Tuesday, 22 May 2012

பாடப்புத்தக கார்ட்டூனும் எதிர்ப்புக்கு எதிர்ப்பும்

டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட சாசனத்தை உருவாக்கித் தந்த மேதை.”
-இந்த அளவோடுதான் நம் பள்ளிப்பாடங்கள் நிற்கின்றன. அவர் காலமெல்லாம் எதற்காகப் போராடினார் என்ற உண்மை மாணவர்களுக்குத் தெரியாமலே மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. கல்வி வளாகங்களுக்கு வெளியே நடைபெறும் இயக்கங்கள்தான் உண்மையான பாடப் புத்தகங்களாக, அம்பேதகர் பற்றியும் இந்தியாவின் ஈடு இணையற்ற இழிவாகிய சாதியக் கட்டமைப்பு பற்றியும் கற்பிக்கின்றன. அரசமைப்புச் சட்ட சாசனத்தை உருவாக்கியவர் என்பதைத்தாண்டி மற்ற உண்மைகளைப் பாடப்புத்தகங்கள் பேச வேண்டாமா என்ற கேள்வி அவ்வப்போது எழுவதுண்டு. சிலர், அரசமைப்புச் சட்ட சாசனத்தைத் தயாரிப்பதற்கென்றே ஒரு சபை ஏற்படுத்தப்பட்டது என்கிறபோது அது ஒரு கூட்டு முயற்சிதானே, அம்பேத்கர் அதற்குத் தலைமை தாங்கியவர்தானே,  அப்படியிருக்க அதற்கான பெருமையை அவருக்கு மட்டும் தூக்கிக் கொடுப்பது என்ன நியாயம் என்று கேட்பதுண்டு.

அம்பேத்கர் பற்றி “விரிவாக” பேசவைப்பதற்காக என மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 11ம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் ஒரு நையாண்டிச் சித்திரம் (கார்ட்டூன்) சேர்க்கப்பட்டிருக்கிறது. 1949ல் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கார்ட்டூன் அது. ஒரு நத்தையின் மீது அம்பேத்கர் கையில் சவுக்குடன் அமர்ந்து அதை ஓட்டுகிறார், நத்தையையும் அம்பேத்கரோடு சேர்த்து நத்தையை வேகமாக ஓட்ட சவுக்கை வீசுகிறார் பிரதமர் நேரு.

நாடாளுமன்றத்திற்கு வெளியே பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சென்னையில் கண்டன இயக்கம் நடத்தியது. நாடாளுமன்றத்திற்கு உள்ளே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் பிரச்சனை கிளப்பினார்கள். குறிப்பிட்ட கார்ட்டூனையும், அதே போல் அரசியல் தலைவர்களை இழிவு படுத்தும் இதர கார்ட்டூன்களையும் அந்தப் பாடநூலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் அரசு உறுதியளித்தது.

அதைத் தொடர்ந்து, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தில் (என்சிஇஆர்டி) இருந்து இரண்டு இயக்குநர்கள் விலகினார்கள். இந்திய குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர், பதவி விலகிய ஒருவரது அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில ஈடுபட்டதை ஒரு அரசியல் நாடகம் என்று தள்ளுபடி செய்துவிட முடியும். ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி, சிவசேனா ஆகிய இரண்டு இந்துத்துவ சக்திகளுடன் கூச்சமே இல்லாமல் அரசியல் உறவு கொண்டிருக்கிற கட்சி அது.

இப்போது சில வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் அறிவுத்தளத்தில் செயல்படுகிறவர்களும், மேற்படி கார்ட்டூன் நீக்கப்படுவதை விமர்சித்திருக்கிறார்கள். 63 ஆண்டுகளுக்கு முன் வெளியான கார்ட்டூன் அது, அப்போது அதற்கு எவ்வித எதிர்ப்பும் வரவில்லை, இப்போது வருவது ஏன் என்று அவர்கள் கேட்கிறார்கள். பாடப்புத்தகத்தில் கார்ட்டூன் 6 ஆண்டுகளாக இருக்கிறது, இப்போது திடீரென அதை எதிர்க்க வேண்டிய தேவை என்ன என்றும் அவர்கள் கேட்கிறார்கள். ஆரோக்கியமான கல்விச் சூழலை இப்படிப்பட்ட எதிர்ப்புகள் சீர்குலைக்கின்றன, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்றன என்றெல்லாம் அவர்கள் வாதிடுகிறார்கள். தில்லி பல்கலைக்கழகத்தில் டாக்டர் கே. ராமானுஜத்தின் ‘300 ராமாயணங்கள்’ பாடத்திற்கு ஆர்எஸ்எஸ் சீடகோடிகள் எதிர்ப்புத் தெரிவித்து அதை நீக்க வைத்ததோடு இதை ஒப்பிடுகிறார்கள். இது ஒரு அடையாள அரசியல், அதற்கு இடதுசாரிகள் ஆதரவளிப்பது தவறு என்கிறார்கள்.

அரசமைப்பு சாசன சபையில் பலரும் இடம்பெற்றிருந்தபோதும் மற்ற உறுப்பினர்கள் யாருமே அதில் அக்கறையோ ஈடுபாடோ காட்டாத நிலையில், அம்பேத்கர் தன்னந்தனியராக உழைத்து அதைத் தயாரித்தார். நாடாளுமன்றத்தில் அது தாக்கல் செய்யப்பட்டபோது, இந்த உண்மையை அன்று டி.டி. கிருஷணமாச்சாரி அறிவிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டி ஆரவாரித்துத் தங்களது பாராட்டைத் தெரிவித்தார்கள். ஆகவேதான் அந்த சபைதான் பொறுப்பு என்றாலும், அதற்குத் தலைமை தாங்கிய அம்பேத்கர் தனிச்சிறப்புக்கு உரியவராகிறார். சொல்லப்போனால், சாசனத்தை இரவு பகலாக உழைத்துத் தயாரித்ததன் காரணமாகவே அவரது உடல்நலம் குன்றியது, அதன் பின் 6 ஆண்டுகளில் அவர் காலமானார். (நன்றி: தமுஎகச கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன்).

63 ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகையில் வெளியானபோது அது அன்றைய அரசியல் சூழலில் ஒரு கார்ட்டூன் அவ்வளவுதான். அன்றைக்கு அந்த ஆங்கிலப் பத்திரிகையை எத்தனை பேர் பார்த்திருக்க முடியும்? மேலும் அன்றைக்கு அதற்கு எதிர்ப்பு வரவில்லை என்பது கருத்துச சுதந்திரத்திற்கு அளிக்கப்பட்ட மரியாதை.

இன்று அது ஒன்றும் ஏதோவொரு பத்திரிகையில் மறுபதிப்புச் செய்யப்படவில்லை. ஒரு பள்ளிப் பாடத்திட்டத்தில், அதிலும் 16 வயதே நிரம்பிய 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் அந்த கார்ட்டூன் சேர்க்கப்படுகிறது, அப்படிச் சேர்க்க வேண்டிய கட்டாயம் என்ன? 6 ஆண்டுகளாக அந்தத் தவறு கவனிக்கப்படவில்லை என்பதால், இன்றைக்கு அதை சரிப்படுத்தக்கூடாது என்பது சரியான வாதம்தானா?

சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் ஆகப் பெரும்பாலும் நடுத்தர, உயர்நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் தலித் அல்லாத குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்தான். அந்தக் குழந்தைகளின் மனதில், அம்பேத்கர் பற்றிய மட்டமான சிந்தனையை இப்படிப்பட்ட கார்ட்டூன் ஊன்றி விடும். இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்டப்பூர்வ ஏற்பாடுகளை எதிர்ப்பவர்கள், சட்டத்தில் அதற்கு இடம் வகுத்தவர் என்ற முறையில் அம்பேத்கர் மீது கோபம் வளர்க்க முற்படுகின்றனர். ஒடுக்கப்பட்டவர்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களும் கல்வி உரிமை பெற்றதை சகித்துக்கொள்ள முடியாத சாதிய ஆதிக்க உணர்வோடு கலந்த இந்த கோப யாகத்துக்குத்தான் அந்த கார்ட்டூன் துணை செய்யும.

சும்மாவே நம் நடுத்தர வர்க்கம் அரசமைப்பு சாசனத்தை மதிப்பதில்லை. தேர்தலில் வாக்களிக்க வராமல் கைவிரலைக் கரைபடியாமல் வைத்திருப்பதை நாகரிகமாகக் கருதிப் பீற்றிக்கொள்வது இந்த வர்க்கம்தான். அந்த இளக்கார மனநிலையை வளரும் மாணவப்பருவத்திலேயே ஊட்டி வளர்க்கவே இந்த கார்ட்டூன் மறுபதிப்பு உதவும்.

என்சிஇஆர்டி பொறுப்பாளர்கள் இப்படிப்பட்ட உள்நோக்கங்களோடுதான் இந்த கார்ட்டூனைச் சேர்த்தார்கள் என்று சொல்வதறகில்லைதான். ஆனால், இந்தியச் சூழலின் பின்விளைவுகள் பற்றிய முன் சிந்தனையின்றி மேலோட்டமான பார்வையோடு அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும். இன்னும் நுட்பமாகச் சொல்வதென்றால், பிராமணர் அல்லாதாரைக் கொண்டு, தனது சாதிப்பாகுபாட்டு ஆதிக்க அரசியலை நிலைநாட்டிக்கொள்வது பிராமணியத்தின் ஒரு வெற்றிகரமான உத்தி.

எதிர்ப்பில் முழு நியாயம் இருக்கிறது. அந்த எதிர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் சிறிதும் நியாயம் இல்லை.

2 comments:

http://rkguru.blogspot.com/ said...

உங்கள் பதிவு முழுமையாக படித்தேன் நல்ல பல கருத்துகளை முன் வைத்தீர்கள். அம்பேத்கர் இந்திய மக்களின் மனதில் என்றும் மதிப்புடன் வாழ்கிறவர். போற்றபடுபவர். அவ்வாறு இருக்கும் போது தேடிபிடித்து அப்பாட புத்தகத்தில் இணைத்ததற்கு கட்டயாம் உள்நோக்க இருக்கும். அவை தாழ்த்தப்பட்டோர், பிற்படத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் இவர்களுக்கு அரசின் இடஒதுக்கீடை எதிர்க்கும் நயவஞ்சக செயல் உடையவர்களின் நோக்கமாகத்தான் இருக்கும். அதில் சந்தேகம் இல்லை...ஆனால் ஒரு கார்ட்டூன் வரைந்ததால் ஒருவர் இழிவுபடுத்தபட்டார் என்பதை ஏற்க முடியாது. இதில் கார்ட்டூன் வரைந்தது தவறில்லை ஆனால் அதை பள்ளி பாடத்தில் இணைத்ததுதான் மிக பெரிய பின்விளைவு தெரியாத தவறு...

இப்பிரச்சனை பற்றி கூட இணையத்தில் ஒரு பதிவு படித்தேன் அதன் லிங்க் தருகிறேன். நீங்களும் படித்துபாருங்கள். அப்பதிவை எழுதியவர் சங்கர் என்பவர். இவர் முன்னாள் cpm தோழராக இருந்தவர். இப்பிரச்சனை பற்றிய அவரின் கருத்துகள் மிக தெள்ள தெளிவாக இருக்கும். படியுங்கள்

http://savukku.net/home1/1556-2012-05-12-14-03-47.html

http://rkguru.blogspot.com/ said...

உங்கள் பதிவு முழுமையாக படித்தேன் நல்ல பல கருத்துகளை முன் வைத்தீர்கள். அம்பேத்கர் இந்திய மக்களின் மனதில் என்றும் மதிப்புடன் வாழ்கிறவர். போற்றபடுபவர். அவ்வாறு இருக்கும் போது தேடிபிடித்து அப்பாட புத்தகத்தில் இணைத்ததற்கு கட்டயாம் உள்நோக்க இருக்கும். அவை தாழ்த்தப்பட்டோர், பிற்படத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் இவர்களுக்கு அரசின் இடஒதுக்கீடை எதிர்க்கும் நயவஞ்சக செயல் உடையவர்களின் நோக்கமாகத்தான் இருக்கும். அதில் சந்தேகம் இல்லை...ஆனால் ஒரு கார்ட்டூன் வரைந்ததால் ஒருவர் இழிவுபடுத்தபட்டார் என்பதை ஏற்க முடியாது. இதில் கார்ட்டூன் வரைந்தது தவறில்லை ஆனால் அதை பள்ளி பாடத்தில் இணைத்ததுதான் மிக பெரிய பின்விளைவு தெரியாத தவறு...

இப்பிரச்சனை பற்றி கூட இணையத்தில் ஒரு பதிவு படித்தேன் அதன் லிங்க் தருகிறேன். நீங்களும் படித்துபாருங்கள். அப்பதிவை எழுதியவர் சங்கர் என்பவர். இவர் முன்னாள் cpm தோழராக இருந்தவர். இப்பிரச்சனை பற்றிய அவரின் கருத்துகள் மிக தெள்ள தெளிவாக இருக்கும். படியுங்கள்

http://savukku.net/home1/1556-2012-05-12-14-03-47.html