Monday, 12 October 2026

கலைக்காகத் திரையிலும் மக்களுக்காகத் தரையிலும் ஒலித்த மனசாட்சி


“அவர் சினிமாவுக்கு வராமல் போயிருந்தாலும் இதையெல்லாம் செய்திருப்பார்.”


மகாராஷ்டிரா மாநிலத்தில் வானிலை வறட்சியாலும் அரசின் கொள்கை வறட்சியாலும் பட்டினிக்கும் தற்கொலைக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டார்கள்.  அவர்களுக்கு உதவுவதற்காக ‘நாம் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை அமைப்பை 2015ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் நானா படேகர். அந்தச் செய்தியைப் படித்த ஒருவர், “மற்றவர்களுக்கு வராத அக்கறை இவருக்கு வந்திருப்பதற்குக் காரணம் விளம்பரம் தேடிக்கொள்ளும் நோக்கம்தான்,” என்று கூறினார். அதற்கு எதிர்வினையாற்றிய இன்னொரு நண்பர் சொன்னதுதான் முதல் பத்தியில் இருப்பது.


வீதி நாடகத்திலிருந்து…


ஆம், வேறு விளம்பரங்கள் தேவைப்படாத அளவுக்குத் திரையுலகில் தனக்கான நட்சத்திர அடையாளத்தைப் பதித்துக்கொண்ட நானா படேகர், தொடக்கத்தில் வீதி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்தவர். அந்த நாடகங்கள் பெரும்பாலும் மக்களின் பிரச்சினைகளை, குறிப்பாக உழைப்பாளி வர்க்கத்தின் பாடுகளைப் பேசுவதாக இருந்தன. எளியோருக்காக வலியோரை நோக்கி வீசப்படும் கேள்விகள் அந்த நாடகங்களில் வசனங்களாக இடம்பெற்றன. அதில் நானாவுக்கும் தலையாய பங்கிருந்தது.


அந்தப் பங்களிப்பின் தொடர்ச்சியாகவே, படேகர் மராத்தி நடிகர் மகரந்த் அனாஸ்புரே இருவரும் இணைந்து  ‘நாம்’ அறக்கட்டளையைத் தொடங்கினர். “நாம்” என்றால் மராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் “பெயர்” பொருள். அரசமைப்பாலும் சமுதாயத்தாலும் அடையாளம் அழிக்கப்பட்டுத் தமக்கெனப் பெயர் இல்லாதவர்களாக மாற்றப்பட்டவர்கள் தன்னம்பிக்கை பெறுவதற்கான அடையாளமாகவே, பெயரற்றவர்களுக்கு ஒரு பெயராகவே “நாம்” என்று அறக்கட்டளையைப் பதிவு செய்தார்.


அந்த அறக்கட்டளை உருவானதிலும் ஒரு திரைக்கதைக்குரிய திருப்பம் உண்டு. பட்டினிக்குத் தள்ளப்பட்ட ஒரு விவசாயக் குடும்பத்தின் நேர்காணலைப் பார்த்த அவர், அந்தக் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, ஒரு புதிய கார் வாங்குவதற்காக வங்கிச் சேமிப்பில் வைத்திருந்த சுமார் ஒரு கோடி ரூபாயை எடுத்து,  அவர்களிடம் கொடுக்கக் கேட்டுக்கொண்டு நண்பர்களிடம் ஒப்படைத்தார். அவரே நேரில் வந்து கொடுக்கலாமே என்று நண்பர்கள் சொன்னபோது, அது விளம்பர முயற்சி போலப் பார்க்கப்படலாம், ஆகவே நேரில் வரவில்லை என்றார். ஆயினும் அந்தக் குடும்பத்தினர் அதை எதிர்பார்ப்பார்கள் என்று எடுத்துக்கூறி நண்பர்கள் விடாப்பிடியாக வற்புறுத்தியதால் கிராமத்துக்கு நேரில் சென்றார். அங்கே கண்ட காட்சி, அவருடைய கண்களை மேலும் விசாலமாகத் திறந்துவிட்டன.


அந்தக் குறிப்பிட்ட குடும்பம் போலவே, ஏராளமான விவசாயக் குடும்பங்கள் குடிநீரும் தேநீருமே உணவாக வாடிக் கிடந்தன. ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து உழவுக் குடும்பங்களுக்கும் உதவுவதன் தேவையை உணர்ந்தவராக வீடு திரும்பினார். அந்தத் தாக்கத்தில் உருவானதுதான் ‘நாம் ஃபவுண்டேஷன்’. இன்றளவும் செயல்பட்டு வரும் அந்த அமைப்புக்கு அவருடைய சக கலைஞர்கள், செல்வந்தர்களோடு  தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.


கொடிய சட்டங்களை எதிர்த்து


நீர்ப்பாசனம் முதலான விவசாயத் தேவைகளுக்காக ஒரு தாளாளர் போல நிதியுதவி செய்ததோடு அவர் நிற்கவில்லை, மக்களின் போராட்டங்களிலும்  சேர்ந்து நின்றார். குறிப்பாக, விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக 2020இல் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த,  சட்டங்களை எதிர்த்து நாடுதழுவிய போராட்டம் நடந்தது அல்லவா? அப்போது நானா படேகர் விவசாயிகளின் பக்கம் நின்று தனது ஆதரவை வெளிப்படையாகக் தெரிவித்தார். "ஊருக்கே உணவளிக்கும் நீங்கள் அரசிடம் கையேந்தத் தேவையில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்று புரிந்துகொண்டு செயலாற்றும் அரசைத் தேர்ந்தெடுக்கும் வலிமை உங்களிடம் இருக்கிறது. ஆகவே  நாட்டின் ஆட்சியில் யார் இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்," என்று அழைப்பு விடுத்தார்.


"தேசத்தில் எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் வரை இருந்த விவசாய மக்கள்தொகை இன்று கணிசமாகக் குறைந்துவிட்டது. நமக்கு அன்றாடம் உணவளிப்போரின் வேதனைக் குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால், வேறு யாருடைய குரலுக்குச் செவிசாய்க்கப் போகிறது? விவசாயிகளின் போராட்டங்களை அடக்குமுறைகளால் ஒடுக்க நினைத்தால், அது தீவிரமடைந்து நாடுதழுவிய பெரும் எழுச்சியாக உருவெடுக்கும். தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தி இணக்கமான தீர்வு காண்பதே அரசின் கடமை,” என்றும் வலியுறுத்தினார். அந்தச் சட்டங்களை 16 மாதங்களில் விலக்கிக்கொள்ளச் செய்ததில், விவசாயிகளின் போராட்ட உறுதியும் இத்தகை மனசாட்சிக் குரல்களும் கைகோர்த்தன.


இத்தகைய வர்க்க உணர்வோடு இயங்கிய அந்தக் கலைஞர் எந்த அரசியல் கட்சியோடும் தன்னை நேரடியாக இணைத்துக்கொண்டதில்லை. ஆயினும் ஜனநாயகத்திற்காக நிற்போருடன்  தொடர்பும், குறிப்பாக இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள் மீது மதிப்பும் கொண்டிருந்தார். தனிப்பட்ட முறையில் சிவசேனா தலைவர் பால சாஹேப் தாக்கரே, பாஜக தலைவர்கள் தேவேந்திர ஃபட்நாவிஸ், நிதின் கட்காரி போன்றோருடன் நட்போடு பழகினார் என்றாலும், அவர்களது பல அரசியல் நிலைப்பாடுகளுக்கு வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.


“நமது மதம்”


இந்த மனநிலையின் வெளிப்பாடாகவே, மதவாத சாதியவாத அரசியல் உத்திகளுக்கு எதிராக அவர் நின்றதைக் காணலாம்.  குறிப்பிட்ட அமைப்புகளின் பெயர்களை நேரடியாகக் குறிப்பிடாமல், ஒட்டுமொத்த மதவாத அரசியலையும், வன்முறையையும் பொதுவெளியில் கடுமையாகச் சாடினார். பல்வேறு பொது நிகழ்ச்சிகளில், "நாம் பிறக்கும்போது எந்த மதத்தையும் சுமந்து வரவில்லை. நாம் அனைவரும் மனிதர்கள்; இந்தியர் என்பதே நமது ஒரே மதமாக இருக்க வேண்டும்," என்று முழங்கினார். “இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது ஏற்க முடியாதது,” என்றும் கூறினார்.


தங்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி வாக்குகளைக் கவர முயலும் அரசியல்வாதிகளை மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். மதத்தைக் காட்டிப் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளுக்கு மக்கள் பலியாகிவிடக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாடுகள் கொண்டிருந்தார்.


அதே வேளையில், வேலைகளுக்கும் கல்வி வாய்ப்புகளுக்குமான விண்ணப்பப் படிவங்களில் சாதி,   மதம் ஆகியவை தொடர்பான  பத்திகளை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கருத்தையும் கொண்டிருந்தார். சமூக நீதியை நிலைநாட்டுவதை நோக்கிய பயணத்தில் ஒரு கட்டமாகிய இட ஒதுக்கீடு கொள்கையைச் செயல்படுத்த, படிவங்களில் இந்தப் பத்திகள் தேவைப்படுகின்றன என்ற புரிதலிலிருந்து அவர் விலகியே இருந்தார்.


சமூக நீதியை ஏற்பவர்களிலேயே ஒரு பகுதியினருக்கு இருக்கிற இந்தக் குழப்பம் அவருக்கும் இருந்தது. அதிலிருந்துதான், ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை அடிப்படையிலேயே வேலை, கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கருதினார். ஆனால், மதவாத – சாதியவாத அரசியல் சித்துவிளையாட்டுகளை நிராகரிப்பதில் எந்த சமரசமும் செய்துகொள்ள மறுத்தார்.


கலை முத்திரை


ஒரு முன்னணிக் கலைஞராக அவருடைய இத்தகைய சிந்தனைகள் சமூக கவனத்திற்கு உள்ளாகின. அதற்கான அறிமுகத் தளமாக திரையுலகம் அமைந்தது. நாடக உலகிலிருந்து தனது நடிப்புக் கலைப் பயணத்தைத் தொடங்கிய அவர், மராத்தி, இந்தி திரைப்படங்களில் தனது அழுத்தமான நடிப்பால் முத்திரை பதித்தார். இந்தியில் ‘பரிந்தா’  ‘கிராந்திவீர்’ ‘அப் தக் சப்பன்’ ‘அபஹரன்’,  மராத்தியில் ‘நட்சம்ராட்’ ஆகியவை நானாவின் கலைத் திறனை நாடறியச் செய்தன.


சமுதாயத்தில் இறுகிப்போன சாதியச் சகதிக்கும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைச் சூறையாடும் கார்ப்பரேட் வேட்டைக்கும் எதிரான செய்தியைப் பேசும் வகையில், பா. ரஞ்ஜித் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகராக நடித்த ‘காலா’   திரைப்படத்தில் ஹரிதாஸ் அபயங்கர் என்ற வில்லன்  பாத்திரத்தில் நடித்துத் தமிழ் ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றார்.


மேலும் மேலும் சிறப்பான கலைப் பங்களிப்பை அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மேலும் மேலும் அர்ப்பணிப்பான சமூகப் பங்களிப்பை மக்கள் எதிர்நோக்கியிருந்த நிலையில், இந்த அக்டோபர் 8 அதிகாலையில், இதயத் துடிப்பு நின்றுபோனதால் அவரது உழைப்பு முடிவுக்கு வந்தது. 


புகழ்பெற்ற பல நூறு திரை நட்சத்திரங்களுக்கிடையே உண்மை வாழ்க்கையிலும்  எளியவர்களுக்குத் தோள் கொடுத்து ஒளிர்ந்த மக்கள் கலைஞர்கள் மிகச் சிலரே. புகழின் உச்சியில் இருந்தபோதும் மனிதநேயத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டவர்களாக,  “கலை சமூக மாற்றத்திற்கான கருவி” என்ற தெளிவோடு வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் நானா படேகர் அத்தியாயம் இடம் பெறும் என்பது நிச்சயம்.


[0][0][0]

‘தீக்கதிர்’ நாளேட்டின் அக்டோபர் 12, 2026 இதழில் எனது கட்டுரை


No comments: