Tuesday, 10 July 2007

அன்பிற்குரிய ஜீவாவோடு ஒரு பயணம்

இயக்கத்தில் இணைந்து, மதுரையில் ‘செம்மலர் கலைக்குழு’ உறுப்பினராக நானும் காலில் சலங்கை கட்டி வீதி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாட்கள்। அப்போது குழுவின் தலைவர் தோழர் எம்।பி। ராமச்சந்திரன் நாடகம் துவங்குவதற்கு முன்பாக சில பாடல்களைப் பாடுவார்। ‘‘காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே, பசையற்றுப் போனோமடா...’’ என்ற பாடலை அவர் பாட நாங்கள் உருகிப் போவோம். அந்தப் பாடலை எழுதியவர் ஜீவா என்ற தகவல்தான் எனக்கு அவரைப் பற்றிய முதல் அறிமுகம்.அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் அவரோடு முரண்பட்டிருக்க வேண்டியிருந்த சூழல்கள் பற்றித் தலைவர்கள் என்னோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஜீவாவின் அர்ப்பணிப்பு, எளிமை, முழுமையான ஈடுபாடு, உறுதி, நெஞ்சுரம், தியாகம் ஆகியவை குறித்து எல்லோரும் வியந்து போற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அவரது தமிழ்த் திறன், இலக்கிய ஆர்வம், பெரும் கூட்டத்தையும் கட்டிப்போடும் பேச்சாற்றல், அதற்குத் துணையாகக் கவிதைகளையும் காப்பியங்களையும் கையாண்ட வல்லமை ஆகியவை குறித்து இன்னும் லயிப்போடு சொல்வார்கள். மகா மனிதராய்த் திகழ்ந்த அந்த எளிய தோழரின் நூற்றாண்டில், அவரைப் பற்றிய ஒரு அறிமுகமாக இந்தப் புத்தகத்தைத் தந்திருக்கிறார் ஆர். முத்துக்குமார்.பக்திமயமான பட்டன் பிள்ளை-உமையம்மை குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையாக மரணத்தைத் தழுவ நான்காவதாகப் பிறந்த குழந்தையாவது நிலைக்க வேண்டுமேயென்று சுற்றத்தார் ஆலோசனைப்படி கிராமத்துக் காவல் தெய்வம், குலதெய்வம் இரண்டையும் சேர்த்து மூக்காண்டி சொரிமுத்து என்று பெயர் சூட்டப்படுகிறது. சிறுவர்களுக்கே உரிய விளையாட்டுத்தனத்தோடும், துறுதுறுப்போடும் வளர்ந்த மூக்காண்டி படிப்படியாக ஜீவானந்தமாகப் பரிணமித்த கதை சுவையானது. சேரன்மாதேவி ஆசிரமத்தில் சாதிப்பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டது குறித்து பெரியாரோடு சேர்ந்து காந்தியிடம் எடுத்துச் சென்றபோது அவர் அந்தப் பிரச்சனையைக் கையாண்ட முறை பெரியாரோடு சேர்ந்து ஜீவாவுக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவுகள் ஒரு வருங்கால சமூகப் போராளியின் தொடக்கத்தை அடையாளப்படுத்துகின்றன. விடுதலைப் போராட்டத்தின் ஒரு கட்டமாக கதர் இயக்கம் நடைபெறுகிறது. அதில் பெண்களையும் ஈடுபடுத்தி அவர்களையும் நூல் நூற்கச் சொல்கிறார் ஜீவா. அது ஆண்களின் வேலை என்றும், அதில் பெண்களை ஈடுபடுத்தியது தவறு என்றும் கூறுகிறார் வ.உ.சி. அவரோடு கருத்துப் போர் நடத்த முடிவு செய்யும் ஜீவா ஒரு பொதுக்கூட்டத்தை அதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார். இத்தகைய விவரங்கள் படிப்பதற்குச் சுவையாக இருப்பது மட்டுமல்ல, வரலாறு எப்படியெல்லாம் வளைந்து நெளிந்து வந்திருக்கிறது என்பதையும், விடுதலை நோக்கில் உறுதியோடு இருந்த தலைவர்களுக்குப் பெண்ணுரிமை போன்ற சிந்தனைகளில் இருந்த குழப்பங்களையும் தெரிந்துகொள்ளச் செய்கிறது.ஜீவா ஒரு போட்டி ஆசிரமம் துவங்குகிறார். ‘‘வறுமை, பிணி, அறியாமை, அடிமைத்தனம் ஆகியவற்றை ஒழித்தல், சாதி சமய வேறுபாட்டைக் களைதல், பிறப்பு வேற்றுமையை அழித்தல், பார்ப்பனீயத்தை ஒழித்தல், தீண்டாமையை அழித்தல், மூடப்பழக்கங்களை ஒழித்தல், மது ஒழிப்பைக் கொண்டு வருதல், தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்ககாகப் பாடு படுதல் மற்றும் பெண்ணுரிமையைப் பேணுதல்’’ ஆகிய ஒன்பது முழக்கங்களை அந்த ஆசிரமத்தின் லட்சியங்களாக அறிவிக்கிறார். அவரது வாழ்க்கையின் இந்தப் பகுதியும் அவர் எத்தகைய பயிராகப் விளையப் போகிறார் என்பதற்கான முளைப்பயிர்தான்.சிறைச்சாலை ஜீவாவுக்கு மார்க்சியத்தை அறிமுகப்படுத்திய கல்விச்சாலையாக இருந்திருக்கிறது. அவ்வகையில் தமிழகத்திற்கு ஒரு கம்யூனிஸ்ட் தலைவரை உருவாக்கிக் கொடுத்த அந்தச் சிறைவாழ்க்கை நம் நன்றிக்கு உரியதாகிறது. ஒரு ஆங்கிலப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகத் தமிழகத்தில் சிறை சென்ற முதல் நபர் ஜீவாதான்! அந்தப் புத்தகத்தைப் பதிப்பித்ததற்காக ஈ.வெ.ரா.(பெரியார்), அவரது சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அந்தப் புத்தகம் எது தெரியுமா? பகத் சிங் எழுதிய ‘‘நான் ஏன் நாத்திகனானேன்?’’!பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நிர்வாகங்களால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்களுக்காகப் போராடும் தொழிற்சங்கத் தலைவராகிறார் ஜீவா. அவரது பேச்சுக்கள் தொழிலாளர்களுக்கு ஒன்றுபட்ட போராட்ட நம்பிக்கையையும் முதலாளிகளுக்கு பீதியையும் ஏற்படுத்துகின்றன. இன்று தொழிற்சங்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோருக்கு வழிகாட்டும் அத்தியாயம் இது.மக்களை வசீகரித்த அந்தப் பேச்சாற்றலுக்கு ஆதாரமாய் அமைந்தது அவரது தமிழார்வமும் இலக்கிய நுகர்வும். மறைமலையடிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவராக தூய தமிழில்தான் உரையாடுவது என்ற கவர்ச்சிகரமான ஆனால் நடைமுறைக்குக் கடினமான முடிவுக்கு வருகிறார். பின்னர் அந்த முடிவைக் கைவிட்டு இயல்பாகப் பேசுவது என்ற முடிவுக்கு அவர் வருவதற்கும் மறைமலையடிகளே காரணமாகிறார்! 1952ம் ஆண்டுத் தேர்தல், அதில் தோழர் பி. ராமமூர்த்திக்கு ஆதரவு திரட்ட பொதுக்கூட்ட மேடையில் ஜீவா கையாண்ட உத்தி போன்ற தகவல்களும் அன்றைய அரசியல் சூழலை உணர்த்துகின்றன. வசதி வாய்ப்புகள் தேடிவந்தபோது அவற்றைப் புறந்தள்ளி எளிய வாழ்க்கையை ஏற்ற உயர்ந்த பக்குவம் ஒரு பொதுவுடைமைவாதியின் இயல்பான தன்மை.நூலாசிரியர் முத்துக்குமார் ஜீவாவின் பேச்சாற்றல், வாதத்திறமை, இலக்கியச்சான்றுகளைப் பயன்படுத்திய லாகவம் ஆகியவைபற்றி புத்தகம் நெடுக்கக் கூறியுள்ளார். எந்தச் சூழலில் எத்தகைய வாதத்தை ஜீவா முன்வைத்தார் என்பதற்குச் சான்றாக சில எடுத்துக் காட்டுகளைக் கொடுத்திருக்கலாம். அதே போல் ‘‘அட்வைசரி ஆட்சி’’ என ஓரிடத்தில் வருகிறது. அது என்ன என்பதே பலருக்குத் தெரியாது. எனவே அது போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்துகையில் அது என்ன என்பதை வாசகர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் சுருக்கமாக விளக்குவது அவசியம். நாடு விடுதலையடைந்த போது ஜீவாவும் மற்ற கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களும் அதனை எவ்வாறு வரவேற்றார்கள் என்பதைத் திரட்டிக் கொடுத்திருக்க வேண்டும். தேவிகுளம், பீர்மேடு எந்த மாநிலத்துக்குச் சொந்தம் என்பதில் தோழர் ஏ.கே.ஜி.-யுடன் ஜீவாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். அது தொடர்பாக கொல்கத்தாவில் நடந்த கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்று தோழர்கள் உற்சாகத்துடன் பணியாற்றியதாகக் கூறுகிறார். அது என்ன முடிவு என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? ஜீவா மறைந்த ஆண்டு, மாதம், நாள் பற்றிய குறிப்பும் விடுபட்டுள்ளது. வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் இத்தகைய குறிப்புகளும் முக்கியமானவை. அடுத்தடுத்த பதிப்புகளில் இது போன்ற குறைகளைக் களைய ஆசிரியரும் பதிப்பகத்தாரும் முன்வர வேண்டும்.‘‘பிரமிப்பூட்டும் ஜீவாவின் வாழ்க்கையை எளிமையான நடையில் விறுவிறுப்பாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆர். முத்துக்குமார்’’ என பதிப்பாளர்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. -அ.குமரேசன்





அன்புள்ள ஜீவா ஆர். முத்துக்குமார்வெளியீடு:கிழக்கு பதிப்பகம்,33/15, எல்டாம்ஸ் சாலை,ஆழ்வார்பேட்டை,சென்னை - 600 018பக்கங்கள்:144 விலை ரூ.60

2 comments:

சந்திப்பு said...

கால்ல சலங்கை கட்டியிருந்தீர்களா? அப்ப பருத்தி வீரன் மாதிரி இருந்திருப்பீங்க.... இ... ஹி.... ஹி....

ஜிவா ஒரு முன்னோடியான கம்யூனிஸ்ட். அவரிடம் கற்க வேண்டியது ஏராளம் பாக்கியிருக்கிறது. அவரது இலக்கியத் தடத்தில் முத்தையா மட்டுமே பயனித்திருக்கிறார். இத்துறையில் அவரைப் போல் இன்னும் ஏராளமான பேர் முன்னேற வேண்டியிருக்கிறது.

மேலும் இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அவரது வாழ்க்கை வரலாறு ஆதர்சமாக விளங்கும். என்னை கவர்ந்த கம்யூனிஸ்ட்டுகளில் அவரும் ஒருவர். ஹலோ நீங்களும்தான்...

கிவியன் said...

கதிரேசன்,
இந்த பதிவுக்கு சம்பந்தமில்லா பின்னூட்டம். பதில் மரியாதை செய்ய வந்தேன். அது என்ன அசாக்? உங்கள் பதிவுகள் சில வற்றை படித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். நாடக கலைஞரா நீங்கள்? நானும் மதுரைதான்பு. இங்கு நண்பர்களுடன் நாடக முயற்சியை செய்து கொண்டிருக்கிறேன். நாடகம் என்றாலே, எஸ்.வி.சே.யின் பாணியைதாண்டி வேறு மாதிரி கதை சொன்னாலே யாரும் கேக்க கூட தயாராக இல்லை.
உதாரணத்துக்கு, செழியனின் வேருக்குள் பெய்யும் மழையை மேடையேற்றலாம் என்று செழியனிடம் அனுமதியும் பெற்று, ஒரு வருடமாக காத்துக்கொண்டிருக்கிறேன். நடிக்க யாரும் தயாரக இல்லை.