சினிமா பார்க்கப் போய், வாழ்க்கையைப் பார்க்கிற அனுபவம் மிக அரிதாகவே வாய்க்கும். ‘ஹபீபி’ (அன்பே) அந்த அனுபவத்தை வழங்குகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை, கவிக்கோ அரங்கில் ‘தமிழ்த் திரைப்படங்களில் இஸ்லாமியர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. ஒரு படத்தில் ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் இடம் பெறுமானால் கதாநாயகனுக்கு ஒரு நல்ல நண்பனாகவோ, தெருவோரம் கறிக்கடை வைத்திருப்பவனாகவோ வருவான். அல்லது ஏதாவது பயங்கரவாதக் கும்பலில் சேர்ந்து சூழ்ச்சிகளில் இறங்குவான். நாயகனுக்கு தேசபக்த வீரன் என்ற பிம்பத்தைக் கட்டுவதற்காக இவன் கையில் வெடிகுண்டு தரப்பட்டிருக்கும். பெண் பாத்திரம் என்றாலோ நாயகியின் நான்கைந்து தோழிகளில் ஒருத்தியாகக் கறுப்பு அங்கியோடு வந்து போவாள்.
இஸ்லாமிய மக்களின் உண்மை வாழ்க்கை நிலையைத் துளியளவும் தொடாத அந்த வகையறாக்களிலிருந்து மாறுபட்டு, ஒரு குடும்பத்தின் வழியாக இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்விடத்துக்கு இட்டுச் செல்கிறார் இயக்குநர் மீரா கதிரவன். ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ ஆகியவற்றுக்குப் பிறகு அவர் உருவாக்கியுள்ள இந்தப் படம் அவர் பெயர் சொல்வதாக மட்டுமல்லாமல், உலக மேடையில் தமிழ் சினிமாவின் பெயர் சொல்வதாகவும் வந்துள்ளது.
ஒட்டுமொத்த நாட்டிலிருந்து ஊரைக் காட்டுவது ஒரு கதை உத்தி. இது ஒற்றை ஊரிலிருந்து நாட்டைக் காட்டுகிறது. கடையநல்லூர் என்பது கதை மனிதர்கள் நடமாடுவதற்கான ஓர் ஊர். உண்மையில் அதன் தெருக்களிலும் வீடுகளிலும் தெரிவது நாட்டின் விரிந்த சமுதாயம். ஊர் மக்கள் பேசுவது நம்மைத் தாமிரபரணியில் நனைக்கும் தமிழ். ஆயினும் அது பொதுமொழியாக ஒலிக்கிறது!
கைத்தறி நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டது அந்தக் குடும்பம். தொழிலிலும் சந்தையிலும் முதலாளிய ஆக்கிரமிப்பின் நவீன வரவுகளால் நசிவைச் சந்திக்கிறது. மற்றவர்கள் வேறு வேறு தொழில்களுக்கும் வெளிநாட்டு வேலைகளுக்குமாக மாறிவிட, ஒரு குடும்பத்தின் மூத்தவர் முகமது யூசுஃப், கைத்தறியைக் கைவிட மனமின்றி அதிலேயே உழைத்துக்கொண்டிருக்கிறார். அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் உறவுக் கசப்புகளுக்கும் சில கட்டாய முடிவுகளுக்கும் இட்டுச்செல்கின்றன.
யூசுஃப்பின் தம்பி ஒரு வளைகுடா நாட்டிற்குப் பயணமாகிறான். அங்கிருந்து பணம் வரத் தொடங்குகிறது. குடும்ப நிலையும் வீட்டின் தோற்றமும் மாறுகின்றன. இதே போல் வெளிநாடு சென்ற பலரிடமிருந்தும் பாய்கிற பணத்தின் புழக்கத்தால், புதிய தேவைகளுக்கான கடைகளும் பிற கட்டடங்களுமாக ஊரின் மேனியும் பளபளப்பாகிறது.
வெளிநாட்டுப் பண வருவாய் புதிய வாழ்க்கையைக் கொடுத்ததா, இல்லையேல் பழைய வாழ்க்கையையும் பறித்துக்கொண்டதா? இதைத்தான் அந்த முகங்கள் கதையாகப் பேசுகின்றன. மிகைக் கொண்டாட்டமோ, வறட்டுத் துக்கமோ இல்லாமல் ஊர்ப்புறத்து வாய்க்கால் நீரோட்டமாய் சீராகச் சொல்லியிருப்பது சிறப்பு.
வெளிநாட்டுப் பயணம் நம்பிக்கையளித்தாலும், புறப்பாடு மகிழ்ச்சிகரமாக இல்லை. அத்தனை பேர் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தில், மனைவியிடம் அந்தரங்கமாகப் பேசி ஒரு முத்தத்தோடு விடைபெற முடியாமல் போகிற சூழல் பிரிவுத் துயரினும் பெரியதோர் ஏக்கமே.
இவர்களுக்கு அடுத்த தலைமுறையாய் வருகிறவர்கள் அபு என்கிற அபுதாஹிர், நிலா என்கிற நிலோஃபர். இருவருக்கும் பள்ளிப் பருவத்திலேயே காதல் அரும்புகிறது. இவன் எளிய கைத்தறிக் குடும்பத்தையும், அவள், வசதிகளைச் சேர்த்துக்கொண்ட “சொசைட்டி” குடும்பத்தையும் சேர்ந்தவர்கள். ஒரே மார்க்கத்தினர்தான் என்றாலும் தடுப்புச் சுவராக நிற்கிறது வர்க்க வேறுபாடு.
காதல் விதியின்படி, காதலியின் கடைக்கண் பார்வைக்காகக் காதலன் எந்த எல்லைக்கும் போகத் துணிகிறான். வர்க்க வேறுபாடும் தன்னைத் தக்க வைத்துக்கொள்வதற்காக எந்த எல்லையிலும் நிற்கத் தயாராகிறது. சொசைட்டிக் குடும்பங்களின் ஆட்களிடம் அபு வசமாக மாட்டிக்கொள்வதுடன் இடைவேளை விடப்படுகிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பது அடுத்த காட்சியாக அல்லாமல், உச்சக் காட்சிக்கு முன் புளியவிளாருடன் வருகிறது. என்ன நடந்தது என்று தொட்டுக் காட்டுவது கூட திறமையாகக் கோர்க்கப்பட்டுள்ள திரைக்கதையைக் காட்டிக்கொடுப்பதாகிவிடும்.
தண்டிக்கப்படுகிற ஒருவனுக்குத் தாங்க முடியாத ஒரு தொகையைத் தண்டமாக விதிக்கிறது கட்டப் பஞ்சாயத்துக் கூட்டம். “தாங்காது” என்று சொல்லச் சொல்ல, “தாங்கும்” என்று சொல்கிற வரையில் முதுகுத் தோல் கன்றிப்போகும் அளவுக்குப் புளியவிளாரால் அடிக்கத் தீர்ப்பளிக்கிறது. “தாங்கும், என் பிள்ளையை அடிக்காதீய” என்று தகப்பன் அழுது வேண்டுகிற இடத்தில் கண்கள் கலங்காமல் இருக்காது.
தொழுகையில் ஈடுபட்டிருக்கும்போதே மரணமடைகிறார் யூசுஃப். காக்குழி (தறியில் கால்களை இயக்குவதற்கான குழி) தகர்க்கப்பட்டதால் நொந்துபோனவரின் உடல் முழுக்குழிக்குள் இறக்கப்படுகிறது. அப்போது அங்கே ஓடிவரும் நண்பர் கதறுகிற இடம், இந்த மண்ணில் மத வேலி கடந்த நட்பு அடக்கமாகிவிடாமல் இருப்பதைக் காட்டுகிறது. இப்படிப் படம் நெடுகிலும் உறையவும் நெகிழவும் வைக்கிற சித்தரிப்புகள் ஏராளம்.
சடலத்தைத் தூக்கிச் செல்வதற்கு முன் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள், படம் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் தனது சமூகப் பழக்கத்துடனான தொடர்பை நினைவூட்டும்.
நிலோஃபரைப் பிரிய வேண்டியிருக்குமே என்று வளைகுடாப் பயணத்தை மறுத்து வந்த அபு இடைக்காலத்தில் அதற்கு ஒப்புக்கொண்டு புறப்படுகிறான். அவனுக்கு வயதாகிறது. பணம் சேர்ந்துவிட்டதால் சொசைட்டிக் குடும்பங்களுக்கு நிகராகிவிட்ட நிலையில், திருமணத்திற்குப் பெண் பார்க்கிறார்கள். “பொண்ணு என்ன முடிவெடுக்கிறாங்கிறது முக்கியம்லா,” என்று பர்வீன் தகப்பன் சொல்கிற இடம், இஸ்லாத்தில் பெண்ணின் கருத்துக்குத் தரப்படும் இடத்தைத் தெரிவிக்கிறது. அபு, பர்வீன் இருவருமாகச் சேர்ந்து சென்ற உணவகத்தில், அவன் சொன்னதற்கு மேல் அவள் தனக்குப் பிடித்த உணவைக் கொண்டுவரக் கூறுகிறாள். திடீர் நிதி நெருக்கடியால் திருமணமே சிக்கலாகிவிட குடும்பப் பேச்சுவார்த்தை முறிகிறது. அதன் பின் தன்னைச் சந்திக்க வருகிறவனிடம் அவள் கேட்கிறாள்: “நீ ஏன் அங்கே எனக்காகப் பேசலை?” புதுயுகப் பெண்ணின் தன்னாளுமை வெளிப்பாடுகள் இவை.
பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள பாங்கு சிறப்பானது. இதற்கு முரணான நடைமுறை நிகழ்வு ஒன்றும் இருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறபோது, வார்த்தைகள் தடித்துவிட வீட்டுப் பெண்கள் முன்னால் வருகிறார்கள். அவர்களைத் தடுக்கிற ஆண்கள் சொல்கிறார்கள்: “நாங்க பெரியவங்க பேசிக்கிட்டிருக்கோம்லா? பொம்பளைக எதுக்கு வாரீக?” பெண்களைப் பெரியோராய்க் கருதாத, எல்லாச் சமூகங்களிலும் காணக்கூடிய பாலினப் பாகுபாடு இங்கேயும் ஊறிப்போயிருப்பது காட்சிப்படுகிறது.
முந்தைய ஒரு கட்டத்தில் ஊரிலிருந்து வருகிற தம்பி ஒவ்வொருவரையும் உறவு சொல்லி அழைத்து அவர்களுக்காக வாங்கிவந்த பரிசுப் பொருள்களை வழங்குகிறான். பிந்தைய ஒரு கட்டத்தில் அவனுடைய மனைவி அபுவிடம், “உன் நெருக்கடியை சமாளிக்க ஊர்ல யார் யார்ட்டயோ பணம் கேட்டியே, இந்த சாச்சிகிட்ட கேக்கணும்னு தோணலையில்ல,” என்று கேட்டு நகைகளை எடுத்து வைக்கிறாள். மொத்தக் குடும்ப உறவுகளும் பாசத்தின் வாசத்தில் உரிமையோடு உறவாடும் இத்தகைய கட்டங்கள் மனதில் ஈரமாகக் குடியேறுகின்றன.
இந்த மக்கள் பற்றிய செய்தியை மற்றவர்களுக்குத் தருவதோடு, “நாலு சுவருக்குள்ள வாழுறது மட்டும் வாழ்க்கையில்ல” என்று சொல்வதில் இவர்களுக்கும் ஒரு செய்தி இருக்கிறது.
வெகுமக்கள் ரசனையை மதித்து, அதேவேளையில் கொச்சைப்படுத்திவிடாமல் உருவாக்கியிருப்பது சமூக அக்கறையுடனான படைப்பு நேர்மை. அபு தாஹிரைப் புதுமுக நடிகர் ஈஷா உள்வாங்கியிருப்பது தெரிகிறது. யூசுஃப் பாத்திரத்தில் கஸ்தூரி ராஜா முத்திரை பதித்திருக்கிறார். நிலோஃபராக மாளவிகா, பர்வீனாக தனஸ்ரீ சுதாகரன், சாச்சி சாலிஹாவாக அனுஸ்ரேயா ராஜன் உள்பட எல்லோருமே உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கதையின் கால ஓட்டத்திற்கேற்ப கலைஞர்கள், குறிப்பாக நாயக நடிகர், உடல் தோற்றத்திலும் மாற்றத்தைக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் செல்லும் கார் பதிவு எண், கையால் கடிதம் எழுதி நல விசாரிப்பு, கேசட் ஒலிப்பதிவில் தகவல் பகிர்வு, நவீன ஆண்டிராய்டு கைப்பேசித் தொடர்பு என அரங்கப் பொருள்களும் அந்த ஓட்டத்தில் இணைகின்றன.
சில இடங்களில் நீளத்தை நறுக்கி “நறுக்” என்றாக்கியிருக்கலாம், ஆங்காங்கே நடிகர்கள் நிற்பதிலும், வசனங்களை நிறுத்திப் பேசுவதிலும் நாடகமேடைத் தன்மை தெரிவதைத் தவிர்த்திருக்கலாம். ஆயினும், ஒட்டுமொத்தத்தில், வாழ்க்கை சார்ந்த, புதிய தோட்டத்தில் குரான் வரிகளைப் பாடுவது, பெண்களின் தனித் தொழுகை என பல்வேறு நடைமுறைகளைக் கோர்த்திருக்கிற செறிவான ஆக்கமே.
இதற்கெல்லாம் வலுவான தளமாக கதை, திரைக்கதை, உரையாடலை உயிரோட்டத்துடன் படைத்திருக்கிறார், தயாரிப்புக் குழுவிலும் ஒருவரான வி.எஸ். முஹம்மத் அமீன். இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிப்பதற்குமான இயக்கங்களில் முன்னரங்கில் நிற்கிற இவரது திரையரங்க வருகை கவனிக்கத்தக்கது.
நம் ஊரில், பக்கத்துத் தெருவில், அண்டை வீட்டில் இருக்கிறவர்கள்தான். ஆனால் இவர்களுடைய வாழ்க்கை நிலை பலருக்கும் தெரியாது. அதைத் தெரிய வைக்கிறது, நம்மவர்கள் என்று தெளியவும் வைக்கிறது படம். இப்படி வாழ்கிறவர்களுடனான தோழமையின் வேரில் அமிலம் ஊற்ற முயல்கிறவர்கள் பற்றி, அப்படிப்பட்ட காட்சியோ பேச்சோ ஏதுமின்றியே எச்சரிக்கையோடும் இருக்கச் செய்கிறது ‘ஹபீபி’.
[0]
‘தீக்கதிர்’ ஜூன் 15 இதழில் எனது கட்டுரை

No comments:
Post a Comment