Friday, 20 November 2026

வருமானமும் செல்வமும் சாதியும் சுருங்கிய, சுருங்காத இடைவெளிக் காட்சிகள்


“பேப்பர் போடுகிறவர்கூட முன்பு போலசைக்கிளில் வருவதில்லை, டூவீலரில்வருகிறார். ஆட்டோ ஓட்டுநர் மொபைல் வரைபடம் காட்டும் வழியில் போய் சரியான இடத்தில் இறக்கிவிடுகிறார். வாகனங்கள் வேகமாகப் போகமுடியாத அளவுக்குத் தெருவோரமெல்லாம் கார்கள் நிற்கின்றன. இவையெல்லாம் தனிமனித வருமானம்அதிகரித்திருப்பதைக் காட்டவில்லையா? இது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சாதனைதானே? முதலாளித்துவத்தையும் அரசாங்கத்தையும் எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் காட்சிகளைக் காண மறுக்கிறீர்கள்.”

ஊடக விவாதங்களிலும் உள்ளூர் அரங்குகளிலும் முதலாளித்துவப் பொருளாதாரவியலாளர்களும் ஒன்றிய ஆளுங்கட்சியினரும் இப்படித் தாராளமாக விளக்கம் அளிக்கிறார்கள். தள்ளுவண்டிப் பழவியாபாரிகூட க்யூஆர் குறியீட்டு அட்டை மூலம்பணம் வாங்குவதையும் வளர்ச்சியின் அடையாளம் என்பார்கள். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அந்தஅட்டை கட்டாயமாகத் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டதைச் சொல்ல மாட்டார்கள். நுகர்பொருள்களுக்குச் செலவிடும் நடுத்தர வர்க்கம் விரிவடைகிறதுஎன்பதோடும் அவர்கள் நிற்பதில்லை. முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சம்மட்டியால் இந்தியாவின் கெட்டிதட்டிய சாதியச் சுவர்கள் தகர்க்கப்படுகின்றன என்றும் வாதிடுவார்கள்.

ஒரு தொடரின் நான்காவது கட்டுரை

இத்தகைய வாதங்களைப் பற்றி ஆய்வாளர் ராஜேஷ் சுக்லா எழுதியுள்ள ஒரு கட்டுரை கவனம் பெறுகிறது. இந்திய நுகர்வோர் பொருளாதாரம் குறித்த மக்கள் ஆய்வகம் (பிஆர்ஐசிஇ) என்ற அமைப்பை நடத்திவரும்அவர், பொருளாதார வளர்ச்சிப் போக்குகள், சமூக ஏற்றத்தாழ்வு குறித்துத் தொடர்ந்து எழுதிவருபவர். “வருமான இடைவெளி குறைந்திருக்கிறது; செல்வ இடைவெளி ஏன் குறையவில்லை?” என்ற அவரதுகட்டுரை (‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, நவம்பர்3), “சாதியும் பொருளாதார அசைவும்” என்ற தொடரின் நான்காவது பகுதி.

சாதியின் தாக்கத்தை வெற்று உணர்ச்சிமய வாதங்களால் அல்ல, ஆழமான மாதிரி ஆய்வுகளாலும் முறையான தரவுகளாலுமே துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும் என்று முதல் கட்டுரையில் வாதிட்டார். வெறும் எண்ணிக்கைக் கணக்கெடுப்பைத் தாண்டி, பொருளாதாரத்தில் சாதியின் தாக்கம் எங்கே செயல்படுகிறது என்பதைத் தரவுகள்மூலம் கண்டறிய வேண்டும் என்பது அவரது வாதம். முன்பு முழுக்கச் சாதியால் முடக்கப்பட்டிருந்த சில தொழில்களில், நவீனச் சந்தையாலும் நகர்மயமாக்கலாலும் சாதியப் பிடிமானம் தளரத் தொடங்கியுள்ளதை இரண்டாவது கட்டுரையில் சுட்டிக்காட்டினார். மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்தாலும் அதன்பலன்கள் அனைவரையும் சமமாகச் சென்றடைவதில்லை; பலருக்குத் தனித் திறமையும் உழைப்பும் அல்ல, குடும்பச் செல்வாக்கும் பரம்பரைப் பின்னணியுமே முன்னேற்றத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை மூன்றாவது கட்டுரையில் பதிவு செய்தார். சமூகங்களுக்கு இடையிலான வருமான இடைவெளி குறைந்திருப்பது உண்மை; ஆனால் செல்வ இடைவெளிகுறையவில்லை என்கிறது நான்காவது கட்டுரை.

வருமானமும் செல்வமும்

இந்த விவாதத்தைப் புரிந்துகொள்ள, இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டும். ஒருவரோ ஒரு குடும்பமோ குறிப்பிட்ட காலத்தில் (நாள், வாரம், மாதம், ஆண்டு) வேலை, தொழில், பங்கு முதலீடுபோன்றவற்றின் மூலம் ஈட்டும் பண வரவு வருமானம். அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க உதவும் நீரோட்டமஅது. வாழ்நாளில் சேர்த்துக் குவித்த, அடுத்த தலைமுறைகளுக்கும் தொடரக்கூடிய சொத்துகளின் நிகரமதிப்பு செல்வம். நிலம், வீடு, தங்கம், சேமிப்பு, நிறுவனப்பங்குகள், மூலதன முதலீடுகள் இதில் அடங்கும்.கல்வி வாய்ப்புகள் பெருகியதாலும், அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்ததாலும், கடந்த சில பத்தாண்டுகளில் பல சாதிகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலைச் சமூகத்தினர், முன்பைவிட ஓரளவு நல்ல ஊதியம் பெறும் நிலைக்கு முன்னேறியுள்ளனர். இதனால்உழைப்பு வருமானத்தில் இருந்த இடைவெளி, முன்பிருந்ததைக் காட்டிலும் ஓரளவு குறுகியிருக்கிறது என்கிறார் சுக்லா. இதை மறுப்பதற்கில்லை.இந்த மாற்றம் தானாகவோ கருணையாலோ வந்ததல்ல. தொடர்ச்சியான போராட்டங்களின் வெற்றியாகக் கிடைத்த இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக் கொள்கைகளின் விளைவு இது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

செல்வக் காட்சி இதற்கு மாறானது. அது வெறும் ஊதிய வருமானம் அல்ல; தலைமுறைகளாகத் திரண்டது. பல நூற்றாண்டுகளாக நிலமும் மூலதனமும் அரசர்கள், நிலவுடைமையாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தினரிடமும், சமூகப் படிநிலையில்அவர்களோடு இணைந்திருந்த மேல்தட்டினரிடமுமே குவிந்துக் கிடந்தன. மற்ற சமூகங்களுக்குச் சொத்துரிமை மறுக்கப்பட்டது. அந்தச் சமூகங்கள் இன்று உழைப்பால் வருமானத்தை உயர்த்திக்கொண்டாலும்,தலைமுறைகளுக்குக் கைமாறும் செல்வத்தைக் கட்டியெழுப்ப முடியவில்லை. அது ஒரே இரவில் நடந்துவிடாது. இங்கொருவர் அங்கொருவர் அப்படிச் சேர்த்திருக்கலாம்; விதிவிலக்கைப் பொது நிலையாகக் காட்டக் கூடாதல்லவா?

சந்தைப் படியும் சாதியப் பிடியும்

நவீனக் கல்வியும் சந்தையும் சாதியத்தின் இறுக்கமான பிடியைத் தளர்த்தியிருப்பது தெரிகிறது. ஆனால்அதே சந்தை, செல்வத்தை மேலும் சிலரிடமே குவிக்கும் இயந்திரமாகவும் செயல்படுகிறது. இது தனிமனிதர்கள் அளவில் மட்டுமல்லாமல், சமூகங்களின் அளவிலும் நிகழ்வதை ஆய்வறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி உள்ளிட்ட உலக சமத்துவமின்மை ஆய்வக (WIL)ஆய்வாளர்கள் 2024-இல் வெளியிட்ட “இந்தியாவில் வரி நீதியும் செல்வ மறுபகிர்வும்” என்ற அறிக்கைப்படி, இந்தியாவின் பில்லியனர்களிடம் (100 கோடி டாலருக்கு மேல் சொத்து உடையவர்கள்) உள்ள செல்வத்தில் 88.4 சதவீதம் உயர் சாதிகள் எனப்படும் பிரிவினரிடம் குவிந்துள்ளது. ஒன்றிய அரசின் தேசியப் புள்ளியியல் அலுவலகம் நடத்திய அகில இந்தியக் கடன்,முதலீட்டு ஆய்வின் (AIDIS 2018–19) அடிப்படையில், நாட்டின் மொத்தச் செல்வத்தில் ஏறத்தாழ 55சதவீதம் உயர் சாதியினர் வசம் உள்ளது.

ஒருபுறம், விளிம்புநிலை மக்கள் அன்றாட வாழ்க்கைக்கும், குடும்பக் கடன்களை அடைப்பதற்கும், தவிர்க்கவியலாத உடனடித் தேவைகளுக்கும் தங்களுக்குக் கிடைக்கிற வரம்புக்கு உட்பட்ட வருமானத்தைச் செலவிட்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  மறுபுறம், பரம்பரைச் சொத்து உடையவர்கள் அதைப் பெருக்குவதோடு, நவீன மூலதன முதலீடுகள் மூலம்செல்வ இடைவெளியை மேலும் அகலமாக்குகிறார்கள். உழைப்பால் வருமான இடைவெளி குறைந்தாலும், சொத்திலும் நீண்டகாலச் செல்வச் சேர்ப்பிலும் ஏற்றத்தாழ்வு அப்படியே நீடிப்பது மட்டுமல்ல, அதிகரிக்கவும்செய்கிறது.

சாதிய அமைப்பால்தான் இந்தியாவில் தொழிலும் வணிகமும் வளர்ந்தன என்று வலதுசாரிப் பொருளாதார வல்லுநர்கள் சிலர் வாதிடுவதுண்டு. குறிப்பிட்டதொழில்களில் குறிப்பிட்ட சாதியினர் பெருமளவில் ஈடுபட்டிருப்பதைச் சான்றாகக் காட்டுவார்கள். அப்படியானால், தெருக்கூட்டுவது முதல் கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்வது வரையிலான வேலைகள் குறிப்பிட்ட சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டதும் “தொழில்வளர்ச்சியா? இந்தக் கேள்விக்குப் பதில் வராது.செல்வம் குவிந்துள்ள சாதிகளிலும் கணிசமானோர் பொருளாதாரப் பாதுகாப்புக்காகப் போராடிக்கொண்டிருப்பதைக் காணத் தவறக் கூடாது. அந்தச்சாதிகளில் எல்லோரும் பணக்காரர்கள் அல்ல; ஆனால் பணக்காரர்களில் பெரும்பாலோர் அந்தச் சாதிகளைச்சேர்ந்தவர்கள்.

மெய்யான சமத்துவம் வசப்பட…

தனிமனித, குடும்ப வருமானம் உயர்வது மட்டுமேமுழுமையான சமூக நீதியை நிலைநாட்டிவிடாது. அதற்குக் கொள்கை அளவில் அடிப்படை மாற்றங்கள் தேவை. முதலாவதாக, செங்கொடி இயக்கங்களும் சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலச்சீர்திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்;விளிம்புநிலை மக்களுக்கு நிலமும் வாழ்வாதாரச் சொத்துகளும் சென்றடையும் அரசுக் கொள்கைகள் நேர்மையாகத் தீவிரப்படுத்தப்பட வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களின் அடுத்த

தலைமுறைக்கு உயர்கல்வியிலும் தொழில் முதலீட்டிலும் சம வாய்ப்பு உறுதி செய்யப்படவேண்டும்.அவர்களதுவருமானம் உண்மையாக உயர்வதன் மூலம்வறுமைக்கோடு மேலே ஏற வேண்டும்; ஆனால் வறுமைக்கோட்டையே கீழே இறக்கி வரைந்து கணக்குக் காட்டக் கூடாது. எனினும்ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் கையாள்வது இந்த உத்தியைத்தான்.

நியாயமான செல்வப் பகிர்வுக்கு, பெருநிறுவனங்கள் மீதும் அளவுகடந்த சொத்துக் குவிப்பு மீதும்முறையான நேரடி வரிகள் விதிக்கப்பட வேண்டும்; அந்த நிதி விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்கும்பொதுநலத் திட்டங்களுக்கும் செலவிடப்பட வேண்டும். இடதுசாரிகள் இதைத்தான் சொல்லி வருகிறார்கள். இப்போது ராஜேஷ் சுக்லா போன்றோர்சொல்வதையாவது ‘செங்கோல்கள்’ செவிமடுக்குமா?

மேலோட்டமாகப் பார்த்தால் இது புள்ளிவிவரங்களுக்குள் நடக்கும் விவாதமாகத் தோன்றும். இந்தியச் சமூகத்தின் அடித்தளத்தில் இயங்கும் வர்க்க முரண்பாடுகளையும் சாதியக் கட்டமைப்புகளையும் ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் அரசியல் உறுதியுடனும் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு, இந்தத் தரவுகள் எதை வலியுறுத்துகின்றன என்பது தெளிவாகப் புலப்படும்.

[0][0]]0]

தீக்கதிர் நவம்பர் 20, 2026 இதழில் எனது கட்டுரை


No comments: