Sunday, 15 July 2007


நிச்சயமா
உனக்கொரு குடிசை

நான்
கட்டுவேன் அம்மா

ஜி. மம்தா



ம்மா, வாழ்க்கையில நீ எவ்வளவு பாடுபட்டிருக்கேன்னு எனக்குத் தெரி யுமம்மா. நீ உன் தலையில நிறைய செங்கல் சுமந்துட்டுப் போறதையும், அப்பா அதை யெல்லாம் எடுத்து ஒண்ணொண்ணா அடுக்கி வைச்சு இடையிலே சிமெண்டு வைச்சுப் பூசுறதப் பார்த்திருக்கேன்.
நம்ம கிராமத்தில சாப்பாடு இல்லாம பட்டினியாவே இருப்போமே, அதுவும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குதும்மா. அப்பெல்லாம் நீயும் அப்பாவும் என்னைத் தூக்கிக்கிட்டு ஊருக்கு நடுவில இருந்த இடத்துக்குப் போவீங்க. யாராவது அங்க வந்து அவங்க ளோட வயல்ல வேலை பார்க்கிறதுக்குக் கூப்பிடுறாங்களான்னு காத்துக்கிட்டு இருப் பீங்க. யாரும் வரலைன்னதும் ஏமாத்தத்தோட திரும்புவீங்க. அதெல்லாம் உனக்கு ஞாப கம் இருக்குதாம்மா?
பசிக்குதுன்னு நான் ரொம்ப அழுவேன். ஆனா, என்னோட பசியை அடக்க உன் கிட்ட கூட எதுவும் இருந்ததில்லை. அது இப்பதான் எனக்குப் புரியுது. அப்பா ஒருநாள் நாம வெளியூர் போகுறதுன்னு முடிவு செஞ்சு அதைச் சொன்னப்ப, உன் முகத்துல ஒரு நம்பிக்கை ஒளியும் அதோட ஒரு பெரிய கேள்விக் குறியும் தெரிஞ்சதை நான் கவனிச் சேன்.
இங்க வந்தப்புறம், நெறையா புதுசு புதுசா இருந்துச்சு. பெரிய பெரிய வீடு, பூங்கா... சின்னப் பசங்க நல்லா ஜாலியா விளையாடிக்கிட்டு இருக்கிறது ... இதெல்லாம் பார்க்கிற துக்கு எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இனிமே நீ எப்பவும் கண்ணீர் விட மாட் டேன்னு நினைச்சேன்.ஒரு பெரிய விசாலமான இடத்துக்கு நாம போனோம். நல்லா விளையாட முடியும்கிறது எனக்கு ரொம்ப ஜாலியா இருந்துச்சு.
கொஞ்சம் கொஞ்சமா அந்த இடத்தில நிறைய குழி வெட்டுனாங்க. அதுக்குள்ள மணல் போட்டு நிரப்பி னாங்க. அப்புறம் அங்க ஒரு வீடு மாதிரி கட்டடம் எழும்புச்சு. அந்த வீடு நமக்குத் தான்னு நான் நினைச்சேன். ஏன் தெரி யுமா, அந்த வீட்டக் கட்டுறதுக்கு நீயும் அப்பாவும் மத்தவங்களோட சேர்ந்துக் கிட்டு அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செஞ்சீங்க.
எல்லா வேலையும் முடிஞ்சப் புறம் பார்த்தா நாம திடீர்னு இடத்தைக் காலிசெஞ்சிட்டுப் போக வேண்டியதாயி டுச்சு. அவ்வளவு கஷ்டப்பட்டு அப்பாவும் நீயும் கட்டுன வீட்டை விட்டுட்டு ஏன் நாம வெளியேறணும்னு எனக்குப் புரியல. அப்புறம் வேற காலியிடத்துக்குப் போனோம். அதுக்கப்புறம் வேற இடத்துக் குப் போனோம். கொஞ்சம் கொஞ்சமா எனக்கு அந்த வீடுக நமக்குச் சொந்த மில்லேங்கிறது புரிய ஆரம்பிச்சுச்சு.ஏம்மா, அந்த வீடுக நமக்குச் சொந்த மில்லேங்கிறப்ப எதுக்காகம்மா நீயும் அப்பாவும் அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செஞ்சீங்க?
இன்னும் கொஞ்சம் சோறு வேணும்னு நான் முட்டாத்தனமா கேட் டப்ப எல்லாம் நீ மூலையில உட்கார்ந்து அழுவுறதப் பார்த்திருக்கேன் அம்மா. எனக்கு என் மேலயே கோபம் கோபமா வந்துச்சு தெரியுமா? நீ அழுவுறத என் னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. அதனால, இனிமே இன்னும் கொஞ்சம் சோறு வேணும்னு கேட்கிறதில்லைன்னு முடிவு செஞ்சேன்.அந்த கஷ்டமான வேலை முடிஞ்சப் புறம், நீதான் எங்களுக்கு சாப்பாடு சமைக்கணும்; பாத்திரம், தட்டு எல்லாம் கழுவி வைக்கணும். எங்க துணியை அலசிப் போடணும்.
இவ்வளவுக்கப்புறமும் என்னைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப ணும்னு நினைச்சியேம்மா!அம்மா, எனக்கும் படிக்கணும்னு ஆசைதான். ஆனா பள்ளிக்கூடத்துக்குப் போகுறதுக்கு பயமா இருக்கும்மா. கூடப்படிக்கிற பசங்க என்னென்னமோ கேக்குறாங்கம்மா. ‘உன் வீடு எங்க இருக்கு’-ன்னு கேக்குறாங்க. வீடு இல்லைன்னு சொன்னா சிரிக்கிறாங்க.
எங்க சார் கூட ஒரு நாள் பாடம் நடத்துறப்ப, `காட்டு விலங்குகள் குகையில் வாழும், வீட்டு விலங்குகள் பட்டி போன்ற இடங்களில் வாழும், மனிதர்கள் வீடுகளில் வசிக்கிறார்கள்’னு சொன்னாரம்மா. நமக்குத்தான் வீடு இல்லியே, அப்படின்னா நாம மனுசங்க இல்லியாம்மா? அப்ப நாம யாரும்மா?`மிருகங்கள்தான் திறந்த வெளியில் சிறுநீர் போகும், மலம் கழிக்கும்; மனிதர்கள் கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள்’னும் எங்க சார் சொன்னாரும்மா. ஆனா நாம எப்பவும் இந்த ரெண்டு காரியத்தையுமே பொட்ட வெளியிலதான் செய்யுறோம்? நான் கொஞ்சம் பெரிய பொண்ணா வளந்ததுக்கப்புறம்தான் நீ ஏன் எப்பவும் அவசர அவசரமா குளிக்கிற, அதுவும் ஏன் இருட்டினதுக்கப்புறம் குளிக்கிறங்கிறது புரிஞ்சிச்சு. ஒசரமான கட்டிடங்கள்லயிருந்து எட்டிப்பார்க்குற பொறுக்கிக் கண்ணுககிட்டயிருந்து அப்பதான தப்பிக்க முடியும்!
அப்பா ஒரு நாளு அவரு வேல செஞ்சிக்கிட்டிருந்த இடத்திலேயிருந்து கீழே விழுந்துட்டாரு, அதுல அவரோட காலு ஒடஞ்சிபோச்சு. அப்ப நீ அழுத அழுக இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. அப்பாவுக்கு வேல போனது மட்டுமில்லாம, நாம தங்கி யிருந்த இடத்திலேயிருந்தும் நாம வெளியேற வேண்டியதாப் போயிடுச்சு.
அப்ப கொஞ்ச நாளு நாம ஒரு பாலத்துக்குக் கீழ குடியிருந்தோம். ஒரே நாத்தம் கொடலப் புடுங்கும். சுத்தியும் ஒரே நாயும் பன்னியுமா கிடக்கும். சனங்க அவங்க குப்பையை யெல்லாம் நம்ம மேலதான் போடுவாங்க. நாமளும் இருக்கோங்கிறத நெனைச்சுக்கூடப் பார்க்க மாட்டாங்க போல.
இதுக்கப்புறம்தான் ஒரு நாளு ராத்திரி சிலபேர் நாம இருந்த இடத்துக்கு வந்து உங்கிட்டயும் அப்பாக்கிட்டயும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்கெல்லாம் தோழர்கள்னு சொன்னாங்க. எனக்கு தூக்கம் தூக்கமா வந்துச்சு. ஆனா அவங்க பேசப்பேச நீ அவங்க சொல்றது சரிதான்னு தலையை ஆட்டுறதையும் உன்னோட கண்ணும் அப்பாவோட கண்ணும் பளபளன்னு மின்னுறதையும் பார்த்தேன். எனக்கு சந்தோசமா இருந்துச்சு. நாம ஒரு புது வீட்டுக்குப் போற மாதிரி கனா வந்துச்சு.
அடுத்த நாளு நான் வெளையாடிக்கிட்டிருந்தப்ப, அதே ஆளுங்க ஏதோ சொல்லிக் கிட்டிருந்ததைக் கேட்டேன். அரசாங்க இடம் ஒண்ணு காலியா இருக்கிறதாகவும், அதை நம்மளப் போலவுங்களுக்கு வீடு குடுக்குறதுக்கு நியாயமா பயன்படுத்தலாம்னும் அவங்க சொன்னாங்க. நம்ம கனா பலிக்கப் போவுதுன்னு நினைச்சேன்.
அப்பாவோட சினேகிதங்க, இதுக்கு முந்தியும் எப்படி அரசாங்க அதிகாரிங்க வந்து அவங்களுக்கு அந்த நெலத்திலேயே வீடு கட்டித்தரப் போறதா இப்படி சத்தியம் பண்ணினாங்கன்னு சொன்னாங்க.
தோழருங்க அப்ப ‘அரசாங்கம் பெரிய ஆளுகளுக்கு இலவசமாவே ஆயிரக்கணக்கா நெலம் குடுக்குது, ன்னு சொன்னாங்களாம். அந்தப் பெரிய பெரிய ஆளுக தாழ்த்தப்பட்டவங்க, பழங்குடிக இவங்களுக்குன்னு ஒதுக்குன நெலத்துல நெறையா வீடுகளக் கட்டிட்டதாவும் தோழருங்க சொன்னாங்களாம்.அரசாங்கத்துக்கிட்ட காலி நெலம் இருக்குதுன்னா அதை ஏம்மா நமக்குத் தரக்கூடாது? நாமளும் ஒரு வீடு கட்டிக்கிட்டு அதுல போய் குடியிருக்கலாம்ல?
நாம இருந்த எடத்துக்கு தோழருங்க அடிக்கடி வர ஆரம்பிச்சாங்க. நல்ல பாட்டெல் லாம் பாடுனாங்க. நெறையா பேசுனாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. ஆனா உன்னோட ரெண்டு கண்ணும் ஜொலிச்சத நான் பார்த்தேன். எனக்கு சந்தோசமாவும் இருந்துச்சு, கண்டிப்பா ஏதோ நல்லது நடக்கப் போகுதுன்னு நம்பிக்கையாவும் இருந்துச்சு.
நீங்க எல்லாருமா சேர்ந்துக்கிட்டு, கையில செவப்புக் கொடிங்கள எடுத்துக்கிட்டு போனீங்க. உங்க முகமெல்லாம் பிரகாசமா இருந்துச்சு. நானும் உங்க கூடவே வந்தேன். அந்த எடத்துல நெறையா போலீஸ் அங்கிள்க இருந்தாங்க. அவ்வளவு போலீஸ்காரங்கள அதுக்கு முன்னால நான் பார்த்ததே இல்ல. திடீர்னு ஒரு தோழரு, இதெல்லாம் நம்ம நெலந்தான்னும், நீங்க எல்லாரும் இந்த எடத்துல வீடு கட்டிக்குங்கன்னும் சத்தமா சொன்னாரு. அப்ப நமக்கு எவ்வளவு சந்தோசமா இருந்துச்சு! ஒரு வழியா நம்ம எல்லாத் துக்கும் வீடு!
நீயும், மத்த அத்தைமார்களும் மாமாமார்களும் அந்த நெலத்துல செவப்புக் கொடி கள நட்டு, குடிசைபோட ஆரம்பிச்சதும், போலீஸ் அங்கிள்க எல்லாரும் வேகமா நம்ம பக்கத்துல வந்தாங்க. எனக்கு பயமா போயிடுச்சு. ஒரு பாறைக்குப் பின்னால ஒளிஞ்சிக்கிட்டேன்.
தீடீர்னு போலீஸ்காரங்க உன்னையும் உங்கூட வந்திருந்தவங்களயும் அடிக்க ஆரம்பிச்சாங்க. சில போலீஸ்காரங்க சட்டையப் பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சாங்க. சில பேரு லத்திக்கம்பால குத்த ஆரம்பிச் சாங்க. போலீஸ்காரங்க இப்படி அடிச்சிக் கிட்டே இருந்தப்ப, நீங்க எல்லாரும் சத்தம் போட்டீங்க. போலீஸ்காரங்க திடீர்னு உன்னோட சேலைய இழுத்துக் கிழிச்சாங்க. ஏம்மா, அவங்க எதுக்கும்மா உன்னை அப்படி அடிச்சி, சேலையக் கிழிச்சி, பூட்ஸ் காலால உன் வயித்துல மிதிச்சாங்க? அவங்களுக்கெல்லாம் பெத்த தாய், கூடப் பொறந்த அக்கா தங்கச்சி இருக்க மாட்டாங்க?
அம்மா, நீ விடாம சத்தம் போட்டுக் கிட்டிருந்த. நான் அழ ஆரம்பிச்சிட்டேன், என்னா செய்றதுன்னே தெரியல. முந்தி நீ எனக்குச் சொன்ன கதையெல்லாம் ஞாபகம் வந்துச்சு. அந்தக் கதைகள்ல, சாமிக வந்து காப்பாத்துவாங்களே, அதெல்லாம் ஞாபகம் வந்துச்சு.அம்மா, நாம ஒண்ணும் கெட்டவங்க இல்லியே? பெறகு ஏம்மா அவங்க நம்மள அடிச்சாங்க? ஒரு வீட்டுல குடியிருக் கிறது தப்பாம்மா? போலீஸ்காரங்க ஏம்மா கெட்டவங்கள அடிக்க மாட்டேங்கிறாங்க?
ங்கம்மா வலியில துடிச்சாங்க. ஆனா அழவே இல்ல. அவங்களோட கிழிஞ்ச சேலையிலேயிருந்து ஒரு துண்டை எடுத்து கையில வச்சிக்கிட்டு சொன்னேன்: ‘‘அம்மா, என்னோட எல்லா ஃபிரண்டுகளயும் ஒண்ணா சேர்த்துக் கிட்டு, அடக்குமுறை பண்றவங்கள எதுத்துப் போராடுவேன். நிச்சயமா உனக்காக ஒரு குடிசை நான் கட்டு வேன்.’’

நன்றி: ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ (ஜூலை 8, 2007)

தமிழில்: அ.கு.

1 comment:

சந்திப்பு said...

குமரேசன் தங்களது தற்போதைய லே - அவுட் அருமையாக உள்ளது. மேலும் மேட்டரை போடும் போது பாராக்கள் பிரித்து போடவும். படத்தை மிக அழகாக பிரசுரித்துள்ளீர்கள்.

தேன் கூட்டில் சேர்ந்து விட்டீர்களா

வாழ்த்துக்கள்