Wednesday, 17 June 2026

வீரம் எனப்படுவது யாதெனின்



வீரம் பற்றிய ஒரு கருத்தரங்கிலும் அதைத் தொடர்ந்த கலந்துரையாடலிலும் பங்கேற்கிற வாய்ப்புக் கிடைத்தது. சிறப்புரையாளர் வரலாற்று ஆவணங்களிலிருந்தும் இலக்கியப் படைப்புகளிலிருந்தும் ஆதியில் காட்டு விலங்குகளை வென்று அடக்கியது முதல் போர்க்களங்களில் எதிரிகளோடு பொருதியது வரையில் விரிவான எடுத்துக்காட்டுகளை முன்வைத்தார். உண்மையிலேயே அந்தத் தகவல்கள் மெய்சிலிர்க்கச் செய்தன, அவற்றைத் திரட்டுவதற்காக அவர் மேற்கொண்ட மெனக்கிடல்கள் வியந்து பாராட்ட வைத்தன.


அதே வேளையில் வீரம் என்ற கருத்தாக்கம் பற்றிய ஒரு சிறிய கருத்துப் பரிமாற்றத்தையும் அங்கே நிகழ்த்த முடிந்தது. நிகழ்வின் மையப் பொருள் அது அல்ல என்பதால், சில மாற்றுக் கருத்துகளைக் கேள்விகளாக மட்டும் வெளிப்படுத்தினேன். உரையாளரும், அந்தக் கோணத்தில் அதுவரை யோசிக்கவில்லை எனத் தெரிவித்து, நிச்சயமாக அது விரிவாக விவாதிக்க வேண்டிய ஒன்று  என்று கூறினார். அந்த மாற்றுக் கருத்துகளை, தோழர்களின் விவாதத்துக்காக தமுஎகச சிறப்பு மலராகிய இந்த அரங்கில் முன்வைக்கிறேன். 



பொதுவாக உலகம் முழுக்க சமூகத்தின் பொதுப்புத்தியில் ‘வீரம்’ என்ற சொல் எப்போதும் தசை வலிமையோடும், ஆயுதங்களைச் சுழற்றுவதோடும், எதிராளியை வீழ்த்துவதோடும், முடிந்தால் கொன்றுவிடுவதோடும் தொடர்புபடுத்தியே பதிக்கப்பட்டிருக்கிறது.  வரலாற்று அத்தியாயங்களுக்குள் ஒரு பின்னோக்கிய பயணம் மேற்கொண்டால்,  வீரம் ஒரு நிலையான தத்துவமல்ல என்று புலப்படும். அது அந்தந்தக் காலத்தின் மாறிய உழைப்பு முறைகளோடும், உற்பத்தி  உறவுகளோடும் கலந்து உருவான லட்சியமாக இருந்து வந்திருப்பது தெரிய வரும். குறிப்பாக, ஆண்ட வர்க்கங்கள் தங்களின் ஆளுமையை நிறுவிக்கொள்வதற்காக, ஆளப்பட்ட வர்க்கங்களின் மேல் வீரத்தைச் சுமத்தினார்கள் என்றும், அந்தச் சொல்லுக்கு எவ்வாறெல்லாம் உணர்ச்சியூட்டிய பொருள்களைப் புகுத்தினார்கள் என்றும் புரியவரும்.


உடலின் தசை வலிமையைக் கொண்டாடும் ஆதிக்கப் பார்வையிலிருந்து விலகி,  அறத்தின் குரலாக வீரம்   உருமாறியிருக்கிற பரிணாம வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்வதே இந்த உரையாடலின் நோக்கம். உழைக்கும் வர்க்கத்தின் போராட்டக் களத்திலும் மனித உரிமைத் தளத்திலும் செயல்படுவோருடன் சேர்ந்து நிற்கிற ஊடகவியலாளர் என்ற முறையில் இந்தச் சுருக்கமான பகிர்வு. ஆய்வுப் புலத்தில் ஆழமாகவும் அகலமாகவும் இயங்குவோர் இதனை இன்னும் பல மடங்கு அடர்த்தியாக, ஆதார வலிமையோடு ஆக்கித் தருவார்களானால் அதுவொரு பெரும்பங்களிப்பாக அமையும். 


ஆதி மனிதர் போராட்டம்


மனித வரலாற்றின் தொடக்கப் புள்ளியில், வீரம் என்பது எவ்வகையிலும் பெருமையடித்துக்கொள்வதை, அல்லது,  பிறரை அடிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் அன்றாடப் பசிக்காக வேட்டையாடி உணவைத் தேடவும், அதே பசியோடு தங்களை வேட்டையாட வரும் விலங்குகளிடமிருந்து தம்மையும் தம் கூட்டத்தையும் காத்துக்கொள்ளவும் இயற்கையோடு போராட வேண்டியிருந்தது. அது உயிர் பிழைப்பதற்கான அடிப்படைத் தேவை.  அங்கு விலங்கோடு மோதியது  வலிமையையும் துணிவையும் காட்டுவதற்காக அல்ல, மாறாக தாமும் தம் இனமும் அழிந்துவிடாமல் பூமியில் தக்கவைத்துக் கொள்வதற்காகவே. அது இயற்கையான, இன்றியமையாத வாழ்க்கை முறை.


அடிமைச் சமூக குரூரம் 


சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்து, அடிமை முறை கால்பரப்பிய காலத்தில் வீரத்தின் முகம் குரூரமாக மாற்றப்பட்டது. ரோம் போன்ற அடிமைச் சமூகங்களின் கொடூர அடையாளமான 'கிளாடியேட்டர்' மோதல் மைதானங்கள் இதற்கு சாட்சி. விலங்குகளோடும், தங்களுக்குள்ளும் மோதிக் கொண்டு சாகும்படி அடிமைகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மனிதர்கள் சரிவதைக் கண்டு, மாட மாளிகைகளில் அமர்ந்திருந்த ஆண்டான்கள் மதுக்கோப்பைகளோடும், மங்கையர் உடனிருப்போடும் ரசித்து மகிழ்ந்தனர். இங்கு அடிமைகளின் வேறு வழியற்ற  போராட்டத்திற்கு வீரம் என்று ஆளும் வர்க்கத்தால் பெயரிடப்பட்டதே தவிர, உண்மையில் அது உல்லாசத்திற்காக உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கி வேடிக்கை பார்த்த அதிகாரத்தின் வக்கிரமே அன்றி வேறில்லை.


கட்டாயப் பலியாடுகள்


நிலவுடைமைத்துவ மன்னராட்சிக் காலத்தில், அரசர்களின் பேரரசு எல்லை விரிவாக்கக் கனவுகளுக்காக எளிய குடிமக்கள் கட்டாயமாகப் படைகளில் சேர்க்கப்பட்டனர். வீட்டுக்கு ஒரு ஆண் வந்தாக வேண்டும் என்ற கட்டளைகளுக்கு உணர்ச்சிகரமாக கதைகளால் புனிதம் ஏற்றப்பட்டது.  போர்க்களம் சென்றாக வேண்டிய நிலைமை இங்கு தனிமனித விருப்பத்தால் உருவானதல்ல; மாறாக, மறுத்தால்  நடுவீதியில் கழுத்து வெட்டப்படும் அல்லது மரணமே மேல் என எண்ண வைக்கும் கொடூரமான  சிறைவாசம் என்ற அரச கட்டளைக் கட்டாயத்தால் விளைந்தது. 


அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்களின் பேராசைக்காக, முகமறியா இரு நாட்டுச் சாமானியர்கள், தனக்கும் எதிரே வருபவனுக்கும் என்ன சண்டை என்றே அறியாதவர்களாகக் போர்க்களத்தில் மோதி மாண்டனர். அதற்காக, எதிரியின் வாளால் குத்துப்பட்டது மார்பிலா முதுகிலா என்று தாய் தேடுகிற உணர்ச்சிக் காட்சிகள் புனையப்பட்டன. 


அதிகாரத்தின் சதுரங்க ஆட்டத்தில் பலியாக்கப்பட்ட எளியோரின் இந்த வலுக்கட்டாயச் சாவுகளுக்கு ஆளும் வர்க்கம் 'வீர மரணம்' என்று மகுடம் சூட்டியது. மாண்டவர்களின் அடுத்த தலைமுறையையும் போருக்குத் தள்ள அந்த மகுடத்தைத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது.


நவீன ராணுவம்


பிற்காலத்தில் உருவெடுத்த நவீன  ராணுவச் சேவையிலும் இதே நிலைமை நுட்பமான வடிவில் தொடர்கிறது. போர்க்களத்தின் அசாதாரணச் சூழலில், எல்லைகளைக் காக்கும் துணிவோடு நிற்கும் தனிமனிதர்களின் மனநிலை மதிக்கத்தக்கதே. பனி சூழ் மலைச் சிகரங்களில் இயற்கை, எதிரிப்படை இரண்டின் தாக்குதல்களும் எந்த வடிவத்திலும் வரும் என்ற புரிதலுடன் காவல் நிற்பவர்களின் மனத்துணிவு எளிமையானதல்ல.


ஆனால், உலகளாவிய சந்தை ஆக்கிரமிப்பு சார்ந்த அரசியல் பகடை நகர்த்தல்களுக்காகவும், ஆயுத வியாபாரிகளின் தணியாத லாபத் தாகத்திற்காகவும், அந்தந்த நாடுகளின் எதேச்சதிகார அரசியல் தலைமைகளின் சுயநலக் கணக்குகளுக்காகவும் யாரையோ சுட்டுக் கொல்ல வேண்டிய – அல்லது யார் மீதோ டிரோன்களை ஏவ வேண்டிய கட்டாயங்களுக்கு இன்றைய படைச் சிப்பாய்கள் தள்ளப்படுகிறார்கள். தங்களுக்குள் எந்தப் பகையும் இல்லாத எளிய மனிதர்கள், சீருடை அணிந்துகொண்டு தங்களுடைய அதிகாரிகள் அல்லது அரசுத் தலைவர்கள் ஆணையிட்டதற்காகக் கொன்று குவிப்பது எப்படி உண்மையான வீரமாகும்? இந்தக் கேள்வி இன்று உலகெங்கும் எழுகிறது. உண்மையில் இப்படிக் கேட்பதில் இருக்கிறது வீரம்.


மனசாட்சி வீரம்


இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், இன்றைய நவீன உலகில் வீரத்திற்கான வரையறை முற்றிலும் மாறுகிறது. எதேச்சதிகார அரசுகளின் அநீதியான போர்களை நிராகரிப்பதும்,  படைகளில் சேர மறுப்பதும் இன்றைய காலத்தின் மகத் துணிச்சலான செயலாகின்றன. குறிப்பிட்ட வயதில் கட்டாய ராணுவ சேவை இன்றும் பல நாடுகளில் உயிரோடு இருக்கிறது. அந்த நாடுகளில், ராணுவத்தில் சேரவும் பிற நாட்டு மக்களைக் கொல்லவும் மனச்சான்றின்படி மறுப்பது சமகாலத்தின் பேரறம். இத்தகைய அறத்துணிவிற்காக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருப்போர் பலர். அவர்கள் வெளிப்படுத்தியது வீரம். அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி சிறை வாயில்கள் முன் கூடி ஆர்ப்பாட்டம் செய்து குரலெழுப்புவதும் இன்றைய உண்மையான அற வீரம்.


உண்மையே ஒரு வீரமாய்


வீரம் பற்றிய புகழ்பெற்ற ஒரு குட்டிக்கதை உண்டு. இரு பெரும் நாடுகளின் அரசுத் தலைவர்கள் விருந்தினர்களாகச் சந்திக்கிறார்கள். எந்த நாட்டின் படையினருக்கு உண்மையிலேயே வீரம் அதிகமாக இருக்கிறது என்று அவர்களுக்குள் விவாதம் ஏற்படுகிறது. ஒருவர் தன் படையாள் ஒருவரை வரவழைத்து மாளிகையின் உச்சியிலிருந்து தரையில் குதிக்கச் சொல்கிறார். அவரும் அதே போல் குதித்து மடிகிறார். “பார்த்தீரா என் ஆளின் வீரத்தை” என்று அந்தத் தலைவர் கேட்கிறார். இந்தத் தலைவர் தன் படையாளை வரவழைக்கிறார். அதே போல் மாளிகை உச்சியிலிருந்து குதிக்கச் சொல்கிறார். அவரோ, “தலைவரே, எதற்காக அப்படி மேலே சென்று குதிக்க வேண்டும்,” என்று கேட்கிறார். அவரைப் போகச் சொல்லிவிட்டு, “ஆணையிட்டது நான்தான் என்றாலும் என்னிடமே கேள்வி கேட்டாரே,  அதுவல்லவா வீரம்,” என்று இந்தத் தலைவர் கேட்கிறார். இந்தக் குறுங்கதையில் பெரும் செய்தி இருக்கிறதல்லவா?


ஆயுதங்கள் சத்தமிடும் போர்க்களங்களை விட, இன்று சித்தாந்த ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் கார்ப்பரேட்-அதிகார பீடங்கள் தொடுக்கும் போர்கள் மிக ஆபத்தானவை. இத்தகைய அதிகார பீடங்களுக்கு உவப்பில்லாத உண்மைகளை நெஞ்சுறுதியோடு உலகின் முன் உரக்கப் பேசுவதுதான் இன்றைக்கு வீரம். தடையாணைகளுக்குக் கட்டுப்படாமல் மறுநாளைய ஒரு போராட்டத்திற்காக நள்ளிரவில் தெருக்களில் சுவரொட்டிகளை ஒட்டுகிற எளிய தொண்டர்களிடம் இருக்கிறது வீரம்.


ஆளும் வர்க்கத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், அவர்களின் பணநாயகத்திற்கும், பதவி மற்றும் வருவாய் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாய்ப்புகளுக்கும் மசியாமல், எளிய மக்களுக்காகத் தொடர்ந்து பேசுவதும் எழுதுவதும் களமாடுவதும் சமகாலத்தின் ஆகச்சிறந்த போர்க்குணமாகும். கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்க்கும் வீரம்.


ஆம், பிறரை ஒடுக்குவதிலோ, வன்முறையை ஏவுவதிலோ, அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு ஆயுதம் ஏந்துவதிலோ முழு வீரம் இல்லை.  தனக்காக அல்லாமல் பிறருக்காக, ஒடுக்கப்பட்டோருக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலைக்காக, அறத்தின் பக்கம் நின்று சமரசமின்றிப் போராடுவதே முழுமையான வீரம். தசைகளின் வலிமையிலிருந்து தொடங்கி, இன்று மனசாட்சியின் குரலாகவும், அறத்தின் போர்க்குணமாகவும் பரிணமித்திருக்கிறது வீரம்.


[0]


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மதுரை புறநகர் மாவட்டக்குழு கோர்த்துள்ள இலக்கிய மலர்தொகுப்பில் எனது கட்டுரை.

Monday, 15 June 2026

அன்பின் வலிமையைப் பேசும் ‘ஹபீபி’

 


சினிமா பார்க்கப் போய், வாழ்க்கையைப் பார்க்கிற அனுபவம் மிக அரிதாகவே வாய்க்கும். ‘ஹபீபி’ (அன்பே) அந்த அனுபவத்தை வழங்குகிறது. 


சில ஆண்டுகளுக்கு முன் சென்னை, கவிக்கோ அரங்கில் ‘தமிழ்த் திரைப்படங்களில் இஸ்லாமியர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. ஒரு படத்தில் ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் இடம் பெறுமானால் கதாநாயகனுக்கு ஒரு நல்ல நண்பனாகவோ,  தெருவோரம் கறிக்கடை வைத்திருப்பவனாகவோ வருவான். அல்லது ஏதாவது பயங்கரவாதக் கும்பலில் சேர்ந்து சூழ்ச்சிகளில் இறங்குவான். நாயகனுக்கு தேசபக்த வீரன் என்ற பிம்பத்தைக் கட்டுவதற்காக இவன் கையில் வெடிகுண்டு தரப்பட்டிருக்கும்.  பெண் பாத்திரம் என்றாலோ நாயகியின் நான்கைந்து தோழிகளில் ஒருத்தியாகக் கறுப்பு அங்கியோடு வந்து போவாள்.



இஸ்லாமிய மக்களின் உண்மை வாழ்க்கை நிலையைத் துளியளவும் தொடாத அந்த வகையறாக்களிலிருந்து மாறுபட்டு, ஒரு குடும்பத்தின் வழியாக இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்விடத்துக்கு இட்டுச் செல்கிறார் இயக்குநர் மீரா கதிரவன். ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ ஆகியவற்றுக்குப் பிறகு அவர் உருவாக்கியுள்ள இந்தப் படம் அவர் பெயர் சொல்வதாக மட்டுமல்லாமல், உலக மேடையில் தமிழ் சினிமாவின் பெயர் சொல்வதாகவும் வந்துள்ளது. 


ஒட்டுமொத்த நாட்டிலிருந்து ஊரைக் காட்டுவது ஒரு கதை உத்தி. இது ஒற்றை ஊரிலிருந்து நாட்டைக் காட்டுகிறது.  கடையநல்லூர் என்பது கதை மனிதர்கள் நடமாடுவதற்கான ஓர் ஊர். உண்மையில் அதன் தெருக்களிலும் வீடுகளிலும் தெரிவது நாட்டின் விரிந்த சமுதாயம். ஊர் மக்கள் பேசுவது நம்மைத் தாமிரபரணியில் நனைக்கும் தமிழ். ஆயினும் அது பொதுமொழியாக  ஒலிக்கிறது!


கைத்தறி நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டது அந்தக் குடும்பம். தொழிலிலும் சந்தையிலும் முதலாளிய ஆக்கிரமிப்பின் நவீன வரவுகளால் நசிவைச் சந்திக்கிறது. மற்றவர்கள் வேறு வேறு தொழில்களுக்கும் வெளிநாட்டு வேலைகளுக்குமாக மாறிவிட, ஒரு குடும்பத்தின் மூத்தவர் முகமது யூசுஃப், கைத்தறியைக் கைவிட மனமின்றி அதிலேயே உழைத்துக்கொண்டிருக்கிறார். அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் உறவுக் கசப்புகளுக்கும் சில கட்டாய முடிவுகளுக்கும் இட்டுச்செல்கின்றன.


யூசுஃப்பின் தம்பி ஒரு வளைகுடா நாட்டிற்குப் பயணமாகிறான். அங்கிருந்து பணம் வரத் தொடங்குகிறது. குடும்ப நிலையும் வீட்டின் தோற்றமும் மாறுகின்றன. இதே போல் வெளிநாடு சென்ற பலரிடமிருந்தும் பாய்கிற பணத்தின் புழக்கத்தால், புதிய தேவைகளுக்கான கடைகளும் பிற கட்டடங்களுமாக  ஊரின் மேனியும் பளபளப்பாகிறது.


வெளிநாட்டுப் பண வருவாய் புதிய வாழ்க்கையைக் கொடுத்ததா, இல்லையேல் பழைய வாழ்க்கையையும் பறித்துக்கொண்டதா? இதைத்தான் அந்த முகங்கள் கதையாகப் பேசுகின்றன. மிகைக் கொண்டாட்டமோ, வறட்டுத் துக்கமோ இல்லாமல் ஊர்ப்புறத்து வாய்க்கால் நீரோட்டமாய் சீராகச் சொல்லியிருப்பது சிறப்பு.


வெளிநாட்டுப் பயணம் நம்பிக்கையளித்தாலும், புறப்பாடு மகிழ்ச்சிகரமாக இல்லை. அத்தனை பேர் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தில், மனைவியிடம் அந்தரங்கமாகப் பேசி ஒரு முத்தத்தோடு விடைபெற முடியாமல் போகிற சூழல் பிரிவுத் துயரினும் பெரியதோர் ஏக்கமே.




இவர்களுக்கு அடுத்த தலைமுறையாய் வருகிறவர்கள் அபு என்கிற அபுதாஹிர், நிலா என்கிற நிலோஃபர். இருவருக்கும் பள்ளிப் பருவத்திலேயே காதல் அரும்புகிறது. இவன் எளிய கைத்தறிக் குடும்பத்தையும், அவள்,  வசதிகளைச் சேர்த்துக்கொண்ட “சொசைட்டி” குடும்பத்தையும் சேர்ந்தவர்கள். ஒரே மார்க்கத்தினர்தான் என்றாலும் தடுப்புச் சுவராக நிற்கிறது வர்க்க வேறுபாடு.


காதல் விதியின்படி, காதலியின் கடைக்கண் பார்வைக்காகக் காதலன் எந்த எல்லைக்கும்  போகத் துணிகிறான். வர்க்க வேறுபாடும் தன்னைத் தக்க வைத்துக்கொள்வதற்காக எந்த எல்லையிலும் நிற்கத் தயாராகிறது. சொசைட்டிக் குடும்பங்களின் ஆட்களிடம் அபு வசமாக மாட்டிக்கொள்வதுடன் இடைவேளை விடப்படுகிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பது அடுத்த காட்சியாக அல்லாமல்,  உச்சக் காட்சிக்கு முன் புளியவிளாருடன் வருகிறது. என்ன நடந்தது என்று தொட்டுக் காட்டுவது கூட திறமையாகக் கோர்க்கப்பட்டுள்ள திரைக்கதையைக் காட்டிக்கொடுப்பதாகிவிடும். 


தண்டிக்கப்படுகிற ஒருவனுக்குத் தாங்க முடியாத ஒரு தொகையைத் தண்டமாக விதிக்கிறது கட்டப் பஞ்சாயத்துக் கூட்டம். “தாங்காது” என்று சொல்லச் சொல்ல,  “தாங்கும்” என்று சொல்கிற வரையில் முதுகுத் தோல் கன்றிப்போகும் அளவுக்குப் புளியவிளாரால் அடிக்கத் தீர்ப்பளிக்கிறது. “தாங்கும், என் பிள்ளையை அடிக்காதீய” என்று தகப்பன் அழுது வேண்டுகிற இடத்தில் கண்கள் கலங்காமல் இருக்காது.


தொழுகையில் ஈடுபட்டிருக்கும்போதே மரணமடைகிறார் யூசுஃப்.  காக்குழி (தறியில் கால்களை இயக்குவதற்கான குழி) தகர்க்கப்பட்டதால் நொந்துபோனவரின் உடல் முழுக்குழிக்குள் இறக்கப்படுகிறது. அப்போது அங்கே ஓடிவரும் நண்பர் கதறுகிற இடம், இந்த மண்ணில் மத வேலி கடந்த நட்பு அடக்கமாகிவிடாமல் இருப்பதைக் காட்டுகிறது. இப்படிப் படம் நெடுகிலும் உறையவும் நெகிழவும் வைக்கிற சித்தரிப்புகள் ஏராளம். 


சடலத்தைத் தூக்கிச் செல்வதற்கு முன் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள், படம் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் தனது சமூகப் பழக்கத்துடனான தொடர்பை நினைவூட்டும்.


நிலோஃபரைப் பிரிய வேண்டியிருக்குமே என்று வளைகுடாப் பயணத்தை மறுத்து வந்த அபு இடைக்காலத்தில் அதற்கு ஒப்புக்கொண்டு புறப்படுகிறான். அவனுக்கு வயதாகிறது. பணம் சேர்ந்துவிட்டதால் சொசைட்டிக் குடும்பங்களுக்கு நிகராகிவிட்ட நிலையில், திருமணத்திற்குப் பெண் பார்க்கிறார்கள். “பொண்ணு என்ன முடிவெடுக்கிறாங்கிறது முக்கியம்லா,” என்று பர்வீன் தகப்பன் சொல்கிற இடம், இஸ்லாத்தில் பெண்ணின் கருத்துக்குத் தரப்படும் இடத்தைத் தெரிவிக்கிறது. அபு, பர்வீன் இருவருமாகச் சேர்ந்து சென்ற உணவகத்தில், அவன் சொன்னதற்கு மேல் அவள் தனக்குப் பிடித்த உணவைக் கொண்டுவரக் கூறுகிறாள். திடீர் நிதி நெருக்கடியால் திருமணமே சிக்கலாகிவிட குடும்பப் பேச்சுவார்த்தை முறிகிறது. அதன் பின் தன்னைச் சந்திக்க வருகிறவனிடம் அவள் கேட்கிறாள்: “நீ ஏன் அங்கே எனக்காகப் பேசலை?”  புதுயுகப் பெண்ணின் தன்னாளுமை வெளிப்பாடுகள் இவை.


பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள பாங்கு சிறப்பானது. இதற்கு முரணான நடைமுறை நிகழ்வு ஒன்றும் இருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறபோது, வார்த்தைகள் தடித்துவிட வீட்டுப் பெண்கள் முன்னால் வருகிறார்கள். அவர்களைத் தடுக்கிற ஆண்கள் சொல்கிறார்கள்: “நாங்க பெரியவங்க பேசிக்கிட்டிருக்கோம்லா? பொம்பளைக எதுக்கு வாரீக?” பெண்களைப் பெரியோராய்க் கருதாத, எல்லாச் சமூகங்களிலும் காணக்கூடிய பாலினப் பாகுபாடு இங்கேயும் ஊறிப்போயிருப்பது காட்சிப்படுகிறது.


முந்தைய ஒரு கட்டத்தில் ஊரிலிருந்து வருகிற தம்பி ஒவ்வொருவரையும் உறவு சொல்லி அழைத்து அவர்களுக்காக வாங்கிவந்த பரிசுப் பொருள்களை வழங்குகிறான். பிந்தைய ஒரு கட்டத்தில் அவனுடைய மனைவி அபுவிடம், “உன் நெருக்கடியை சமாளிக்க ஊர்ல யார் யார்ட்டயோ பணம் கேட்டியே, இந்த சாச்சிகிட்ட  கேக்கணும்னு தோணலையில்ல,” என்று கேட்டு நகைகளை எடுத்து வைக்கிறாள். மொத்தக் குடும்ப உறவுகளும் பாசத்தின் வாசத்தில் உரிமையோடு உறவாடும் இத்தகைய கட்டங்கள் மனதில் ஈரமாகக் குடியேறுகின்றன.


இந்த மக்கள் பற்றிய செய்தியை மற்றவர்களுக்குத் தருவதோடு, “நாலு சுவருக்குள்ள வாழுறது மட்டும் வாழ்க்கையில்ல” என்று சொல்வதில் இவர்களுக்கும் ஒரு செய்தி இருக்கிறது.



கதையையும் கருத்தையும் கலை வடிவாகச் செதுக்கித் தருவதில் இயக்குநர் தலைமையிலான குழுவினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஊரை ஊராகக் காட்டுகிறது மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு. பாடல் வரிகளை ஏந்தித்தருகிறது சாம் சிஎஸ் இசை. நாகூர் ஹனிஃபா குரலை மீளுருவாக்கமாக ஒலிக்கிற ஏஐ தொழில்நுட்பம் கூடுதல் விருந்து.


வெகுமக்கள் ரசனையை மதித்து, அதேவேளையில் கொச்சைப்படுத்திவிடாமல்   உருவாக்கியிருப்பது சமூக அக்கறையுடனான படைப்பு நேர்மை. அபு தாஹிரைப் புதுமுக நடிகர் ஈஷா உள்வாங்கியிருப்பது தெரிகிறது. யூசுஃப் பாத்திரத்தில் கஸ்தூரி ராஜா முத்திரை பதித்திருக்கிறார். நிலோஃபராக மாளவிகா, பர்வீனாக தனஸ்ரீ சுதாகரன், சாச்சி சாலிஹாவாக அனுஸ்ரேயா ராஜன் உள்பட எல்லோருமே உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 


கதையின் கால ஓட்டத்திற்கேற்ப கலைஞர்கள், குறிப்பாக நாயக நடிகர்,  உடல் தோற்றத்திலும் மாற்றத்தைக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் செல்லும் கார் பதிவு எண், கையால் கடிதம் எழுதி நல விசாரிப்பு, கேசட் ஒலிப்பதிவில் தகவல் பகிர்வு, நவீன ஆண்டிராய்டு கைப்பேசித் தொடர்பு என அரங்கப் பொருள்களும் அந்த ஓட்டத்தில் இணைகின்றன. 


சில இடங்களில் நீளத்தை நறுக்கி “நறுக்” என்றாக்கியிருக்கலாம், ஆங்காங்கே நடிகர்கள் நிற்பதிலும், வசனங்களை நிறுத்திப் பேசுவதிலும் நாடகமேடைத் தன்மை தெரிவதைத் தவிர்த்திருக்கலாம். ஆயினும்,  ஒட்டுமொத்தத்தில், வாழ்க்கை சார்ந்த, புதிய தோட்டத்தில் குரான் வரிகளைப் பாடுவது, பெண்களின் தனித் தொழுகை என பல்வேறு  நடைமுறைகளைக் கோர்த்திருக்கிற  செறிவான ஆக்கமே.


இதற்கெல்லாம் வலுவான தளமாக கதை, திரைக்கதை, உரையாடலை உயிரோட்டத்துடன் படைத்திருக்கிறார், தயாரிப்புக் குழுவிலும் ஒருவரான வி.எஸ். முஹம்மத் அமீன். இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிப்பதற்குமான இயக்கங்களில் முன்னரங்கில் நிற்கிற இவரது திரையரங்க வருகை கவனிக்கத்தக்கது.


நம் ஊரில், பக்கத்துத் தெருவில், அண்டை வீட்டில் இருக்கிறவர்கள்தான். ஆனால் இவர்களுடைய வாழ்க்கை நிலை பலருக்கும் தெரியாது. அதைத் தெரிய வைக்கிறது, நம்மவர்கள் என்று தெளியவும் வைக்கிறது படம். இப்படி வாழ்கிறவர்களுடனான தோழமையின் வேரில் அமிலம் ஊற்ற முயல்கிறவர்கள் பற்றி, அப்படிப்பட்ட காட்சியோ பேச்சோ ஏதுமின்றியே எச்சரிக்கையோடும் இருக்கச் செய்கிறது ‘ஹபீபி’.


[0]


‘தீக்கதிர்’ ஜூன் 15 இதழில் எனது கட்டுரை


Saturday, 6 June 2026

‘கரப்பான்’ மக்கள் கட்சிகள் : உலக மேடைக் காட்சிகள்

வீட்டின் சமையலறையில், படுக்கையறையில், குளியலறையில் ஓடிப் பதுங்கும் கரப்பான்களைக் கண்டவுடன் பலருக்கு ஒருவித அச்சமும் அருவருப்பும் ஏற்படும். உடனே, தொலைக்காட்சி விளம்பரப் படத்தில் வரும் பெண் செய்வது போல “ஹிட்” மருந்தடித்துவிட்டு நிம்மதியாய்ச் சாயாதவர்கள் எத்தனை பேர்?


அந்த அடர் செம்பழுப்பு நிறப் பூச்சியினம் 15 கோடி ஆண்டுகளாகவும் அதன் மூதாதையினத்திலிருந்து கணக்கிட்டால் 32 கோடி ஆண்டுகளாகவும் பூமியில் தாக்குப்பிடித்து வாழ்கின்றது. பெரும் இயற்கைச் சீற்றங்களாலேயே எதுவும் செய்ய முடியாத அந்த இனத்தை வெறும் ‘ஸ்பிரே’ பூச்சிக்கொல்லியால் ஒழித்துவிட முடியுமா என்ன?

கரப்பான்கள் தீங்கு ஏற்படுத்தக்கூடிய பிற பூச்சிகளையும், ‘வேக்குவம் கிளீனர்” கண்களுக்குத் தப்பித்துத் தரையில் பரவியிருக்கும் கெட்டுப்போன உணவுத் துகள்களையும் உட்கொள்கின்றன. அதன் மூலம் வீட்டுக்கு உள்ளே நன்மை செய்கின்றன. பறவைகளுக்கும் பல்லிக ளுக்கும் தவளைகளுக்கும் கரப்பான்கள் ஊட்ட உணவாகின்றன. அதன் மூலம் வீட்டுக்கு வெளியே இயற்கை உணவுச் சங்கிலி அறுபடாமல் பங்காற்றுகின்றன.

இதெல்லாம் தெரிந்திருந்தால் இந்திய தலைமை நீதிபதி, “வேலையில்லாமல் கரப்பான் பூச்சிகளைப் போல அலையும் இளைஞர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்காததால் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களாகவும் மாறி எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்” என்று சொல்லியிருக்கமாட்டார்தான். அவர்களை ஒட்டுண்ணிகளோடும் ஒப்பிட்டவர், எதிர்க் குரல்கள் குறித்து வெறுப்பும் அசூயையும் பரப்புவோர்தான் மெய்யான ஒட்டுண்ணிகள் என்றும் புரிந்துகொண்டிருப்பார்தான்.

ஆயினும் அவர் தேசத்திற்கு ஒரு நன்மையே செய்தார். மாற்றங்களின் ஊற்று தாங்களே என்றறியாமல் ஒதுங்கியிருந்த நவீனத் தலைமுறைகளை எழ வைத்துவிட்டாரே!

அதுவே அடையாளம்!

“ஆம், நாங்கள் கரப்பான்கள்தான்,” என்று, அமெரிக்காவில் இருந்து அபிஜித் தீப்கே சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டார். அது பெருங்காற்றுப் போல பரவி, இந்தத் தலைமுறையினர் தங்களைக் கரப்பான்களாகத் தயங்காமல் அடை யாளப்படுத்துகிறார்கள். வாய்ப்புப் பாதைகளை அடைத்து, மதவாத–சாதியப் போதையேற்றி, கார்ப்பரேட் பீடாதிபதிகளுக்குத் தொண்டாற்றுகிறவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்.

“கரப்பான் மக்கள் கட்சி” (சிஜேபி) என்ற இயக்கம் இணையவழி அரசியல் நையாண்டிக் குழுவாக உருவானது. சில நாட்களிலேயே பாஜக தளத்தை விடப் பல மடங்கு ஆதரவைப் பெற்றது. அந்தக் குழு அரசியல் நையாண்டிக்கலையின் புதிய பரிணாமங்களை அறிமுகப்படுத்தியது. சமூக ஊடகங்களில் “ரீல்” துணுக்குகள் வெள்ளமாய்ப் பாய்கின்றன!

சிரிக்க வைப்பதோடு, ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் மனுவில் லட்சக்கணக்கானோரின் கையெழுத்துகளைத் திரட்டிய “சீரியஸ்” பணியையும் மேற்கொண்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரைச் சேர்ந்தவரான அபிஜித் தீப்கே அறிவித்தது போல இது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி அல்ல. இது சுரண்டலுக்கும் கூட்டுக் களவு முதலாளியத்திற்கு எதிரான இளைஞர் களின் சீற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு டிஜிட்டல் தளமே, மக்கள் மன்றமே என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அதற்கு எதிர்வினையாக சிஜேபி இணையத் தளத்தையும், அதன் எக்ஸ் வலைத்தள கணக்கையும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69(ஏ) பிரிவின் கீழ் முடக்கியது. இந்த இணையப் பக்கத்தின் உள்ளடக்கங்கள் நாட்டின் பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக உளவுத்துறை அளித்த பரிந்து ரையின் அடிப்படையில் அமைச்சகத்தின் உயர்மட்டக் குழு ஆய்வு செய்து முடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்படி மின்னியல் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிஜேபி பொதுக் களத்திற்கு வந்துவிட்டது! அதன் இணையத்தளத்தை முடக்கியது ஏன் என்று இப்போது உச்சநீதிமன்றமே அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது!

தலைநகரில் போராட்டம்

இத்தகைய பின்னணிகளோடுதான், சனிக்கிழமையன்று (ஜூன் 6) தலைநகர் தில்லியில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை சிஜேபி அறிவித்திருக்கிறது. அமைச்சர் உடனடியாகப் பதவி விலகுதல், தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், தொடர்புடைய தேர்வு முகமை மற்றும் அமைச்சக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தல், சில அதிகாரிகள் இடமாற்றம் போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் ஏற்க இயலாதவை என்ப தால் முழு விசாரணை நடத்தப்படுதல், மாணவர்களின் தற்கொலைகளுக்குப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு நீதியும் நிதியும் கிடைக்கச் செய்தல், இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

இதற்காகவே அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு வருகிற அபிஜித்தை வரவேற்பதிலும் பேரணியிலும் பங்கேற்க லட்சக் கணக்கானோர் பதிவு செய்திருக்கிறார்கள். பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்குமே கூட இடையூறு ஏற்படக்கூடாது என்று அறிவித்துள்ள அவர், விமான நிலையத்துக்கு யாரும் வர வேண்டாம் என்றும் நேரடியாகப் போராட்டக் களத்துக்கு வருமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தில்லியில் வந்து இறங்கியதும் நேரடியாக உரிய காவல்நிலையம் சென்று பேரணிக்கு அனுமதி கோரும் கடிதத்தை அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக் கிறார். தில்லியில் கால் வைக்கிறபோதே தன்னைக் காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்றும், ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுவது உறுதி என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே, இந்தியாவில் சிஜேபி பணிகளை ஒருங்கிணைப்பதற்கென மூன்று புதிய செய்தித்தொடர்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். சௌரவ் தாஸ் (புலனாய்வுப் பத்திரிகையாளர்), விஜேதா தஹியா (எழுத்தாளர், அரசியல் ஆய்வா ளர்), அஷுதோஷ் ரங்கா (மேலாண்மை ஆலோசகர்) ஆகியோரே அவர்கள். அடுத்தடுத்த நிகழ்வுகளை நாடே எதிர்நோக்கி யிருக்கிறது.

நகைப்பின் வலிமை

சும்மா சிரிக்க வைக்கிற சித்தரிப்புகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா என்ற கேள்வியும் விவாதங்களில் ஒலிக்கிறது. அரசியல் களத்தில் எப்போதுமே நையாண்டிக் கலைக்கு ஒரு செல்வாக்கு உண்டு. நம் ஊரின் தெருக் கூத்துகளில் கோமாளிகள் ஊரின் பெரிய பண்ணையார்களைப் போட்டு வாங்கு வார்கள்! அதே வசனங்களை நாயக நடிகர்கள் பேசினால் கலவரமாகிவிடும்!

அதிகாரத்தின் மீதான கசப்பையும், சமூகச் சிக்கல்கள் மீதான வெறுப்பையும், அங்கத நடையில் எதிர்கொள்ளும் உத்தி உலகத்திற்குப் புதியதல்ல.

மரித்தோர் கட்சி:

ஆம், செத்துப் போனவர்களின் கட்சி (பார்ட்டியா மியோட்டிர்விஹ்) என்றே ஒரு அமைப்பு ரஷ்ய நாட்டில் உருவானது! மாற்றுக் கருத்து கள் அடக்கப்படுவதை எதிர்த்து 2017இல் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. மாக்சிம் எவ்ஸ்திரோப்பொவ் என்பவர், “புடின் ஆட்சியில் உயிரோடு இருப்பவர்கள் பேச முடிவதில்லை. நாங்கள் எங்களை இறந்து போனவர்களாக அறிவித்துக்கொள்கி றோம்,” என்று பதிவிட்டார்.

இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மண்டையோடு முகமூடிகளை அணிந்துகொண்டு, மருத்துவமனைகளின் பிணவறைகள், இடுகாடுகள் முன்பாக நிற்பார்கள். போர் எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தியிருப்பார்கள். இத்தகைய செயல்பாடுகள் மக்கள் கவனத்தை ஈர்த்தன.

புடின் அரசு நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளா மல் தடை விதித்தது. ஏவ்ஸ்ட்ரோப்போவ் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அவர் வெளிநாட்டுக்குத் தப்பியோட வேண்டியதாயிற்று.

கட்சி என்றே ஒரு கட்சி!


ஜெர்மனி நாடு “கட்சி” (தி பார்ட்டேய்) என்ற சுருக்க மான பெயரிலேயே அடையாளம்பெற்ற ஓர் இயக்கத்தைக் கண்டது. இது தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவும் செய்துகொண்டது.

மற்ற பெரிய கட்சிகள் தங்களது சமூகப் பொறுப்புகளாக “உழைப்பு, சட்டத்தின் ஆட்சி” என்றெல் லாம் மாமூலாக அறிவித்துக்கொண்டு நடைமுறையில் பணக்காரர்களுக்குத்தான் தொண்டாற்றுகின்றன. அதை அம்பலப்படுத்தும் வகையில், “உழைப்பு, சட்டத்தின் ஆட்சி, விலங்கு பாதுகாப்பு, மேட்டிமைவாதிகளின் முன்னேற்றம் மற்றும் அடிமட்ட ஜனநாயக முன்முயற்சிக்கான கட்சி” என்று நீண்ட பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரச் சீர்குலைவுகளால் வெறுத்துப் போயிருக்கும் மக்கள் இவர்களை ஆதரிப்பதால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இக்க ட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன!

குப்பைத் தொட்டி கட்சி:

பிரிட்டன் தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிடுபவர் ஜொனாதன் ஹார்வி. அவர் தொடங்கிய கட்சியின் பெயர் ‘கவுண்ட் பின்ஃபேஸ் பார்ட்டி’ (பிரபுத்துவக் குப்பைத்தொட்டி முகக் கட்சி). அரசியல் குப்பைகளை அகற்ற வேண்டியுள்ளது என்ற பொருள்படும்படி ஜொனாதன் ஹார்வி தன் தலையில் ஒரு குப்பைத் தொட்டியைக் கவிழ்த்துக்கொண்டுதான் பரப்புரை மேடைகளுக்கு வருவார்.

பிரிட்டனின் மாறி மாறி ஆட்சியில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளின் மீது வெறுப்பில் இருக்கும் மக்கள் இவருக்கு ஆயிரக்கணக்கில் வாக்களிக்கிறார்கள்.

தரவுத் தளங்களில் தேடினால் இப்படி மேலும் பல நையாண்டிக்கட்சிகள் பற்றித் தெரிய வரக்கூடும். அவை பெரும்பாலும் தனிப்பட்ட சிலரது நகைச்சுவை வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

இந்தியாவின் கரப்பான் மக்கள் கட்சி அவற்றிலிருந்து மாறுபடுகிறது. சிஜேபி–யின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது, ஒன்றிய பாஜக அரசு டிஜிட்டல் நையாண்டிகளைக் கண்டு மிரண்டு போயிருப்பதைக் காட்டுகிறது. அவ்வாறு மிரள வைத்ததில் செம்பழுப்புப் பூச்சிகளுக்கு ஓர் அரசியல் மதிப்பு உருவாகி யிருக்கிறது.

[0]

தீக்கதிர்ஜூன் 6 - 2026 இதழில் எனது கட்டுரை