அ. குமரேசன்
சமத்துவ சமுதாயத்தைப் படைக்கும் லட்சியங்களுக்கு ஒரு பெருந்தடையாக இருப்பது மதவாத அரசியல். மக்கள் உண்மைப் பிரச்சினைகளை உணரவிடாமல் அது திசை திருப்புகிறது, பிரிவினைகளை ஏற்படுத்துகிறது, கற்பிதமான காரணங்களுக்காக மோதவிடுகிறது, சுரண்டல் கூட்டங்களின் தங்குதடையற்ற வேட்டைக்குத் தோதாகவும், ஆதிக்கக் கும்பல்களின் ஆணவ ஆட்டத்துக்கு வாகாகவும் களம் அமைத்துக் கொடுக்கிறது.விமர்சனங்களை முன்வைக்கிறபோது பழமைவாதக் காவலர்கள் கேடயமாகக் கையிலெடுப்பது “புண்படுத்திவிட்டது” என்ற குற்றச்சாட்டைத்தான். ஆகவே, எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடியதாக மத நம்பிக்கை இருப்பதால், எவருடைய மனமும் “புண்படாமல்” பகுத்தறிவுக் கருத்துகளையும் நல்லிணக்கச் சிந்தனைகளையும் கொண்டுசெல்வது மாற்றத்திற்கான இயக்கங்களுக்கு ஒரு முக்கியமான சவால்.
சவாலை வெல்வதற்கு ஓர் அடிப்படையான தேவை மக்கள் மனநிலை பற்றிய புரிதல். அதற்கு உதவக்கூடியதாக ஓர் ஆய்வறிக்கை வந்துள்ளது. பல்வேறு நாடுகளிலும் மக்களின் மதம் சார்ந்த நிலைப்பாடுகளை ஆராயும் அந்த ஆய்வு, இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருவாய் நாடுகளின் மக்களில் பெரும்பகுதியினர் தங்களை “மதத் தேசியவாதிகள்” என்று அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. உயர் வருவாய் உள்ள நாடுகளில் அவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்ளும் மக்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைத் தலைமையகமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வணிகத்தில் பெரிய நிறுவனமான சன் ஆயில் கம்பெனி (இப்போது சனோகோ) என்ற குழுமத்தை உருவாக்கியவர் ஜோசப் என். பியூ (1848–1912). பல்வேறு தொண்டுகளுக்கு நிதி வழங்கியவரான அவருடைய மறைவுக்குப் பிறகு மகன்களும் மகள்களும் தி பியூ சேரிட்டபிள் டிரஸ்ட்ஸ் என்ற அறக்கட்டளை அமைப்பை ஏற்படுத்தினர். அதன் ஓர் அங்கமாக 2004இல் அமைக்கப்பட்டது பியூ ரிசர்ச் சென்டர். அரசியல் போக்குகள், பொருளாதார நிலவரங்கள், சமூக நிலைமைகள், மனித உரிமைகள், பாலின சமன்பாடுகள் என பல்வேறு களங்களில் இந்த மையம் வல்லுநர்களையும் ஆராய்ச்சி மாணவர்களையும் கொண்டு தரவுகளைத் திரட்டுவது, தொகுப்பது என அறிவியலார்ந்த பகுப்பாய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
இந்த மையம் 2025–ஆம் ஆண்டில் 36 நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே அவர்களது மதச்சார்பு குறித்த ஆராய்ச்சியை நடத்தியது. மொத்தம் 55,000 பேரிடம் இதற்கான வினாக்கள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த விடைகளின் அடிப்படையிலான அறிக்கை 2026 ஜனவரியில் வெளியிடப்பட்டது. அது தெரிவிக்கிற தகவல்கள், தேசிய அடையாளத்துக்கான வரைவிலக்கணமும், அரசாங்க நிர்வாகத்தில் மதத்திற்கான இடமும் எந்தத் திசையில் நகர்கின்றன என்பது குறித்து ஜனநாயக அக்கறையாளர்களுடைய தீவிரமான விவாதங்களைக் கோருவதாக உள்ளன.
நாடுகள் ஒப்பீடு
உயர் வருவாய் கொண்ட முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும், நடுத்தர வருவாய் கொண்ட வளரும் நாடுகளின் மக்களிடையே தங்களை மதத் தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்கிற போக்கு அதிகமாக இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.
ஆய்வில் பங்கேற்ற அனைத்து நாடுகளுக்குமான மொத்தத் தரவுகளின்படி, நூற்றுக்கு 77 பேர் மதம் சமூகத்திற்கு நன்மையளிப்பதாகக் கருதுகிறார்கள். இருப்பினும், செல்வந்த நாடுகளில் 56 பேர்தான் இக்கருத்தை ஆதரிக்கிறார்கள், நடுத்தர வருவாய் நாடுகளை மட்டும் எடுத்துக்கொண்டால் 87 விழுக்காட்டினர் மதத்தை நேர்மறையாகப் பார்க்கிறார்கள்.
கல்வி வளர்ச்சி, பொருளாதாரப் பகிர்வு, வலதுசாரி அரசியல் தாக்கம் ஆகியவை ஒருவரை மதத் தேசியவாதக் கருத்தியல் நோக்கித் தள்ளும் முக்கியக் காரணிகளாக அமைவதை இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது என்று திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கவலை தரும் கூறுகள்
இந்தியாவில் நடத்தப்பட்ட பியூ கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் நூற்றுக்கு 24 பேர் வெளிப்படையாகவே தங்களை மதத் தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். தினமும் வழிபாடுகளில் ஈடுபடுவோரிடையே இந்தப் போக்கு 27 விழுக்காடாக அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்தியாவில் இந்து மக்களிடையே 57 விழுக்காட்டினர் சமய நூல்கள், வேத போதனைகள் அடிப்படையிலேயே நாட்டின் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்துநிலையை ஆதரிக்கின்றனர். இது எத்தகைய ஆபத்தான, எந்தக் கூட்டத்தின் வாதங்களுக்குச் சாதகமான மனநிலை என்று சொல்ல வேண்டியதில்லை.
ஆனால், தீவிர மதப்பிடிப்பு உள்ளவர்கள் என்று முத்திரையிடப்பட்டுள்ள சிறுபான்மை மதத்தினரான முஸ்லிம் மக்களில் 26 விழுக்காட்டினர் மட்டுமே சமய வழிகாட்டல்களின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்படுவதை ஆதரிக்கின்றனர்.
ஆய்வறிக்கையின்படி, அரசின் மதச்சார்பின்மைக்காக நிற்போரது விசனத்துக்குரிய இன்னொரு தரவு – ஒருவர் இந்தியராக வாழ்வதென்றால் அவர் இந்துவாக இருப்பது கட்டாயத் தேவை என்று நூற்றுக்கு 73 இந்துக்கள் கருதுகிறார்கள். நாட்டின் மகத்தான பன்முகப் பண்பாட்டையும் அரசமைப்பு சாசனக் கோட்பாட்டையும் கழுவிலேற்றத் துடிக்கும் வன்மர்கள் காலூன்றிக்கொள்வதற்கான மேடையை இது காட்டுகிறது.
ஒளிக்கீற்று
சட்டங்களை இயற்றுவதில் மத நூல்களின் தாக்கத்தைப் பொறுத்தவரையில் மேற்குலக நாடுகளுக்கும் வளரும் கிழக்குலக நாடுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் அரசு நிர்வாகமும் மத நம்பிக்கையும் தனித்தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற மதச்சார்பின்மைப் பண்பாட்டை உறுதியாகப் பின்பற்றுகிறார்கள்.
இந்தியாவில் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சும் ஒளிக்கீற்று ஒன்று இருக்கிறது. ஒருபுறம் மத அடிப்படைவாத சக்திகளின் பரப்புரைகள் தீவிரமடைந்து வருகிறபோது, மறுபுறம் குடிமக்களில் 41 விழுக்காட்டினர் புனித நூல்களுக்கும் பொதுக் கருத்துக்கும் முரண்பாடு ஏற்படும் நிலையில் ஜனநாயக விருப்பத்திற்கே சட்டமியற்றலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
தேசப்பற்றுடன் மத உணர்வைக் கலந்து, உழைக்கும் மக்களின் கவனத்தை அவர்களின் உண்மையான வாழ்வாதாரப் பேரிடர்களிலிருந்து திசை திருப்பும் வலதுசாரிப் போக்கு உலக அளவில் அதிகரித்து வருவதை இடதுசாரி அமைப்புகள் எடுத்துக் கூறுகின்றன. அதற்கான ஆதாரத் தளத்தை பியூ ஆய்வறிக்கை புள்ளியியல் தரவுகளுடன் உறுதிப்படுத்துகிறது. அனைவருக்குமான அரசும் அவரவர்க்கான மதமும் ஒன்றல்ல. நம்பிக்கை மதிக்கப்பட வேண்டியது. மதச்சார்பற்ற அரசின் மீதான நம்பிக்கை வளர்க்கப்பட வேண்டியது.
அனைவருக்குமான நல வாழ்வை உறுதிப்படுத்துவதில் தோல்வியடையும் முதலாளித்துவக் கொள்கைகளின் பிடியில் உள்ள நாடுகளில், முளைவிடும் கொந்தளிப்பைக் கிள்ளியெறிய எளிய மத நம்பிக்கையைக் கொடிய வெறியாக மாற்றும் கைங்கரியங்கள் நடந்தேறுகின்றன. அரசுகளும் வலதுசாரி அரசியல் அமைப்புகளும் அதைச் செய்கின்றன.
அதே வேளையில், முதலாளித்துவ சமுதாய அமைப்புக்கு உள்ளிருந்தே, அவரவரின் சொந்த மதப் பற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்துக்கொண்டு, அரசமைப்பின் மதச்சார்பின்மை மாண்புகளை வளர்த்தெடுக்க முடியும் என்று உயர் வருவாய் நாடுகளின் மக்கள் நிறுவிக்காட்டுகிறார்கள். இந்தியா உள்ளிட்ட நாடுகளிலோ, பொருளாதார வளர்ச்சி என்றால் கார்ப்பரேட் கூட்டுக்களவுப் பங்காளிகளின் லாப வேட்டை மட்டுமே என்று காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்திய நிலவர சிறப்பு ஆய்வு
இந்த மையத்தின் வல்லுநர்கள் இதற்கு முன்பு 2019–2020இல் இந்தியாவில் மட்டும் சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். அது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, மையம் என 6 மண்டலங்களாகப் பிரித்து நடத்தப்பட்டது. 17 மொழிகள் சார்ந்த 30,000 பேரிடம் அவர்களது மத நம்பிக்கை குறித்தும், மற்றவர்களுடனான உறவு தொடர்பாகவும் வினவப்பட்டது. 2021இல் வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கை கவனத்திற்கும் நம்பிக்கைக்கும் உரிய, சுவையான விவரங்களைத் தெரிவிக்கிறது.
பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த மத எல்லைகளுக்கு உள்ளேயே வாழ்வதற்குத்தான் விரும்புகிறார்கள், மதக் கலப்புத் திருமணங்கள் தடுக்கப்படுவதை ஆதரிக்கிறார்கள். இருந்தபோதிலும் 84 விழுக்காடு மக்கள், வாழ்க்கைக்குத் தங்கள் சொந்த நம்பிக்கைகளைக் கடைப்பிடித்துக்கொண்டே, அனைத்து மதங்களையும் மதிப்பதுதான் உண்மையான இந்தியர்களாக இருப்பதன் அடையாளம் என்று பதிவு செய்தார்கள். 80 விழுக்காட்டினர் பிற மதங்களை மதிப்பது தங்கள் சொந்தப் பண்பாட்டின் ஒரு பகுதி என்றார்கள்.
வடக்கு தெற்கு
வட மாநிலங்களிலும் மைய மாநிலங்களிலும் இந்தியராக இருப்பதற்கு இந்துவாக வாழ்வதும் இந்தி பேசுவதும் கட்டாயம் என்றார்கள். ஆனால் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேசியத்தையும் மதத்தையும் பிணைத்துப் பார்ப்பவர்கள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். இந்தியம், இந்துத்துவம், இந்தி மூன்றும் இணைந்த தேசிய அடையாளத்தை ஏற்றவர்கள் வட மாநிலங்களில் மிகுதியாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் பாஜக ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள் என்ற அரசியல் நிலவரத்தையும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
சாதியம், உணவுப் பழக்கம் தொடர்பான வினாக்களும் அந்த ஆய்வில் கேட்கப்பட்டன.
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் ஆகப்பெரும்பாலும் தங்களை ஏதாவது ஒரு சாதியோடு இணைத்தே பார்க்கிறார்கள் உயர் கல்வி பெற்றவர்களில் கூட பெரும்பாலோர் சாதிக்கலப்புத் திருமணங்களை ஆதரிக்கவில்லை.
அதே வேளையில், ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் உட்பட மிகப் பலரும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சாதிப் பாகுபாடுகள் இல்லை என்று கூறியிருக்கிறார்கள். அது தங்களுக்கு வியப்பை அளித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மத நம்பிக்கைகளைப் பொறுத்தவரையில், வழிபாட்டு முறைகளை விடவும் உணவுப் பழக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்துக்களில் 72 விழுக்காட்டினர் மாட்டுக்கறி உண்பவர்கள் இந்துவாக இருக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். முஸ்லிம்களில் 77 விழுக்காட்டினர் பன்றி இறைச்சி உண்பவர்கள் இஸ்லாமியராக இருக்க முடியாது எனக் கூறியிருக்கிறார்கள். சாதி, உணவு தொடர்பான தேசியவாதச் சிந்தனைகளிலும் வடக்கு தெற்கு வேறுபாடு இருக்கிறது.
ஒப்பீட்டளவில் வட மாநிலங்களிலிருந்து மாறுதலாகத் தென் மாநிலங்கள் தருகிற ஆறுதலுக்கான வேர்களை வரலாற்றில் திராவிட, இடதுசாரி இயக்கங்களின் அளப்பரிய உழைப்போடு இணைத்துப் பார்க்க முடியும்.
உலக அளவிலும் உள்நாட்டிலும் குடிமக்கள் விரும்பும்படி பொருளாதார வாழ்வு கட்டமைக்கப்படுவதோடு இணைந்ததாக, மதச்சார்பற்ற ஜனநாயகக் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தாக வேண்டும். அவ்வாறு உயர்த்துவதன் மூலமே, தீவிரப்படுத்தப்படும் மதத் தேசியவாதப் பெருந்தொற்றிலிருந்து மக்களையும் ஒன்றுபட்ட சமுதாயத்தையும் அரசமைப்பு சாசனத்தையும் பாதுகாக்க முடியும். அதற்கான நீண்ட பயணத்தில் மக்கள் மனநிலையைப் புரிந்துகொள்வது ஒரு முக்கியமான கட்டம்.
சமச்சீரற்ற வளர்ச்சியும் வருவாய்ப் பங்கீடுகளும் மக்களை, நல்லிணக்கத் தேசியத்துக்கு முரணாக, பிற்போக்கான சாதி, மதத் தேசியவாதத்திடம் பிடித்துக்கொடுக்கின்றன. ஆம், பொருளாதாரப் பெரும் போராட்டம், பண்பாட்டுப் பேரியக்கம் இரண்டும் இணைந்ததே சமத்துவ இலக்கை நோக்கிய ஒருவழிச் சாலை. அந்தச் சாலையில் விளக்குக் கம்பங்களாக பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கைகளும் நிற்கின்றன.
[0][0][0]
செம்மலர் நவம்பர் 2026 இதழில் எனது கட்டுரை

No comments:
Post a Comment