிக் கருவிகளை எடுத்து மறுபடி மாட்டிக்கொண்டேன். கவனிக்காதது போலக் கண்களை மூடிக்கொண்டேன். என் தொழில் தர்மப்படி ஒட்டுக்கேட்டேன்.


“ஏம்மா, இவரு சொல்றாப்புலதான் நீ எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறியா?”


“சித்தப்பா, நான் எல்லாம் தெரிஞ்ச மாதிரியெல்லாம் பேசறதில்லை, ஆனா தெரிஞ்சதை எல்லாம் பேசுறேன்.” அந்த வார்த்தை வித்தையை ரசித்தேன். அநேகமாக அந்த வட்டத்தில் இருந்த அடர் நீல முழுக் கால்சட்டை, இளஞ்சிவப்புப் பின்னலாடைச் சட்டைப் பெண்ணாகத்தான் இருக்கும் என்று ஊகித்தேன். 


“பார்த்தீங்களா, இவளோட பேச்சுத் திறமையை நம்ம கிட்டயே காட்டப் பார்க்கிறா,” என்றார் பேச்சைத் தொடங்கியவர்.


தற்காலப் பெண்களிடம் தான் கவனிக்கிற மாற்றங்களாக சிலவற்றைக் குறிப்பிட்டார் அவர். “முக்கியமா பாருங்க, நம்ம டிரெடிஷன்ல பணிவு முக்கியம். நாவடக்கம் முக்கியம்.”


“பணிவும் நாவடக்கமும் கேர்ள்ஸ்சுக்கு மட்டுமா, இல்ல பாய்ஸ்சுக்குமா மாமா?”


“ரெண்டு பேருக்கும்தான், ஆனா பொண்ணுகளுக்கு ரொம்ப முக்கியம்.”


“மத்தவங்களை மரியாதையா நடத்துறதுதான் பணிவுன்னா நான் சின்னப் பசங்ககிட்ட கூட பணிவாத்தான் இருக்குறேன். ஆனா பெரியவங்க என்ன சொன்னாலும் அப்படியே ஏத்துக்கிட்டுப் போறதுதான் பணிவுன்னா, அது என்கிட்ட கிடையாது.”


அந்தச் சபையில் ஒரு மெல்லிய வெப்பம் தோன்றியிருக்குமென சில நொடிகள் நீடித்த மௌனத்திலிருந்து ஊகித்தேன்.


“நாவடக்கமெல்லாம் எனக்கு இருக்கு மாமா, இப்ப கூட பந்தியிலே எனக்குப் பிடிச்ச ஐட்டமா இருந்தும், நாக்கை அடக்கிக்கிட்டு அளவோடதான் சாப்பிட்டேன் தெரியுமா?” கலகல சிரிப்போடு சொன்னதில், அந்த வெப்ப மௌனத்தைத் தணிக்கும் முயற்சி வெளிப்பட்டது.


“நான் எந்த நாவடக்கத்தைச் சொல்றேன், இவ எந்த நாவடக்கத்தைச்  சொல்றா பாருங்க.”


மறுபடி கலகல.


“மனசுல இருக்கிறத மறைக்காம பேசுறேன், மத்தவங்க சொல்றதுல நான் அக்செப்ட் பண்ண முடியாத பாய்ன்ட் இருந்தா ஆர்க்யூ பண்றேன். அதைத்தான் நாவடக்கம் இல்லைங்கிறாரு மாமா.”


“சரிதான்.” இந்த அங்கீகாரச் சிரிப்பு சித்தப்பாவுடையதென்று கணித்தேன்.


“என்ன நீயும் சிரிக்கிற? பெரியவங்க சொன்னபடி கேட்டு நடக்கணும்னு இருக்கா இல்லையா, அது சரியா தப்பா?”


‘மாமா, நானும் பெரியவங்க சொன்னபடிதான் நடக்குறேன் பேசுறேன்.”


“எந்தப் பெரியவங்க?”


“பெரியார், அம்பேத்கார், மார்க்ஸ் இவங்கதான். இனிமே முன்னோடியா இப்படியெல்லாம் பேசுன லேடீஸ் பத்தியும் படிக்கப் போறேன்…”


“வௌங்கிரும்.” மாமா எழுவதையும், சித்தப்பா தோளில் தட்டிக் கொடுப்பதையும், எல்லோருமாகப் புறப்படுவதையும் அரைக் கண் திறந்து நோக்கினேன். கைகுலுக்க முடியாமல் போனதே என்று சற்றே ஏக்கம் கொண்டேன். முத்துலட்சுமி, மூவலூர் ராமாமிர்தம்  அஞ்சலையம்மாள், மணியம்மை, கே.பி. ஜானகியம்மாள் பாப்பா உமாநாத் முதலானோர் தேடிப் படிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை கொண்டேன்.

‘யார்டா அது” என்று நண்பனிடம் விசாரித்தறிந்து தோழமைத் தோட்டத்தில் இணைப்பதென்ற முடிவோடு முழுக்கண் விழித்தேன்.

[0]

ஓவிய உருவாக்கம் ஜெமினியின் நானோ வாழைப்பழம்


Thursday, 22 January 2026

ஐ.நா சபைக்கு போட்டியாக ஒரு ‘வில்லங்க சபை’ - மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு! இந்தியாவின் முடிவு என்ன?

 


நீண்டகாலமாக, ஐ.நா சபை இருந்துவரும் நிலையில், அதற்கு போட்டியாக ‘அமைதிக் குழு’ என்ற பெயரில் புதிதாக ஓர் அமைப்பை ஏற்படுத்த முயலும் டொனால்டு ட்ரம்ப், அந்த அமைப்பில் சேருமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்.


2026, புத்தாண்டு பிறந்த நேரத்தில், உலக மக்களுக்கு ஒரு பேரதிச்சியைக் கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இறையாண்மை கொண்ட வெனிசுலா நாட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த அமெரிக்கப் படையினர், வெனிசுலா நாட்டு அதிபரையும், அவருடைய மனைவியையும் துப்பாக்கிமுனையில் அமெரிக்காவுக்குத் தூக்கிச்சென்ற கொடுமையைக் கண்டு உலகமே அதிர்ந்தது. ஒருபுறம் அடாவடிகளை மேற்கொள்ளும் ட்ரம்ப், இன்னொரு புறம் ஐ.நா-வுக்குப் போட்டியாக தான் அமைத்திருக்கும் ‘அமைதிக் குழு’ (Board of Peace)-வில் பங்கேற்குமாறு பல நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

அந்த அமைதிக் குழுவின் உண்மையான நோக்கங்கள் குறித்து, உலக நிகழ்வுகளைக் கவனித்துவரும் பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை வெளிப்படுத்துகிறார்கள். இரண்டு உலகப் போர்களுக்கு கடுமையான விலை கொடுக்க நேர்ந்ததன் படிப்பினையிலிருந்துதான், நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேம்பட்ட மறுகட்டுமானத்தை உறுதிப்படுத்தவும் 1945 அக்டோபர் 24-ல் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.

ஐ.நா-வின் பல செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகின. அதே நேரம், மூன்றாம் உலகப் போர் மூளாமல் இருப்பதற்கு ஐ.நா-வின் பங்கு முக்கியமானது. ஒரு நாட்டின் அரசு, உலக அளவிலான குற்றம் ஒன்றில் ஈடுபடுகிறது என்றால் அந்த நாட்டின் மீது ஐ.நா ஒப்புதலோடுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா சாசனத்தில் விதி இருக்கிறது.

வெனிசுலாவுக்குள் அமெரிக்காவின் படையை அனுப்பிய ட்ரம்ப், அந்த நாட்டின் நிர்வாகத்தை அமெரிக்க அரசே நடத்தும் என்று ஆணவத்துடன் கூறினார். அதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தவுடன், அவரது வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, ‘வெனிசுலாவின் அன்றாட நிர்வாகத்தில் தலையிட மாட்டோம். எண்ணெய் வயல் விவகாரங்களில் மட்டும் தலையிடுவோம்’ என்று தொனியைக் குறைத்தார்.


வெனிசுலாவின் 90 சதவிகிதப் பொருளாதாரம் அந்த நாட்டிலுள்ள எண்ணெய் வயல்களைச் சார்ந்தே இருக்கிறது. அந்த எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்காதான் மேலாண்மை செலுத்தும் என்பதை பகிரங்கமாகவே ரூபியோ சொல்லியிருக்கிறார்


                                        நிகோலஸ் மதுரோ, சிலியா புளோரஸ்
குறிவைக்கப்படும் கிரீன்லாந்து!

வெனிசுலாவுக்கு அடுத்தபடியாக கிரீன்லாந்து நாட்டை ட்ரம்ப் குறிவைத்திருக்கிறார். தற்போது, டென்மார்க் நாட்டிற்கு உட்பட்ட ஒரு தன்னாட்சிப் பகுதியாக கிரீன்லாந்து இருக்கிறது. புவியியல் அமைப்பில், அமெரிக்காவின் போர் வியூகங்களுக்குத் தோதான இடத்தில் அது அமைந்திருக்கிறது. ஆகவே, அதைக் கைப்பற்றுவதற்கு ட்ரம்ப் துடிக்கிறார்.

அத்துடன், உள்நாட்டு மக்களுக்கு தன் மீது இருக்கும் கோபத்தைச் சமாளிப்பதற்காக, ‘நாம் கிரீன்லாந்தைக் கைப்பற்றாவிட்டால், சீனாவோ, ரஷ்யாவோ அதைக் கைப்பற்றிவிடும்’ என்கிறார். சீனாவையும், ரஷ்யாவையும் பூச்சாண்டிகளாகக் காட்டுவது, அமெரிக்க அதிபர்கள் ஏற்கெனவே கையாண்ட உத்திதான்.

கிரீன்லாந்தை எப்படி அவர் கைப்பற்றுவாராம்? வெனிசுலாவில் புகுந்தது போல, ஏதாவது போதைப்பொருள் குற்றச்சாட்டைக் கிளப்பிவிட்டு, கிரீன்லாந்துக்கு அவர் படையை அனுப்புவாரா என்பது தெரியவில்லை. அதற்கான உடனடித் திட்டம் இல்லை என்று தெரிகிறது. ஆனால், விலைகொடுத்து கிரீன்லாந்தை வாங்கிக்கொள்வதாக அவர் கூறுகிறார்.

குடியிருப்புப் பகுதிகளில் பெரிய வணிக வளாகம் கட்டுகிற நிறுவனங்கள் பெரும் தொகையை வீசி, மனைகளை வளைப்பார்கள். அதற்கு ஒத்துவராவிட்டால், அடியாட்களை ஏவிவிடுவார்கள் அல்லவா? அதேபோல, கிரீன்லாந்து வாழ் மக்களுக்கேகூட தலைக்கு 6 லட்சம் டாலர்கள் முதல் 50 லட்சம் டாலர்கள் வரையில் விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

கிரீன்லாந்து வளைப்புத் திட்டத்திற்கு ஒத்துழைக்காத ஐரோப்பிய நாடுகள் மீது 10 முதல் 25 சதவிதம் வரை கூடுதல் இறக்குமதி வரி யுத்தம் தொடுக்கப்படும் என்றும் மிரட்டலும் விடுத்திருக்கிறார் டொனால்டு ட்ரம்ப். கடந்த சனிக்கிழமையன்று (ஜன.17) கூடுதல் வரியை அவர் விதித்தார்.


                                        கிரீன்லாந்து

ஐரோப்பிய பதிலடி!

ட்ரம்ப் மிரட்டலுக்கு டென்மார்க்கோ, இதர ஐரோப்பிய நாடுகளோ பணிந்துவிடவில்லை. தங்களின் கூட்டமைப்பாகிய ஐரோப்பிய ஒன்றியத்தைக் கூட்டவும், அதில் பதிலடி நடவடிக்கைகளை இறுதிப்படுத்தவும் முடிவு செய்துள்ளன. தங்களுடைய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களுக்கான வரியை ட்ரம்ப் அதிகரித்தால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களை வெகுவாகக் குறைப்பதற்கு முடிவெடுக்க அந்த நாடுகள் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. மிரட்டிக் கறப்பதைத் தடுப்பதற்கென்றே ஐரோப்பிய கூட்டமைப்பிற்கான சாசனத்தில் ஒரு விதி இருக்கிறது. முதல் முறையாக அந்த விதியைப் பயன்படுத்தவும் முடிவெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிரீன்லாந்து மக்களில் ஒரு பகுதியினர் தங்களுடைய தன்னாளுமைச் சுதந்திரத்திற்காகப் போராடி வருவது உண்மை. அவர்கள் தங்களின் வட்டாரம் அமெரிக்காவின் பட்டா நிலமாக மாற்றப்படுவதை ஏற்கவில்லை. வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ போல, அங்கேயும் சிலர் இருப்பார்கள்தானே. அவர்களைத் தனது ரியல் எஸ்டேட் வணிகத்தில் இழுத்துவிடவும் ட்ரம்ப் முயல்கிறார். தற்போது, அமெரிக்க சூழ்ச்சிகளை எதிர்த்து கிரீன்லாந்து மக்கள் தெருவில் திரண்டு முழங்குகிற காட்சிகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.


உயர்ந்த விருது, தாழ்ந்த பேரம்!

தனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கூச்சமே இல்லாமல் வெளிப்படையாகப் பேசி வந்தவர் ட்ரம்ப். ஆனால், நோபல் விருதுக் குழு அதைத் தள்ளுபடி செய்தது. வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கரினா மச்சாடோ, அந்த விருதைப் பெற்றார். அவரோ, வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ மொரோஸ் ஆட்சியை அகற்றிவிட்டு, அரியாசனத்தில் அமரத் துடித்தவர். அதற்காக ட்ரம்ப்பின் அதிரடி அத்துமீறல்களை அங்கீகரித்தவர். அந்த நாட்டில் ‘ஜனநாயகத்தை மீட்பதற்காகப் போராடியவர்’ என்ற அடிப்படையில் அவருக்கு விருது அளிக்கப்பட்டது.


உண்மை என்னவென்றால், மதுரோவுக்கு முன் வெனிசுலா அரசுத் தலைவராக, மக்களின் பேராதரவோடு ஆட்சி செய்த ஹூகோ சாவேஸ், அமெரிக்க நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த எண்ணை வயல்களை மீட்டு அரசுடைமையாக்கப்பட்ட அமைப்பாகத் தொடர்வதை உறுதிப்படுத்தினார். மின்சாரம் உள்ளிட்ட பிற கட்டமைப்புத் துறைகளையும் அவர் அரசுடைமையாக்கினார். அதனால் அரசுக்குக் கிடைத்த நிதி வருவாயை மக்களின் கல்வி, மருத்துவம், குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குத் திருப்பிவிட்டார்.


                                ஹியூகோ சாவேஸ், ஃபிடல் காஸ்ட்ரோ


மக்களிடையே 100 சதவிகிதம் கல்வி, ஏழைகளுக்கு இலவச மருத்துவம் ஆகியவற்றை சாவேஸ் நிலைநாட்டினார். அவருடைய மறைவைத் தொடர்ந்து 2013-ல் பொறுப்பேற்ற நிக்கோலஸ் மதுரோ ஆட்சியிலும், அந்தக் கொள்கைகள் தொடர்ந்தன. 2025-ல் மூன்றாவது முறையாக அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் அவர் பொறுப்பேற்றார். தங்களுடைய வேட்டைக்கு குறுக்கே நிக்கோலஸ் மதுரோ இருந்ததை, சுரண்டல் கும்பல்களால் செரித்துக்கொள்ள இயலவில்லை.

அந்த கும்பல்களைச் சேர்ந்தவர்களின் மனம் குளிரும் வகையில், மதுரோ தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் செல்லாது என்று அறிவித்த ட்ரம்ப், அதிகாரத்தைக் கைப்பற்றும் தாகத்தோடு செயல்பட்டவர்களின் சீர்குலைவு முயற்சிகளுக்குத் துணை நின்றார். அவரிடம் மச்சாடோ தனது நோபல் விருதுப் பதக்கத்தை ஒப்படைத்த பின்னணி புரிகிறதா?


மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டதே சரிதானா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அவர் என்ன செய்தார் என்றால், தனக்குத் தரப்பட்ட விருதை ட்ரம்புக்குக் கொடுப்பதாக அறிவித்தார். அப்படியெல்லாம் ஒரு விருதைப் பெற்றவர் இன்னொருவருக்கு மாற்ற முடியாது. அதற்கான பதக்கத்தைக் கொடுத்தாலும், விருதுப் பதிவேட்டில் அது இடம்பெறாது என்று நோபல் நடுவர் குழு தெளிவுபடுத்திவிட்டது.


தேசபக்த முலாம்!

’அமெரிக்காவே முதலில்‘ என்ற முழக்கத்தை, தனது கொள்கையாக அறிவித்து தனது தவறான நடவடிக்கைகளுக்கு தேசபக்த முலாம் பூசுகிறார் ட்ரம்ப். அரசுத் தலைவர் ஒருவர், தனது நாட்டிற்கே முன்னுரிமை என்ற கொள்கையைக் கடைப்பிடிப்தில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வி எழலாம். அந்த முன்னுரிமையில் தவறே இல்லை.

ஆனால், அந்த முன்னுரிமை உள்நாட்டு வளங்களைப் பெருக்குவது, கல்வி–தொழில்–வேலைவாய்ப்புகளை விரிவாக்குவது, மருத்துவ சேவையை அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடியதாக மேம்படுத்துவது என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.

அதை விடுத்து, மற்ற நாடுகளுக்கிடையே கட்டப் பஞ்சாயத்து செய்வது, வேறொரு நாட்டுக்குள் காலை வைப்பது, இன்னொரு நாட்டின் இடத்தை ஆக்கிரமிப்பது என்ற வழியில் இருக்கக் கூடாது. ஆனால், ட்ரம்ப் இதையெல்லாம்தான் ‘அமெரிக்காவே முதலில்‘ என்ற பட்டையை மாட்டிக்கொண்டு செய்கிறார்.


மார்க்கோ ரூபியோ

மூன்றாம் கோணம்!

வெனிசுலாவும், கிரீன்லாந்தும் முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் என்றால், மூன்றாவது கோணம்தான் முதலில் பார்த்த ‘போர்டு ஆஃப் பீஸ்‘. இதன் தலைவர் ட்ரம்ப் என்றும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையேயான ஆபிரஹாம் அக்கார்ட்ஸ் எனப்படும் ஒப்பந்தத்தின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் (இவர் ட்ரம்ப்பின் மருமகன்), மத்திய கிழக்கு நாடுகளுக்கான ட்ரம்ப் தூதர் ஸ்டீவ் விட்காஃப், அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ரோவன், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல் ஆகியோர் உறுப்பினர்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘பாலஸ்தீன தொழில்முறைக் குழு’ என்ற அமைப்பையும் ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கிறார். அது காசாவின் அன்றாட நிர்வாகத்தை மேற்கொள்ளுமாம். அந்தக் குழுவின் செயல்பாட்டை இந்த அமைதிக்குழு கண்காணிக்குமாம். அமைதிக்குழு உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமென நிரணயிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

காஸா குதறப்படுவதையும் காஸா மக்கள் கொல்லப்படுவதையும் குழந்தைகள் கொலைப் பட்டினியில் கிடப்பதையும் அனுமதித்தவரின் இந்த அமைதிக்குழு ஏற்பாடு, உலகத்தின் மரியாதையைப் பெற்றுவிடவில்லை. பலரும் அதன் உள்நோக்கம் குறித்த ஐயப்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

போனியாகாத திட்டம்!

இந்தக் குழுவில் இணையப்போவதில்லை என்று பிரான்ஸ் அரசு அறிவித்திருக்கிறது. குழு அமைக்கப்பட்டதன் நோக்கங்களுக்கு அப்பால் அறிவிப்புகள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதுகிறது என்று பிரதமரின் செயலாளர் தெரிவித்திருக்கிறார். உறுப்பினர்கள் நிதி வழங்க வேண்டும் என்ற விதி ஏதும் இல்லை என அமெரிக்க அரசு மறுத்துள்ளது என்பதாகவும் ஒரு செய்தி வருகிறது.

கனடா அரசு அவ்வாறு நிதி வழங்க மறுத்திருப்பதாக இன்னொரு செய்தி வருகிறது. இத்தாலி உள்ளிட்ட பிற நாடுகளும் திட்டவட்டமான ஆதரவை வெளிப்படுத்தவில்லை. ட்ரம்ப்பின் இந்தத் திட்டம் விற்பனையாகவில்லை என்பதையே இது காட்டுகிறது.


‘இது என்ன ட்ரம்ப் ஐ.நா சபையா‘ என்று ஐ.நா அமைப்பைச் சேர்ந்த பல நாடுகள் கேட்டுள்ளன. ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக். ‘ஐக்கிய நாடுகள் சபையின் தார்மீக, சட்டபூர்வ அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்கினால், நாம் மிகவும் இருண்ட காலத்திற்குத் தள்ளப்படுவோம்‘ என்று எச்சரித்திருக்கிறார். 

                            காஸா

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதிதான் காஸா. அந்த காஸாவுக்கான அமைதிக் குழுவில் பாலஸ்தீனப் பிரதிநிதி ஒருவர்கூட இல்லை. இதனைப் பாலஸ்தீனத் தலைவர்கள் மட்டுமல்லாமல், அதன் சுதந்திரத்திற்கு ஆதரவாக இருக்கிற எல்லோருமே சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் சுதந்திரத் தன்னாட்சி உரிமையைப் பறிக்கிற இந்த ஏற்பாடு, ஒரு நவீன காலனியாதிக்க அணுகுமுறைதான் என்று மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சாடுகிறார்கள். இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதை இஸ்ரேல் அரசுகூட விமர்சித்திருக்கிறது.

ஆனால், அவர்களுடைய விமர்சனம் இந்தக் குழுவின் நோக்கம் பற்றியதல்ல. இதன் உருவாக்கத்தில் தங்களைக் கலந்தாலோசிக்கவில்லை என்றும், குறிப்பாக துருக்கி, கத்தார் போன்ற நாடுகளின் தூதர்களை இதில் சேர்த்திருப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாஹூ அலுவலக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.


இந்தியப் பெருங்கடல் மீது கண்!

அங்கே சுற்றி இங்கே சுற்றி, இப்போது இந்தியப் பெருங்கடல் மீதும் ட்ரம்ப்பின் கண் விழுந்திருக்கிறது. இந்தப் பெருங்கடலில், பிரிட்டனின் நிர்வாகத்தில் சாகோஸ் தீவுகள் உள்ளன. டீகோகார்சியா உள்ளிட்ட அந்தத் தீவுகளை, அவற்றின் மூல உரிமையாளரான மொரீசியஸ் நாட்டிடமே ஒப்படைத்துவிடுவது என்று இப்போது கீர் ஸ்டார்மர் தலைமையிலான பிரிட்டன் அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

இந்த முடிவை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘இது முட்டாள்தனமான முடிவு‘ என்ற அளவுக்குப் பதிவிட்டிருக்கிற ட்ரம்ப், வழக்கம் போல சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இது சாதகமாகிவிடும் என்று புலம்பியிருக்கிறார். டீகோ கார்சியா தீவில் ஏற்கெனவே அமெரிக்க ராணுவத் தளம் இருக்கிறது. அங்கு ராணுவத்தளம் அமைப்பதற்காகத் தீவின் பூர்வீகக்குடிகளைச் சேர்ந்த 2,000 பேர் வெளியேற்றப்பட்டார்கள்.


‘பிரிட்டன் இப்படி சாகோஸ் தீவுகளைத் தன் விருப்பப்படி மொரீசியசிடம் மாற்ற முடியும் என்றால், நான் கிரீன்லாந்தை வாங்க முயல்வது எப்படிக் குற்றமாகும்’ என்று ட்ரம்ப் கேட்டிருக்கிறார். உலக நாடுகள் என்ன பதில் சொல்லப்போகின்றன என்பது இருக்கட்டும், மோடி அரசு சொல்வது என்ன? இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரியிலிருந்து 1800 கி.மீ. தொலைவிலேயே இருக்கிற தீவுத் தொகுப்பில் கண் வைத்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் ட்ரம்ப்... இந்தத் தீவுகள் மொரீசியஸ்சுக்கே சொந்தமானவை என்ற சரியான நிலைப்பாட்டை முன்பே எடுத்துள்ள இந்தியா இன்று என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளப்போகிறது?


ஐ.நா-வுக்குப் போட்டியாக தான் அமைக்கும் அமைதிக் குழுவில் இணையுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ட்ரம்ப் அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தை வரவேற்பதாக மோடி கூறியிருந்தார். இந்தியாவுக்கு எதிரான இறக்குமதி வரிப் போர் பின்னணியில், அதை இக்குழுவில் இணைவதற்கான ஒரு பேரம் பேசும் கருவியாக ட்ரம்ப் இதைப் பயன்படுத்துவார் என்ற கருத்துகளும் பரவலாகக் எழுந்திருக்கின்றன.


இந்த நிலையில், இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. இது நிதானமா அல்லது குழப்பமா என்று நாடு கவனித்துக்கொண்டிருக்கிறது. ஐ.நா சபையின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதை ஏற்காத ட்ரம்ப், கடந்த ஆண்டுகளில், ஐ.நா-வுக்கும் அதன் அமைதி காக்கும் படைக்குமான நிதியை 83 சதவிகிதம் வெட்டினார். ஐ.நா கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) உள்ளிட்ட ஐ.நா அமைப்புகளிலிருந்து அமெரிக்காவை அவர் விலக்கிக்கொண்டார்.


புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக ஐ.நா சபையால் ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல ஒப்பந்தங்களிலிருந்து அமெரிக்காவை வெளியே வரவைத்தார் ட்ரம்ப். ஐ.நா சபையின் நிரந்தர பாதுகாப்புக் குழு நாடுகளுக்குத் தீர்மானங்களைத் தள்ளுபடி செய்யும் ‘வீட்டோ’ அதிகாரம் இருப்பது தெரிந்ததுதான். மேற்படி காஸா அமைதிக்குழுவிலோ, தனக்கு மட்டுமே வீட்டோ அதிகாரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்.


ஆகவே, இது ஒரு போட்டி ஐ.நா. சபையா என்ற கேள்வியும் எழுகிறது. எதிர் காலத்தில் உலக நாடுகளைத் தன் நோக்கங்களுக்கு ஏற்ப ஆடவைக்க வேண்டும் என்பதுதான் ட்ரம்ப்பின் திட்டம். அதைப் புரிந்துகொண்டதால், அமைதிக் குழு பற்றிய கேள்விகளும், விமர்சனங்களும் எழுகின்றன. அந்த அமைப்பில் பங்கேற்க இயலாது என்ற மறுப்புகளும் வருகின்றன. அந்த நவீன புவியதிகார நோக்கத்தை அம்பலப்படுத்தி, அதன் ‘அமைதிக் குழு முகமூடியை’ கழற்றியெறிய வேண்டும்!

[0]

விகடன் ப்ளஸ் (ஜனவரி 21) இணையப் பதிப்பில் வந்துள்ள எனது கட்டுரை






Wednesday, 14 January 2026

பராசக்தி படம் பார்த்து வந்தேன்


 
‘பராசக்தி’ (2026) வெளியானபோது உடனடியாகப் பார்ப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை, படத்தைப் பற்றிய விமர்சனங்களும் விளக்கங்களும் வந்து கொண்டிருக்கும் பின்னணியில் திரையரங்கம் செல்லாமல் இருக்க முடியவில்லை.


முழுமையாகப் பார்த்ததும் ஏற்பட்ட முதல் சிந்தனை: இந்த 2020களில் கூட வாசல் வழியாகவும் புறவாசல் வழியாகவும் ஜன்னல் கம்பிகளின் ஊடாகவும், இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் மீது அந்த மொழியைத் திணிக்கிற வன்மர்கள் பற்றிய எச்சரிக்கையை, 1950–60களில் நடந்த போராட்டங்களாகச்  சொல்லியிருக்கிறார்கள். இன்றைய தலைமுறைகளுக்குத் தேவையான ஒரு வரலாற்று வகுப்பு.


அரசியல் விழிப்போடு இருப்பவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள்தான் என்றாலும், இக்காலத்து நிகழ்விலிருந்து கடந்த அந்தக் காலத்துக்கு இட்டுச் செல்கிற ஓர் அறிமுகக் காட்சியை வைத்திருக்கலாமே என்று தோன்றியது.


ஜவஹர்லால் நேருவை வாக்குறுதி அளிக்க வைத்த முதல் கட்டப் போராட்டத்தில் கல்லூரி மாணவனாகக் களம் இறங்கிய செழியன், ரயில்வே தொழிலாளியான பிறகு, அந்த வாக்குறுதி தொடரும் என்று லால் பகதூர் சாஸ்திரியை அறிவிக்க வைத்த இரண்டாம் கட்டப் போராட்டத்தின்போது, தன் நண்பனுக்கு நேர்ந்ததை எண்ணித் தம்பியைத் தடுப்பதில் உணர்வு இருக்கிறது என்றாலும், அரசியல் உறுதி வெளிப்படவில்லை. கதாபாத்திரத்தைத் தெளிவாக வார்க்க, அல்லது அந்த உணர்வை நியாயப்படுத்தும் வலுவான கோர்ப்புகளை அமைக்கத் தவறியிருக்கிறார்கள்.


அண்ணா, நேரு, இந்திரா, பக்தவச்சலம் ஆகியோரைப் பொருத்தமான தோற்றமுள்ள நடிகர்களால் சித்தரித்திருப்பது உண்மைத்தன்மையைக் கூட்டுகிறது. நேருவின் வாக்குறுதி தொடரும் என்று அறிவித்த லால்பகதூர் சாஸ்திரியையும், அப்போது இளையவர்களைத் திரட்டிய கலைஞரையும் அதே போல் தோற்றப் பொருத்தத்துடன் சித்தரித்திருக்கலாமே?


மொழித் திணிப்பு செழியனுக்கான ஒன்றிய அரசு வேலைவாய்ப்பைத் தட்டிப்பறிப்பது, உறவுக்காரியும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  மகளுமான காதலிக்குப் போராட்டத்தில் ஈடுபாடு, மக்களிடையே கையெழுத்து இயக்கம், அன்றைய ஒன்றிய தகவல்–ஒலிபரப்புத்துறை அமைச்சர் இந்திராகாந்தி வருகை, அவருக்கு மக்களின் உண்மை உணர்வைப் புரியவைக்க எடுக்கப்படும் முயற்சிகள், அவற்றைச் சீர்குலைப்பதற்கு அரசியல் மட்டத்திலும் அதிகார வட்டத்திலும் எடுக்கப்படுகிற தடையாணை உள்ளிட்ட நடவடிக்கைகள்… என அடர்த்தியான சித்தரிப்புகள் நிரம்பியிருக்கின்றன.  பொள்ளாச்சியில் காவல்துறையும் ராணுவமும் நடத்திய மனிதவேட்டையைச் சித்தரிக்கும் பிற்பகுதி உள்ளத்தை உறைய வைக்கிறது.


“மொழி உரிமைக்காக ஒருவன் போராடுகிறான் என்றால் அவன் என் தம்பிதான்,” என்று அந்நாள் களநாயகரான அண்ணா சொல்கிறார். “நாங்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தியைத் திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்… தேவையைப் பொறுத்து  எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்… நாடு ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மொழி உரிமையை வலியுறுத்துகிறோம்….” என்று அந்தப் போராட்டத்தின் நியாய வலிமையை நாயகன் உரைக்கிறான். தமிழர்கள் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி என பல்வேறு மொழிகளைச் சார்ந்தோரும் தங்களின் உரிமைக்காக ஒன்றிய அமைச்சர் முன் அணி வகுக்கிறார்கள். இவையெல்லாம் படத்திற்கு ஆழமான அரசியல்/வரலாற்று அடித்தளத்தை அமைக்கின்றன.


பல மாநிலங்களையும் சேர்ந்த மாணவர்கள், ‘புறநானூற்றுப் படை’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த குழுவாகக் கூடுகிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வேறு பல மாநிலங்களிலும்  மொழி உரிமைக்காகவும், இந்தித் திணிப்புக்கு எதிராகவும் குரல்கள் ஒலித்திருக்கின்றன. அவ்வப்போது ஒருமைப்பாடுகள் பகிரப்பட்டிருக்கின்றன. இப்போதும் அவை தொடர்கின்றன. அவையெல்லாம் ஒரே அமைப்பாக அல்லது ஒரே இயக்கமாகத் திரண்டு வெளிப்படுத்தப்பட்டதாகத் தகவல் இல்லை. படத்தில் அப்படிப்பட்ட ஒரே இயக்கத்தின் உறுப்பினர்களாகக் காட்டப்படுகிறார்கள். பல மொழியினருக்குமான அமைப்பில், ஒரு மொழியின் இலக்கியச் சொல்லை அடையாளப் பெயராக்கியிருப்பார்களா? இப்படியான கேள்விகள் இருப்பினும், நாடுதழுவிய ஒருங்கிணைந்த முழக்கமாக எழ வேண்டியதன் தற்காலச் சூழலின் தேவை இந்த வடிவில் வலியுறுத்தப்படுவதாக எடுத்துக்கொள்ள முடிகிறது.


ஆயினும், இவையனைத்தும் துண்டு துண்டு வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன; நேர்த்தியான கதையாகக் கோர்ப்பதற்குத் தேவையான கூடுதல் மெனக்கிடல்களில் ஒரு போதாமை தெரிகிறது.  அதே போல, மற்ற மொழியினரின் பங்கேற்பு பற்றிய அக்கறையை வெளிப்படுத்தியவர்கள், இந்தித் திணிப்பை எதிர்த்துக் களத்திலும் நாடாளுமன்றத்திலும் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு பற்றிப் பதிவு செய்யத் தவறியிருப்பதும் போதாமைதான் (மக்களுக்காகக் களம் கண்டு தியாகத் தழும்பேறியிருந்தாலம் இப்படிப்பட்ட கண்டுகொள்ளாமைகள் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் புதிதா என்ன?).


திரையின் விறுவிறுப்பை உறுதிப்படுத்துவது செழியனைக் கண்டுபிடித்து வேட்டையாட ஒன்றிய புலனாய்வு அதிகாரி திருநாடன் துடிப்பதுதான். ஆனால், அந்த வெறிக்கான பின்புலம் சன்னமாக இருக்கிறது.


1952இல் கலைஞர் கதை-வசனத்திலும் சிவாஜி கணேசன் அறிமுகத்திலும் வெளியான ‘பராசக்தி’ தமிழ்ச் சமூகத்திலும், அரசியலிலும் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. அதே பெயரை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இப்போது டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு என்ன வந்தது?


இந்தப் போதாமைகளை இட்டு நிரப்பியிருக்கின்றன சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோரின் நடிப்பும், கால உணர்வைத் தரும் ஜி.வி. பிரகாஷ் இசையும், ரவி. கே. சந்திரன் ஒளிப்பதிவும். சுதா கொங்கரா. அர்சுன் நடேசன், மதன் கார்க்கி, சான் கருப்புசாமி உரையாடல்களும் சிறப்பிடம் பெறுகின்றன. அப்போதைய ரயில் நிலையங்கள், நிலக்கரி எஞ்சின்கள் என கலை, உடை ஏற்பாடுகள் 60 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களுக்கு இட்டுச் செல்கின்றன.


அரசியலாக மனதில் தடம் பதிக்கிற ஆக்கம், சினிமாவாக ஒட்டுவதில் தடுமாறுகிறதுதான். ஆனாலும் இந்தப் படத்தை வலுவாகப் பரிந்துரைப்பேன் – ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டக் களத்தைக் காட்டுவதால், இன்றைக்கும் உரக்கச் சொல்ல வேண்டிய கருத்தை முன்வைப்பதால்.


Monday, 12 January 2026

எண்ணமும் பேச்சும் முரண்பட்ட அந்த நொடி...


 


பேசிக்கொண்டிருக்கிறபோதே, நமது எண்ணத்திற்கும் சொல்லுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதுண்டா? அதனால் பேச்சு தடைப்பட்டதுண்டா?

எனக்கு அந்த அனுபவம் உண்டு. கல்லூரிப் படிப்பை முடி(றி)த்துக்கொண்டு வேலையையும் வேறு வேறு சிந்தனைகளையும் தேடிச் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் ஒரு நள்ளிரவு நேரம். மதுரை ரயில்வே மைதானத்தின் மணலில் அமர்ந்து, திருச்சியிலிருந்து வந்த நண்பன் குணசேகரனும் நானும் அவரவர் காதல் நிலவரம், திரைப்பட விமர்சனம், திருவிழாக் கூட்டம், அரசியல் திருப்பம், அறிவியல் வெளிச்சம் என்று பயணித்தோம்.

இயல்பாகப் பேச்சு கடவுள், பகுத்தறிவு என்ற களத்திற்கு வந்தது. எனக்கு முன்பே இறையென ஏதும் இல்லையென்ற தெளிவைப் பெற்றுவிட்டவன் அவன். நானோ, மீனாட்சி கோயில் கருவறையைச் சுற்றி வரும் உள் மண்டபப் பாதையின் ஒரு மூலையில் லிங்க அறைக்கு எதிரில் நெடுநேரம் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு, ஏதோவொரு நிறுவனத்திற்கு அனுப்பியிருந்த என்னுடைய வேலை விண்ணப்பம் ஏற்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யக்கூடாதா என்று மனமுருகி வேண்டிக்கொள்ளும் கட்டத்தில்தான் இருந்தேன்.

"இறை நம்பிக்கை பகுத்தறிவை முடக்குகிறது," என்றான் குணா.

\"பகுத்தறிவு இறையைப் புரிந்துகொள்ள மறுக்கிறது," என்றேன் நான்.

ஒரு கட்டத்தை அடைந்தபோது அவன், “தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கடவுளை நம்புகிறார்கள்,” என்றான்.

“இல்லை, தன்னம்பிக்கையின் உயர்ந்த வடிவம்தான் கடவுள் நம்பிக்கை,” என்று சொன்னேன்.

அந்தக் கணத்தில் என் பேச்சு தடைப்பட்டது – எண்ணத்திற்கும் சொல்லுக்கும் இடையேயான உள் சண்டையாக மாறியது, எனது வாதம் இடிக்கிறதே என்று தோன்றியது. அதை அவனும் உணர்ந்தானோ? ஒரு சிறு புன்னகையை மட்டும் அவன் பதிலாக அளித்தான்.

மைதானத்திற்குள் வந்த காவலர், ‘என்ன தம்பிகளா இவ்வளவு நேரம்… போங்க போங்க,” என்று அந்த உரையாடலுக்குத் தற்காலிக முற்றுப் புள்ளி வைத்தார்.

காலையில் அம்மா கொடுத்த காபியைப் பருகிவிட்டு குணா ஊருக்குப் புறப்பட்டான். இந்தப் பொருள் பற்றிய எங்கள் உரையாடல் கடிதங்களில் தொடர்ந்தது. இதே வாதத்தை, “தன்னம்பிக்கையின் உயர்ந்த வடிவம்தான் கடவுள் நம்பிக்கை,” என்ற கருத்தை எழுதிய என்னால் அடுத்த வாக்கியத்துக்குச் செல்ல முடியவில்லை.


நாங்கள் இருவரும் அடுத்த முறை பகுத்தறிவாளர்களாகவே சந்தித்தோம். உரையாடல் பொதுவுடைமைச் சமுதாய மாற்றத்தைப் பற்றியதாகப் பரிணமித்தது. அந்தச் சமுதாயத்தில்தான் இறை நம்பிக்கை மறையும் என்றான். இறை நம்பிக்கை அந்தச் சமுதாயத்தை அடையவிடாமல் தடுக்கும் என்றேன். அப்போதும் புன்னகைத்தான்.

ஒரு குறிப்பிட்ட பின்னணியில் அவரவர் வேலை நிலைமைகளும், அரசியல் வழிமுறை மாறுபாடுகளும் சேர்ந்துகொள்ள எங்களிடையே கடிதப் போக்குவரத்தும் நின்றது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு வீதியில் சந்தித்த அவனுடைய உறவினர் ஒருவர், ஆறு மாதங்களுக்கு முன் அவன் மாரடப்பால் காலமாகிவிட்டான் என்ற தகவலைத் தெரிவித்தபோது, என் இதயம் ஒரு நொடி நின்றது.

மனித நேய, பகுத்தறிவு சார்ந்த, சமத்துவ நோக்கம் கொண்ட உரைகளை நிகழ்த்துகிற, எழுதுகிற நேரமெல்லாம் குணாவை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன். இப்போதெல்லாம் எண்ணங்களுக்கும் சொற்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதில்லை.

—---------[0]------------

கிளப்ஹெஸ் தளத்தில் ‘தமிழ் தேசம்’ குழு கூடுகையில் (ஜனவரி 11), திருக்குறள் தொடர்பான கலந்துரையாடல் நிறைவில் சிந்தனைக்கும் சொற்களுக்கும் முரண்பாடு ஏற்படுவது குறித்த கேள்வி வந்தபோது இதனைப் பகிர்ந்துகொண்டேன்.

Saturday, 3 January 2026

`அரசியல்' செய்வோருக்கு அகாதமியில் என்ன வேலை - படைப்பாளியின் பேனாவைப் பறிப்பது நியாயம்தானா?


              

இன்னும் மூன்று ஆண்டுகளில் பவள விழாவைக் கொண்டாடவிருக்கும் சாகித்ய அகாதமி, மிகப்பெரிய தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. இறுதிப்படுத்தப்பட்ட விருதாளர்கள் பட்டியலை வெளியிடாமல், கடைசி நிமிடத்தில் தடுத்திருக்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இப்படி ஒரு சம்பவம் சாகித்திய அகாடமியின் வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை.


இலக்கியப் படைப்புகள் சார்ந்த பங்களிப்புகளுக்கான இந்தியாவின் ஓர் உயரிய அங்கீகாரமாக மதிக்கப்படுவது சாஹித்திய அகாதமி விருது. கடந்த காலங்களில் அந்த விருது யாருக்கு என அறிவிக்கப்பட்டபோது விமர்சனம் எழுந்ததுண்டு. 'அவருடைய படைப்பு தகுதி வாய்ந்ததல்ல... அரசியல் காரணங்களுக்கான தேர்வு' என்று எழுத்தாக்கம் தொடர்பான சர்ச்சைகளாக அவை இருக்கும்.

இந்த முறை முற்றிலும் மாறுபட்ட பிரச்னை. விருதுகளை அறிவிக்கவிடாமல் நிறுத்திவிட்டார்கள். அவ்வாறு நிறுத்திவைத்திருப்பது ஒன்றிய கலாசார அமைச்சகம். இறுதிப்படுத்தப்பட்ட விருதாளர்கள் பட்டியலை அரசாங்கம் கடைசி நிமிடத்தில் தடுத்தது, தேசிய அளவிலான இலக்கியக் கழகமாகிய சாகித்ய அகாதமியின் வரலாற்றில் இதுவே முதல் முறை. நாடு முழுவதும் எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் கடும் கண்டனத்தை இந்த நடவடிக்கை பெற்றிருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் இந்த விருதுகளைப் பெற்றவர்களில் சிலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்தச் செய்திகள், அகாதமியின் தொடக்க ஆண்டுகளில் வந்த அறிவிப்பு ஒன்றை நினைவூட்டுன்றன.

அரசாங்கத்தின் எல்லை!

சாஹித்திய அகாதமி அமைப்பிற்கு அரசாங்கம் நிதி வழங்கும். ஆனால், அதன் செயல்பாடுகளில் தலையிடாது. அகாதமி யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் தலையிடாது – இவ்வாறு அறிவித்தவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அகாதமியின் முதல் தலைவரும் அவர்தான்.

1954 மார்ச் 12 அன்று இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அவரே ஒரு எழுத்தாளர், வாசகர் என்ற முறையில் அகாதமி உறுப்பினர்கள் அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். 1963-ல் மறுபடியும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1964-ல் காலமாகிவிட, அடுத்த தலைவராக குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, குடியரசுத் தலைவரான டாக்டர் ஜாகிர் உசேன் அகாதமியின் தலைவருமானார்.

அன்றைய சூழலில், அமைப்பிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்க நேருவின் தலைமை பயன்பட்டது என்ற கருத்து உண்டு. அவருக்கும், ராதாகிருஷ்ணனனுக்கும், ஜாகிர் உசேனுக்கும் விடுதலைப் போராட்டம், தத்துவ ஆய்வு, இலக்கிய ஈடுபாடு என்ற அடையாளங்களும் இருந்தன. இருந்த போதிலும், அப்போதே விமர்சனங்களும் வந்தன. நேருவின் நெருங்கிய நண்பரும் அரசியல் செயல்பாட்டாளருமான ஆச்சார்ய ஜே.பி. கிருபளானி, இப்படி பிரதமர் எல்லா இடங்களிலும் இருப்பது பிற அறிஞர்கள் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தத் தடையாகிவிடும் என்று கூறினார்.

                                                    சாகித்ய அகாதமி விருது

நையாண்டி அரசியல் எழுத்துகளுக்காக புகழ் பெற்றவரான, நாவலாசிரியரும், பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங், அரசியல்வாதிகள் அகாதமி தலைவர்களாவது அரசு சார்பு எழுத்துகள்தான் வர வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதாகிவிடும் என்று எச்சரித்தார். இலக்கியவாதி அதிகாரத்தின் மடியிலமர்ந்து கவிதை எழுதுபவரல்ல; அதிகாரத்தின் கண்களைப் பார்த்து கேள்வி கேட்பவர் என்றார் குஷ்வந்த் சிங். வேறு பல எழுத்தாளர்களும் தங்கள் ஏற்பின்மையை வெளிப்படுத்தினார்கள்.

துணிச்சலான அறிக்கை

அப்போதுதான் நேரு, “அகாதமி கூட்டங்களுக்கு நான் பிரதமராக வர மாட்டேன், எழுத்தாளர் என்ற முறையிலேயே வருவேன்,” என்று பதிலளித்தார். ஆயினும், விமர்சனங்கள் தொடர்ந்தன. நேருவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, சிறந்த ஓவியரும் அணு ஆற்றல் அறிவியலாளருமான டாக்டர் ஹோமிபாபா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, சாகித்ய அகாதமி, சங்கீத நாடக அகாதமி, லலித் கலா அகாதமி ஆகிய மூன்று அமைப்புகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கையளித்தது.

அரசியல் பதவிகளில் இருப்பவர்கள் இந்த அமைப்புகளுக்குத் தலைமை தாங்குவதைத் தவிர்ப்பது இலக்கியச் சுதந்திரத்திற்கு நல்லது என்ற கருத்தை குழு தனது அறிக்கையில் முன்வைத்தது. அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் தலைமையிடத்திற்கு அரசாங்கத்தார் வரக்கூடாது என்று பரிந்துரைத்தது.


                                                    லால்பகதூர் சாஸ்திரி


இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டதன் அடிப்படையில், ஜாகிர் உசேனுக்குப் பிறகு, அரசுப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அகாதமி பொறுப்பேற்பது தவிர்க்கப்பட்டு வருகிறது. அகாதமியின் தன்னாட்சி அதிகாரம் இவ்வாறு தக்கவைக்கப்பட்டு வந்துள்ளது.

மொழியியலாளர் டாக்டர் சுநிதி குமார் சாட்டர்ஜி (1969–77), குஜராத்தி கவிஞர் உமாசங்கர் ஜோஷி (1978–82), கன்னட எழுத்தாளர் வி.கே. கோகாக் (1983–87), இலக்கியத் திறனாய்வாளர் பி.என். தத் (1988–92), கன்னட இலக்கியப் படைப்பாளி யு.ஆர். அனந்தமூர்த்தி (1993–97), ஒடியா கவிஞர் ரமாகாந்த ரத் (1998–2003), உருது அறிஞர், விமர்சகர் கோபி சந்த் நாரங் (2004–08), வங்காளக் கவிஞர், நாவலாசிரியர் சுனில் கங்கோபாத்யாய (2008–12), இந்தி எழுத்தாளர் விஸ்வநாத் பிரசாத் திவாரி (2013–18), கன்னட நாடகவியலாளர் சந்திரசேகர கம்பார் (2019–23) ஆகியோர் அகாதமி தலைவர்களாகப் பணியாற்றியுள்ளனர். தற்போது இந்தி எழுத்தாளர் மாதவ் கௌஷிக் தலைவராக உள்ளார்.

தமிழர், பெண்கள், இல்லையா?

அகாதமிக்கு இதுவரையில் தமிழ்ப் படைப்பாளி எவரும் தலைவராகக் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. அதேபோல, அதலைவர் பொறுப்பிற்கு பெண் ஒருவர் கூட கொண்டுவரப்பட்டதில்லை. இவை தொடர்பான தேசிய, மாநில, இலக்கிய, பாலின அரசியல்கள் தனியாக எழுதப்பட வேண்டியவை. இப்போது முன்னுக்கு வந்துள்ள விருது விவகாரத்தை இங்கே விவாதிப்போம்.


அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளுடன், ராஜஸ்தானி, ஆங்கிலம் ஆகியவற்றுக்குமாக 24 மொழிகளின் எழுத்தாளர்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒவ்வொரு மொழிக்குமான தேர்வுக் குழுவினர், ஒவ்வொருவரைத் தேர்வு செய்து, 24 பேர்களுக்கான இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 18 அன்று பிற்பகல் 3 மணிக்கு, அதனை வெளியிடுவதற்கான செய்தியாளர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அன்று காலைதான் அகாதமியின் செயற்குழு கூடி இறுதிப்பட்டியலை அங்கீகரித்திருந்தது. அகாதமியின் ரவீந்திர பவன் அரங்கிற்குச் செய்தியாளர்கள் வரத்தொடங்கியிருந்தார்கள். கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, செயற்குழு அலுவலர் ஒருவர் வந்து நடைமுறை நுணுக்கங்கள் காரணத்திற்காக பட்டியல் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார்.

இது செய்தியாளர்களுக்கு மட்டுமல்லாமல், அங்கிருந்த செயற்குழு உறுப்பினர்களுக்கே கூட அதிர்ச்சியளித்தது. நமக்கே தெரியாமல் என்ன நடைமுறை நுணுக்கப் பிரச்னை ஏற்பட்டிருக்கும் என்று அவர்கள் திகைத்தார்கள். செய்தியாளர்கள் கூட்டம் மறுநாள் நடத்தப்படும் என்று அகாதமி அலுவலர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.


கஜேந்திரசிங் ஷெகாவத்

அறிக்கையைப் பறித்த அமைச்சகம்
சில உறுப்பினர்கள் தங்கள் ஏற்பின்மையை வெளிப்படுத்தினார்கள். உண்மையில், பட்டியல் அறிவிப்பு தள்ளிவைக்கப்படவில்லை, மாறாகப் பட்டியலே நிறுத்திவைக்கப்பட்டுவிட்டது – கறாராகச் சொல்வதென்றால், பட்டியல் செல்லாததாக்கப்பட்டுவிட்டது தெரியவந்தது. ஒன்றிய கலாசார அமைச்சகம் தலையிட்ட பின்னணியில்தான் இதெல்லாம் நடந்திருக்கின்றன என்பதும் தெரியவந்தது.


கலாசார அமைச்சராக இருப்பவர் கஜேந்திர சிங் ஷெகாவத் – ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர். எதிர்ப்பலைகள் பரவியதைத் தொடர்ந்து, அகாதமிக்கும் அமைச்சகத்துக்கும் இடையே சென்ற ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அறிக்கை வெளியீடு தடுக்கப்பட்டதாக அமைச்சக அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

நிர்வாகச் சீர்திருத்தங்ளுக்காகவும், அகாதமியின் மேம்பட்ட செயல்பாட்டுக்காகவுமே அந்த ஒப்பந்தம் என்பதாகவும் கூறினர். அகாதமி தலைவர் இதுவொரு நிர்வாக நடைமுறை, அவ்வளவுதான் என்று சொன்னார். அகாதமி வழங்கும் முதன்மை விருது (பரிசு ரூ.1,00,000), பால புரஸ்கார் விருது (ரூ.50,000), மொழிபெயர்ப்பு விருது (ரூ.50,000) ஆகிய தொகைகள், குழுக் கூட்டங்களுடன் அகாதமி ஏற்பாடு செய்யும் உரையரங்குகள், வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பு, அலுவலர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களுக்குமான நிதியை அமைச்சகம்தான் வழங்குகிறது.

அந்தச் சாக்கில்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. நிர்வாக மேம்பாடு என்ற சாக்கில், விருதுகள் யாருக்கென முடிவு செய்கிற அதிகாரத்தை ஒன்றிய அரசு கைப்பற்றுகிறது என்று, இந்த நடவடிக்கையைக் கண்டிக்கிற எல்லோரும் கூறுகிறார்கள். 

அகாதமி தயாரித்திருந்த பட்டியலில் தமிழ்நாட்டின் மூத்த எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளரும் செயல்பாட்டாளருமான ச. தமிழ்ச்செல்வன் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது இப்போதாவது வருகிறதே என்ற வரவேற்போடு அவருக்கு வாழ்த்துச் சொல்ல சக படைப்பாளிகள் தயாராகிக்கொண்டிருந்தபோதுதான், “ஒப்பந்தம்” குறுக்கிட்டிருக்கிறது.


ஏற்கெனவே விருது பெற்றவர்களான வண்ணதாசன், இமையம், யூமா வாசுகி, யெஸ். பாலபாரதி, விஷ்ணுபுரம் சரவணன், ஆய்வாளர்கள் ஆர். பாலகிருஷ்ணன், வெங்கடேஷ் ஆத்ரேயா, படைப்பாளிகள் பெருமாள் முருகன், ஷங்கர்ராம சுப்பிரமணியன், மாலதி மைத்ரி, ஆதவன் தீட்சண்யா, தமயந்தி, பவா செல்லத்துரை, உதயசங்கர், கலைச் செயல்பாட்டாளர்கள் ரோகிணி, மங்கை, கவின் மலர்... பத்திரிகையாளர்கள் திருமாவேலன், விஜயசங்கர், கவிஞர்கள் பழனி பாரதி, சக்தி ஜோதி, திரைப்பட இயக்குநர்கள் வசந்த பாலன், அஜயன் பாலா, மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் பேராசிரியர் மார்க்ஸ், பாலமுருகன், பதிப்பாளர்கள் ஒளிவண்ணன், ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட 236 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

.

                                                ச. தமிழ்ச்செல்வன்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் து.ரவிக்குமார் உட்படப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.


ஏன் கடைசி நிமிடம்?

இது தொடர்பாக எழுகிற சில கேள்விகளை இங்கே பகிர்ந்திட எண்ணுகிறேன். அகாதமியின் தன்னாட்சியைத் தட்டிப் பறிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தற்போதைய தலைவரும் மற்றவர்களும் ஏற்றுக்கொண்டது சரிதானா? இது அநீதியானது என்று கையெழுத்திட மறுத்திருக்க வேண்டும், தங்கள் ஒவ்வாமையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், பதவியில் இருக்கிற காலத்தில் இதையெல்லாம் வெளிப்படையாக எதிர்க்கப் பலரும் முன்வருவதில்லை. அதே நிலையில் இவர்களும் இருந்தார்கள் போலும். அப்படியொரு ஒப்பந்தம் இருக்கிறது என்றால், எப்போதிருந்து அது செயல்பாட்டுக்கு வருகிறது எனற முடிவும் இருந்திருக்கும் அல்லவா?

அமைச்சகம் அதை முன்பே தெரிவித்து, அகாதமி செயற்குழு தேர்வு முடிவுகளைத் தானாக வெளியிடக்கூடாது, தன்னிடம் காட்டி ஒப்புதல் பெற்றுதான் அறிவிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தியிருக்கலாமே? அந்த நாகரிகத்தைக் கடைப்பிடிக்காமல், கடைசி நிமிட அதிர்ச்சி நாடகத்தை அரங்கேற்றியது ஏன்?

                                                    ரகுராம் ராஜன்

ஆக, மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக எடுக்கப்பட்டுள்ள நிர்வாக நடவடிக்கைக்கு வேறு உள்நோக்கம் இருப்பது தெளிவாகிறது. மத்திய அதிகாரக் ‘குவிப்பு மோகம் கொண்ட ஆட்சியாளர்களுக்கு, “தன்னாட்சி” என்றாலே அலர்ஜியாக இருக்கிறது. மாநில தன்னாட்சி என ஒலித்தாலே காதுகளை மூடிக்கொள்கிறார்கள். தன்னாட்சி என்றால் அது தனியாட்சி என்று அவர்களாக நினைத்துக்கொண்டு மருள்கிறார்கள். கூட்டாட்சியின் வலிமையே மாநிலங்களின் தன்னாட்சியில்தான் இருக்கிறது, நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் மாநிலத் தன்னாட்சி உரிமை ஓர் அடித்தளம் என்ற கோட்பாட்டு உணமையைக் காண மறுக்கிறார்கள்.

இதே ஒவ்வாமைதான் கல்வி நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள், செயலாக்க முகமைகள் ஆகியவற்றின் மீதும் செலுத்தப்படுகிறது. கடந்த 11 ஆண்டுக்காலத்தில் திட்டக் குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என மாற்றப்பட்டது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டி அதன் ஆளுநர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் ஆகியோர் பதவி விலகினார்கள். புலனாய்வு அமைப்புகள் ஆட்சியாளர் நோக்கத்திற்கு ஏற்ப ஏவப்படுகின்றன, செயலாக்கத் துறை அரசியல் கணக்குகளுக்காகச் செயல்படுத்தப்படுகிறது, தேர்தல் ஆணையமே கூட அதற்காக ஆணையிடுவதாகிவிடடது, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவராக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி நியமனம், அறிவியலை மக்களிடம் கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞான் பிரசார் அமைப்பு கலைப்பு… இப்படி பல எடுத்துக்காட்டுகள் எதிர்க்கட்சிகளாலும் சமூக அக்கறையாளர்களாலும் குறிப்பிடப்படுகின்றன.


ஆக, தற்போது எழுகிற கண்டனக் குரல், விருதின் கௌரவம், வழங்கப்படும் பரிசுத் தொகை தொடர்பானதல்ல. நாட்டின் ஒருமைப்பாடு, மொழிகளின் மரியாதை, மாநிலங்களின் உரிமை, அமைப்புகளின் தன்னாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கானது. மாநில அளவிலேயே படைப்பாளிகளை அங்கீகரிக்கிற அகாதமி அமைப்புகளைஏற்படுத்த வேண்டும் என்ற கருத்துகளாகவும் இது பரிணமிக்கிறது. இதற்கு, கேரளம் ஏற்கெனவே முன்னுதாரணம் படைத்திருக்கிறது. மாநில அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றாலும், மக்கள் பணத்தில் நாடு தழுவிய அமைப்பாக இயங்கும் சாகித்ய அகாதமியை மீட்பது முக்கியம்.

அகாதமியின் சுதந்திரம் அமைச்சகத்தின் அதிகாரமாக்கப்படுவதில் வேறொரு முக்கியமான பிரச்னை இருக்கிறது. யாருக்கு விருது என முடிவு செய்வது, எதைப் பற்றி எழுதியவருக்கு என்று தீர்மானிப்பதாக மாறும். இவர்களது ஒற்றை ஆதிக்கக் கொள்கை, மதச்சார்பு ஆகியவற்றுக்கு ஆதரவான எழுத்துகளுக்கும், அவற்றை எழுதுகிறவர்களுக்குமே அங்கீகாரம் என்ற நிலைமை ஏற்படுத்தப்படும். அவ்வாறு ஏற்படாமல் தடுக்க, நாடு முழுவதும், அனைத்து மொழிகளிலும் இந்த எதிர்ப்பு உரக்க ஒலிக்க வேண்டும். படைப்பாளிகள் மட்டுமல்லாமல், வாசகர்களின் உணர்வாகவும் அது வெளிப்பட வேண்டும்!

                                    [0]

-விகடன் ப்ளஸ் எண்மப் பதிப்பில் (ஜனவரி 3) எனது கட்டுரை