சிறிய குழு ஒன்றை அமைத்து சென்னை வீதிகளிலும் மேடைகளிலும் இளைஞர் தேவா பாடிய கானா பாடல்களைக் கேட்டவர்கள் அவர் தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இசை ஆளுமையாக உருவெடுப்பார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அது நடந்தது. திரையிலும் கானா பாடல்களே அவரது புகழுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.
சென்னை மயிலாப்பூர் பகுதியில், எளியதொரு குடும்பத்தில் சொக்கலிங்கம் – கிருஷ்ணவேணி இணையருக்கு 1950இல் பிறந்தவர் தேவா என்ற தேவநேசன் சொக்கலிங்கம். சிறுவயதிலிருந்தே இசை நாட்டத்துடன் வளர்ந்தவருக்கு அப்போது முறையான இசைப் பயிற்சி பெறுவது கூட பெரும் சவாலாக இருந்தது. பொருளாதார நெருக்கடி ஒரு புறம், சமூகப் பின்னணி இன்னொரு புறமுமாகச் சேர்ந்து அந்த நெருக்கடிகளை ஏற்படுத்தின.
மேடை நாடகங்கள், உள்ளூர் இசைக்குழுக்கள் என கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டவர் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்ததன் மூலம் தன் பயணத்தின் அடுத்தக் கட்டதை அடைந்தார். பல ஆண்டுகள் அயராத முயற்சிகளுக்கும் பின்வாங்காத போராட்டங்களுக்கும் பிறகு, 1989இல் 'மனசுக்கேத்த மகராசா' திரைபடத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கடுத்த ஆண்டில் வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' படம் அவருக்கு மிகப்பெரிய வணிக வெற்றியைத் தேடித்தந்ததுடன் திரையுலகில் அவருக்கொரு நிலையான இடத்தை உறுதிப்படுத்தியது.
தடைகள் தகர்ப்பு
அன்றைய காலக்கட்டத்தில் தமிழ் இசைத்துறையில் நிலவிய ஆதிக்கச் சூழலில், எவ்விதப் பின்புலமும் இல்லாத, பட்டியல் சமூகப் பின்னணியில் இருந்து வருகிற கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகக் கடினமாக இருந்தது. அதில் வெற்றிக்கொடி நாட்டிய மிகச்சிலரோடு தேவாவும் இணைந்தார்.
அவர் சென்னையின் அடித்தட்டு மக்களுடைய இசையாகிய கானாவின் மெட்டு, தாள வடிவங்களைத் திரைக்குக் கொண்டுவந்தபோது, அதுகுறித்த இளக்காரமான முத்திரைகள் குத்தப்பட்டதுண்டு. அத்தகைய சமூகப் புறக்கணிப்புகளையும் துணிந்து எதிர்கொண்டார் அவர்.
அந்தத் தடைகளைத் தகர்ப்பதிலும், ரசிகர்கள் கொண்டாடும் உயரத்தை எட்டியதிலும் அவரது தனித்துவக் கலைத் திறமையும் இடையறா உழைப்பும் துணை நின்றன. அவருக்கு அஞ்சலி செலுத்தும் அனைவரும் சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்வியலோடு கலந்த 'மெட்ராஸ் கானா' இசையை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரிய பங்களிப்பைக் குறிப்பிடுகிறார்கள்.
அன்றைய மைய நீரோட்டத் திரைப்படங்களில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த அந்த அடித்தட்டு மக்களின் இசையைத் தனது மெட்டுகளின் மூலம் இசையரங்குகளின் மேல் தட்டுக்குக் கொண்டு சென்றார். அதே வேளையில், புதிய நுட்பங்களைப் பொருத்தமாக இணைத்து கானா பாடல்களுக்குப் புதிய ஈர்ப்புகளையும் ஏற்படுத்தினார்.
"அடி ராக்கம்மா கைய தட்டு" (அண்ணாமலை), "சொப்பன சுந்தரி" (புதிய மன்னர்கள்), "மச்சக்காரன்" (வல்லரசு) உள்ளிட்ட அவரது பல பாடல்கள் இன்றும் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கின்றன. அவை கானா தளத்தை அறியாமலே தமிழ்க் காதுகள் ரசித்துக் கேட்டன. அத்துடன், அவற்றின் தாக்கம் சமூக வெளியிலும் கானா கலைஞர்களுக்கும் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
முன்னணியில் பின்னணி இசை
திரைப்படங்களுக்கு, குறிப்பாகப் ‘மாஸ் சினிமா’ எனப்படும் வணிக வெற்றிப் படங்களுக்கு, தொடக்கத்திற்கான அறிமுக இசை (டைட்டில் மியூசிக்), காட்சிகளுக்கான பின்னணி இசை (பீஜிஎம்) இரண்டிலுமே தேவா தனி சுவரமும் சுருதியும் பதித்தார். எடுத்துக்காட்டாக ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாமலை', 'பாட்ஷா', 'அருணாச்சலம்' ஆகிய படங்களின் தொடக்க இசை எப்போதும் நினைவில் ஒலிப்பவை.
மூத்தவர் கமல், இளையவர்கள் விஜய், அஜித் உள்ளிட்ட நாயக நடிகர்களின் தொடக்க கால வெற்றிப் படங்களான ஆசை, காதல் கோட்டை, வாலி, குஷி முதலிய படங்களின் வெற்றிக்கும் தேவாவின் துடிப்பான இசை தூணாக அமைந்தது.
மெலடி மெட்டுகள்
தேவா என்றால் கானா மட்டும்தான் என்ற எண்ணத்தில் பலர் இருந்தபோது, அவர் இசையமைத்த மென்மையான மெலடி பாடல்கள் அந்த எண்ணத்தை மாற்றின. ‘காதல் கோட்டை’ படத்தில் இடம்பெற்ற "நலம் நலமறிய ஆவல்" எஸ்.பி. பாலசுப்பிரமணியன், அனுராதா ஸ்ரீராம் மாயக் குரல்களில் ரசிக்கவும் வியக்கவும் வைத்தது. "காலமெல்லாம் காதல் வாழ்க", "மின்னல் ஒரு கோடி", என பல பாடல்கள் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த மெலடிகளாக மதிக்கப்படுகின்றன.
தேவா குறிப்பாக ஆர்மோனியம், கீ-போர்டு வாசிப்பில் அவர் கையாண்ட தனித்துவமான நாட்டுப்புற மற்றும் கிராமிய தாளக் கட்டுக்களைப் பயன்படுத்திய நேர்த்தியை இசைக் கலைஞர்லகள் பாராட்டியிருக்கிறார்கள். அவர் பல முன்னணிக் கலைஞர்களையும் வளர்ந்து வந்தோரையும் பாட வைத்ததோடு, தனது சொந்தக் குரலிலும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
அவரது மெல்லிசைத் திறனை மெச்சி அவருக்கு 1985ஆம் ஆண்டிலேயே சூட்டப்பட்ட பட்டம்தான் ‘தேனிசைத் தென்றல்’. அந்தப் பட்டத்தைச் சூட்டியவர் யார் தெரியுமா? ‘மெல்லிசை மன்னர்’ என்று மக்கள் போற்றிய எம்.எஸ். விஸ்வநாதன். திரையுலகிற்கு வருவதற்கு முன் தேவா இசையமைத்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்திப்பாடல் தொகுப்பு வெளியீட்டு விழா திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்றது. கோவில் நிர்வாகமும் பொதுமக்களும் நடத்திய அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எம்.எஸ்.வி. மேடையிலேயே அறிவித்து இந்தப் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்.
தமிழ்த் திரையுலக இசைக் களத்தில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என்ற இரு பேரலைகள் ஓங்கியிருந்த காலக்கட்டத்தில் தேவா தனது அலையையும் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இருவருமே அதை அங்கீகரித்துப் பாராட்டியிருக்கிறார்கள்.
இசைக் குடும்பம்
தேவா தனது சொந்த சாதனைகளோடு நின்றுவிடாமல், தனது குடும்பத்தாரையும் இசைத்துறையில் தடம் பதிக்கச் செய்தார். தம்பிகளான சபேஷ், முரளி இருவரும் அவரது துணையாளர்களாக அறிமுகமாகி பின்னர் தனி இசையமைப்பாளர்களாக அடையாளம் பெற்றனர். சபேஷ் சென்ற ஆண்டு காலமாகிவிட்டார்.
மகன் ஸ்ரீகாந்த் தேவா பல திரைப்படங்களுக்கு இசையமைத்துத் தந்தையின் வழியைத் தொடர்கிறார். மருமகன் சந்தோஷ் நாராயணன் நவீன இசையமைப்பாளராகத் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் தேவாவைக் கொண்டாடியதன் வெளிப்பாடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் மெட்டமைத்த பாடல்களும் பின்னணி இசைக் கோர்ப்புகளும் ஒலிக்கின்றன. மக்கள் ஏற்பின் மற்றோர் அங்கீகாரமாக, 1992இல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு அவருக்கு 'கலைமாமணி' விருது வழங்கி கௌரவித்தது. 2011இல் ஜெயலலிதா தலைமையிலான அரசு அவருக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்பை அளித்துப் பெருமை சேர்த்தது.
சமூகத்தின் அடியடுக்கிலிருந்து புறப்பட்டு, எவ்விதப் பின்னணியும் இன்றி தன் கலை ஈடுபாட்டாலும் அயராத உழைப்பாலும் தமிழ் திரையுலகின் வெற்றிச் சூழல் அமைப்பைத் தீர்மானிக்கூடிய ஒரு முன்னணி ஆளுமையாக உயர்ந்த தேவா இத்தகைய தேடலும் முயற்சியும் உள்ளோருக்கு ஒரு நம்பிக்கை விளக்காக ஒளிர்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் கலையாக ஒதுக்கப்பட்ட கானா இசைக்கு உலகளாவிய மரியாதையைப் பெற்றுத் தந்த பெருமை அவரையே சாரும். தேவா இந்த அக்டோபர் 17இல் ரசிகர்களைக் கலங்க வைத்துக் காலமாகிவிட்டாலும், அவர் வழங்கிச்சென்றுள்ள பாடல்களும் இசை நுட்பப் பங்களிப்புகளும் ஒரு காலமாக நின்று தமிழ்ச் செவிகளில் ஒலித்திருக்கும், உள்ளங்களில் நிலைத்திருக்கும்.
[0][0][0]
தீக்கதிர் நாளேடு ஞாயிறு (18 அக்டோபர், 2026) இதழில் வந்துள்ள எனது கட்டுரை

No comments:
Post a Comment