Friday 6 July 2007

கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளா? ஆமா! ஆமா!

சொல்லப்போனால் கம்யூனிஸ்ட்டுகளை விடப் பெரிய சந்கர்ப்பவாதிகள் யாரும் இருக்க முடியாது. இல்லையா பின்னே?

மார்க்சிய தத்துவத்தைப் படிப்பதால் மட்டும் மார்க்சியவாதியாகிவிட முடியாது. அந்தந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற வகையில் அதனைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். புரட்சியை எந்த ஒரு நாட்டிலிருந்தும் எந்த ஒரு நாட்டிற்கும் இறக்குமதி செய்ய முடியாது. ஒவ்வொரு நாட்டின் சமுதாயச் சூழல், எதிரி வர்க்கத்தின் பலம் - பலவீனம், பாட்டாளி வர்க்கத்தின் தயார் நிலை... ஆகியவற்றைப் பொறுத்து அந்தந்த நாட்டில் புரட்சிகர இயக்கம் வடிவம் கொள்ளும், வளரும்.

இப்படி கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பம், சூழ்நிலை, யதார்த்தம் முதலானவற்றின் அடிப்படையிலேயே செயல்படுவார்கள் என்றால், அது சந்தர்ப்பவாதமின்றி வேறென்ன?சும்மா வறட்டுத்தனமாக புரட்சி பேசிக் கொண்டு, மார்க்ஸ் - லெனின் - மாவோ மேற்கோள்களைக் கூறிக் கொண்டு தனிப்புலம்பல்கள் நடத்திக் கொண்டிருக்காமல், இன்றைய நிலைமைகள் என்னவோ அதற்குத் தகுந்தாற்போல் அணுகுமுறைகளை வகுக்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

உதாரணமாக, மற்ற அரசியல் கட்சிகள் முதலாளித்துவக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவையே என்பது கம்யூனிஸ்ட்டுகளுக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் மக்களிடையே ஒரு முற்போக்கான தோற்றத்தைக் காட்டிக் கொள்வக்ற்காகவாவது, அந்த முதலாளித்துவக் கட்சிகளுக்குக் கம்யூனிஸ்ட்டுகளுடன் உறவு கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நேரத்தில், அக்கட்சிகளுக்குப் பல்வேறு காரணங்களால் மக்களிடையே ஒரு செல்வாக்கு இருக்கிறது. அதைப்பயன்படுத்திக் கொண்டு, அதாவது அக்கட்சிகளுடன் தேர்தல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு இன்றைய நாடாளுமன்ற - மாநில சட்டமன்ற கட்டமைப்புகளுக்குள் கம்யூனிஸ்ட்டுகளால் நுழைய முடிகிறது. அப்படி நுழைவது சும்மா எம்பி, எம்எல்ஏ பதவிகளுக்காக அல்ல. அந்தப் பொறுப்புளைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கு இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புக்குள் என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியுமோ அவற்றைச் செய்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

இதையெல்லாம் சந்தர்ப்பவாதம் எனக் கூறாமல் வேறென்னவென்று கூறுவது? இன்றைய அரசியல் களத்தின் இந்த நிலைமைகள் பற்றிய புரிதல்களோடு, கம்யூனிஸ்ட்டுகள் தங்களது பங்கேற்பைத் தவிர்த்து, சுத்தப் புரட்சி பேசிக் கொண்டு ஒதுங்கிப் போயிருந்தால், இன்று மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற பல ஜனநாயக உரிமைகள் காணாமல் போயிருக்கும்.

தற்போதைய நாடாளுமன்ற முறை முழுமையானது, அப்பழுக்கற்றது என்ற மயக்கங்கள் கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கிடையாது. அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தாமல் கற்பனைப் புரட்சிக்குத் தாவுகிற இளம்பருவக் கோளாறும் கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கிடையாது.

நாட்டின் அரசு அதிகாரத்தில் மதவெறியர்கள் -நவீன மனுதர்மவாதிகள்-கோலோச்ச முடியாமல் தடுத்தது கம்யூனிஸ்ட்டுகளின் சந்தர்ப்பவாதம்தான். காங்கிரஸ் கட்சித்தலைமை ஒரேயடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் சரணாகதி அடையாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதும் இதே சந்தர்ப்பவாதம்தான். பொதுத்துறைத் தொழில்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படாமல் காப்பாற்றிவைத்திருப்பதும் அதே சந்தர்ப்பவாதம்தான். தொழிலாளர்கள், விவசாயிகள், தலித் மக்கள், பிற்படுத்தப் பட்ட மக்கள், எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள்.... இப்படி எல்லாத் தரப்பினரும் இன்று குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க முடிகிறது என்றால், கம்யூனிஸ்ட்டுகளின் சந்தர்ப்பவாதம் இல்லாமல் இவை வந்துவிட முடியாது.

வெட்கமே இல்லாமல் சொல்கிறேன் - கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகள் தான்। இந்த சந்தர்ப்பவாதத்தைக் கம்யூனிஸ்ட்டுகள் மேலும் மேலும் கடைப்பிடிப்பார்கள் - தங்களுக்கான முழுச் சந்தர்ப்பம் வரும் வரை।

அ.குமரேசன்

2 comments:

jeevagv said...

அடடா, ஒரு பிரபல அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்
வரப்போகிற இந்திய குடியரசுத் தலைவர் 'வளைந்து
கொடுக்கிறவராக' இருக்க வேண்டும் என்று கருத்துத்
தெரிவித்ததையும் சேர்த்துக் கொள்ளாமல் விட்டு
விட்டீர்களே!

உங்களுடன் said...

கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளா? இல்லையா என்பதல்ல. கம்யூனிஸ்ட்டுகளை எதிர்ப்பதே நோக்கமாக கொண்டவர்களின் பிரச்சாரம்தான் இது. சந்தர்ப்பவாதம், நடுநிலை என்பதே சோசலிசம் பேசக்கூடிய (ஒப்புக்கு பேசக்கூடிய), முதலாளித்துவவாதிகள்தான். இவர்களுக்கு வேலையும் இதுதான்.
ஒரு முறை சீத்தாராம் யெச்சூரி சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. " ஒரு எலி சாலையை கடக்க முயற்சி செய்து சாலையை கடக்க வேகமாக ஓடுகிறது. அந்த சாலையில் வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருக்கிறது. பாதி தூரம் ஓடிய எலி சட்டென்று நின்று விட்டது. லாரி வந்த வேகத்தில் எலியின் மீது ஏறியது. ஒரு வேலை தனது நோக்கத்தில் உறுதியாக இருந்து முழு மூச்சோடு ஓடியிருந்தால் லாரியில் அடிபட்டு செத்திருக்காது" என்றார்.
அதுபோல நமக்கு முன் பல பிரச்சனைகள் உள்ளது. மக்களை திரட்ட வேண்டிய சமூக கடமை நமக்கு உள்ளது. இடதுசாரி இயக்கங்கள் இன்று உலகளவில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய குழப்பமான அரசியல் சூழலில் உள்ளது. இதுபோன்ற வாதங்களை மறுப்பு தெரிவிக்கும் நேரத்தில், நமது பணத்தை நாம் விரைவு படுத்துவோம். நீங்கள் கூறும் கருத்துக்கள் உண்மைதான்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியாதவன் ஒரு போதும் வெற்றி பெற மாட்டான். யாருக்காக? எதுக்கான? எப்படிப்பட்ட? சந்தர்ப்பவாதம் என்பதுதான் முக்கியம். உழைப்பாளி, ஏழை, எளிய மக்களின் நலனுக்கு ஆதரவாக எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதத்தையும் பயன்படுத்தினாலும் அது சரியானதே.