Monday, 27 July 2026

விருதுகளால் விசிறிவிடப்படும் வெறுப்பரசியல்



லை, இலக்கியப் படைப்பாக்கத்தில் தலையாய இடம் வகிப்பது அரசியல் சமூக விமர்சனம் ஆகும். அந்த வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் ஒரு சிறப்பான வளர்ச்சி நிலைதான், ஏற்கெனவே வந்த படைப்புகளையும் வரலாற்றுப் பதிவுகளையும் மறுவாசிப்புக்கும் மறுவிமர்சனத்துக்கும் உட்படுத்துவது.

எந்தவொரு வரலாற்றுப் பதிவையும் அவரவர் கண்ணோட்டத்தில் மறுவிமர்சனத்திற்கு உட்படுத்தும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அது ஆரோக்கியமான தொடர் விவாதங்களுக்கும் புதிய தெளிவுகளுக்கும் இட்டுச்செல்ல வேண்டும்.

புனிதம் தகர்த்த நாவல்

2009ஆம் ஆண்டில் ஹிலாரி மாண்டல் எழுதிய ‘உல்ஃப் ஹால்’ (ஓநாய் மண்டபம்) என்ற ஆங்கில நாவல் வெளியானது. 16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட எட்டாம் ஹென்றி அமைச்சரவையில் தலைமை அமைச்சராக இருந்த தாமஸ் மோர் ஒரு புனிதப் பிறவியாகவே சித்தரிக்கப்பட்டவர். தாமஸ் க்ராம்வெல் என்ற ஓர் எளிய மனிதர் தலைமை அமைச்சரின் போலித்தனங்களை உரித்துத் தாமஸ் மோரின் புனிதப் பிம்பத்தைக் கலைப்பதுதான் அக் கதையின் கரு.

ஆங்கில இலக்கிய உலகிலும், பொதுவெளியிலும் விவாத அலைகளைக் கிளப்பிய அந்த நாவல் பின்னர் புக்கர் பரிசு உள்பட, உலகளாவிய பல விருதுகளைப் பெற்றது. கத்தோலிக்கத் திருச்சபையின் பிடியிலிருந்து அரசு விடுபட்டதைச் சித்தரித்த புனைவு என்று திறனாய்வாளர்கள் பாராட்டினார்கள்.
பிபிசி நிறுவனம் 2015இல் அந்தக் கதையைத் தொலைக்காட்சித் தொடராகவும் தயாரித்தது. உலக மேடைகளில் இப்படி வேறு பல படைப்பாக்கங்களையும் காண முடியும்.

இந்தியாவில், 1984இல் வெளியான ‘ரண்டாமூழம்’ மலையாள நாவலில், மகாபாரதக் கதையைப் பாண்டவ சகோதரர்களில் ஒருவனான பீமன் கண்ணோட்டத்தில் சொன்னார் எம்.டி. வாசுதேவன். அந்த நாவல் பாஞ்சாலி மீது பீமன் கொண்ட உண்மையான காதலை விவரித்தது.

மிக முக்கியமாக, போரின் கொடூரங்கள் குறித்த பதற்றத்தையும் உறுத்தலுணர்வையும் ஏற்படுத்தியது. மலையாள இலக்கிய உலகம் அதற்கு வயலார் விருது உள்ளிட்ட மரியாதைகளை அளித்து மகிழ்ந்தது.

தமிழில் இராமாயணத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்திய ‘இராவண காவியம்’ (புலவர் குழந்தை – 1946), பெண்ணின் சுயமரியாதை உணர்வை வேறு கோணத்தில் சொன்ன ‘அகல்யை’ (1934), ‘சாபவிமோசனம்’ (1943) (புதுமைப்பித்தன்), மன்னர்களின் சாகசத்தையும் சல்லாபத்தையும் விவரித்த கதைகளுக்கு மாறாக அந்நாள் மக்களின் கதைகளைப் பேசிய ‘உப பாண்டவம்’ (எஸ். ராமகிருஷ்ணன்) என குறிப்பிடத்தக்க பல படைப்புகள் வந்துள்ளன.

மூவேந்தர்களையும் பரம்புமலை பாரியையும் பற்றிய முந்தைய பாடங்களிலிருந்து விலகி, சமவெளிப் பேரரசுகளின் மண்ணாதிக்க வெறியோடு போராடிய மலைக்காட்டு மக்கள் தலைவனின் மூலமாக அவர்களின் வாழ்வியலையும் நமக்குக் காட்டியது “வேள்பாரி” (சு. வெங்கடேசன், 2018).

அதைப் படித்த பல குடும்பங்களில் குழந்தைகளுக்குக் கதை மாந்தர்களது பெயர்கள் சூட்டப்படுகிற பெரும் அங்கீகாரம் அந்த நாவலுக்கு இன்றளவும் கிடைத்தவண்ணம் உள்ளது.>

கட்டபொம்மனும் ஹைதரும்

திரைப்படங்களிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கொள்ளைக்காரனாகவே சித்தரிக்கப்பட்டு வந்தவனை, விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு அத்தியாயமாக முன்வைத்தது சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் நடிப்பில், சக்தி கிருஷ்ணசாமி எழுத்தில், பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வந்த “வீரபாண்டிய கட்டபொம்மன்” (1959).

மதநல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்ததற்காக மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொல்லப் புறப்பட்டு பின்னர் மனசாட்சியின் தண்டனைக்கு உள்ளாகிறவனின் கதையைக் காட்டிய ‘ஹே ராம்’ (கமல்ஹாசன், 2000) ஒரு வகை மறுவிமர்சனம்தான்.

காஷ்மீர் மண்ணை மீட்கும் நாயகர்களின் சாகசங்களை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் படங்களிலிருந்து மாறுபட்டு, அடக்குமுறைகளால் அல்லாடும் எளிய மக்களின் துயரத்தைத் திரைக்குக் கொண்டு வந்த இந்திப் படம் ‘ஹைதர்’ (2014). ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற “ஹேம்லட்’ நாடகத்தைத் தழுவி பஷாரத் பீர், விஷால் பரத்வாஜ் எழுதி, பின்னவரின் இயக்கத்தில் ஷாஹித் கபூர், தபு உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

1919இல் பஞ்சாப் மண்ணின் ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் திரண்டிருந்த மக்களைத் துப்பாக்கிக் குண்டுகள் தீருமட்டும் கொன்று குவித்துக் குதூகலமடைந்தவன் ஜெனரல் டயர். அவனைச் சுட்டுக்கொன்ற உத்தம் சிங் ஒரு பழிவாங்கும் தீவிரவாதியாகவே காட்டப்பட்டு வந்திருக்கிறார். அவரது ஆழ்ந்து ஆராயும் திறனையும், அடக்குமுறைகளுக்கு எதிராகக் கொந்தளித்த துணிவையும் சொன்னது 2021இல் ஓடிடி தளத்திற்கு நேரடியாக வந்த ‘சர்தார் உத்தம்’. கதையாக்கம் சுபேந்து பட்டாச்சார்யா, ரிதேஷ் ஷா, முதன்மைப் பாத்திரத்தில் விக்கி கௌஷல், இயக்கம் சுஜீத் சர்க்கார்.

பகை மூட்டப் படங்கள்

இப்படிப்பட்ட மறுவிமர்சனப் படைப்புகள் வரலாற்றுப் பரப்பின் புதிய எல்லைகளுக்கு அழைத்துச் செல்கின்றன. மாற்றி யோசிக்கும் கலையைக் கற்றுத் தருகின்றன. நலமான மாற்றங்களுக்கு வித்திடும் விவாத வயலைப் பண்படுத்துகின்றன. ஆனால் மறுவிமர்சனம் என்ற போர்வையில் அப்பட்டமான வெறுப்பரசியல் நெருப்பை வளர்க்கிற, மக்களிடையே பகைமையைைக் கிளறிவிடுகிற கைங்கரியங்களில் சிலர் இறங்குகிறார்கள்.

ஏதோ காரணத்தால் நேரடியாகவோ மறைமுகவோ தங்களை ஒப்படைத்துக்கொண்ட அமைப்புகளின் திட்டங்களுக்கு ஏற்பக் கதைகளை உருவாக்குகிறார்கள். நம்புவதற்காக சில உண்மைகளோடு நம்ப வைப்பதற்கான பொய்களைக் கோர்த்துச் செய்கிறார்கள்.

கலையும் அரசியலும் எப்போதும் தனித்தனியாக இயங்குவதில்லைதான். ஆனால், அதிகார பீடத்தின் குரலாகக் கலை மாறும்போது, அது தனது உயிராதாரச் சுதந்திரத்தை இழக்கிறது, நேர்மையைத் துறக்கிறது, அரசாங்கப் பரப்புரைக் கருவியாகச் சுருங்குகிறது.

காந்தி மறுகொலை

விடுதலைப் போராட்டக் காலத்தில், பல்வேறு இயக்கங்கள் தங்களது வழிகளில் இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தன. அப்போது காந்தி மேற்கொண்ட வன்முறையற்ற பாதை நாட்டின் பெருந்திரளான மக்களை ஈர்த்தது, போராட்டத்தில் ஈடுபட வைத்தது. அந்நேரத்தில் அவரோடு முரண்பட்டவர்களும் பின்னர் இதை ஏற்றுள்ளார்கள்.

விடுதலை வரலாற்றின் அழுத்தமான அத்தியாயங்களில் ஒன்றாக அது பதிவாகிவிட்டது. ஆனால், அவருடைய அந்தப் பாதையால்தான், சாவர்க்கர் கையில் எடுத்த ஆயுதமேந்திய பாதை பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும், அதனால்தான் சாவர்க்கரின் லட்சிய பாரதம் உருவாகாமல் போய்விட்டதாகவும் விவரிக்கிறது ‘சுதந்திரிய வீர் சாவர்க்கர்’ என்ற திரைப்படம் (2024). சாவர்க்கரின் லட்சிய பாரதம் என்பது இந்துராஷ்டிரம் எனப்படும் ஒற்றை மத ஆதிக்க அரசுதான். இந்திய மக்கள் தங்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் அதை நிராகரித்தார்கள்,

எல்லா மதத்தினருக்கும் சொந்தமான, மதமே இல்லாதவர்களுக்கும் உரியதான நாடு இது, இதன் அரசு மதச்சார்பற்றது என்று அறிவிக்கும் அரசமைப்புச் சட்டத்தை நிறுவினார்கள். ஆனால், சாவர்க்கரை கதாநாயனாக்கி, காந்தியை வில்லனாக்கியிருக்கிறார் உட்கர்ஷ் நைதானி என்பவரோடு சேர்ந்து கதையை எழுதியவரும், சாவர்க்கர் பாத்திரத்தில் நடித்தவருமான இயக்குநர் ரந்தீப் ஹூடா.

நியாயப்படுத்தப்படும் அநியாயம்

ஒரு வரலாற்றுத் தேவையாகவும், அரசியல் உடன்பாடாகவும் கொண்டுவரப்பட்ட 370ஆவது சட்டப் பிரிவு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு நிலையை வழங்கியிருந்தது. 2019இல் பாஜக அரசு அதை விலக்கிய நடவடிக்கையை மையமாகக் கொண்டது ‘ஆர்ட்டிகிள் 370’. மேலோட்டமாகப் பார்த்தால் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியான கதாநாயகன் காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகளையும் துவம்சம் செய்கிற மாமூலான ஆக்‌ஷன் படம்.

உற்று நோக்கினாலோ, அந்தச் சட்டத்தை விலக்க மத்திய அரசு முடிவு செய்தது, அதற்கு எதிர்ப்புவராமல் தடுப்பதற்காகப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருந்தது, மக்களின் அன்பைப் பெற்ற தலைவர்களைச் சிறையில் அடைத்தது போன்ற செயல்கள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும். மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தலைவர்கள் ஊழல் பேர்வழிகளாகவும், சட்டத்தைச் சுயநலத்திற்குப் பயன்படுத்தியவர்களாகவும் வடிக்கப்பட்டிருப்பார்கள். இது யாருக்கு முதுகு சொறிந்துவிடுகிற வேலை என்று சொல்லத் தேவையில்லை. யமி கௌதம், பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்க, ஆதித்ய சுஹாஸ் ஜம்பாலே படத்தை இயக்கியிருக்கிறார்.

அதிரடி அடாவடி

“கோலிவுட்” திரைவட்டாரம் என்ன இதற்கெல்லாம் சளைத்ததா என்று காட்டுவது போல் 2024இல் வந்தது ‘அமரன்’. சிவ அரூர், ராகுல் சிங் இருவரும் இணைந்து எழுதிய ‘இந்தியாவின் அச்சமற்றோர்: நவீன ராணுவ நாயகர்களின் உண்மைக் கதைகள்’ (India’s Most Fearless: True Stories of Modern Military Heroes) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மேஜர் முகுந்த் வரதராஜனின் சில அனுபவங்களை உணர்ச்சிகரக் காட்சிகளும் இது மனித உரிமை மீறல் இல்லையா என்று கேட்க வைத்த நிகழ்வுகளும் கலந்து திரைக்கதையாகச் சொல்லும் படம் இது.

பாதுகாப்புப் படையினர் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்களது துணிச்சலான செயல்களையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லைதான்.
ஆனால், மறுதரப்பினரின் வாதங்களை மருந்துக்கும் தொட்டுக்காட்டாத ஒரு தரப்புத் தீர்ப்புகளை ஏற்பதற்குமில்லை. அப்படியான தீர்ப்பைத்தான் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி பங்கேற்புடன் இந்தப் படம் அளித்தது. இதைக் கூட்டாகத் தயாரித்தது – கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ்.

“சில உண்மைகளைக் கூறுவதே நோக்கம்”, “யாரையும் தாக்குகிற எண்ணம் ஏதுமில்லை”, “ஒரு வணிகத் திரைப்படத்துக்கான விறுவிறுப்பு நிகழ்வுகள் இருப்பதால் தயாரித்தோம்”... என்றெல்லாம் படங்களைத் திரைக்கு அனுப்பியவர்கள் சொல்கிறார்கள். ஆனால்,
ஏற்கெனவே எண்ணற்ற வணிகப் படங்கள் மக்கள் மனங்களில் பயங்கரவாதிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும், இரக்கமற்ற சதிகாரர்கள் என்றும், அந்நிய சக்திகளின் ஏவலர்கள் என்றும் பிம்பங்களைக் கட்டிவைத்திருக்கின்றன. நாயகர்களை வீரர்களாகவும் தேச பக்தர்களாகவும் காட்டுவதற்காக உறுத்தலே இல்லாமல் அந்தப் பிம்பங்கள் கட்டப்பட்டன.

இதன் சமூக விளைவுகளை யாராவது சொல்லிக் காட்டினால், “சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்,” என்று கூறிப் பதுங்கிக்கொள்வார்கள்.
அவ்வகைப் படங்கள் மறைமுகமாகவும் துண்டுதுண்டாகவும் கட்டிய எதிர்மறைப் பிம்பங்களை நேரடியாகவும் ஒட்டுமொத்தமாகவும் நிலைப்படுத்துகிற கைங்கரியத்தைத்தான் வீர் சாவர்க்கர்களும் ஆர்ட்டிகிள் 370களும் அமரன்களும் செய்கின்றன.

அதிகாரப்பூர்வ அங்கீகாரங்கள்

கொடுமை என்னவென்றால், இவ்வகைப் படங்களுக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. “கட்” இல்லாமல் தணிக்கைச் சான்றிதழும், தேசிய விருதுகளும் வழங்குவது வரையில் அந்த அங்கீகாரம் நீள்கிறது.

2024ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இந்த ஜூலை 18 அன்று ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டன. அதில் –
காந்தியை வில்லனாக்கிய ‘வீர சாவர்க்கர்’ இயக்குநர் ரந்தீப் ஹூடாவுக்குச் சிறந்த முதல் பட இயக்குநர் விருது, காஷ்மீர் மக்களுக்கு சிறிதளவேனும் நம்பிக்கை ஒளி தந்த 370 சட்டவிதி நீக்கப்பட்டதை நியாயப்படுத்திய ‘ஆர்ட்டிக்கிள் 370’ சிறந்த திரைப்பட விருது, அதில் நடித்த யமி கௌதமுக்குச் சிறந்த நடிகைக்கான விருது, காஷ்மீர் முஸ்லிம் மக்களைப் பயங்கரவாதிகளாகவும், அவர்களை இராணுவத்தினர் தேடிக் கொன்று கொண்டாடுவது சரியென்றும் சித்தரித்த ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்குச் சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளன

சமூக அக்கறையாளர்களைக் கவலைக்கு உள்ளாக்கி, கடும் விமர்சனங்களுக்கு உள்ளான இப்படங்களுக்கு உயரிய விருதுகள் அளிக்கப்பட்டதில் ஒரு உள்ளார்ந்த அரசியல் செய்தி இருக்கிறது.

காலப்போக்கில், ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கும் நோக்கங்களுக்கும் துணை போகும் படங்களுக்கே அங்கீகாரம் அளிக்கப்படும் என்பதே அந்தச் செய்தி. ஏற்கெனவே இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருதுப் பட்டியலை அமைச்சகம் நிறுத்திவைத்த நடவடிக்கை கூட இந்தச் செய்திக்கான முன்னோட்டமே.

“எடுத்தால் இரண்டரை மணி நேரப் பொழுதைப் போக்கடிக்கிற படங்களாக எடுங்கள், இல்லையேல் பகைப் புகை மூட்டம் கிளப்பும் படங்களாக எடுங்கள்,” என்ற அறிவிக்கப்படாத நிபந்தனையும் அந்தச் செய்தியில் அடங்கியிருக்கிறது.

உலக அரங்கில் இந்திய சினிமா தனக்கான மரியாதையை, சமூகப் பொறுப்புள்ள, நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கிற படங்களால் பெற்றது. அந்தப் பெருமையைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியக் கலையுலகினர் என்ன செய்யப்போகிறார்கள்? 

[0]

தீக்கதிர்ஜூலை 26 ஞாயிறு இதழ்வண்ணக்கதிர்இணைப்பில் எனது கட்டுரை

Friday, 10 July 2026

மர்மத்தைக் கண்டுபிடிக்க ஓர் ஓட்டம்! - ‘ரன்’


னக்கு ஏற்படுத்தப்பட்ட பயங்கரமான நிலைமைகளிலிருந்து சக்கர நாற்காலிச் சிறுமி ஒருத்தி வெற்றிகரமாகத் தப்பித்து ஓடும் கதைதான் “ஓடு” (ரன்). நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிற இந்த 2020ஆம் ஆண்டுத்  திரைப்படம் பற்றிய தகவலில் “ஹாரர்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆவி, பேய், காட்டேரி சங்கதிகளோ, நடுங்க வைக்கும் அதிரடிக் காட்சிகளோ கிடையாது. ஆயினும் இறுதி வரையில் நாம் என்ன நடந்தது, நடப்பது என்ன என்ற ஒரு பதைப்போடு அமர்ந்திருக்கிறோம். ஹாரர் படம் என்பதற்கான ஒரு மாறுபட்ட அனுபவத்தைப் பெறுகிறோம். 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாவட்டத்தில் பாஸ்கோ நகரத்தில் ஒரு மருத்துவமனை. கவலைக்குரிய அளவுக்குக் குறைந்த எடையோடும், பல்வேறு உடல் குறைபாடுகளோடும் பிறந்த தன் குழந்தையை உயிர்வளிப் பெட்டிக்குள் காணும் டயான், “இவள் உயிர் வாழ்வாளா” என்று மருத்துவர்களிடம் கண்ணீர் மல்கக் கேட்பதிலிருந்து கதை தன் ஓட்டத்தைத் தொடங்குகிறது. 

17 ஆண்டுகள் ஓடிய பிறகு, தனது உடலின் ஓர் அங்கமாகவே சக்கர நாற்காலி மாறிவிட்ட நிலையில் வளைய வருகிறாள். வாஷிங்டன் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதிவிட்டு, சேர்க்கைக் கடிதத்துக்காகக் காத்திருக்கிறாள். கடிதம் வருகிறது – அவளுடைய விண்ணப்பம் மறுக்கப்படுகிறது என்ற தகவலோடு. அவள் மனம் நொந்துவிடாமல் ஆறுதலாக அரவணைத்துக்கொள்கிறாள் தாய் டயான். 

சமூக மதிப்பு 

கால்கள் முடங்கியதோடு வேறு பல சிக்கல்களுடனும் இருக்கும் க்ளோ மீது டயான் பொழியும் அன்பும், அக்கறை மிகுந்த பராமரிப்பும் சமூகத்தில் அவளுக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தியுள்ளன. சுமையாகிவிட்ட பெண்ணை வளர்க்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் கம்பீரமாக நடமாடுகிறாள், திரையரங்கம் உள்பட எல்லா இடங்களுக்கும் மகளை அழைத்துச் செல்கிறாள். 


நாட்கள் இப்படியே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கடைக்குச் சென்று வரும் டயான் மேசையில் வைக்கும் மளிகைகள் பையில், தனக்கான குமிழி மாத்திரை பாட்டிலும் இருப்பதைக் கவனித்து அதை வெளியே எடுத்துப் பார்க்கிறாள் க்ளோ. அதில் தன்னுடைய பெயர் இல்லாமல் அம்மாவின் பெயர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். மருந்துக் கடையில் ரசீது போடுவதற்காகத் தனது பெயரை எழுதிவிட்டார்கள் என்று டயான் சமாளிக்கிறாள். க்ளோ சந்தேகத்துடனும் துறுதுறுப்போடும் சொந்தப் புலனாய்வைத் தொடரும்போது, தன் பெயரிலேயே வந்த பாட்டிலின் சீட்டைக் கிழித்துப் பார்த்தால் உள்ளே டயானின் பெயர் உள்ள சீட்டு ஒட்டப்பட்டிருக்கிறது. 

கணினியில் கூகுள் மூலம் அந்த மருந்து எதற்காக என்று அறிய முயல்கிறாள் – ஆனால் வீட்டில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்திற்கு அழைத்துச்செல்லுமாறு கேட்டுக்கொள்கிறாள். அரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது “டாய்லட் போய்வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வரும் க்ளோ, சாலையின் எதிர்ப்புறம் இருக்கும் மருந்துக் கடைக்குச் சக்கர நாற்காலியிலேயே செல்கிறாள். கடைக்காரரிடம் விசாரிக்கிறபோது குறிப்பிட்ட அந்த மருந்து, நாய்களுக்குக் காலில் அடிபடும்போது செலுத்தப்படுவதற்கானது என்றும், மனிதர்களுக்குச் செலுத்தினால் கால்கள் செயலிழக்கும் என்றும் தெரிந்துகொள்கிறாள். மகளைத் தேடி அங்கே வந்துவிடும் டயான், ஏதோ சொல்லிச் சமாளித்து அழைத்துப் போகிறாள். 

அவிழும் மர்மம் 

அடுத்த நாள், டயானின் அலமாரி இழுவறைக்குள் தேடும் க்ளோ, பல நாட்களுக்கு முன்பே பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த சேர்க்கை அனுமதிக் கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். அத்துடன் 17 ஆண்டுகளுக்கு முன் பாஸ்கோ மருத்துவமனையில் சிசுக்கள் மாற்றப்பட்டது பற்றிய செய்தி வந்திருந்த பத்திரிகைக் காகிதம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறாள். தான்  டயானின் மகளல்ல, மருத்துவனையிலிருந்து கடத்தி வந்து வளர்க்கப்படுகிறவள் என்ற பயங்கரமான உண்மையையும் கண்டுபிடிக்கிறாள். 

மறுநாள், தனது மாடி அறையின் கதவைத் திறக்க முடியாதபடி அடைக்கப்பட்டிருப்பதை அறிகிறாள். அசைக்க முடியாத கால்களோடு உடலால் நகர்ந்து நகர்ந்து சன்னல் வழியாக வெளியே கூரை ஓட்டில் விழுகிறாள். கொஞ்சம் பிசகினாலும் தரையில் விழுந்து அடிபடக்கூடும் என்ற அபாயநிலையிலும், கூரை மீது உடலால் நகர்ந்து நகர்ந்து அடுத்த அறை வழியாக முன்னேறி, தனது அறைக் கதவைத் திறக்கிறாள். 

வீட்டிலிருந்து தப்பித்துச் செல்லும் க்ளோவுக்கு உதவும் அஞ்சல்துறை ஊழியரின் கழுத்தில் டயான் நச்சு மருந்து ஊசியைச் செலுத்திக் கொல்கிறாள். காயங்களுடன் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருக்கும் க்ளோவை, அரை மயக்க நிலையிலேயே சக்கர நாற்காலியில் வைத்துக் கையில் துப்பாக்கியோடு கடத்துகிறாள்.  அங்கே நடக்கிற அடுத்தடுத்த பரபரப்புகளின் உச்சத்தில், காவலர்களால் சுடப்படுகிறாள். ஐந்து ஆண்டுகள் கடக்கின்றன. மாற்று மருந்துகள், பயிற்சிகள் உதவியோடு மெல்ல மெல்ல தானே எழுந்து நடக்கப் பழகுகிறாள் க்ளோ.  அதே மருத்துவமனையில் கைதிகள் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் டயானைச் சந்திக்கும் க்ளோ, முன்பு அவள் தனக்கு என்ன செய்தாளோ அதையே அவளுக்குத் திருப்பிச் செய்கிறாள். 

டயான் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொண்டாள்? தனக்குப் பிறந்த குழந்தைக்கு ஏற்பட்ட கதியால் உடைந்து போனவள், 'முன்சாசன் சிண்ட்ரோம் பை பிராக்சி' எனப்படும் மனநோய்க்கு உள்ளாகிறாள். இந்நோயால் பாதிக்கப்படுகிறவர்கள் (பெரும்பாலும் தாய்மார்கள்), தங்களின் குழந்தைகளோ, குடும்பத்து முதியவர்களோ தங்களையே சார்ந்திருக்கிற நோயாளிகளாகத்தான் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதற்காகக் குழந்தைகளின் உடல் நலத்தைத் திட்டமிட்டே  சீர்குலைப்பார்கள்.  அல்லது அவர்களுக்குப் பரிதாபத்துக்குரிய நோய் இருப்பதாகப் பிம்பத்தை உருவாக்குவார்கள். 

இப்படியொரு போதை

 “அடடா, இப்படிப்பட்ட மாற்றுத்திறனாளிக் குழந்தையை இந்தத் தாய் எவ்வளவு அர்ப்பணிப்போடு வளர்க்கிறார்," என்று சமூகத்திடமிருந்து கிடைக்கும் பாராட்டையும் அனுதாபத்தையும் எதிர்பார்க்கிற ஒரு போதைக்கு அவர்கள் ஆட்படுகிறார்கள். 

ஓர் உடலியல் மாற்றுத் திறனாளியின் சாகசமாக ஓடத் தொடங்கி, இன்னோர் உளவியல் மாற்றுத் திறனாளியின் சதியைப் பற்றிய கதையாக முடிகிறது படம். பல்வேறு நாடுகளிலும் திரைப்படத் திறனாய்வாளர்களின் பாராட்டையும், திரையரங்குகளில் வணிக வெற்றியையும் பெற்ற இந்தப் படம் ஒரு விமர்சனத்துக்கும் உரியதுதான். மாற்றுத் திறனாளியாக இருந்து மீள்கிற ஒருவரது மனித நேயத்தை உயர்த்திப் பிடிப்பதற்கு மாறாக, பழி உணர்வை முன்வைத்துவிட்டார்கள். க்ளோ எடுக்கிற முடிவுக்கான வாத நியாயங்கள் இருக்கின்றன என்பதும் உண்மையே. 

க்ளோவாக நடித்த கீரா ஆலன் உண்மையாகவே கால்கள் செயலிழந்த மாற்றுத் திறனாளிதான். அவரது நடிப்புத் திறன் சிறப்பாக வெளிப்படுகிறது. டயானாக வரும் சாரா பால்சன் நடிப்பில், மகள் தன்னிடமிருந்து விலகிவிடக்கூடாது என்ற துடிப்பும், அதற்காக சூழ்ச்சிகளுக்குத் தயங்காத முனைப்பும் நுட்பமாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் ஹில்லாரி ஸ்பேரா, இசையமைப்பாளர் டோரின் போரோடேல், தொகுப்பாளர்கள் நிக் ஜான்சன், வில் மெரிக் உள்ளிட்ட சக கலைஞர்களின் பங்களிப்பு படத்திற்கு நிறைவைச்  சேர்த்திருக்கின்றன. 


இயக்குநர் அனீஷ் சாகந்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது முதல் படமான “செர்ச்சிங்” (தேடல்), கடத்தப்பட்ட தன் மகளை ஒரு தந்தை கணினியையும் கைப்பேசியையும் வைத்தே கண்டுபிடித்து மீட்கிற விறுவிறுப்பு நிறைந்த கதையைக் கொண்டிருந்தது. 

மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்ப்பது அளவில்லாத பரிவை அல்ல, சக மனிதராக சம மரியாதையோடு நடத்தப்படுவதைத்தான் என்ற உண்மையை இந்தப் படம் மாறுபட்ட கோணத்தில் சொல்கிறது. மிகையான பாசம் உடைக்கப்பட வேண்டிய ஒரு வகை அடிமைக் கூண்டுதான் என்றும் எடுத்துக்காட்டுகிறது.

[0]

மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு நடத்திடும் ‘உரிமைக்குரல்’ காலாண்டிதழில் எனது கட்டுரை

 

Wednesday, 1 July 2026

மக்கள் மனதில் வாசம் செய்யும் மண்வாசனைப் படைப்பாளி



ரங்கத்திரை உயிர்ப்புற்றதும் "என் இனிய தமிழ் மக்களே..." எனக் கூப்பிய கரங்களுடன் கனிவும் கம்பீரமும் கலந்து விளிக்கும் அந்தக் குரல், குறிப்பிட்ட கதைக் கருவை மட்டுமா சொன்னது? “இந்த நிலைமைகளைப் பற்றி நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்,” என்ற வேண்டுகோளையும் அல்லவா விடுத்தது! அப்படிச் சொல்வதற்கும் மக்கள் கேட்பதற்கும் நிறைய வைத்திருந்தார் “பாசத்திற்குரிய பாரதிராஜா” 


தேனி அல்லிநகரத்தில் 1941 ஜூலை 17இல் பெரிய மாயன்–கருத்தம்மாள் மகன் சின்னசாமியாகப் பிறந்து, சென்னை  திரைநகரத்தில் இயக்குநர் இமயமாகப் படர்ந்து, 2026 ஜூன் 10இல் விடைபெற்றவர் தமிழ் சினிமாவுக்கு விட்டுச்சென்றவை தனித்துவப் பங்களிப்புகள். புகழஞ்சலி செலுத்தும் எல்லோருமே குறிப்பிடுவது, தமிழ் சினிமாவைப் படப்பிடிப்புக் கூடங்களின் வெப்ப வெளிச்சத்திலிருந்து விடுவித்து  வயல் வரப்புக் குளுமை வழியாக கிராமத்துக்குள் இட்டுவந்ததைத்தான். காட்சிப் படிமங்களில் மட்டுமல்லாமல், கதாபாத்திரங்கள் நடமாடுவதில் நிலவிய நாடக மேடைக்குரிய நடைகளிலும் மாற்றத்திற்கு வழியமைத்தார்.


திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டும் உலகளாவிய சில முன்னோடிகள்: தனி மனித இயல்புகளையும் வர்க்க முரண்களையும்  மண் மணம் தோய்த்து ஜப்பான் திரைமொழியை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் அகிரா குரோசாவா. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தாலிய சினிமாவை வீதிகளுக்குக் கொண்டுவந்து “நியோ ரியலிசம்” சித்தரிப்புக்கு முன்னுரை எழுதியவர் விட்டோரியோ டீ சிகா. உலக அரங்குகள் இந்திய சினிமாவுடன் இந்தியர் வாழ்வையும் பேசவும் வைத்தவர் சத்யஜித் ரே. ஸ்வீடன் படங்களில் காதல் வஞ்சகம் மரணம் ஆன்மீகம் ஆகியவற்றை மெய்யியல் மேடையேற்றியவர்  இங்மார் பெர்க்மேன். அமெரிக்காவின் குறிப்பிட்ட நிலப்பரப்புகளில் வாழ்வோரது பண்பாடுகளைப் பதிவு செய்து “வெஸ்டர்ன் சினிமா” என்ற வகைப்பாட்டுக்கு வழியமைத்தவர் ஜான் ஃபோர்ட். அவர்களது ஆக்கங்களில் உள்ள இக்கூறுகளை பாரதிராஜா படைப்புகளில் காணலாம்.


ஊரில் ஒரு சுகாதார ஆய்வாளராக வேலை முறை வாழ்க்கையைத் தொடங்கியவர்,  நாடகங்களில் தொடர்ந்தவர், நடிப்பு ஆசையுடன் கோலிவுட் வளாகத்தில் நுழைந்தவர், இயக்குநராகப் பரிணமித்தார். மிகு ஒப்பனையற்ற அசல் முகங்களை கேமரா முன்  உலவவிட்டார். பாடல் காட்சிகளில் மட்டும் படம் பிடிக்கப்பட்ட வயல் வரப்புகளைத் தாண்டி கிராமத்துக்குள் கேமரா பயணிக்கச் செய்தார். பல கிராமங்களில் படப்பிடிப்புக்கென்றே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன –அதற்கு “கிளாப்” அடித்தவர் பாரதிராஜாதான்.


சமூகத்தில் புரையோடிய சாதிப் போலிமையின் கன்னத்தில் அறைந்தவர், அழகுப் பதுமைகளைப் புதுமைப் பெண்ணாய் சீறியெழ வைத்தவர், முதலாளியம் வளர்த்துவிட்ட சமூக அமைப்பில் தனி மனிதர்களுக்குள் குற்றமுறு உளவியல் புகுந்திருப்பதை வெளிப்படுத்தியவர், அரசியல் கள வஞ்சகங்களை அம்பலப்படுத்தியவர், அரசாங்க அலுவலக அலட்சியங்கள் பற்றிய பொதுமக்கள் ஆதங்கத்தை ஒலித்தவர், கிராமம் நகரம் கடலோரம் என ஊர்களின் உட்புறம் இன்னமும் இன்னமும் ஊடுருவிச் செல்ல முன்வாசல் அமைத்தவர்… அனைத்தும் உண்மை.


கூடுதலாக எனது  ஓர் அவதானிப்பு – வழக்கமான தமிழ் சினிமாவுக்கான பாதையை மட்டுமல்ல, மாறுபட்ட சினிமாவுக்கான போக்கையும் மாற்றியவர். சிறப்புத் திரையிடல்களில் மிகச் சில பேர் மட்டுமே பார்த்துச் சிலாகித்தால் போதுமென்ற கண்ணோட்டக் குறுக்கலையும் தகர்த்தவர். கதைக் கூர்மையும் கலை நேர்மையும் உள்ள படைப்புகளுக்காகத் திரையரங்குகளுக்கு வெகுமக்கள் திரளை ஈர்க்க முடியுமென்று நிறுவியவர்.


1977இல் புதிய அழகியலால் அவரைக் கவனிக்க வைத்த ‘16 வயதினிலே’ தொடங்கி, அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘நிறம் மாறாத பூக்கள்’ மலர்ந்து, ‘கிழக்கே போகும் ரயில்’ தடதடத்து ஓடி, யார் தடுத்தாலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்று கால் நனைத்து, ‘சிவப்பு ரோஜாக்கள்’ மணந்து, ‘டிக் டிக் டிக்’ ஒலித்து, ‘வேதம் புதிது’ வாசித்து, ‘முதல் மரியாதை‘ செலுத்தி, ‘கடல் பூக்கள்’ தூவி, ‘கடலோரக் கவிதைகள்’ எழுதி, ‘புதுமைப் பெண்’ புறப்பட்டு, தன் தாயின் பெயரை எல்லோருமாக ‘கருத்தம்மா’ என உச்சரிக்க வைத்து, 2020இல் நிறைவாக உறுதிப்படுத்திய ‘மீண்டும் ஒரு மரியாதை’ வரையில், இடையிடையே தெலுங்கில் நான்கு, இந்தியில் ஒன்று உள்பட, மொத்தம் 46  முத்திரைகள்.


முதல் படைப்பும் பெருமளவு பங்களிப்பும் தமிழில்தான் என்றாலும் முதன்முதலில் சிறந்த மாநிலமொழிப் படத்துக்கான தேசிய விருது பெற்றது தெலுங்கில் குல விவக்‌ஷலனு கண்டிஞ்சின (சாதிப் பாகுபாடுகளைச் சாடிய) ‘சீதாகோகா சிலுகா’ (1981).  அதன் பின் ‘முதல் மரியாதை’ (1985), ‘வேதம் புதிது’ (1987), ‘கருத்தம்மா’ (1994). ‘அந்தி மந்தாரை’ (1996) , ‘கடல் பூக்கள்’ (2001) ஆகியவையும் தேசிய விருதுகள் பெற்றன. ‘16 வயதினிலே’ (1977), ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981), ‘மண்வாசனை’ (1983) ஆகியவை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றன.


எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு 1981இல் அவருக்குத் தனது உயரிய ‘கலைமாமணி’ விருது வழங்கியது. இந்திய அரசின் நான்காவது உயரிய குடிமை விருதாகிய பத்மஸ்ரீ 2004இல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான  ஒன்றிய அரசு சார்பில், குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமால் வழங்கப்பட்டது.  ‘ஃபிலிம் ஃபேர்’ பத்திரிகை முதல்முறையாக உருவாக்கிய சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல விருதுகள் வந்து சேர்ந்தன. 2020இல் லண்டன் நகரில் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில், ‘பிரிட்ஜ் இந்தியா’ அமைப்பும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் இணைந்து  உலக தமிழ்ப் பண்பாட்டுப் பங்களிப்புக்கான சிறப்பு விருதினை வழங்கின. 


இந்தப் பெருமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவர் தேர்ந்தெடுத்த கதைக் கருக்களும், உருவாக்கிய கதை மாந்தர்களும்,  வெளிப்படுத்திய கலை வேலைப்பாடுகளும்தான். ஒவ்வொன்றையும்  பேசலாம் என்றாலும் ஒரு சோற்றுப் பதமாக சிலவற்றைப் பார்க்கலாம்.

   

அழகியலோடு உள்ளடக்கப் புரட்சி


தமிழ் சினிமா வரலாற்றை பாரதிராஜாவுக்கு முன்னும் பின்னும் என இரு பருவமாகப் பிரித்த படம்தான் புதியதோர் அழகியல் பறைசாற்றலாக வந்த '16 வயதினிலே'.   நடிப்பவர்களுக்கு ஏற்றப்பட்ட அளவிலா ஒப்பனைப் பளபளப்புக்கு  நிறுத்தற்குறி போட்டுவிட்டு, வியர்வைப் பிரதிபலிப்போடு மயிலு (ஸ்ரீதேவி), சப்பாணி (கமல்), பரட்டை (ரஜினிகாந்த்) என எளிய மனிதர்களின் நேர்மறை, எதிர்மறைத் தன்மைகளை மேற்பூச்சு இல்லாமல் திரையில் படியெடுக்கச் செய்தார். நகரத்திலிருந்து ஊடுருவி அத்துமீறியவனை மயிலு சொன்னபடி சப்பாணி “பளார்னு” அறையும் இடத்தில் என்னென்ன அதிர்வுகள்!


திகில் உளவியல்


பலவண்ணத் தொழில்நுட்ப வளர்ச்சியையும் கச்சிதமாகக் கையகப்படுத்தினார் பாரதிராஜா. கிராமியக் கதைகளில்தான் வல்லுநர் என்று எல்லோரும் நினைத்திருக்க “சிவப்பு ரோஜாக்கள்” பதியம் போட்டார். நகரமும் நகரம் சார்ந்தவர்களும் நடமாட, இளம் பெண்களை இரையாக்குகிறான் ஒரு குற்றவெறியன். அவனை நாயகன் வீழ்த்துவதான  கதையல்ல, கதை நாயகனே அவன்தான்! அவனை (கமல்) நாயகி (ஸ்ரீதேவி) எதிர்கொள்ளும் திருப்பங்களுடன் திகிலை எகிற வைத்த படம்.


ஒளிப்பதிவு, இசைப்பதிவுடன் இதர தொழில்நுட்பங்களும் சரிவிகிதத்தில் அமைந்திருந்த அந்தப் படத்தை நண்பர்கள் குழுவாகச் சென்று பார்த்தோம். ஒருவன் கேட்டது இப்போதும் நினைவிருக்கிறது: “டேய், நம்பவே முடியலையே… தமிழ்லேயா இப்படியெல்லாம் படமெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க!”


மதக் கரை மீறும் காதல் அலை

மதக் கடலின் கரை கடக்கும் காதலை ஆழமான சமூகக் கேள்விகளுடன் முன்வைத்த திரை ஓவியம் ‘அலைகள் ஓய்வதில்லை’.  நட்சத்திரங்களாக உருவான கார்த்திக், ராதா இருவரையும் அறிமுகப்படுத்திய படம். அத்துடன், அது வரையில் கவர்ச்சிப் பிம்பமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சில்க் சுமிதா, கணவனின் தடைகளை மீறி அந்தக் காதலுக்குக் கைகொடுக்கும் அண்ணியாக வந்திருப்பார்.


'வேதம் புதிது'  ஆழமாக ஊன்றியிருக்கும் சாதிப் பாகுபாட்டையும், அதைக் கெட்டிப்படுத்தும் போலி ஆன்மீகத்தையும் கூண்டில் நிறுத்தியது. வேதம் புதிது கண்ணன் என்றே அடையாளம் பெற்ற எழுத்தாளரின் “தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா” என்ற உரையாடல் எக்காலத்திற்கும் எந்தச் சமூகத்திற்கும் பொருந்துவது. ஊரகங்களில் கரடுதட்டிக் கிடக்கும் நிலவுடைமைத்துவத்தின் அதிகார அடுக்குகளைத் தோண்டியெடுத்தது ‘புது நெல்லு புது நாத்து’. நெப்போலியன், சுகன்யா ஆகிய திறன் மிக்க கலைஞர்களை அறிமுகப்படுத்தியது.

கல்லானாலும் கணவன் எனும் புனித போதனைகளைக் காலாவதியாக்கியது ‘புதுமைப் பெண்’. குற்ற வழக்கிலிருந்து கணவனை மீட்பதற்கு ஒரு பெண் நடத்துகிற போராட்டம் வெற்றி பெறுவதைத் திரையரங்கில் கண்டு மகிழ்ந்த மக்கள், அவளிடம் அவன் கேட்கிற கேள்வியால் அவளைப் போலவே துடித்துப் போவார்கள், அவள் எடுக்கிற முடிவை அங்கீகரிப்பார்கள். இயக்குநரின் ‘மண்வாசனை’ படத்தில் அறிமுகமாகியிருந்த ரேவதி இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துத் தன் நட்சத்திர ஆளுமைக்கு முன்னுரை எழுதியிருப்பார்.

முழு மரியாதை

பாரதிராஜா படம் என்றாலே கருத்தும் கலையும் கலகலப்பும் சமநிலைக் கலவையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதை மேலும் வலுப்படுத்தியது ‘முதல் மரியாதை’.  வீட்டில் நிறைந்த செல்வம், ஊரில் மிகுந்த மதிப்பு இருந்தாலும், மலைச்சாமி தனது குடும்பத்தில் மனைவி பொன்னாத்தாளின் அவமதிப்புக்கே உள்ளாகிறார். அன்பிற்காக ஏங்கும் அவருடைய உள்ளத்தில் ஆதரவை இசைக்கிறாள் படகோட்டிப் பெண் குயிலு.  நடுத்தர வயதைத் தாண்டி ஏற்படும் உறவுக் கதையின் ஊடாக, வர்க்க  வேறுபாட்டு ஆணவத்துக்குப் பாலின வேறுபாடு இல்லை என்ற நிலவரம் நுணுக்கமாகப் பதிவாகியிருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை, மிகை என்ற விமர்சனத்துடன் குறிப்பிட்ட வகை நடிப்புகளிலேயே கட்டி வைத்திருந்த சங்கிலியிலிருந்து விடுதலை செய்த படமாகவும் அடையாளம் பெற்றது.

மாறுபட்ட உச்சரிப்புகளுடன் வில்லன் கதாபாத்திரங்களிலேயே அறியப்பட்டவராக இருந்த சத்யராஜ், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் கதாநாயகனாகப் படியேறிய படம்  ‘கடலோரக் கவிதைகள்’. கடலோரக் கிராமத்தைச் சுற்றிவந்த கேமரா, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையேயான காதலைக் காட்டியது. கல்லையும் பஞ்சாக மாற்றும் வலிமை காதலுக்கு இருப்பதை ரவுடி சின்னப்ப தாஸ், ஆசிரியர் ஜெனிஃபர் (ரேகா) கதையாகக் கூறுகிறது.

பெண் சிசுக்கொலையிலிருந்து தப்பிப் பிழைத்து மருத்துவராக வளர்ந்த நாயகி, அதற்கு எதிரான இயக்கமாகவே மாறுகிறாள் ‘கருத்தம்மா’ படத்தில். ஒரு தொண்டனின் விசுவாசத்தைத் தனது பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு தன்னலத் தலைவனின் கயமையைக் கதையாக்கி முதலாளிய அரசியலின் இன்னொரு பக்கத்தைக் காட்டியது ‘என் உயிர்த் தோழன்’.

பதிவான தடங்களில் பின்தங்கிவிடாமல்  அவர் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்ததற்கு இன்னொரு சாட்சி  2008ல் வந்த ‘பொம்மலாட்டம்’. ஒரு திரைப்பட இயக்குநர் தனது நாயகிப் பெண்ணை ஊரார் கண்ணிலிருந்து மறைக்க முயல, தொடரும் நிகழ்வுகள் குற்றமயமாகின்றன. வாழ்க்கைக்  கயிறுகளில் பொம்மைகளாகத் தனி மனிதர்கள் ஆட்டுவிக்கப்படும் வேடிக்கையைச் சித்தரித்த புலனாய்வுக் கதைப்படம் அது. இந்தித் திரையுலகின் நானா படேகர் அதில் இயக்குநராக நடித்திருப்பார். இந்தப் படம் பாரதிராஜாவின் நவீன கலை நுட்பக் கையாளுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

2013ல் ‘அன்னக்கொடி’, கள்ளச் சாராய அரசியலும், அதைவிட மயக்கம் மிகுந்த சாதி ஆணவமும் ஒரு காதல்கொடியை அறுக்க வெறிகொண்டு அலைவதைக் காட்டியது. 

2020இல் இயக்குநரின் இறுதிப்படமாக வந்தது ‘மீண்டும் ஒரு மரியாதை’. முந்தைய படங்களில் கிராமம், நகரம், கடலோரம் என நிலப்பரப்புகளை மாற்றியதன் தொடர்ச்சியாக இதில் அவர் வெளிநாட்டிற்கே சென்றிருப்பார். மையப் பாத்திரத்தில் அவரே நடித்திருப்பார். லண்டனில் ஆதரவற்ற துயரத்துடன் வாழ்கிறார் ஒரு முதியவர்.  காதலில் ஏமாற்றப்பட்டதால் இளமையிலேயே தனிமையின் மூலையில் ஒதுங்குகிறாள் ஒரு பெண். இருவருக்கும் உருவாகும் உறவில் ஒரு கவித்துவ அழகியல் இருக்கும்.

இந்தப் படம் கூறும் முதுமைக்காலத் தனிமைத் துயரம் திரைக்கு வெளியேயும் பாரதிராஜாவைக் கவ்விக்கொண்டது. குறிப்பாக, மகன் மனோஜ் இதய அறுவை சிகிச்சை பலனளிக்காத நிலையில் சென்ற ஆண்டு மார்ச் 25 அன்று தனது 48வது வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து மனதளவில் மிகவும் வலுவிழந்தவரானார். மிகுந்த அன்பு கொண்டிருந்த, திரையுலகிலும் தனது வாரிசாக உருவெடுக்க வேண்டுமென்ற ஆசையுடன், ‘தாஜ்மகால்’ (1999) படத்தில் நடிகராக அறிமுகப்படுத்திய மகனின் அகால மரணமும் வேறு சில குடும்பச் சூழல்களுமாக அவர் ஆறாத வேதனையிலேயே மூழ்கியிருந்தார்.

கடைசிப் படத்தில் முதியவருக்குத் துணையாகும் நாயகியைப் போல், கடைசிக் கட்டத்தில் இயக்குநருக்குத் தெம்பூட்டும் வல்லமை அவரது கலைக்கு மட்டுமே இருந்தது. இன்னொரு படத்தை உருவாக்கும் கனவும் அவருக்கு இருந்தது, அது நிறைவேறும் வரையில் இளையவர்களின் இயக்கத்தில் சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

களப் போராளியாக

திரைஒளியில் முற்போக்குக் கருத்துகளை வெளிப்படுத்தியது போலவே, பொதுவெளியிலும் நியாயங்களுக்காகப் போராட்டக் களமிறங்கினார் பாரதிராஜா. 2002இல், கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை வழங்க் மறுத்தபோது, நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கில் தமிழ்த் திரையுலகினரைத் திரட்டி, கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி அவர் நடத்திய போராட்டம் முக்கியமான பேசுபொருளானது.

இயற்கைச் சமநிலைப் பாதுகாப்பு அக்கறையுடன் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான நெடுவாசல் கிளர்ச்சி முதலியவற்றில் முன்னின்றார். 2009இல் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, தனக்கு வழங்கப்பட்ட உயரிய 'பத்மஸ்ரீ' விருதைத் திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார். 


2018இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது 13 பேரை சுட்டுக் கொன்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, அன்றைய அதிமுக அரசின் கெடுபிடிகளை மீறி அங்கே சென்று மக்களைச் சந்தித்தார். “தன் சொந்த நாட்டு மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்துவது என்ன மாதிரியான ஜனநாயகம்? துப்பாக்கிக் குண்டுகளால் மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்கிவிட முடியாது" என்ற அவரது ஆவேச முழக்கம் ஊடகங்களில் ஒலித்தது. 


அதற்கு முந்தைய ஆண்டில் சென்னை  மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டு உரிமையை மீட்பதற்காக தன்னெழுச்சியாக இளைஞர்கள்த் திரண்டிருந்த இளைஞர்கள், மாணவர்களுடன் இணைந்து நின்றார். 


2018இல் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், களஞ்சியம், கௌதமன், லெனின் உள்ளிட்ட சக கலைஞர்களின் பங்களிப்போடு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அதன் தொடக்கவிழாவில், “இது சினிமா சங்கம் அல்ல. தமிழர்களின் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைக் காப்பதற்கும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதற்குமான அசல் மக்கள் இயக்கம்" என்று பறைசாற்றினார். இந்தித் திணிப்பு, சமஸ்கிருத ஆதிக்க முயற்சி உள்ளிட்ட மத்திய அத்துமீறல்களுக்கு எதிரான தமிழ்த் திரையுலகின் ஆவேசக் குரலாக அந்த மையம் ஒலித்தது.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பேற்று, நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்காகவும் திரையுலகத் தொழிலாளர் நலன்களுக்காகவும் பாடுபட்டார். திரைப்படங்கள் வெளியாவதில் நியாயமற்ற முட்டுக்கட்டைப் பிரச்சினைகள் வந்தபோது, கலைக்குடும்பத்தின் மூத்தவராகத் துணை நின்றார்.


தத்துவத் தளம்


இந்தப் போராட்டக்குணம், அவர் மதித்த மார்க்சியத் தத்துவத்திலிருந்து வந்தது என்றும் கூறலாம். தமுஎகச உள்ளிட்ட அமைப்புகளின் அழைப்புகளுக்கு அவர் மதிப்பளித்ததன் பின்னணியும் இதுவே.


‘செம்மலர்’ ஏட்டிற்காக அவரை நேர்காணல் செய்வதற்கென சென்னை பார்ஸன் வளாகத்தில் அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அறையில் இருந்தவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தபோது செங்கொடி இயக்கத்தின்பால் அவருக்கிருந்த அன்பையும் மதிப்பையும் புரிந்துகொள்ள முடிந்தது. நேர்காணலில் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்: “கிராமியக் கதைகளைச் சொல்வதில் புதிய அழகியல் அனுபவங்களைக் கொடுக்கிறீர்கள். அவ்வாறு அழகாகச் சித்தரிக்கிறபோது நிலவுடைமைச் சமூக அமைப்பும் அதன் நடைமுறைகளும் பெருமைப்படுத்தப்படுகின்றனவா?”


தனக்கே உரிய அடர் குரலில் அவர் பதிலளித்தார்: “இல்லை. நிலவுடைமைச் சமூக அமைப்பின் சிறுமையைத்தான், அது அழுகிக் கிடப்பதைத்தான் என் வழியில் காட்டுகிறேன்.” இந்த பதிலின் நேர்மைக்கு அவருடைய படங்களே  சாட்சி.


கலைக்கூட்டணியாக அவருடன் பயணித்த கதையாளர் ஆர். செல்வராஜ், இசைஞர் இளையராஜா, ‘நிழல்கள்’ படத்தில் அறிமுகமான கவிஞர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் நிவாஸ், தன்னுடைய கண் என்று அவரே கூறிய கண்ணன், எழுத்தாளர் நடிகர் இயக்குநர் கே. பாக்கியராஜ் உள்ளிட்டோரின் பங்களிப்புகள் குறித்தே தனித்தனியாக எழுத முடியும். கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், முத்துலிங்கம், நா.காமராசன், கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகிய ஆளுமைகளின் பாடல்களும் அவர் படங்களுக்குத் துடிப்புச் சேர்த்தன. இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், தேவேந்திரன், ஜீ.வி. பிரகாஷ் மற்றும் பல்வேறு துறைகளிலும் புதியவர்களோடு இணையாக நின்று இயக்கியிருக்கிறார். 


பாரதிராஜா அளித்துள்ள மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மற்றுமொரு படைப்பு  இருக்கிறது. தன் இனிய தமிழ் மக்களுக்குப் புத்துணர்ச்சித் திரைப்படங்களை வழங்கி, அத்தகு ஆக்கங்களில் ஈடுபடும் லட்சியத்தோடு புறப்படுகிறவர்களுக்கு நம்பிக்கையூட்டி, நட்சத்திரப் புகழ் மக்களுக்கான போராட்டங்களிலிருந்து விலக்கி வைத்துக்கூடாது என்றும் வழிகாட்டி – ஒரு நிறைவான கலைவாழ்வுக்கு முன்னுதாரணம் என்ற படைப்புதான் அது.


[0]


செம்மலர்ஜூலை 2026 இதழில் எனது கட்டுரை