முந்தியே வருவாய்
முதல் குடிமகளாய்
அ.குமரேசன்
நாட்டின் முதல் குடிமகன் என்றுதான் இது வரையில் இருந்து வந்திருக்கிறார்கள். முதல் குடிமகள் என இருந்ததில்லை. முதல் குடிமகனின் மனைவி என்ற முறையில் குடியரசுத் தலைவருடைய மனைவியை அவ்வாறு குறிப்பிடுகிற பழக்கம் இருந்து வருகிறது. நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அதிகாரப்பூர்வமாகவே முதல் குடிமகள் பொறுப்பேற்கிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிக் கட்சிகள் தமது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீலை அறிவித்ததன் மூலம், ஒரு பெண் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு விரியத் திறக்கப் பட்டிருக்கிறது கதவு.
வேட்பாளரைத் தேர்வு செய்வதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு என்றும், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரை வற்புறுத்தியதாகவும் ஊடக மகா மணிகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி உ.பி. தேர்தலில் மாயாவதிக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சி தனது முடிவை மாற்றிக் கொண்டதாகக் கூசாமல் சொன்னது. செய்தியாளர்களிடம் திரும்பத் திரும்ப அத்தகைய விருப்பம் எதுவும் மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கிடையாது என்று விளக்கிய பிறகும் அதையே சொல்லிக் கொண்டிருந்ததில் இந்த ஊடக மகா மணிகளுக்கு உள்நோக்கம் ஏதும் கிடையாதென சொல்லிவிட முடியாது. மார்க்சிஸ்ட் கட்சியினரைப் பதவியாசை உடையவர்களாக மக்கள் முன் சித்தரித்துக் காட்டுகிற நோக்கம்தான் அது.
ஜூன் 14 அன்று மாலை தலைவர்களின் கூட்டம் நடந்து கொண்டிருப்பதையும் அதில் யார் யாருடைய பெயர்கள் அடிபடுகின்றன என்பதையும் சில தொலைக்காட்சிகள் பரபரப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் பிரதிபா பெயர் முன்னுக்கு வந்துகொண்டிருப்பதாக ‘‘ஃபிளாஷ்’’ குறிப்புகள் வரத் தொடங்கின. அன்று மாலை அவரையே வேட்பாளராக அறிவிக்க அனைவரும் ஏகமனதாக ஒப்புக் கொண்டதாக சோனியா காந்தி அறிவித்தார். எல்லோரும் பிரதிபா ஷெகாவத் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். பரபரப்பு அரசியலில் அடிபடாத பெயர் என்பதால் யோசித்தவர்கள் கூட, ஒரு பெண் வேட்பாளர் என்ற புதுமையில் பூரிப்படைந்தனர்.
நாடாளுமன்றத்திற்குள்ளேயே 33 சதவீத பெண்கள் நுழைய விட மாட்டோம் என பலப்பல வழிகளில் தடுத்துக் கொண்டிருக்கும் கும்பல்களுக்கு, நாட்டின் மிக உயர்ந்த பதவிக்குப் பெண் வருவதை சகித்துக் கொள்ள முடியுமா? இதற்கும் பலப்பல வழிகளில் தடை தேடினர். பாஜக தனது கட்சியின் தலைவர்களில் ஒருவரான பைரோன் சிங் ஷெகாவத்தை ‘‘சுயேச்சை’’ வேட்பாளராக நிறுத்தினர். அவரும் தன்னை அவ்வாறே அறிவித்துக் கொண்டார். சொந்த மன அரிப்பு அடிப்படையில் அரசியல் நடத்துகிறவர்கள் காங்கிரஸ் - இடதுசாரி வேட்பாளராக யார் முன் மொழியப்பட்டாலும் அவரை எதிர்ப்பது என முடிவு செய்தனர். கௌரவமாக விடைபெறவேண்டிய அப்துல் கலாம் பெயரையும், அந்தப் பெயருக்கு நம் மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ள மதிப்பையும் தங்களது அரசியல் விளையாட்டுக்குப் பயன் படுத்த முயன்றனர். தொடக்கத்தில் ‘‘எல்லாரும் ஏற்றுக் கொண்டால்...’’ ‘‘நிச்சயமான நிலை ஏற்பட்டால்’’ என்றெல்லாம் ஒரு மாதிரியாக இழுத்து மனிதருக்கு கொஞ்சம் நப்பாசை இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்திய கலாம் பின்னர் நிலைமைகளைப் புரிந்துகொண்டவராக அரசியல் ஆட்டத்தில் பகடைக்காயாக விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.
இப்போது பிரதிபா ஷெகாவத்துக்கு எதுவும் தெரியாது என்பது போல் சித்தரிக்க முயல்கிறார்கள். அவர் அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக ஆதாரமற்ற செய்தி வெளியிடுகிறார்கள். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பிரதிபாவுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதாக இட்டுக்கட்டப்பட்ட புள்ளிவிவரங்களை வெளியிடுகிறார்கள்.
அரசமைப்பு சாசனத்தின் பாதுகாவலராகச் செயல்பட வேண்டிய பதவி என்பதை மறந்து, நாட்டின் பலகட்சி முறை அரசியல் கட்டமைப்புக்கு எதிராக, இரண்டு கட்சி முறை வேண்டும் என்று பேசிய அப்துல் கலாமுக்கு மக்களின் பேராதரவு இருப்பதாகவும், ஆர்எஸ்எஸ் ஆளாகிய பைரோன் சிங் ஷெகாவத்துக்கு கருத்துக் கணிப்பில் இரண்டாவது இடம் என்றும் கூறி ஒரு வித மூளைச்சலவைக் கைங்கர்யத்தில் ஈடுபடுகிறார்கள். அப்படியொரு கருத்துக் கணிப்பு உண்மையாகவே நடத்தப் பட்டதாக வைத்துக் கொண்டாலும், சமுதாயத்தின் ஊறிப்போன ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு அது என்பதைச் சொல்ல மறுக்கிறார்கள்.
குடியரசுத்தலைவர் பதவி என்பது எம்எல்ஏ, எம்பி போல மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதல்ல. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற பதவி அது. அவர்கள் தத்தம் கட்சிகளின் கொள்கைகள், முடிவுகள் அடிப்படையிலேயே வாக்களித்து வாக்களிப்பார்கள்.
மாறுபட்ட சாதிகள், மதங்கள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள் என உண்மையாகவே பன்முகத்தன்மை கொண்டது இந்தியா. இங்கு பல கட்சி ஆட்சி முறையும், தற்போதுள்ள குடியரசுத்தலைவர் தேர்தல் முறையும்தான் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உகந்தவை. இது பற்றிய எந்தச் சிந்தனையுமின்றி இன்றைய குடியரசுத்தலைவர் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய பிரச்சனைகளைக் கிளறுவது ஆபத்தானது.
ஒரு பெண் முதல் குடிமகளாக அமர்வது என்பதில், ஒரு பெண் முதல் முறையாக அந்தப் பொறுப்புக்கு வருகிறார் என்ற சிறப்பு மட்டுமே இல்லை. அதற்கும் மேலாகப்பல அம்சங்கள் உள்ளன. பெண்கள் மிகச்சிறந்த தலைமை வழங்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் கலாச்சாரம் மற்றும் கல்வி நிதி அமைப்பு (யுனிசெப்) கூறுகிறது. இதனை சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் சந்திரா.
"சென்ற ஆண்டு உலக அளவிலேயே பெண்கள் பல மட்டங்களில் தலைமைப் பொறுப்பிற்கு வந்தள்ளனர். சிலி நாட்டின் ஜனாதிபதியாக முதல் முறையாக ஒரு பெண் மிகேல் பார்ஸ்லெட் - தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிரேசில் நாட்டில் லாரா என்ற பெண் முதல் முறையாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் ஆட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சகோலின் ராயல் தோல்வியடைந்தார் என்றாலும் உலகம் முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடிந்தது. அமெரிக்காவில் அடுத்த அதிபராக ஹிலாரி கிளின்டன் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவிற்கு ஏற்பட்டிருக்கிறது," என்கிறார் சந்திரா.
குவைத் நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாமல் இருந்தது. வாக்குரிமை அளிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு மஹ்ஜூமா - அல் - முபாரக் என்ற பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு அமைச்சகப் பொறுப்பு தரப்படும். இவரிடம் அரசு நிர்வாகம் மற்றும் திட்டமிடுதல் என்ற முக்கியமான துறை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட யுனிசெப் அறிக்கை பல நாடுகளில் பெண்களின் பிரநிதித்துவம் அதிகரித்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இதில் முதல் இடம் வகிப்பது ருவாண்டா நாடுதான். அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 48.8 சதவீதம் பேர் - கிட்டதட்ட 50 சதவீதத்தினர் - பெண்கள். இந்தியாவின் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதை அந்த அறிக்கை வரவேற்கிறது. மேற்கு வங்கத்தில் பெண்கள் தலைவர்களாக உள்ள உள்ளாட்சிகளில் குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் செல்படுத்தப்படுவது ஆண் தவைர்கள் உள்ள உள்ளாட்சிகளை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும் சந்திரா அந்த அறிக்கையை மேற்கொள் காட்டுகிறார். பெண்களின் தலைமையில் உள்ள உள்ளாட்சிகளில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது அதிகரித்திருக்கிறது, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவது என்பது குறைந்திருக்கிறது என்றும் பெருமிதத்தோடு கூறுகிறார் சந்திரா.
"இதுவரையில் பெண் குடியரசுத் தலைவர் ஆகவில்லை. சென்ற முறை கேப்டன் லட்சுமி செகால் போட்டியிட்ட போது இந்த பெரிய கட்சிகள் அதை கண்டுக்கொள்ளவில்லை. இப்போது ஓராளவு தலையிடக்கூடிய அளவுக்கு இடதுசாரி கட்சிகளுக்கு பலம் கிடைத்திருக்கிறது. இடதுசாரி கட்சிகள், முற்போக்கு கட்சிகள் ஆகியோரது உறுதியான நிலைப்பாட்டால் பெண் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அருமையாக உருவாகி உள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் ஆதரிப்பது நாட்டிற்கு செய்கிற ஒரு கடமை," என்கிறார் முனைவர் பத்மாவதி விவேகானந்தன்.
"நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டிற்கான சட்டத்தை இன்னும் அறிமுகப்படுத்தகூட முடியாமல் இருக்கிறது. ஒவ்வொருவிதமான காரணம் சொல்லப்பட்டாலும், அடிப்படையில் பெண்ணுக்கு அதிகாரம் என்பதை ஏற்கிற மனநிலை என்பதைதான் அது காட்டுகிறது.பெண்களை அதிகார மற்றவர்களாக வைத்திருப்பதே ஆண்களுக்கு சாதகமானது என்ற ஆணாதிக்க எண்ணம் வலுவாக இருக்கிறது. இந்த நிலையில்தான் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு என்பது முக்கியத்துவம் பெருகிறது. பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று, மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் அவரே கையெழுத்திடுகிற சூழல் உருவாகும் என்று நம்புகிறேன்," என்கிறார் பத்மாவதி.
மூத்தவர்கள் இப்படிச் சொல்வது இருக்கட்டும். இளைய தலைமுறை என்ன சொல்கிறது? ‘‘பிரதிபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப் படுவது இந்தியாவின் சமூகப் பண்பாடு வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என நினைக்கிறேன்,’’ என்று முதிர்ச்சியான ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார் இதழியல் துறை மாணவி எம். கே. பிரமிளா.
"உலக அரங்கில், அரசியல் கலத்தில் வளரும் நாடுகள் சார்பில் விடுக்கப்படும் பெண் விடுதலைக்கான அறைகூவல் இது," எனக் கூறும் பிரமிளா, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கைக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கும் சூழலில் குடியiசுத் தலைவராக ஒரு பெண் பொறுப்பேர்ப்பதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. பாரத மாதா என வர்ணிக்கப்படும் இந்தியத் தாய்நாட்டில் பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்பதால் அந்தப் பதவி மட்டுமல்ல பெண்மையும் அர்த்தப்படும். பெண் விடுதலையை விரும்புகிற எவரும் கட்சிப்பாகுபாடு இல்லாமல் பிரதிபாவை ஆதரிக்க வேண்டும்," என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.
ஆய்வாளரோ ஊடகத்துறை மாணவராகவோ அல்லாமல் பத்திரிகைகளில் வரும் கதைகளை படிக்கிற ஒரு சராசரிப் பெண் கங்கா தேவி. தொழிலாளர் நல வாரிய ஊழியருமான அவர், " எனக்கு கோர்வையாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் இது வரை இல்லாத ஒன்று இந்தியாவில் இப்போது நடக்கப்போகிறது அதை நினைக்கும்போது ரொம்ப பெருமையாகவும் பரவசமாகவும் இருக்கிறது," என்கிறார்.
பிரதிபாவுக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறார்களே என்று கேட்டபோது, "அது எப்படி சொல்ல முடியும்? அரசியலில் இத்தனை வருடமாக ஈடுபட்டு வந்திருப்பவர். ஒரு வேளை வேறு சிலரை போல பரபரப்பாக ஏதாவது செய்கிற அரசியல்வாதியாக அவர் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக மக்களின் வாழ்க்கை நிலையை புரிந்தவராகத்தான் இருப்பார். அப்படி இல்லாமல் இத்தனை பொறுப்புகளை அவரால் நிறைவேற்றி வந்திருக்க முடியாது," என்று கோர்வையாகவே பதில் அளிக்கிறார் கங்கா.
"தங்களுக்கு ஒத்துவராதவர்கள் பற்றி ஊடகங்கள் மூலம் இப்படியெல்லாம் தவறான பிரச்சாரம் செய்வது பாஜக வகையறாக்களுக்கு கைவந்த கலை," என்கிறார் சந்திரா.
"பிரதிபா சட்டம் படித்தவர். வெற்றிகரமான வழக்கறிஞராக செயல்பட்டவர். வீட்டு வேலை செய்யும் பெண்களைத் திரட்டி அவர்களுக்கான சட்டச்சலுகைகள் கிடைக்க போராடியவர். அமைச்சராக பல துறைகளில் செயல்பட்டு விரிவான அனுபவம், அரசாங்க செயல்பாடுகள் குறித்த ஞானமும் உள்ளவர். மாநிலங்களவை துணைத் தலைவராக பணியாற்றி அரசியல் கட்சிகளை எவ்வாறு நடத்துவது என்பதை அறிந்தவர். அவரது ஒரே குறைபாடு பரபரப்பு அரசியல் நடத்த தெரியாதவர், எளிமையாக இருப்பவர் என்பது மட்டும்தான்.
ராஜஸ்தான் மாநில ஆளுனராக , மக்கள் நலனில் அக்கறையோடு திறம்பட செயல்பட்டதற்கு ஒரே சான்று, அந்த மாநிலத்தின் பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச்சட்டத்தில் கையெழுத்திட மறுத்து திருப்பி அனுப்பினார் என்ற தகவலையும் சந்திரா தெரிவிக்கிறார். சங் பரிவாரத்திற்கும், அவர்களுக்கு இணையாக தமிழகத்தில் மத மாற்றம் தடைச்சட்டம் கொண்டு வந்த ஜெயலலிதாவிற்கும் பிரதிபா பாட்டீலை ஏன் பிடிக்கவில்லை என்பதற்கான பதிலும் இதில் இருக்கக்கூடும்!
நாட்டு விடுதலையின் வைர விழா தொங்கும் போது கோட்டையில் கொடி ஏற்றி வைத்து வாழ்த்துச் சொல்கிறவர்களாக பெண் நடைபோட்டு வரட்டும். இந்நாட்டு குறுகிய மனங்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே ஒரு உரத்த செய்தியைச் சொல்லட்டும். " நாங்கள் வருகிறோம்," என்ற, சமுத்துவ உரிமைகளை சமர்புரியும் பெண்கள், அதற்கு உணர்வ பூர்வமாக துணை நிற்கும் ஆண்களின் குரல்தான் அந்தச் செய்தி.
1 comment:
நீண்ட கட்டுரை - நல்ல கட்டுரை.
அது சரி இப்போத பார்த்தீர்களா பா.ஜ.க. 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றிய ஆகவேண்டும் என்று கூச்சல் போடுவதை.
பிரதீபா குறித்த குற்றச்சாட்டுக்களில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்பதை மீடியாக்கல் நினைத்திருந்தால் வெளிப்படுத்தியிருக்கலாம். அவர்களுக்கு அதுக்கெல்லாம் நேரம் இருக்கிறதா?
செகாவத் சுயேச்சையாம் இதுதான் இந்த ஆண்டின் பலமான ஜோக்...
குமரேசன் கொஞ்சம் சிரிங்கோ....
Post a Comment