அரங்கத்திரை உயிர்ப்புற்றதும் "என் இனிய தமிழ் மக்களே..." எனக் கூப்பிய கரங்களுடன் கனிவும் கம்பீரமும் கலந்து விளிக்கும் அந்தக் குரல், குறிப்பிட்ட கதைக் கருவை மட்டுமா சொன்னது? “இந்த நிலைமைகளைப் பற்றி நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்,” என்ற வேண்டுகோளையும் அல்லவா விடுத்தது! அப்படிச் சொல்வதற்கும் மக்கள் கேட்பதற்கும் நிறைய வைத்திருந்தார் “பாசத்திற்குரிய பாரதிராஜா”
தேனி அல்லிநகரத்தில் 1941 ஜூலை 17இல் பெரிய மாயன்–கருத்தம்மாள் மகன் சின்னசாமியாகப் பிறந்து, சென்னை திரைநகரத்தில் இயக்குநர் இமயமாகப் படர்ந்து, 2026 ஜூன் 10இல் விடைபெற்றவர் தமிழ் சினிமாவுக்கு விட்டுச்சென்றவை தனித்துவப் பங்களிப்புகள். புகழஞ்சலி செலுத்தும் எல்லோருமே குறிப்பிடுவது, தமிழ் சினிமாவைப் படப்பிடிப்புக் கூடங்களின் வெப்ப வெளிச்சத்திலிருந்து விடுவித்து வயல் வரப்புக் குளுமை வழியாக கிராமத்துக்குள் இட்டுவந்ததைத்தான். காட்சிப் படிமங்களில் மட்டுமல்லாமல், கதாபாத்திரங்கள் நடமாடுவதில் நிலவிய நாடக மேடைக்குரிய நடைகளிலும் மாற்றத்திற்கு வழியமைத்தார்.
திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டும் உலகளாவிய சில முன்னோடிகள்: தனி மனித இயல்புகளையும் வர்க்க முரண்களையும் மண் மணம் தோய்த்து ஜப்பான் திரைமொழியை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் அகிரா குரோசாவா. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தாலிய சினிமாவை வீதிகளுக்குக் கொண்டுவந்து “நியோ ரியலிசம்” சித்தரிப்புக்கு முன்னுரை எழுதியவர் விட்டோரியோ டீ சிகா. உலக அரங்குகள் இந்திய சினிமாவுடன் இந்தியர் வாழ்வையும் பேசவும் வைத்தவர் சத்யஜித் ரே. ஸ்வீடன் படங்களில் காதல் வஞ்சகம் மரணம் ஆன்மீகம் ஆகியவற்றை மெய்யியல் மேடையேற்றியவர் இங்மார் பெர்க்மேன். அமெரிக்காவின் குறிப்பிட்ட நிலப்பரப்புகளில் வாழ்வோரது பண்பாடுகளைப் பதிவு செய்து “வெஸ்டர்ன் சினிமா” என்ற வகைப்பாட்டுக்கு வழியமைத்தவர் ஜான் ஃபோர்ட். அவர்களது ஆக்கங்களில் உள்ள இக்கூறுகளை பாரதிராஜா படைப்புகளில் காணலாம்.
ஊரில் ஒரு சுகாதார ஆய்வாளராக வேலை முறை வாழ்க்கையைத் தொடங்கியவர், நாடகங்களில் தொடர்ந்தவர், நடிப்பு ஆசையுடன் கோலிவுட் வளாகத்தில் நுழைந்தவர், இயக்குநராகப் பரிணமித்தார். மிகு ஒப்பனையற்ற அசல் முகங்களை கேமரா முன் உலவவிட்டார். பாடல் காட்சிகளில் மட்டும் படம் பிடிக்கப்பட்ட வயல் வரப்புகளைத் தாண்டி கிராமத்துக்குள் கேமரா பயணிக்கச் செய்தார். பல கிராமங்களில் படப்பிடிப்புக்கென்றே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன –அதற்கு “கிளாப்” அடித்தவர் பாரதிராஜாதான்.
சமூகத்தில் புரையோடிய சாதிப் போலிமையின் கன்னத்தில் அறைந்தவர், அழகுப் பதுமைகளைப் புதுமைப் பெண்ணாய் சீறியெழ வைத்தவர், முதலாளியம் வளர்த்துவிட்ட சமூக அமைப்பில் தனி மனிதர்களுக்குள் குற்றமுறு உளவியல் புகுந்திருப்பதை வெளிப்படுத்தியவர், அரசியல் கள வஞ்சகங்களை அம்பலப்படுத்தியவர், அரசாங்க அலுவலக அலட்சியங்கள் பற்றிய பொதுமக்கள் ஆதங்கத்தை ஒலித்தவர், கிராமம் நகரம் கடலோரம் என ஊர்களின் உட்புறம் இன்னமும் இன்னமும் ஊடுருவிச் செல்ல முன்வாசல் அமைத்தவர்… அனைத்தும் உண்மை.
கூடுதலாக எனது ஓர் அவதானிப்பு – வழக்கமான தமிழ் சினிமாவுக்கான பாதையை மட்டுமல்ல, மாறுபட்ட சினிமாவுக்கான போக்கையும் மாற்றியவர். சிறப்புத் திரையிடல்களில் மிகச் சில பேர் மட்டுமே பார்த்துச் சிலாகித்தால் போதுமென்ற கண்ணோட்டக் குறுக்கலையும் தகர்த்தவர். கதைக் கூர்மையும் கலை நேர்மையும் உள்ள படைப்புகளுக்காகத் திரையரங்குகளுக்கு வெகுமக்கள் திரளை ஈர்க்க முடியுமென்று நிறுவியவர்.
முதல் படைப்பும் பெருமளவு பங்களிப்பும் தமிழில்தான் என்றாலும் முதன்முதலில் சிறந்த மாநிலமொழிப் படத்துக்கான தேசிய விருது பெற்றது தெலுங்கில் குல விவக்ஷலனு கண்டிஞ்சின (சாதிப் பாகுபாடுகளைச் சாடிய) ‘சீதாகோகா சிலுகா’ (1981). அதன் பின் ‘முதல் மரியாதை’ (1985), ‘வேதம் புதிது’ (1987), ‘கருத்தம்மா’ (1994). ‘அந்தி மந்தாரை’ (1996) , ‘கடல் பூக்கள்’ (2001) ஆகியவையும் தேசிய விருதுகள் பெற்றன. ‘16 வயதினிலே’ (1977), ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981), ‘மண்வாசனை’ (1983) ஆகியவை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றன.
எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு 1981இல் அவருக்குத் தனது உயரிய ‘கலைமாமணி’ விருது வழங்கியது. இந்திய அரசின் நான்காவது உயரிய குடிமை விருதாகிய பத்மஸ்ரீ 2004இல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசு சார்பில், குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமால் வழங்கப்பட்டது. ‘ஃபிலிம் ஃபேர்’ பத்திரிகை முதல்முறையாக உருவாக்கிய சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல விருதுகள் வந்து சேர்ந்தன. 2020இல் லண்டன் நகரில் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில், ‘பிரிட்ஜ் இந்தியா’ அமைப்பும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் இணைந்து உலக தமிழ்ப் பண்பாட்டுப் பங்களிப்புக்கான சிறப்பு விருதினை வழங்கின.
இந்தப் பெருமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவர் தேர்ந்தெடுத்த கதைக் கருக்களும், உருவாக்கிய கதை மாந்தர்களும், வெளிப்படுத்திய கலை வேலைப்பாடுகளும்தான். ஒவ்வொன்றையும் பேசலாம் என்றாலும் ஒரு சோற்றுப் பதமாக சிலவற்றைப் பார்க்கலாம்.
அழகியலோடு உள்ளடக்கப் புரட்சி
தமிழ் சினிமா வரலாற்றை பாரதிராஜாவுக்கு முன்னும் பின்னும் என இரு பருவமாகப் பிரித்த படம்தான் புதியதோர் அழகியல் பறைசாற்றலாக வந்த '16 வயதினிலே'. நடிப்பவர்களுக்கு ஏற்றப்பட்ட அளவிலா ஒப்பனைப் பளபளப்புக்கு நிறுத்தற்குறி போட்டுவிட்டு, வியர்வைப் பிரதிபலிப்போடு மயிலு (ஸ்ரீதேவி), சப்பாணி (கமல்), பரட்டை (ரஜினிகாந்த்) என எளிய மனிதர்களின் நேர்மறை, எதிர்மறைத் தன்மைகளை மேற்பூச்சு இல்லாமல் திரையில் படியெடுக்கச் செய்தார். நகரத்திலிருந்து ஊடுருவி அத்துமீறியவனை மயிலு சொன்னபடி சப்பாணி “பளார்னு” அறையும் இடத்தில் என்னென்ன அதிர்வுகள்!
திகில் உளவியல்
பலவண்ணத் தொழில்நுட்ப வளர்ச்சியையும் கச்சிதமாகக் கையகப்படுத்தினார் பாரதிராஜா. கிராமியக் கதைகளில்தான் வல்லுநர் என்று எல்லோரும் நினைத்திருக்க “சிவப்பு ரோஜாக்கள்” பதியம் போட்டார். நகரமும் நகரம் சார்ந்தவர்களும் நடமாட, இளம் பெண்களை இரையாக்குகிறான் ஒரு குற்றவெறியன். அவனை நாயகன் வீழ்த்துவதான கதையல்ல, கதை நாயகனே அவன்தான்! அவனை (கமல்) நாயகி (ஸ்ரீதேவி) எதிர்கொள்ளும் திருப்பங்களுடன் திகிலை எகிற வைத்த படம்.
ஒளிப்பதிவு, இசைப்பதிவுடன் இதர தொழில்நுட்பங்களும் சரிவிகிதத்தில் அமைந்திருந்த அந்தப் படத்தை நண்பர்கள் குழுவாகச் சென்று பார்த்தோம். ஒருவன் கேட்டது இப்போதும் நினைவிருக்கிறது: “டேய், நம்பவே முடியலையே… தமிழ்லேயா இப்படியெல்லாம் படமெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க!”
மதக் கரை மீறும் காதல் அலை
மதக் கடலின் கரை கடக்கும் காதலை ஆழமான சமூகக் கேள்விகளுடன் முன்வைத்த திரை ஓவியம் ‘அலைகள் ஓய்வதில்லை’. நட்சத்திரங்களாக உருவான கார்த்திக், ராதா இருவரையும் அறிமுகப்படுத்திய படம். அத்துடன், அது வரையில் கவர்ச்சிப் பிம்பமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சில்க் சுமிதா, கணவனின் தடைகளை மீறி அந்தக் காதலுக்குக் கைகொடுக்கும் அண்ணியாக வந்திருப்பார்.
'வேதம் புதிது' ஆழமாக ஊன்றியிருக்கும் சாதிப் பாகுபாட்டையும், அதைக் கெட்டிப்படுத்தும் போலி ஆன்மீகத்தையும் கூண்டில் நிறுத்தியது. வேதம் புதிது கண்ணன் என்றே அடையாளம் பெற்ற எழுத்தாளரின் “தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா” என்ற உரையாடல் எக்காலத்திற்கும் எந்தச் சமூகத்திற்கும் பொருந்துவது. ஊரகங்களில் கரடுதட்டிக் கிடக்கும் நிலவுடைமைத்துவத்தின் அதிகார அடுக்குகளைத் தோண்டியெடுத்தது ‘புது நெல்லு புது நாத்து’. நெப்போலியன், சுகன்யா ஆகிய திறன் மிக்க கலைஞர்களை அறிமுகப்படுத்தியது.
கல்லானாலும் கணவன் எனும் புனித போதனைகளைக் காலாவதியாக்கியது ‘புதுமைப் பெண்’. குற்ற வழக்கிலிருந்து கணவனை மீட்பதற்கு ஒரு பெண் நடத்துகிற போராட்டம் வெற்றி பெறுவதைத் திரையரங்கில் கண்டு மகிழ்ந்த மக்கள், அவளிடம் அவன் கேட்கிற கேள்வியால் அவளைப் போலவே துடித்துப் போவார்கள், அவள் எடுக்கிற முடிவை அங்கீகரிப்பார்கள். இயக்குநரின் ‘மண்வாசனை’ படத்தில் அறிமுகமாகியிருந்த ரேவதி இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துத் தன் நட்சத்திர ஆளுமைக்கு முன்னுரை எழுதியிருப்பார்.
முழு மரியாதை
பாரதிராஜா படம் என்றாலே கருத்தும் கலையும் கலகலப்பும் சமநிலைக் கலவையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதை மேலும் வலுப்படுத்தியது ‘முதல் மரியாதை’. வீட்டில் நிறைந்த செல்வம், ஊரில் மிகுந்த மதிப்பு இருந்தாலும், மலைச்சாமி தனது குடும்பத்தில் மனைவி பொன்னாத்தாளின் அவமதிப்புக்கே உள்ளாகிறார். அன்பிற்காக ஏங்கும் அவருடைய உள்ளத்தில் ஆதரவை இசைக்கிறாள் படகோட்டிப் பெண் குயிலு. நடுத்தர வயதைத் தாண்டி ஏற்படும் உறவுக் கதையின் ஊடாக, வர்க்க வேறுபாட்டு ஆணவத்துக்குப் பாலின வேறுபாடு இல்லை என்ற நிலவரம் நுணுக்கமாகப் பதிவாகியிருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை, மிகை என்ற விமர்சனத்துடன் குறிப்பிட்ட வகை நடிப்புகளிலேயே கட்டி வைத்திருந்த சங்கிலியிலிருந்து விடுதலை செய்த படமாகவும் அடையாளம் பெற்றது.
மாறுபட்ட உச்சரிப்புகளுடன் வில்லன் கதாபாத்திரங்களிலேயே அறியப்பட்டவராக இருந்த சத்யராஜ், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் கதாநாயகனாகப் படியேறிய படம் ‘கடலோரக் கவிதைகள்’. கடலோரக் கிராமத்தைச் சுற்றிவந்த கேமரா, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையேயான காதலைக் காட்டியது. கல்லையும் பஞ்சாக மாற்றும் வலிமை காதலுக்கு இருப்பதை ரவுடி சின்னப்ப தாஸ், ஆசிரியர் ஜெனிஃபர் (ரேகா) கதையாகக் கூறுகிறது.
பெண் சிசுக்கொலையிலிருந்து தப்பிப் பிழைத்து மருத்துவராக வளர்ந்த நாயகி, அதற்கு எதிரான இயக்கமாகவே மாறுகிறாள் ‘கருத்தம்மா’ படத்தில். ஒரு தொண்டனின் விசுவாசத்தைத் தனது பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு தன்னலத் தலைவனின் கயமையைக் கதையாக்கி முதலாளிய அரசியலின் இன்னொரு பக்கத்தைக் காட்டியது ‘என் உயிர்த் தோழன்’.
பதிவான தடங்களில் பின்தங்கிவிடாமல் அவர் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்ததற்கு இன்னொரு சாட்சி 2008ல் வந்த ‘பொம்மலாட்டம்’. ஒரு திரைப்பட இயக்குநர் தனது நாயகிப் பெண்ணை ஊரார் கண்ணிலிருந்து மறைக்க முயல, தொடரும் நிகழ்வுகள் குற்றமயமாகின்றன. வாழ்க்கைக் கயிறுகளில் பொம்மைகளாகத் தனி மனிதர்கள் ஆட்டுவிக்கப்படும் வேடிக்கையைச் சித்தரித்த புலனாய்வுக் கதைப்படம் அது. இந்தித் திரையுலகின் நானா படேகர் அதில் இயக்குநராக நடித்திருப்பார். இந்தப் படம் பாரதிராஜாவின் நவீன கலை நுட்பக் கையாளுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
2013ல் ‘அன்னக்கொடி’, கள்ளச் சாராய அரசியலும், அதைவிட மயக்கம் மிகுந்த சாதி ஆணவமும் ஒரு காதல்கொடியை அறுக்க வெறிகொண்டு அலைவதைக் காட்டியது.
2020இல் இயக்குநரின் இறுதிப்படமாக வந்தது ‘மீண்டும் ஒரு மரியாதை’. முந்தைய படங்களில் கிராமம், நகரம், கடலோரம் என நிலப்பரப்புகளை மாற்றியதன் தொடர்ச்சியாக இதில் அவர் வெளிநாட்டிற்கே சென்றிருப்பார். மையப் பாத்திரத்தில் அவரே நடித்திருப்பார். லண்டனில் ஆதரவற்ற துயரத்துடன் வாழ்கிறார் ஒரு முதியவர். காதலில் ஏமாற்றப்பட்டதால் இளமையிலேயே தனிமையின் மூலையில் ஒதுங்குகிறாள் ஒரு பெண். இருவருக்கும் உருவாகும் உறவில் ஒரு கவித்துவ அழகியல் இருக்கும்.
இந்தப் படம் கூறும் முதுமைக்காலத் தனிமைத் துயரம் திரைக்கு வெளியேயும் பாரதிராஜாவைக் கவ்விக்கொண்டது. குறிப்பாக, மகன் மனோஜ் இதய அறுவை சிகிச்சை பலனளிக்காத நிலையில் சென்ற ஆண்டு மார்ச் 25 அன்று தனது 48வது வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து மனதளவில் மிகவும் வலுவிழந்தவரானார். மிகுந்த அன்பு கொண்டிருந்த, திரையுலகிலும் தனது வாரிசாக உருவெடுக்க வேண்டுமென்ற ஆசையுடன், ‘தாஜ்மகால்’ (1999) படத்தில் நடிகராக அறிமுகப்படுத்திய மகனின் அகால மரணமும் வேறு சில குடும்பச் சூழல்களுமாக அவர் ஆறாத வேதனையிலேயே மூழ்கியிருந்தார்.
கடைசிப் படத்தில் முதியவருக்குத் துணையாகும் நாயகியைப் போல், கடைசிக் கட்டத்தில் இயக்குநருக்குத் தெம்பூட்டும் வல்லமை அவரது கலைக்கு மட்டுமே இருந்தது. இன்னொரு படத்தை உருவாக்கும் கனவும் அவருக்கு இருந்தது, அது நிறைவேறும் வரையில் இளையவர்களின் இயக்கத்தில் சில படங்களில் நடிக்கவும் செய்தார்.
களப் போராளியாகதிரைஒளியில் முற்போக்குக் கருத்துகளை வெளிப்படுத்தியது போலவே, பொதுவெளியிலும் நியாயங்களுக்காகப் போராட்டக் களமிறங்கினார் பாரதிராஜா. 2002இல், கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை வழங்க் மறுத்தபோது, நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கில் தமிழ்த் திரையுலகினரைத் திரட்டி, கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி அவர் நடத்திய போராட்டம் முக்கியமான பேசுபொருளானது.
இயற்கைச் சமநிலைப் பாதுகாப்பு அக்கறையுடன் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான நெடுவாசல் கிளர்ச்சி முதலியவற்றில் முன்னின்றார். 2009இல் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, தனக்கு வழங்கப்பட்ட உயரிய 'பத்மஸ்ரீ' விருதைத் திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார்.
2018இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது 13 பேரை சுட்டுக் கொன்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, அன்றைய அதிமுக அரசின் கெடுபிடிகளை மீறி அங்கே சென்று மக்களைச் சந்தித்தார். “தன் சொந்த நாட்டு மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்துவது என்ன மாதிரியான ஜனநாயகம்? துப்பாக்கிக் குண்டுகளால் மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்கிவிட முடியாது" என்ற அவரது ஆவேச முழக்கம் ஊடகங்களில் ஒலித்தது.
அதற்கு முந்தைய ஆண்டில் சென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டு உரிமையை மீட்பதற்காக தன்னெழுச்சியாக இளைஞர்கள்த் திரண்டிருந்த இளைஞர்கள், மாணவர்களுடன் இணைந்து நின்றார்.
2018இல் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், களஞ்சியம், கௌதமன், லெனின் உள்ளிட்ட சக கலைஞர்களின் பங்களிப்போடு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அதன் தொடக்கவிழாவில், “இது சினிமா சங்கம் அல்ல. தமிழர்களின் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைக் காப்பதற்கும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதற்குமான அசல் மக்கள் இயக்கம்" என்று பறைசாற்றினார். இந்தித் திணிப்பு, சமஸ்கிருத ஆதிக்க முயற்சி உள்ளிட்ட மத்திய அத்துமீறல்களுக்கு எதிரான தமிழ்த் திரையுலகின் ஆவேசக் குரலாக அந்த மையம் ஒலித்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பேற்று, நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்காகவும் திரையுலகத் தொழிலாளர் நலன்களுக்காகவும் பாடுபட்டார். திரைப்படங்கள் வெளியாவதில் நியாயமற்ற முட்டுக்கட்டைப் பிரச்சினைகள் வந்தபோது, கலைக்குடும்பத்தின் மூத்தவராகத் துணை நின்றார்.
தத்துவத் தளம்
இந்தப் போராட்டக்குணம், அவர் மதித்த மார்க்சியத் தத்துவத்திலிருந்து வந்தது என்றும் கூறலாம். தமுஎகச உள்ளிட்ட அமைப்புகளின் அழைப்புகளுக்கு அவர் மதிப்பளித்ததன் பின்னணியும் இதுவே.
‘செம்மலர்’ ஏட்டிற்காக அவரை நேர்காணல் செய்வதற்கென சென்னை பார்ஸன் வளாகத்தில் அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அறையில் இருந்தவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தபோது செங்கொடி இயக்கத்தின்பால் அவருக்கிருந்த அன்பையும் மதிப்பையும் புரிந்துகொள்ள முடிந்தது. நேர்காணலில் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்: “கிராமியக் கதைகளைச் சொல்வதில் புதிய அழகியல் அனுபவங்களைக் கொடுக்கிறீர்கள். அவ்வாறு அழகாகச் சித்தரிக்கிறபோது நிலவுடைமைச் சமூக அமைப்பும் அதன் நடைமுறைகளும் பெருமைப்படுத்தப்படுகின்றனவா?”
தனக்கே உரிய அடர் குரலில் அவர் பதிலளித்தார்: “இல்லை. நிலவுடைமைச் சமூக அமைப்பின் சிறுமையைத்தான், அது அழுகிக் கிடப்பதைத்தான் என் வழியில் காட்டுகிறேன்.” இந்த பதிலின் நேர்மைக்கு அவருடைய படங்களே சாட்சி.
கலைக்கூட்டணியாக அவருடன் பயணித்த கதையாளர் ஆர். செல்வராஜ், இசைஞர் இளையராஜா, ‘நிழல்கள்’ படத்தில் அறிமுகமான கவிஞர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் நிவாஸ், தன்னுடைய கண் என்று அவரே கூறிய கண்ணன், எழுத்தாளர் நடிகர் இயக்குநர் கே. பாக்கியராஜ் உள்ளிட்டோரின் பங்களிப்புகள் குறித்தே தனித்தனியாக எழுத முடியும். கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், முத்துலிங்கம், நா.காமராசன், கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகிய ஆளுமைகளின் பாடல்களும் அவர் படங்களுக்குத் துடிப்புச் சேர்த்தன. இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், தேவேந்திரன், ஜீ.வி. பிரகாஷ் மற்றும் பல்வேறு துறைகளிலும் புதியவர்களோடு இணையாக நின்று இயக்கியிருக்கிறார்.
பாரதிராஜா அளித்துள்ள மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மற்றுமொரு படைப்பு இருக்கிறது. தன் இனிய தமிழ் மக்களுக்குப் புத்துணர்ச்சித் திரைப்படங்களை வழங்கி, அத்தகு ஆக்கங்களில் ஈடுபடும் லட்சியத்தோடு புறப்படுகிறவர்களுக்கு நம்பிக்கையூட்டி, நட்சத்திரப் புகழ் மக்களுக்கான போராட்டங்களிலிருந்து விலக்கி வைத்துக்கூடாது என்றும் வழிகாட்டி – ஒரு நிறைவான கலைவாழ்வுக்கு முன்னுதாரணம் என்ற படைப்புதான் அது.
[0]
‘செம்மலர்’ ஜூலை 2026 இதழில் எனது கட்டுரை


No comments:
Post a Comment