Tuesday, 27 January 2026

பெரியவங்க சொன்னபடி...


 

“பொண்ணுங்க படிச்சா குடும்பத்துக்கு நல்லதாச்சேன்னுதான் காலேஜுக்கு அனுப்புறோம். ஆனா அதுங்க என்னடான்னா நாலு புக்கு படிச்சதும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறாங்க.”


நண்பர் வீட்டுக் கல்யாண சாப்பாடு முடிந்து, பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துக் காலை நீட்டி உட்கார்ந்து சற்றே கண்ணயராலாமா என்று முயன்றுகொண்டிருந்ததேன். பக்கத்தில் நாற்காலி வட்டம் அமைத்து பீடா அரைத்தபடி அரட்டையில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரது இந்தப் பேச்சு காதில் நுழைந்தது. அப்புறம் என்னத்தைத் தூங்குறது? கழற்றிச் சட்டைப் பையில் போட்டிருந்த காது கேட்பு உதவிக் கருவிகளை எடுத்து மறுபடி மாட்டிக்கொண்டேன். கவனிக்காதது போலக் கண்களை மூடிக்கொண்டேன். என் தொழில் தர்மப்படி ஒட்டுக்கேட்டேன்.


“ஏம்மா, இவரு சொல்றாப்புலதான் நீ எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறியா?”


“சித்தப்பா, நான் எல்லாம் தெரிஞ்ச மாதிரியெல்லாம் பேசறதில்லை, ஆனா தெரிஞ்சதை எல்லாம் பேசுறேன்.” அந்த வார்த்தை வித்தையை ரசித்தேன். அநேகமாக அந்த வட்டத்தில் இருந்த அடர் நீல முழுக் கால்சட்டை, இளஞ்சிவப்புப் பின்னலாடைச் சட்டைப் பெண்ணாகத்தான் இருக்கும் என்று ஊகித்தேன். 


“பார்த்தீங்களா, இவளோட பேச்சுத் திறமையை நம்ம கிட்டயே காட்டப் பார்க்கிறா,” என்றார் பேச்சைத் தொடங்கியவர்.


தற்காலப் பெண்களிடம் தான் கவனிக்கிற மாற்றங்களாக சிலவற்றைக் குறிப்பிட்டார் அவர். “முக்கியமா பாருங்க, நம்ம டிரெடிஷன்ல பணிவு முக்கியம். நாவடக்கம் முக்கியம்.”


“பணிவும் நாவடக்கமும் கேர்ள்ஸ்சுக்கு மட்டுமா, இல்ல பாய்ஸ்சுக்குமா மாமா?”


“ரெண்டு பேருக்கும்தான், ஆனா பொண்ணுகளுக்கு ரொம்ப முக்கியம்.”


“மத்தவங்களை மரியாதையா நடத்துறதுதான் பணிவுன்னா நான் சின்னப் பசங்ககிட்ட கூட பணிவாத்தான் இருக்குறேன். ஆனா பெரியவங்க என்ன சொன்னாலும் அப்படியே ஏத்துக்கிட்டுப் போறதுதான் பணிவுன்னா, அது என்கிட்ட கிடையாது.”


அந்தச் சபையில் ஒரு மெல்லிய வெப்பம் தோன்றியிருக்குமென சில நொடிகள் நீடித்த மௌனத்திலிருந்து ஊகித்தேன்.


“நாவடக்கமெல்லாம் எனக்கு இருக்கு மாமா, இப்ப கூட பந்தியிலே எனக்குப் பிடிச்ச ஐட்டமா இருந்தும், நாக்கை அடக்கிக்கிட்டு அளவோடதான் சாப்பிட்டேன் தெரியுமா?” கலகல சிரிப்போடு சொன்னதில், அந்த வெப்ப மௌனத்தைத் தணிக்கும் முயற்சி வெளிப்பட்டது.


“நான் எந்த நாவடக்கத்தைச் சொல்றேன், இவ எந்த நாவடக்கத்தைச்  சொல்றா பாருங்க.”


மறுபடி கலகல.


“மனசுல இருக்கிறத மறைக்காம பேசுறேன், மத்தவங்க சொல்றதுல நான் அக்செப்ட் பண்ண முடியாத பாய்ன்ட் இருந்தா ஆர்க்யூ பண்றேன். அதைத்தான் நாவடக்கம் இல்லைங்கிறாரு மாமா.”


“சரிதான்.” இந்த அங்கீகாரச் சிரிப்பு சித்தப்பாவுடையதென்று கணித்தேன்.


“என்ன நீயும் சிரிக்கிற? பெரியவங்க சொன்னபடி கேட்டு நடக்கணும்னு இருக்கா இல்லையா, அது சரியா தப்பா?”


‘மாமா, நானும் பெரியவங்க சொன்னபடிதான் நடக்குறேன் பேசுறேன்.”


“எந்தப் பெரியவங்க?”


“பெரியார், அம்பேத்கார், மார்க்ஸ் இவங்கதான். இனிமே முன்னோடியா இப்படியெல்லாம் பேசுன லேடீஸ் பத்தியும் படிக்கப் போறேன்…”


“வௌங்கிரும்.” மாமா எழுவதையும், சித்தப்பா தோளில் தட்டிக் கொடுப்பதையும், எல்லோருமாகப் புறப்படுவதையும் அரைக் கண் திறந்து நோக்கினேன். கைகுலுக்க முடியாமல் போனதே என்று சற்றே ஏக்கம் கொண்டேன். முத்துலட்சுமி, மூவலூர் ராமாமிர்தம்  அஞ்சலையம்மாள், மணியம்மை, கே.பி. ஜானகியம்மாள் பாப்பா உமாநாத் முதலானோர் தேடிப் படிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை கொண்டேன்.

‘யார்டா அது” என்று நண்பனிடம் விசாரித்தறிந்து தோழமைத் தோட்டத்தில் இணைப்பதென்ற முடிவோடு முழுக்கண் விழித்தேன்.

[0]

ஓவிய உருவாக்கம் ஜெமினியின் நானோ வாழைப்பழம்


No comments: