Wednesday, 5 August 2026

பறையில் அதிர்ந்து, குத்தாட்டத்தில் உதிர்ந்த பாலினப் பாகுபாடு




சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எதிராக அமைந்திருக்கும் பெரியார் சிலையிலிருந்து, கடற்கரைக்கு இட்டுச் செல்லும் சிவானந்தா சாலை அன்றைய நள்ளிரவில் பல வண்ணமாய் மலர்ந்திருந்தது. இயற்கையின் வண்ணங்கள் வேறுபடலாம், ஒருபோதும் ஏற்றத்தாழ்வாய் மாறுபடுவதில்லை என்று எடுத்துக்காட்டுகிற சிறியதொரு அணிவகுப்புதான் அந்த மலர்ச்சிக்குக் காரணம். 


கடந்த ஜூலை 4 அன்று பல்வேறு செய்திகளை உள்ளடக்கியதாக  “பாலின சமத்துவ நடை” மேற்கொள்ளப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மத்திய சென்னை மாவட்டக் குழு அந்த நேரத்தில் அந்த இடத்தில் இந்த லட்சிய நடையில் கலந்துகொள்ள அழைத்திருந்தது.


அந்த அழைப்பிதழை நான் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்து வேடிக்கை பார்க்க வந்திருந்த நண்பர் கேட்டார், “ஒட்டுமொத்த சமத்துவ சமுதாயம்தானே கம்யூனிஸ்ட்டுகளின் லட்சியம் என்று சொல்கிறீர்கள். பொருளாதாரத்தில்  ஏழை பணக்காரர், சாதியில் மேல் கீழ், மதத்தில் பெரும்பான்மை சிறுபான்மை, கல்வியில் அரசுப் பள்ளி தனியார் மெட்ரிகுலேசன் ஸ்கூல் … இப்படி நிறையப் பாகுபாடுகள் இருக்கிறபோது, பாலின சமத்துவத்துக்காக மட்டும் ஏன் இந்த நடை?”


அழைப்பிதழ் எனக்கு வந்தபோதே ஏற்பட்ட சிந்தனையைச் சொல்வதற்கு அருமையான வாய்ப்புக் கிடைத்ததாகக் கருதி அதை அவருடன் பகிர்ந்தேன். “இயற்கையின் இன்னொரு விலங்கினமாகிய மனிதர்களிடத்தில்தான் நீங்கள் சொல்கிற எல்லாப் பாகுபாடுகளும் இருக்கின்றன. அத்தனைக்கும் மூத்தது பாலினப் பாகுபாடுதான். நிலம், விளைச்சல், சொத்து என்று வந்த பிறகு செல்வம் தேடிக் கொண்டுவருபவன் ஆண், அதைப் பாதுகாத்து அவனுடைய வாரிசைப் பெற்றெடுத்து ஒப்படைப்பவள் பெண் என்ற ஏற்பாடுதான் முதல் பாகுபாடு. ஆகவேதான் அந்த முதல் சமத்துவமின்மைக் கோட்பாடு தகர்வதற்காக இந்தப் பாலின சமத்துவ உறுதிப்பாடு.”


நண்பரிடம் சொன்னது சரிதான், சரிதான் என்று உரக்க ஆமோதித்தது “டர்ர டக்கர டர்ர டக்கர” என்று முழங்கத் தொடங்கிய பறை. அதை இசைத்தவர்கள் அதற்குரிய பயிற்சியுடன் ஆடினார்கள் என்றால், கேட்டவர்கள் அதற்குரிய எழுச்சியுடன் ஆடினார்கள். உடலின் ஒத்துழையாமை காரணமாக ஆட முடியாதவர்கள் கூட தலையையோ கையையோ காலையோ அசைத்தபடி அந்த ஆட்டத்தில் பங்கேற்றார்கள். அடுத்தடுத்த கலைக்குழுக்கள் வந்து தங்கள் திறன்களை வெளிப்படுத்த,  ஒரு மையமான இலக்கை நோக்கித் தொடங்கிய தமது பயணம் இந்தப் பிள்ளைகளால் இவ்வாறாகவும் தொடர்வது கண்டு, சிலை வடிவாகவே சிலிர்த்திருப்பார் தந்தை பெரியார்.



தமிழ் மண்ணில் இந்தச் சிந்தனைகளைக் கிளறிவிட்ட அவரது சிலைக்கு மாலையணிவித்து நடை இயக்கத்தைத் தொடங்கிவைத்தார் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத். உயர்ந்த செங்கொடிகள் வழிநடத்த, ஒருங்கிணைத்தார் மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா.



பாலினம் என்றால் பெண்ணும் ஆணும் மட்டுமல்ல, திருநங்கை, திருநம்பி,  மற்றுமுள மாறுபாலினத்தவரும்தான் என்ற அறிவார்ந்த புரிதல் இன்று வளர்ந்திருக்கிறது. அந்தப் புரிதல் அங்கேயும் ஒளிர்ந்தது.


“நீங்களெல்லாம் வந்து பங்கேற்பதால்தான் இந்த நடை இயக்கம் முழுமை பெறுகிறது,” என்று நான் சொன்னேன். அதற்குத் தனது ஏற்பைக் கைகுலுக்கலால் தெரிவித்தார் திருநங்கைச் செயல்பாட்டாளர் அக்னி. 


அந்த எழில்மிகு வண்ணக் கலவையை ஒற்றியெடுத்தது போல, அணிவகுப்பின் முன்பாக பல வண்ண விளக்குகளின் குடைகள் ஏந்திச் செல்லப்பட்டன. பாகுபாட்டு இருளின் பொழிவைத் தடுத்த வெளிச்சக் குடைகள்!


நடை என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது என்றாலும், அங்கிருந்து புறப்பட்டவர்கள் எல்லோரும் நடந்தார்கள் என்று சொல்வதற்கில்லை.  அவரவர்க்கு  வந்தபடியும், ஆட்டக்காரர்களுக்கு ஈடுகொடுத்தபடியும், ஆட முடியாதவர்கள் அடுத்த முறையாவது தாங்களும் ஆட வேண்டுமென ஆசைப்பட்டபடியும் ஆடிக்கொண்டேதான் சென்றார்கள்!  மகளிர் அமைப்பினர், தொழிலாளர் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், வழக்குரைஞர்கள், வணிகர்கள் எனப் பன்முகப் பிரதிநிதித்துவத்தோடு ஆடினார்கள். அந்த ஆட்டத்தில் உதிர்ந்து விழுந்தது வியர்வைத் துளிகளோடு, வயது வேறுபாடும், அறிமுகமாகாத பெண்களும் ஆண்களும் திருநர்களும் சேர்ந்து கும்மாளம் போடுவதாவது என்ற, காலமெல்லாம் ஒட்டவைக்கப்பட்டு வந்துள்ள சமூக அசூயையும்தான்.



தானும் இடுப்பை அசைத்துக்கொண்டே நண்பர் கேட்டார்: “நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதற்கு ஏன் இந்த இரவு நேரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்?”




“சமத்துவம் என்றால் அன்றாட நடைமுறைகளிலெல்லாம் ஊடுறுவ வேண்டுமல்லவா? இரவில் ஊர் சுற்றுவதென்றால் அது ஆண்களுக்கானது என்ற சமூக விதி ஒன்று இருக்கிறதல்லவா? அதை உடைப்பதற்காகத்தான், இரவுகள் எங்களுக்காகவும்தானடா என்று பெண்கள் தங்கள்  உரிமையை நிலைநாட்டிக்கொள்வதன் குறியீடுதான் இந்த ராப்பொழுது நடை.”


அந்த விளக்கத்தை அப்படியே எதுகை மோனையோடு எதிரொலித்தன அணிவகுப்பு முழக்கங்கள். அத்துடன் பெண்களின் நியாயங்களை வலியுறுத்துகிற, மாதரை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துகிற, சாதி ஆணவ வன்மங்களைத் தடுக்கும் சட்டம் இயற்றிடக் கோருகிற, இயற்கையின் பாலினப் பன்மைத்துவத்தைக் கற்பிக்கிற, அத்துமீறல்களிலிருந்து பாதுகாக்கப்படுவதற்குக் குழந்தைககளுக்கு உள்ள உரிமைகளை எடுத்துரைக்கிற முழக்கங்கள் அவை.




சாலை முடிவில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக மாணவர் சங்க மாநிலத் தலைவர் மிருதுளா, பாலின சமத்துவ உறுதியேற்பை முன்மொழிந்தார்கள். பறையிசைப் பின்னணியோடு அனைவரும் வழிமொழிந்தார்கள்.


“பாலின சமத்துவத்துக்கான இந்த நடை, அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் ஏவிவிடுகிற  அனைத்து ஆதிக்கங்களையும் ஏறி மிதிக்கப் புறப்பட்டிருக்கிறது,” என்று தன் வாழ்த்துரையில் நயம்படக் குறிப்பிட்டார் சம்பத்.


இந்த நடை மாரத்தான் ஓட்டம் போல தொலைவிலும் பரப்பிலும் விரிவடைய வேண்டும், நாளை தமிழகம் முழுவதும் பரவ வேண்டும், நாளை மறுநாள் நாடுதழுவிய இலக்குகளைச் சென்றடைய வேண்டும் என்ற பெருங்கனவுப் பயிர் மனதில் விதைக்கப்பட்டது. சில மீட்டர் தொலைவில் அலையடித்த வங்கக் கடல் அதற்கு நீரூற்றியது.


[0]

செம்மலர்’ ஆகஸ்ட் 2026 இதழில், சென்னை பாலின சமத்துவ நடை பற்றிய எனது சித்தரிப்பு


படங்கள்: கவி மணி


No comments: