வீரம் பற்றிய ஒரு கருத்தரங்கிலும் அதைத் தொடர்ந்த கலந்துரையாடலிலும் பங்கேற்கிற வாய்ப்புக் கிடைத்தது. சிறப்புரையாளர் வரலாற்று ஆவணங்களிலிருந்தும் இலக்கியப் படைப்புகளிலிருந்தும் ஆதியில் காட்டு விலங்குகளை வென்று அடக்கியது முதல் போர்க்களங்களில் எதிரிகளோடு பொருதியது வரையில் விரிவான எடுத்துக்காட்டுகளை முன்வைத்தார். உண்மையிலேயே அந்தத் தகவல்கள் மெய்சிலிர்க்கச் செய்தன, அவற்றைத் திரட்டுவதற்காக அவர் மேற்கொண்ட மெனக்கிடல்கள் வியந்து பாராட்ட வைத்தன.
அதே வேளையில் வீரம் என்ற கருத்தாக்கம் பற்றிய ஒரு சிறிய கருத்துப் பரிமாற்றத்தையும் அங்கே நிகழ்த்த முடிந்தது. நிகழ்வின் மையப் பொருள் அது அல்ல என்பதால், சில மாற்றுக் கருத்துகளைக் கேள்விகளாக மட்டும் வெளிப்படுத்தினேன். உரையாளரும், அந்தக் கோணத்தில் அதுவரை யோசிக்கவில்லை எனத் தெரிவித்து, நிச்சயமாக அது விரிவாக விவாதிக்க வேண்டிய ஒன்று என்று கூறினார். அந்த மாற்றுக் கருத்துகளை, தோழர்களின் விவாதத்துக்காக தமுஎகச சிறப்பு மலராகிய இந்த அரங்கில் முன்வைக்கிறேன்.
பொதுவாக உலகம் முழுக்க சமூகத்தின் பொதுப்புத்தியில் ‘வீரம்’ என்ற சொல் எப்போதும் தசை வலிமையோடும், ஆயுதங்களைச் சுழற்றுவதோடும், எதிராளியை வீழ்த்துவதோடும், முடிந்தால் கொன்றுவிடுவதோடும் தொடர்புபடுத்தியே பதிக்கப்பட்டிருக்கிறது. வரலாற்று அத்தியாயங்களுக்குள் ஒரு பின்னோக்கிய பயணம் மேற்கொண்டால், வீரம் ஒரு நிலையான தத்துவமல்ல என்று புலப்படும். அது அந்தந்தக் காலத்தின் மாறிய உழைப்பு முறைகளோடும், உற்பத்தி உறவுகளோடும் கலந்து உருவான லட்சியமாக இருந்து வந்திருப்பது தெரிய வரும். குறிப்பாக, ஆண்ட வர்க்கங்கள் தங்களின் ஆளுமையை நிறுவிக்கொள்வதற்காக, ஆளப்பட்ட வர்க்கங்களின் மேல் வீரத்தைச் சுமத்தினார்கள் என்றும், அந்தச் சொல்லுக்கு எவ்வாறெல்லாம் உணர்ச்சியூட்டிய பொருள்களைப் புகுத்தினார்கள் என்றும் புரியவரும்.
உடலின் தசை வலிமையைக் கொண்டாடும் ஆதிக்கப் பார்வையிலிருந்து விலகி, அறத்தின் குரலாக வீரம் உருமாறியிருக்கிற பரிணாம வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்வதே இந்த உரையாடலின் நோக்கம். உழைக்கும் வர்க்கத்தின் போராட்டக் களத்திலும் மனித உரிமைத் தளத்திலும் செயல்படுவோருடன் சேர்ந்து நிற்கிற ஊடகவியலாளர் என்ற முறையில் இந்தச் சுருக்கமான பகிர்வு. ஆய்வுப் புலத்தில் ஆழமாகவும் அகலமாகவும் இயங்குவோர் இதனை இன்னும் பல மடங்கு அடர்த்தியாக, ஆதார வலிமையோடு ஆக்கித் தருவார்களானால் அதுவொரு பெரும்பங்களிப்பாக அமையும்.
ஆதி மனிதர் போராட்டம்
மனித வரலாற்றின் தொடக்கப் புள்ளியில், வீரம் என்பது எவ்வகையிலும் பெருமையடித்துக்கொள்வதை, அல்லது, பிறரை அடிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் அன்றாடப் பசிக்காக வேட்டையாடி உணவைத் தேடவும், அதே பசியோடு தங்களை வேட்டையாட வரும் விலங்குகளிடமிருந்து தம்மையும் தம் கூட்டத்தையும் காத்துக்கொள்ளவும் இயற்கையோடு போராட வேண்டியிருந்தது. அது உயிர் பிழைப்பதற்கான அடிப்படைத் தேவை. அங்கு விலங்கோடு மோதியது வலிமையையும் துணிவையும் காட்டுவதற்காக அல்ல, மாறாக தாமும் தம் இனமும் அழிந்துவிடாமல் பூமியில் தக்கவைத்துக் கொள்வதற்காகவே. அது இயற்கையான, இன்றியமையாத வாழ்க்கை முறை.
அடிமைச் சமூக குரூரம்
சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்து, அடிமை முறை கால்பரப்பிய காலத்தில் வீரத்தின் முகம் குரூரமாக மாற்றப்பட்டது. ரோம் போன்ற அடிமைச் சமூகங்களின் கொடூர அடையாளமான 'கிளாடியேட்டர்' மோதல் மைதானங்கள் இதற்கு சாட்சி. விலங்குகளோடும், தங்களுக்குள்ளும் மோதிக் கொண்டு சாகும்படி அடிமைகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மனிதர்கள் சரிவதைக் கண்டு, மாட மாளிகைகளில் அமர்ந்திருந்த ஆண்டான்கள் மதுக்கோப்பைகளோடும், மங்கையர் உடனிருப்போடும் ரசித்து மகிழ்ந்தனர். இங்கு அடிமைகளின் வேறு வழியற்ற போராட்டத்திற்கு வீரம் என்று ஆளும் வர்க்கத்தால் பெயரிடப்பட்டதே தவிர, உண்மையில் அது உல்லாசத்திற்காக உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கி வேடிக்கை பார்த்த அதிகாரத்தின் வக்கிரமே அன்றி வேறில்லை.
கட்டாயப் பலியாடுகள்
நிலவுடைமைத்துவ மன்னராட்சிக் காலத்தில், அரசர்களின் பேரரசு எல்லை விரிவாக்கக் கனவுகளுக்காக எளிய குடிமக்கள் கட்டாயமாகப் படைகளில் சேர்க்கப்பட்டனர். வீட்டுக்கு ஒரு ஆண் வந்தாக வேண்டும் என்ற கட்டளைகளுக்கு உணர்ச்சிகரமாக கதைகளால் புனிதம் ஏற்றப்பட்டது. போர்க்களம் சென்றாக வேண்டிய நிலைமை இங்கு தனிமனித விருப்பத்தால் உருவானதல்ல; மாறாக, மறுத்தால் நடுவீதியில் கழுத்து வெட்டப்படும் அல்லது மரணமே மேல் என எண்ண வைக்கும் கொடூரமான சிறைவாசம் என்ற அரச கட்டளைக் கட்டாயத்தால் விளைந்தது.
அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்களின் பேராசைக்காக, முகமறியா இரு நாட்டுச் சாமானியர்கள், தனக்கும் எதிரே வருபவனுக்கும் என்ன சண்டை என்றே அறியாதவர்களாகக் போர்க்களத்தில் மோதி மாண்டனர். அதற்காக, எதிரியின் வாளால் குத்துப்பட்டது மார்பிலா முதுகிலா என்று தாய் தேடுகிற உணர்ச்சிக் காட்சிகள் புனையப்பட்டன.
அதிகாரத்தின் சதுரங்க ஆட்டத்தில் பலியாக்கப்பட்ட எளியோரின் இந்த வலுக்கட்டாயச் சாவுகளுக்கு ஆளும் வர்க்கம் 'வீர மரணம்' என்று மகுடம் சூட்டியது. மாண்டவர்களின் அடுத்த தலைமுறையையும் போருக்குத் தள்ள அந்த மகுடத்தைத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது.
நவீன ராணுவம்
பிற்காலத்தில் உருவெடுத்த நவீன ராணுவச் சேவையிலும் இதே நிலைமை நுட்பமான வடிவில் தொடர்கிறது. போர்க்களத்தின் அசாதாரணச் சூழலில், எல்லைகளைக் காக்கும் துணிவோடு நிற்கும் தனிமனிதர்களின் மனநிலை மதிக்கத்தக்கதே. பனி சூழ் மலைச் சிகரங்களில் இயற்கை, எதிரிப்படை இரண்டின் தாக்குதல்களும் எந்த வடிவத்திலும் வரும் என்ற புரிதலுடன் காவல் நிற்பவர்களின் மனத்துணிவு எளிமையானதல்ல.
ஆனால், உலகளாவிய சந்தை ஆக்கிரமிப்பு சார்ந்த அரசியல் பகடை நகர்த்தல்களுக்காகவும், ஆயுத வியாபாரிகளின் தணியாத லாபத் தாகத்திற்காகவும், அந்தந்த நாடுகளின் எதேச்சதிகார அரசியல் தலைமைகளின் சுயநலக் கணக்குகளுக்காகவும் யாரையோ சுட்டுக் கொல்ல வேண்டிய – அல்லது யார் மீதோ டிரோன்களை ஏவ வேண்டிய கட்டாயங்களுக்கு இன்றைய படைச் சிப்பாய்கள் தள்ளப்படுகிறார்கள். தங்களுக்குள் எந்தப் பகையும் இல்லாத எளிய மனிதர்கள், சீருடை அணிந்துகொண்டு தங்களுடைய அதிகாரிகள் அல்லது அரசுத் தலைவர்கள் ஆணையிட்டதற்காகக் கொன்று குவிப்பது எப்படி உண்மையான வீரமாகும்? இந்தக் கேள்வி இன்று உலகெங்கும் எழுகிறது. உண்மையில் இப்படிக் கேட்பதில் இருக்கிறது வீரம்.
மனசாட்சி வீரம்
இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், இன்றைய நவீன உலகில் வீரத்திற்கான வரையறை முற்றிலும் மாறுகிறது. எதேச்சதிகார அரசுகளின் அநீதியான போர்களை நிராகரிப்பதும், படைகளில் சேர மறுப்பதும் இன்றைய காலத்தின் மகத் துணிச்சலான செயலாகின்றன. குறிப்பிட்ட வயதில் கட்டாய ராணுவ சேவை இன்றும் பல நாடுகளில் உயிரோடு இருக்கிறது. அந்த நாடுகளில், ராணுவத்தில் சேரவும் பிற நாட்டு மக்களைக் கொல்லவும் மனச்சான்றின்படி மறுப்பது சமகாலத்தின் பேரறம். இத்தகைய அறத்துணிவிற்காக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருப்போர் பலர். அவர்கள் வெளிப்படுத்தியது வீரம். அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி சிறை வாயில்கள் முன் கூடி ஆர்ப்பாட்டம் செய்து குரலெழுப்புவதும் இன்றைய உண்மையான அற வீரம்.
உண்மையே ஒரு வீரமாய்
வீரம் பற்றிய புகழ்பெற்ற ஒரு குட்டிக்கதை உண்டு. இரு பெரும் நாடுகளின் அரசுத் தலைவர்கள் விருந்தினர்களாகச் சந்திக்கிறார்கள். எந்த நாட்டின் படையினருக்கு உண்மையிலேயே வீரம் அதிகமாக இருக்கிறது என்று அவர்களுக்குள் விவாதம் ஏற்படுகிறது. ஒருவர் தன் படையாள் ஒருவரை வரவழைத்து மாளிகையின் உச்சியிலிருந்து தரையில் குதிக்கச் சொல்கிறார். அவரும் அதே போல் குதித்து மடிகிறார். “பார்த்தீரா என் ஆளின் வீரத்தை” என்று அந்தத் தலைவர் கேட்கிறார். இந்தத் தலைவர் தன் படையாளை வரவழைக்கிறார். அதே போல் மாளிகை உச்சியிலிருந்து குதிக்கச் சொல்கிறார். அவரோ, “தலைவரே, எதற்காக அப்படி மேலே சென்று குதிக்க வேண்டும்,” என்று கேட்கிறார். அவரைப் போகச் சொல்லிவிட்டு, “ஆணையிட்டது நான்தான் என்றாலும் என்னிடமே கேள்வி கேட்டாரே, அதுவல்லவா வீரம்,” என்று இந்தத் தலைவர் கேட்கிறார். இந்தக் குறுங்கதையில் பெரும் செய்தி இருக்கிறதல்லவா?
ஆயுதங்கள் சத்தமிடும் போர்க்களங்களை விட, இன்று சித்தாந்த ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் கார்ப்பரேட்-அதிகார பீடங்கள் தொடுக்கும் போர்கள் மிக ஆபத்தானவை. இத்தகைய அதிகார பீடங்களுக்கு உவப்பில்லாத உண்மைகளை நெஞ்சுறுதியோடு உலகின் முன் உரக்கப் பேசுவதுதான் இன்றைக்கு வீரம். தடையாணைகளுக்குக் கட்டுப்படாமல் மறுநாளைய ஒரு போராட்டத்திற்காக நள்ளிரவில் தெருக்களில் சுவரொட்டிகளை ஒட்டுகிற எளிய தொண்டர்களிடம் இருக்கிறது வீரம்.
ஆளும் வர்க்கத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், அவர்களின் பணநாயகத்திற்கும், பதவி மற்றும் வருவாய் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாய்ப்புகளுக்கும் மசியாமல், எளிய மக்களுக்காகத் தொடர்ந்து பேசுவதும் எழுதுவதும் களமாடுவதும் சமகாலத்தின் ஆகச்சிறந்த போர்க்குணமாகும். கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்க்கும் வீரம்.
ஆம், பிறரை ஒடுக்குவதிலோ, வன்முறையை ஏவுவதிலோ, அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு ஆயுதம் ஏந்துவதிலோ முழு வீரம் இல்லை. தனக்காக அல்லாமல் பிறருக்காக, ஒடுக்கப்பட்டோருக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலைக்காக, அறத்தின் பக்கம் நின்று சமரசமின்றிப் போராடுவதே முழுமையான வீரம். தசைகளின் வலிமையிலிருந்து தொடங்கி, இன்று மனசாட்சியின் குரலாகவும், அறத்தின் போர்க்குணமாகவும் பரிணமித்திருக்கிறது வீரம்.
[0]
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மதுரை புறநகர் மாவட்டக்குழு கோர்த்துள்ள ‘இலக்கிய மலர்‘ தொகுப்பில் எனது கட்டுரை.

No comments:
Post a Comment