மக்களாட்சி முறையில், மக்கள் தங்கள் தேர்வை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாக தேர்தல் இருந்துவருகிறது. விரலில் மையிட்டு, வாக்குச்சீட்டிலுள்ள சின்னத்தில் முத்திரையிடுவது (அல்லது எந்திரத்தின் பொத்தானை அழுத்துவது) குடிமக்களின் ஒரு தலையாய பணியாகிறது. தேர்தல் காலத்தில், ‘வாக்களிப்பது கடமை’ என்று பரப்புரை செய்யப்படுகிறது.
திரைப்பட/விளையாட்டு நட்சத்திரங்கள் தேர்தல் ஆணையத் தூதர்களாக மாறி, ‘100 சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்’ என்று அழைக்கிறார்கள். நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் 45.67% பதிவான வாக்குகளின் சராசரி, முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு இன்று 60% முதல் 67% வரைக்குமாக (மட்டுமே) வளர்ந்திருக்கிறது.
புதுத் தகுதி பெறும் நோட்டா!
இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று (பிப்.24) கூறிய ஒரு கருத்து ஜனநாய அரசியலில் களமாடுவோரின் கவனத்தைக் கோருகிறது. ‘தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவதற்கு, தண்டனை சார்ந்ததாக இல்லாமல், ஏதேனும் ஒரு புதிய வழிமுறையை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் மூலமே தகுதியான பலரையும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈர்க்கவும், அதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், ‘நோட்டா’ ஏற்பாட்டைத் தேவையற்றதாக்கவும் முடியும்‘ என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் கருத்து.
‘தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் கொண்ட அமர்வு, ‘சிறந்த வேட்பாளர்களைத் தேர்தல் களத்திற்குக் கொண்டுவரவும், வாக்காளர்கள் தங்கள் வாக்கைச் செலுத்துவதற்கு ஊக்கப்படுத்தவுமே “நோட்டா” கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகக் குறைந்த சதவிகித வாக்காளர்கள் மட்டுமே நோட்டா என்ற தெரிவைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது கடந்த பத்தாண்டு கால அனுபவம்” என்றும் கூறியுள்ளது.
‘விதி சட்டக் கொள்கை மையம்’ என்ற அமைப்பு ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது. சில தொகுதிகளில் ஒரே ஒரு வேட்பாளர்தான் நிற்கிறார். அத்தகைய நிலைமைகளில் போட்டி வேட்பாளராக நோட்டா அறிவிக்கப்பட வேண்டும். அப்போது உண்மையிலேயே அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்பது தெரிந்துவிடும் என்று அந்த அமைப்பு வாதிடுகிறது.
பல நேரங்களில், குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிற இடங்களில், சில வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்படுவதைப் பார்க்கிறோம். அவ்வாறு ஒற்றையாகக் களம் இறங்குவோருக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது, வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்று சொல்லிவிட முடியுமா?
மிக அரிதாக அப்படி இருக்கக்கூடும் என்றாலும், ஆகப் பெரும்பாலும் அந்தச் செல்வாக்கின் பின்னால் பணம், பலம் ஆகியவை இருக்கும். போட்டியாக வருகிறவர்களுக்குப் பெரும் பணம் கை மாறும். அதற்கு மசியாதவர்கள் என்றால் பலம் விளையாடும் – அதாவது, ஏவிவிடப்பட்ட அடியாட்கள் இருப்பார்கள். அவர்கள் ‘அன்பாக‘ எச்சரிப்பார்கள். கேட்கவில்லை என்றால் போட்டியாளரின் குடும்பத்தினரும் தரமான சொற்களால் அர்ச்சிக்கப்படுவார்கள். அச்சுறுத்தப்படுவார்கள். கடைசியில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவார்கள்.
ஆகவே, போட்டியில்லாமல் நிற்பவருக்கு உண்மையாகவே மக்கள் ஆதரவு இருக்கிறதா, எந்த அளவுக்கு இருக்கிறது என்று, நோட்டாவை வேட்பாளராக அறிவித்தால் தெரிந்துவிடும் என்று விதி அமைப்பு கூறுவதில் ஒரு வாத நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நோட்டாவை வேட்பாளராக அறிவிக்கிறபோது, அது போட்டியாளரை விலக வைப்பதற்காகப் பணமும் பலமும் இறக்கிவிடப்படுவதைத் தடுக்கும் என்று, இந்த அமைப்பின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் அரவிந்த் தத்தார் கூறினார்.
நாம் அறியாத உண்மை!
இங்கே இன்னோர் உண்மையையும் தெரிந்துகொள்ள வேண்டும். “வாக்குரிமை“ என்று சொல்கிறோம், அது ஓர் உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அது நம் அடிப்படை உரிமை என்று பேசுகிறோம், ஆனால், அது அரசமைப்பு சாசனம் அங்கீகரித்துள்ள அடிப்படை உரிமைகள் பட்டியலில் இல்லை. இதனை ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர் ஆர். வெங்கிடரமணியும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“வாக்களிப்பது அடிப்படை உரிமை அல்ல என்கிறபோது, அடிப்படை உரிமை மீறப்படும் நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு வழி செய்யும் 32-வது சட்ட உரையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு எப்படி விசாரணைக்கு ஏற்கத்தக்கதாக இருக்க முடியும்” என்று அவர் கேட்டார். முன்னதாக, நீதிபதிகள் அமர்வு, “நோட்டாவை ஒரு வேட்பாளராக அறிவிக்க வேண்டுமானால், அதற்கு நாடாளுமன்றம்தான் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தது.
“மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் நாடாளுமன்றம் என்ன திருத்தம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் முடிவு செய்யக்கூடாது. என்ன குறைபாடு இருக்கிறது, என்ன திருத்தம் வேண்டும் என்று நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்,” என்றும் தலைமை வழக்குரைஞர் கூறினார்.
ஒன்றிய அரசு தனது உறுதிப் பத்திரத்தில், “நோட்டா ஒரு தெரிவு அல்லது வெளிப்பாடுதான். அதற்கு வேட்பாளர் என மனித இயல்பை ஏற்ற இயலாது,” என்று தெரிவித்திருக்கிறது. விசாரணை தொடர்கிறது, தீர்ப்பு எப்படி வரும் என்று (பெரும்பாலும் ஊகிக்கத்தக்கதாக) எதிர்பார்க்கப்படுகிறது. நோட்டாவை வேட்பாளராக்குவதற்கான கோரிக்கையை விட, வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் கருத்துதான் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். அதே சமயம், அதை தண்டனை நடவடிக்கையாக பார்க்க வேண்டியதில்லை என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்தான்.
தவறான தனி மனிதர்களையோ, தீங்கான சித்தாந்தப் பிரதிநிதிகளையோ, ஜனநாயக மாண்பை மதிக்காதவர்களையோ தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டு, பின்னர் மக்கள் அனுபவிப்பதை விடவா, வாக்களிக்கத் தவறியதற்கான தண்டனை கடுமையாக இருந்துவிடப் போகிறது?
பொதுவாகத் தேர்தல்களில் நகர மக்களை விட, கிராமப்புற மக்கள்தான் அதிகமாகப் பங்கேற்கிறார்கள், ஒரு திருவிழா போல உற்சாகமாகக் கலந்துகொள்கிறார்கள் என்ற அவதானிப்பை நீதிபதிகள் வெளிப்படுத்தினார்கள். அப்போதுதான், கட்டாயமாக வாக்குப்பதிவு செய்வதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்று கேட்டு, அதற்கான ஒரு வழிமுறை தேவை என்ற கருத்தை முன்வைத்தார்கள்.
வாக்களிக்கப் போகாதவர்கள்!
அரசமைப்பால் கிடைக்கும் வசதிகளையும் வாய்ப்புகளையும் நன்றாக அனுபவித்துக்கொண்டே, “எவனும் சரியில்லை” என வாக்குச் சாவடிக்குப் போகாதவர்கள் பலர் இருக்கிறார்கள். சாலைகளில் வலதுபுறமாக வேகமாக வண்டியோட்டிச் செல்கிறவர்கள், கல்வி நிலையங்களில் கெடுபிடி செய்கிறவர்கள், அலுவலகங்களில் கோப்புகளை அழுக்கேற விடுபவர்கள், நீதிமன்றங்களிலேயேகூட வழக்கை முன்கூட்டியே எடுக்க வைப்பதற்குக் காசு கேட்பவர்கள்… இப்படி எல்லாவற்றையும் சாடுவார்கள். “மேலே இருக்கிறவங்க சரியா இருந்தா இவங்க ஏன் இப்படி இருக்கப் போறாங்க,” என்று நியாயமாகக் கேட்பார்கள்.
ஆனால், மேலே சரியானவர்கள் இருக்க வைப்பதற்கான ஒரே வாய்ப்பாகிய தேர்தலைப் புறக்கணிப்பார்கள். நண்பர்கள் வட்டத்தில் முன்பு இது பற்றியே ஒரு விவாதம் வந்தது. “நாம இவருக்கு ஓட்டுப் போடலாம்னு நேர்மையானவராவும் நல்லாப் படிச்சவராவும் நல்லது செய்யணும்கிற அக்கறை இருப்பவராவும் ஒருத்தரை முடிவுசெய்றோம். ஆனா, ஜனங்க மத்தவங்க சொல்றதை நம்பி வேற ஆளுக்கு ஓட்டுப் போடுறாங்க. நம்ம கேண்டிடேட் தோத்துப் போறாரு. இதுக்கு எதுக்காக நான் போலிங் பூத்துக்குப் போய் வெயில்ல நிக்கணும்,” என்று ஒருவர் கேட்டார்.
“உன்னைப் போலத்தான் நிறையப் பேரு ஓட்டுப் போடறதில்லை… அதனாலதான் நல்லவங்க ஜெயிக்க முடியறதில்லை,” என்று மற்றொரு நண்பர் பதிலளித்தார். ஒரு பகுதியினரின் இந்த அலட்சியத்தால், மிகக் குறைவான சதவிகித வாக்குகளைப் பெறுகிற ஒருவர் ஒட்டுமொத்தத் தொகுதிக்கும் பிரதிநிதியாகிறார். இது ஜனநாயகத்தின் பிரதிநிதித்துவப் பண்பையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.
வாக்குச்சாவடிப் பக்கம் போகாதவர்கள் அத்தனை பேரும் இந்த எண்ணத்தோடு இருப்பவர்கள்தானா? தேர்தல், போட்டி, தேர்ந்தெடுப்பது… இவற்றை அற்பமான விளையாட்டாக எண்ணி, தாங்களும் சாதாரணமானவர்களாக ஆகிவிடக் கூடாது என்று விரலில் கறுப்பு மை தீட்டிக்கொள்வதற்கு அசூயை கொள்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
வேடிக்கையான முரண் என்னவென்றால், யாரையாவது தேர்ந்தெடுக்கும் கடமையைச் செய்யத் தவறுகிற இவர்கள், மற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் செயல்படுத்துகிற திட்டங்களையும், அறிவிக்கிற சலுகைகளையும், ஏற்படுத்துகிற வசதிகளையும் நுகர்வதற்குத் தவறுவதில்லை. “நான் வாக்களிக்கவில்லை, ஆகவே, அரசாங்கம் கட்டிய இந்தப் பாலத்தில் போக மாட்டேன்,” என்று சொல்வார்களா என்ன
போராட்டமாகப் புறக்கணிப்பு!
வாக்குப்பதிவு நாள் நெருங்கும்போது சில ஊர்களில் சில சமூகங்களிடமிருந்து தேர்தல் புறக்கணிப்பு என்ற அறிவிப்பு வெளியிடப்படும். பல்வேறு அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படாததையும் தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்பlhதையும் காரணமாகக் கூறுவார்கள். அது செய்தியாக வரும். அரசியல் செயல்பாட்டாளர்களோ அதிகாரிகளோ அவர்களைச் சந்திப்பார்கள்.
பின்னர் அந்த மக்கள் வாக்களிக்கப் போன செய்தி வராது. இப்படிச் சில உடனடித் தீர்வுகளுக்காகத் தேர்தல் புறக்கணிப்பை ஒரு போராட்ட வடிவமாக எடுத்துக்கொள்கிறவர்களையும், மேற்படி ஆசூயைக்காரர்களையும் ஒரே மாதிரியானவர்களாகப் பார்க்க முடியாது. தேர்தல் என்பதே ஒரு வர்க்க சமரசம் எனக்கூறி, அதனை ஒரு இயக்கக் கோட்பாடாகவே நிராகரிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களோடும் இவர்களை ஒப்பிட முடியாது.
உடல் நலிவு, தவிர்க்கவியலாத வெளியூர்ப்பயணம் உள்ளிட்ட நிலைமைகளில் வாக்களிக்க முடியாமல் போகிறவர்களோடும் இவர்களை ஒப்பிட முடியாது. ஆயினும் வாக்களிக்கும் உரிமையைப் போலவே, வாக்களிக்க மறுக்கும் உரிமையும் இருக்கிறது. சட்டப்புத்தகத்தில் நேரடி வாசகமாக இல்லை என்றாலும், ஒருவரது குடியுரிமை, கருத்துரிமை, நம்பிக்கை உரிமையோடு இந்த வாக்கு மறுப்பு உரிமையும் இருக்கிறது. ஆகவே தற்போதுள்ள சட்டப்படி அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது.
வேறு நாடுகளின் தேர்தல் சட்டங்கள் என்ன சொல்கின்றன? சுமார் 21 நாடுகளில் ஏதோ ஒரு வகையில் கட்டாய வாக்களிப்பு முறை இருப்பதாகத் தெரிகிறது. 1893-ம் ஆண்டிலிருந்தே கட்டாய வாக்களிப்பு விதியைப் பின்பற்றும் நாடு பெல்ஜியம். வாக்களிக்காதவர்களுக்கு தண்டம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக வாக்களிக்கத் தவறினால் அரசாங்க வேலைகள் மறுக்கப்படலாம். ஆஸ்திரேலியா 1924-ல் இதைக் கட்டாயமாக்கியது.
தகுந்த காரணமின்றி வாக்களிக்கத் தவறினால் கணிசமான தொகை தண்டம் விதிக்கப்படும். அங்கே வாக்குப்பதிவு எப்போதும் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். பிரேசில், அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளும் இதில் இணைகின்றன. கிரேக்கத்தில் வாக்களிப்பது கட்டாயம். எனினும் தண்டனை நடவடிக்கைகளில் அவ்வளவாகக் கடுமை காட்டப்படுவதில்லை.
இந்தியாவில் யாரை பாதிக்கும்?
ஐ.நா. சபை உறுப்பினர்களாக 193 நாடுகள் உள்ளன (உறுப்பினரல்லாத பார்வையாளர்களாக இணைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனம், வத்திகான் இரண்டையும் சேர்த்தால் 195). இவற்றில் நேரடியாகவோ, வேறுவகையாகவோ தேர்தல் நடத்தப்படுவது 110–120 நாடுகளில். இவற்றில் 21இல் மட்டுமே கட்டாய வாக்களிப்புச் சட்டம் இருக்கிறது. அங்கெல்லாம் தேர்தலின் தரம் உயர்ந்துவிட்டது, அரசாங்கங்கள் அப்பழுக்கின்றிச் செயல்படுகின்றன என்று காட்டும் ஆதாரங்கள் இல்லை.
ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, தண்டனை நடவடிக்கைகளுக்கு அஞ்சி வாக்களிக்க வருகிறவர்கள், வேட்பாளர்கள் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாக்குப் பதிவு எந்திரத்தில் சும்மா ஏதாவது ஒரு பொத்தானை அழுத்திவிட்டுப் போய்விடுகிறார்கள் என்று தெரிவிக்கிறது. இதற்கு ஏனோ “டாங்கி வோட்டிங்” (கழுதை வாக்குப்பதிவு) என்று பெயரிட்டிருக்கிறார்கள்! இதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர்களுக்கு மாறாக, தற்செயலான சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களாம்!
வாக்களிக்கத் தவறினால் தண்டம் உள்ளிட்ட தண்டனைகள் அளிப்பது இந்திய நிலைமைகளில் ஏழை எளிய மக்களையே வெகுவாகப் பாதிக்கும், விருப்பமில்லாத ஒருவரை வலுக்கட்டாயமாக வாக்களிக்கச் செய்வது அவரது கருத்துச் சுதந்திரமாகிய அடிப்படை உரிமையைப் பறிப்பதாகிவிடும் என்ற கருத்துகள் பொதுவெளியில் சுற்றிவருகின்றன.
அரசமைப்பின் ஆதாயங்களை சட்ட உரிமையாக அனுபவிக்கும் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், அரசாங்கத்தைத் தீர்மானிப்பதில் பொறுப்பு இருக்க வேண்டும். எதிர்பார்க்கிற தகுதிகள் 100 சதவிகிதம் உள்ள வேட்பாளர் இல்லாமல் போகலாம். ஆனால், களத்தில் இருப்பவர்களில் யார் குறைந்த அளவுத் தகுதிகள் கொண்டவர் என்று பார்த்து வாக்களிப்பது ஒரு குடிமைச் சமூக ஒழுக்கம். தனி மனிதர்களை எடைபோடுவதை விட, எந்தக் கொள்கையின் பிரதிநிதிகளாக வருகிறார்கள் என்று பார்த்து மதிப்பிடுவது உன்னதமான அரசியல் அறம். யாருக்குமே தகுதியில்லை என்று ஒருவர் நினைக்கிறார் என்றால், அவரே வேட்பாளராகக் களம் இறங்கலாமே, மக்கள் ஆதரவை நாடலாமே, அவர்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்கலாமே?
‘அரசியலில் ஈடுபட மறுப்பதன் இறுதித் தண்டனை, உங்களை விடத் தகுதியற்றவர்களால் நீங்கள் ஆளப்படுவதுதான்’
-பிளேட்டோ கூறிய இந்தச் சொற்களை விட இதை விளக்குவதற்கு வேறெதுவும் தேவையில்லை.
ஆணையா, உணர்வா?
அதிகார ஆணையால் இயக்கப்படுவதை விட, குடிவாழ்வுக் கடமை என்ற உணர்வால் இயங்குவதே மக்களாட்சியின் உண்மையான வெற்றிக்கு வழிவகுக்கும். சாதி வேற்றுமை, மதப் பகை, பொருளாதார ஏற்றத்தாழ்வு சார்ந்த சமுதாயச் சூழலில் திணறும் இந்தியா, முழுமையான, ஆரோக்கியமான மக்களாட்சி மாண்பு நிலைபெறுவதை நோக்கி முன்னேறுவதற்குப் போராடிக்கொண்டுதான் இருக்கிறது. அந்தப் போராட்டத்திற்கு வலிமை சேர்ப்பதாகவே தேர்தல் நடைமுறைகளும் சட்டங்களும் அமைய வேண்டும்.
சட்டக் கெடுபிடிகளால் கட்டாயப்படுத்துவதை விட, தாமாக உணர்வுப்பூர்வமாக வாக்குப்பதிவுக் கூடத்திற்குள் நுழைவதை ஊக்குவிக்கும் ஏற்பாடுகளைச் செய்யலாம். அதற்குத் தேர்தல் ஆணையமே பொறுப்பேற்கலாம். இலவச வாகனச் சேவை, வீடு தேடிச் செல்லும் வாக்குப் பெட்டி (அல்லது எந்திரம்) ஆகியன பலரையும் ஊக்குவிக்கும். தேர்தல் ஆணையம் ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மலைப் பகுதிகளிலும் நெடுந்தொலைவுகளிலும் வசிப்பவர்கள் உள்ளிட்ட சில பகுதியினருக்காக இந்த ஏற்பாடுகளைச் செய்கிறது. அதைப் பரவலாக்கலாம்.
மக்களாட்சியில் அக்கறையும் ஈடுபாடும் உள்ள அரசியல் கட்சிகள், சமூகக் களச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் எனப் பல்வேறு பகுதியினரும் பங்கேற்கிற கலந்தாய்வு ஒன்றைத் தேர்தல் ஆணையமே நடத்தலாம். மக்களுக்குக் குடியுரிமை–வாக்குரிமை அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் திடீர் நடவடிக்கைகளைக் கழற்றிவிட்டு, இத்தகைய பொறுப்புகளை அணிந்துகொண்டால் நாட்டின் மக்களாட்சி மாண்பை நிலைநாட்டும் வரலாற்றுக்கு அரும் பங்களிப்பாக அமையும்!
[0]
விகடன் ப்ளஸ் தளத்தில் (பிப்.27) எனது கட்டுரை
No comments:
Post a Comment