“இப்ப நம்ம டிஸ்கஷன் பூராவும் பாலிடிக்ஸ்தான், அதுக்குத்தான் டைம் இருக்கும், ஓகேயா?”
இன்றைய காலை நடைநேர பூங்கா நிழல் உரையாடலின் தொடக்கத்திலேயே இப்படி வரையறுத்தார் ஒரு நண்பர். அந்தப் பொழுதில் நண்பர்களின் வினாக்களுக்கு நான் கூறிய விடைகளையும், எனது கேள்விகளுக்கு அவர்களின் பதில்களையும் இங்கே தொகுத்திருக்கிறேன்:
“சென்னையில் வடபழனி–போரூர் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கிவைத்த பிரதமர் தனது தாய்மொழியான குஜராத்தியில் அல்லாமல், மற்ற மாநிலங்களுக்குப் போகிறபோது பேசுகிற இந்தியில் பேசியதன் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் முதலமைச்சர் தனது தாய்மொழியில் பேசாததன் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டுக்கான கோரிக்கைப் பட்டியலை அவர் ஏன் ஆங்கிலத்தில் வைக்க வேண்டும்? தமிழில் வைத்திருந்தால் பிரதமருக்குப் புரியாது என்று நினைத்தாரா? பிரதமருக்கு இந்தியிலோ குஜராத்தியிலோ உடனுக்குடன் மொழிபெயர்த்துச் சொல்வது இன்றைய வளர்ச்சி நிலையில் வெகு எளிதாயிற்றே… அதற்கான பயிற்சி உள்ளவர்களும் நிறையப்பேர் இருக்கிறார்களே…“
“ஆங்கிலத்தில் பேசியதைப் பெருந்தன்மை என்றெல்லாம் எடுத்துக்கொள்ள முடியவில்லை. தனது ஆங்கில அறிவை வெளிப்படுத்தவே அப்படிச் செய்தார் என்றும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் மாநில மொழி முக்கியத்துவத்தை உணராததன் விளைவாகவே பார்க்க வேண்டியிருக்கிறது...”
“பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்திகளின்படி ஒன்றிய அரசின் சாதனைகள், தனது அக்கறைகள் என்று பேசுவதற்கு சென்னைப் பயணத்தை பிரதமர் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் முதலமைச்சர் வைத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை ஆக்குவது, கோதாவரி–காவிரி இணைப்பை தேசியத் திட்டமாகச் செயல்படுத்துவது, மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது, மிக முக்கியமாகத் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிலுவையில் வைத்திருக்கிற 5,100 கோடி ரூபாய் நிதியை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி பிரதமர் எதுவும் சொல்லவில்லை...”
“அந்தக் கோரிக்கைகளை ஏற்பதாக அறிவிக்காததற்குக் கூட அமைச்சரவையில் பேச வேண்டும் என்பது போன்ற நடைமுறை நுணுக்கங்கள் இருக்கலாம். ஆனால், வழக்கமாகச் சொல்வது போல அந்த வேண்டுகோள்களைப் பரிசீலிப்பதாகக் கூடச் சொல்லவில்லையே…”
“ஒன்றிய அரசின் ரயில்வே துறைத் திட்டங்களைத் தொடங்கிவைக்க அழைக்கப்பட்ட நிலையில் மெட்ரோ திட்டத்திற்கான அழைப்பு சேர்ந்துகொண்டதா, அல்லது மெட்ரோ விழாவுக்கு அழைக்கப்பட்ட நிலையில் ரயில்வே திட்டங்களையும் தொடங்கிவைக்கிற நிகழ்ச்சி நிரல் சேர்க்கப்பட்டதா என்று மக்கள் கேட்கலாம். அதற்குப் பதில் கிடைக்கப் போவதில்லை…”
“மாநில அரசுகளின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்கு உறுதிச்சான்று ஏற்பது, வரி விலக்குகள், மாநியங்கள் என்று ஒன்றிய அரசுக்கு சட்டப்பூர்வமாக ஒரு பங்கு இருக்கிறது. அதற்காகத்தான் பிரதமர் அழைக்கப்பட்டாரா என்று கேட்டால் பதில் இருக்காது. அப்படியானால் ஏற்கெனவே இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய, தொடர்ந்து கட்டிய திமுக, அதிமுக ஆட்சிகளின் பங்களிப்புக்கு மரியாதை அளித்திருக்க வேண்டும். அந்தத் தலைவர்களையும் அழைத்திருக்க வேண்டும்...”
“தமிழ்நாட்டுக்கான வருகையை பிரதமர் பயன்படுத்திக்கொண்டார். அவரை இங்கே வரவழைத்ததை முதலமைச்சர் பயன்படுத்திக்கொண்டாரா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.”
தேநீர்க் கடை வரையில் தொடர்ந்த உரையாடல் சூடான டீ, காஃபி கைகளுக்கு வந்த பிறகுதான் நின்றது.


No comments:
Post a Comment