காலை நடையில் பூங்கா நிழலில்
“கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஹியூமர் சென்ஸே கிடையதா? எப்ப பார்த்தாலும் ஏதாச்சும் சீரியஸ்சான இஷ்யூஸ் பத்தியே பேசுறாங்க, போராட்டம் நடத்துறாங்கன்னுதான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்...”
“ஏங்க? மக்கள் எப்பவும் சிரிச்சி மகிழ்ச்சியா இருக்குறதுருக்குதான் கம்யூனிஸ்ட்டுகள் உழைக்கிறாங்க. எவ்வளவு கூட்டம் கூடியிருந்தாலும் அத்தனை பேரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற தோழர்கள் பேச்செல்லாம் கேட்டதில்லையா? கலை இலக்கிய இரவு மேடைகள்ல நன்மாறன் பேசிக் கேட்டிருக்கீங்களா? இப்ப மதுக்கூர் இராமலிங்கம் மாதிரியான தோழர்கள் பேசுறதைக் கேட்டுப் பாருங்க... கம்யூனிஸ்ட் இயக்கத்தை இங்கே கட்டி வளர்த்த மூத்த தலைவர்கள்ல ஒருத்தர் இஎம்எஸ். அவரைப் பேட்டி கண்ட ஒரு இங்கிலீஷ் பத்திரிகை நிருபர், ‘நீங்க எப்பவுமே இப்படித்தான் திக்குவீங்களா’ன்னு கேட்டாரு. அதுக்கு இஎம்எஸ், ‘இல்லையில்லை, பேசும்போது மட்டும்தான் திக்குவேன்’னு சொன்னாரு. அதைக் கேட்டு அந்த நிருபர் வாய்விட்டு சிரிச்சாரு, பத்திரிகையிலே பேட்டிக்கு நடுவிலே இதைக் கட்டம் கட்டிப் போட்டிருந்தாங்க. இப்படி நிறையப் பேர் இருக்காங்க. ஆனா என்னன்னா, கம்யூனிஸ்ட்டுகள் சொல்ற ஜோக் பெண்களையோ திருநர்களையோ மாற்றுத் திறனாளிகளையோ ஒதுக்கப்பட்ட மக்களையோ ஏழைபாழைகளையோ மட்டந்தட்டுறதா இருக்காது.”
“சார், இதை நீங்க சொல்லணும்கிறதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். நான் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜோக்கடிக்கத் தெரியாதுன்னுதான் ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன், பட் அன்னிக்கு நாம பேசிக்கிட்டிருந்தப்ப, தலைமுறைகள் மாற்றத்தைப் பற்றி இவரு (அருகிலிருந்தவர்) கேட்டாரு, அதுக்கு நீங்க சொன்ன பதிலைக் கேட்டப்புறம் அந்த நினைப்பை மாத்திக்கிட்டேன்...’’
“ஒரு நிகழ்வைச் சொல்லட்டுமா? தீக்கதிர் சென்னைப் பதிப்பு தொடங்குனப்ப என்னை இங்கே மாத்துனாங்க. அப்ப மதுரை அலுவலகத்திலே நடந்த வழியனுப்புக் கூட்டத்திலே பேசுனவங்க, ‘இவருகிட்ட கோபம், நகைச்சுவை இரண்டும் இருக்கும். முனுக்குனு கோபப்படுற மாதிரியே கண்ட இடத்திலேயும் ஜோக்காகப் பேசுவாரு… சென்னையிலே இதையெல்லாம் கட்டுப்படுத்திக்கிட்டா நல்லது… எல்லாருமே சரியா புரிஞ்சிக்கிடுவாங்கன்னு சொல்ல முடியாது. இவரைத் தப்பா நினைச்சுக்குவாங்க’ன்னு அறிவுரை சொன்னாங்க. என்னோட ஏற்புரையிலே, ‘குமரேசன் கோபப்படுறதில்லை, நகைச்சுவையா பேசுறதில்லைன்னு உங்களுக்குத் தகவல் வந்தா, நான் செத்துட்டேங்கிற செய்திதான் அதுன்னு எடுத்துக்குங்க’ன்னு சொன்னேன்.”
புன்னகையோடு கைகுலுக்கியவர் இன்றைய தேநீர்க்கடை செலவு தன்னுடையதுதான் என்று அங்கேயே அறிவித்தார்.
அவர் ரசித்த, தலைமுறைகள் மாற்றம் பற்றிய கேள்விக்கு நான் சொன்ன பதில் இதோ:
“பேன்ட் அயர்ன் பண்றப்போ, கால் இணைப்புளைச் சேர்த்து வச்சு, முன்னாலேயும் பின்னாலேயும் மடிப்புக் கோடு வர்ற மாதிரி செய்றவங்க மூத்த தலைமுறை. பேன்ட் கால் இணைப்புகளை இரண்டு பக்கமும் விரிச்சு வச்சு முன்னாலேயும் பின்னாலேயும் மடிப்பு வராம அயர்ன் பண்ணினா இளைய தலைமுறை. அயர்ன் பண்ணாமலேயே போட்டுக்கிட்டா இன்றைய தலைமுறை.”
[0]
முகநூல் பதிவு (31 ஆகஸ்ட் 2026)
No comments:
Post a Comment