Saturday, 28 June 2025

ஜி-7 உச்சி மாநாட்டிலிருந்து டிரம்ப் வெளியேறியது ஏன்?

'விகடன்' டிஜிட்டல் பதிப்பில் (ஜூன் 28) வந்துள்ள எனது கட்டுரையின் வலைப்பூ பதிவு


ஏழு நாடுகள் அமைப்பின் (ஜி–7) உச்சி மாநாட்டிலிருந்து டொனால்டு டிரம்ப் வெளியேறிய செய்தி உலக அரசியல் முகத்தில்  கவலை ரேகைகளைப் படரவிடடுள்ளது.  இம்மாதம் 15, 16, 17 தேதிகளில் கனடா நாட்டின் கனானான்ஸ்கிஸ் நகரில் இந்த மாநாடு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மாக்ரோன், ஜெர்மனி “வேந்தர்”  ஃபிரெட்ரிக் மெர்ஸ், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா, ஐக்கியப் பேரரசு (இங்கிலாந்து) பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றனர். அமெரிக்காவின் அரசுத் தலைவராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் டிரம்ப் கலந்துகொண்ட முதல் ஜி–7 உச்சி மாநாடு இது. எந்த நாட்டில் கூடுகிறதோ அந்த நாட்டின் ஆட்சித் தலைவர் தலைமையில்தான் உச்சி மாநாடு நடைபெறும். இந்த ஆண்டு கனடா பிரதமர் தலைமையில் கூடியது. 

இவர்களுடன் நாடு அல்லாத உறுப்பினரான ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, உக்ரைன் தலைவர்களுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இவர்கள் ஏழு பேரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, மேற்கத்திய வலலரசுகளின் ராணுவக் கூட்டாகிய நேட்டோ ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இத்தனை ஆளுமைகள் கூடிய அந்த உச்சி மாநாடு, இயல்பாகவே உலக அளவில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. உலகம் இன்று சந்திக்கிற பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட  தலையாய சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படும், தீர்வுகளுக்கான அணுகுமுறைகள் வகுக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.


சரியான கணிப்பு

அப்படியொன்றும் திட்டவட்டமான முடிவுகளுக்கு உச்சிமாநாடு போய்விடாது என்றும் உலக அரசியல் நோக்கர்கள் கணித்தார்கள். அந்தக் கணிப்பு சரிதான் என்று காட்டுவதாக உச்சிமாநாடு முடிந்தது.

முடிவதற்கு முன்பாக, இரண்டாவது நாள் கூட்டத்தையும் புறக்கணித்து ஜூன் 16 அன்று வெளியேறினார் டிரம்ப். அமெரிக்க அரசுத் தலைவராக இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு அவர் கலந்துகொண்ட முதல் ஜி–7 உச்சி மாநாடு அது. ஆனால், ஜி–7 உச்சிமாநாட்டிலிருந்து அவர் வெளியேறியது இது முதல் தடவையல்ல. முதல் முறை பதவியில் இருந்தபோது 2018 ஜூன் 8, 9 தேதிகளில் நடைபெற்ற உச்சிமாநாட்டிலிருந்தும் இதே போல், கூட்டம் முடிவதற்கு முன் வெளியேறினார். அப்போதும் கனடாவில்தான், அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில், உச்சிமாநாடு கூடியது.

டிரம்ப் அப்போது எஃகு, அலுமினியம் இறக்குமதிகளுக்குக் கடுமையான விகிதத்தில் வரி விதித்திருந்தார். அமெரிக்காவின் நட்பு நாடுகளிலிருந்து வந்த அந்தச் சரக்குகளுக்கும் அதே வரிதான். இதை ஒரு வர்த்தகப் போர் என்று மற்ற ஜி–7  நாடுகள் கண்டித்தன. குறிப்பாக ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்தார். முன்னதாக டிரம்ப் அமெரிக்காவை அதன் கூட்டாளிகள் “பன்றி வங்கி” (குழந்தைகள் காசு சேமிக்கும் உண்டியல்) போலப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கும் ட்ரூடோ தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். 

இதனால் கோபமடைந்தவராகக் கூட்டத்திலிருந்து  வெளியேறிய டிரம்ப், மாநாட்டின் முடிவில் வெளியிடப்படும் கூட்டறிக்கையில் அமெரிக்கா சார்பாகக் கையெழுத்திட வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அது ஜி–7 ஒற்றுமைக்கு ஒரு பெரிய அடி என்று உலக அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.

புதிய காரணம்

இந்த முறை வெளியேறியதற்கு அவர் மையக் கிழக்கு பிரச்சினையைக் காரணமாக்கியுள்ளார். இஸ்ரேல், ஈரான் போரில் உடனே தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவர விரும்பியதாலேயே கூட்டத்திலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். வெள்ளை மாளிகை அதிகாரிகள், டிரம்ப் ஒரு செயல்திறமிக்க, பேச்சுகளை விட செயலில் ஆர்வமுள்ள தலைவர் என்றும், ஆகவேதான் உச்சிமாநாட்டில் முழுமையாகக் கலந்துகொள்ளாமல் இடையிலேயே புறப்பட்டுவிட்டார் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே அதுதான் நோக்கமென்றால், மாநாட்டிற்கு வராமலே இருந்திருக்கலாமே? இந்தக் காரணத்திற்காகத் தனது அலுவலகத்திலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது என்று சொல்லியிருந்தால், போரை நிறுத்துவதில் அவருக்குத்தான் எவ்வளவு அக்கறை என்று உலகம் பாராட்டியிருக்குமே?

ஒரு பக்கம் இஸ்ரேல் பிரதமரை விட அதிகத் தீவிரத்துடன் ஈரான் தலைவரைத் தாக்கிப் பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் பிரச்சினையில் தலையிடுவதற்காகத்தான்கனடாவிலிருந்து திரும்பியதாக அவர் கூறுவதை யாரும் நம்பப் போவதில்லை. இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த பிரான்ஸ் பிரதமர், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே சண்டை நிறுத்தப் பேச்சு வார்த்தைக்கு முயற்சி செய்வதற்காக டிரம்ப் வெளியேறியிருப்பார் என்று சொல்லிச் சமாளித்திருக்கிறார்.

தகவலில் உள்நோக்கம்?

ஆனால், அதை மறுத்துள்ள டிரம்ப், தான் அவசரமாக வாஷிங்டன் திரும்பியதற்கான காரணங்கள் அதை விடப் “பல மடங்கு பெரியது” என்று கூறியிருக்கிறார். அது என்ன பல மடங்கு பெரிய காரணம்? ஈரான் அணுகுண்டுகள் தயாரிப்பதற்காகவே யுரேனியம் வாங்கி வைக்கிறது. அணு அழிவிலிருந்து “உலகத்தைக் காப்பாற்றுவதற்காகவே” தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாஹூ அறிவித்திருக்கிறார். டிரம்ப்பும் கூட, ஈரான் அரசு அணுசக்தித் திட்டத்தைக் கைவிட மறுப்பது ஒரு முக்கியமான பிரச்சினை என்று கூறி வந்திருக்கிறார்.

இதனிடையே, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும், 24 மணிநேரத்தில் அது செயல்படுத்தப்படும் என்றும் அவராக அறிவித்தார். ஆனால் உடனடியாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அதை மறுத்தார். அப்படிப்பட்ட உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். எட்டப்படாத உடன்பாடு பற்றி டிரம்ப் அறிவித்தது, இனிவரும் நாட்களில், உடன்பாட்டை மீறிவிட்டதாகக் கூறி ஈரானைத் தாக்குவதற்கான ஒரு காரணத்தை உருவாக்குவதற்காகத்தான் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இப்படிச் சொல்லித்தானே முன்பு புஷ் ஆட்சியில் இராக் தலைவர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்?

உண்மைக் காரணம் வேறு!

ஆனால், இஸ்ரேல்–ஈரான் விவகாரம் கூட டிரம்ப் வெளியேறியதற்கான உண்மைக் காரணமல்ல என்கிறார் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக அரசியல் பொருளதாரத் துறை மூத்த ஆய்வாளரான பேராசிரியர் சி.பி. சந்திரசேகர். “இந்த முறை, அமெரிக்கா அல்லாத ஆறு நாடுகளின் தலைவர்கள் மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்திருந்தனர். ஏனென்றால் இரண்டு விசயங்களில் டிரம்ப்பின் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்பட்டது. ஒன்று. வர்த்தகக் கூட்டாளிகளை பலவீனப்படுத்தும் அதீதமான வரி விதிப்பு அச்சுறுத்தலைக் கைவிடுதல் தொடர்பாக நிலுவையில் உள்ள பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா இணைவது, அதனை ஈடுகட்டும் வகையில் அந்த நாடுகளிடமிருந்து குறிப்பிடத்தக்க வர்த்தகச் சலுகைகளைப் பெறுவது. இரண்டு, ரஷ்யாவுடனான போரில், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துதல் உட்பட உக்ரைனுக்கு அறம்சார் மற்றும் பொருள்சார் ஆதரவை அளிப்பது. முதல் விசயத்தைத் தொடர்வதற்கு டிரம்ப் அவசரப்படவில்லை. இரண்டாவது விசயத்தில் அவருக்கு அதே நிலைப்பாடு இல்லை,” என்கிறார் அவர் (‘ஃபிரண்ட்லைன்’, ஜூலை 15).

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிராக ஒரு ஐரோப்பிய வற்புறுத்தலை ஏற்படுத்தவோ, ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்த போரில் ஒரு சண்டை நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுக்கவோ தனக்கு நேரமில்லை என்று டிரம்ப் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார். மாறாக, ஜி–8 என்று உருவாகியிருந்த அமைப்பிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றியது தவறு என்றுதான் கூறியிருக்கிறார். (1975இல் பிரான்ஸ் முன்முயற்சியில் 6 நாடுகள் அமைப்பாக உருவாகியிருந்தது. அடுத்த ஆண்டில் கனடா இணைந்ததால் ஜி–7 ஆனது. 1998இல் ரஷ்யா இணைக்கப்பட்டு ஜி–8 ஆக்கப்பட்டது. 2014இல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்து இணைத்துக்கொண்டதை எதிர்த்து, அமைப்பிலிருந்து அது இடைநீக்கம் செய்யப்பட்டது. 2017ல் ரஷ்யா தான் முற்றிலுமாக அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது. ஜி–8 மறுபடி ஜி–7 ஆக மாறியது.)  

ரஷ்யாவை வெளியேற்றியது தவறு என்றவர் பின்னர்,. “இஸ்ரேலுக்குத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது” என்று ஜி–7 தலைவர்களைக் கூட்டறிக்கை வெளியிட வைத்தார். ஈரான் சிக்கலைத் தீர்ப்பதில் காஸாவில் சண்டை நிறுத்தம் உள்பட, மையக் கிழக்கில் விரிவான முறையில் பகைமையைத் தணிக்க இட்டுச் செல்லும் என்று அவர்கள் கூற வேண்டும் என்று வற்புறுத்தினார்.

டிரம்ப் அகராதி

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர், “டிரம்ப் அகராதியில், ஈரானை அதன் அணுசக்தித் திட்டத்திலிருந்து பின்வாங்க வைப்பதும், இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் வெளிப்படையான ஒப்புதல் அளித்து, காஸாவில் அதன் ஆக்கிரமிப்பைப் பயன்படுத்திக்கொள்வதும்தான், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளைக் குறைப்பதை விட, இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை விட மிக முக்கியமாதாக இருக்கின்றன,” என்கிறார்.

“டிரம்ப் நிர்வாகத்தின் செய்தி தெளிவானது. ஜி–7 அமைப்பால் அதற்கு ஒரு பயனுமில்லை. தனது பொருளாதார, அரசியல் தேவைகளை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு பணிந்துபோக வேண்டும் என்றே அது விரும்புகிறது. இதில் வியப்புக்குரியது என்னவென்றால், ஐரோப்பா இதற்குத் தயாராக இருப்பதும், இதர ஜி–7 நாடுகள் உடன்பட்டுப் போவதும்தான். உலக முதலாளித்துவத்தின் அம்மணத்தை மறைத்த கோவணமும் நழுவிவிட்டது,” என்று கூறிச் சிரிக்கிறார் சி,பி. சந்திரசேகர்.

அவரைப் போன்றவர்கள் சிரிப்பதில் அர்த்தம் இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்குப் பிறகு, உலக முதலாளித்துவத்தின் பெருமையைக் கட்டிக்காப்பதற்கான செலவை தானே சுமக்க முடியாது என்று அமெரிக்க அரசு கூறி வந்தது. அதைத் தொடர்ந்து உலகளாவிய அரசியல்,பொருளாதாரச் சிக்கல்களுக்குக் கூட்டாகப் பேசித் தீர்வு காண்பது என்ற நோக்கத்தை அறிவித்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. கூட்டாகப்  பேசித் தீர்வு காண்கிறார்களோ இல்லையோ, அப்படியொரு கூட்டுத் தலைமை செயல்படுகிறது என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காவது ஜி–7 பயன்பட்டு வந்தது. இப்போது டிரம்ப்பின் தன்னிச்சையான செயல்கள் அந்தத் தோற்றத்தைக் கலைத்துவிட்டன.

கிரீன்லாந்தும் ரிவியேராவும்

உச்சிமாநாட்டிலிருந்து டிரம்ப் வெளியேறியதை விமர்சித்துள்ள பலரும் இதே போன்ற கருத்துகளையே வெளிப்படுத்தியுள்ளனர். அளப்பரிய கனிமவளங்கள் நிறைந்த, அரசியல் ஆதிக்கங்களுக்குத் தோதான ராணுவ வியூக முக்கியத்துவம் வாய்ந்த கிரீன்லாந்து தீவை வளைத்துப்போட எண்ணுகிறார் டிரம்ப். டென்மார்க் நாட்டின் பகுதியான அந்தத் தீவை வாங்கிப்போடும் அவரது விருப்பத்தை டென்மார்க் அரசும் கிரீன்லாந்து நிர்வாகமும் கடுமையாக எதிர்த்துவருகின்றன. அந்த எதிர்ப்பை பிரான்ஸ் பிரதமரும் எதிரொலிப்பதால், அது போல் வேறு பல பிரச்சினைகளிலும் அமெரிக்க அரசின் நிலைப்பாடுகளை அவர் சாடியிருப்பதால் அவர் மீது டிரம்ப்புக்குக் கடும் கோபம். பா‘லஸ்தீனத்தின் காஸா வட்டாரத்தை அமெரிக்க ராணுவம் கைப்பற்ற வேண்டும், அங்கே இத்தாலி, பிரான்ஸ் கடலோர உல்லாச விடுதிகள் உள்ள ரிவியேரா வட்டாரம் போல அமைக்க வேண்டும் என்று டிரம்ப் ஏற்கெனவே பேசியிருப்பது நினைவில் கொள்ளத்தக்கது.

உச்சி மாநாடு என்று பல நாடுகளின் தலைவர்கள் அமர்ந்து பேசி தீர்வுகளுக்கு வருவதில் டிரம்ப்புக்கு விருப்பமில்லை. நாடுகளின் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி நிர்ப்பந்திப்பதில்தான் அவருக்கு அதிக நாட்டம். மேலும், அமெரிக்கா சொல்வதை மற்ற நாடுகள் கேட்டுக்கொள்ள வேண்டுமே தவிர, பலதரப்புப் பேச்சுவார்த்தையில் ஒரு பொது முடிவை மேற்கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. அத்துடன், உச்சிமாநாடு போன்றவற்றில் அமரும்போது, அவருடைய முன்மொழிவுகளை மற்ற நாடுகளின் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தக் காரணங்களாலும்தான ஜி–7 உச்சநிலைக் கூட்டத்தை அவர் இப்படிப் புறக்கணித்திருக்கிறார் என்ற கருத்துகள் பகிரப்பட்டிருக்கின்றன.

“கூட்டுத்தலைமை” எனக் கூடிப் பேசி எடுத்த முடிவுகளாலேயே கூட வறுமை நிலைமைகள், வேலையின்மைக் கொடுமைகள், கல்வியின்மை அவலங்கள், உடல்நலக் கேடுகள், சமூக அநீதிகள், இனவாத மோதல்கள், மதவெறிக் கலவரங்கள், ஆக்கிரமிப்புப் போர்கள் உள்ளிட்ட உலகப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண முடியவில்லை. டிரம்ப் போன்றோரின் தன்னிச்சைத் தலைமைகளுக்குப் பணிந்து செல்லும் சூழல் நிலைப்படுமானால் என்னவாகும்? ஜி–7 முறிவு எழுப்புகிற இந்தக் கேள்விக்கு, சிறப்பு விருந்தினராகப் போய் வந்திருக்கும் இந்திய பிரதமர் போன்றோரும் விடை தேடியாக வேண்டும்.

Monday, 23 June 2025

ஆங்கிலம் பேசினால் வெட்கப்பட வேண்டுமா... அமித் ஷா பேச்சு அறியாமையா? ஹிந்தித் திணிப்பா?


 

            [‘விகடன்’ டிஜிட்டல் ஜூன் 22, 2025 பதிப்பில் வந்துள்ள எனது கட்டுரை]

ங்கிலம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. “இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுகிறவர்கள், விரைவில் அதற்காக வெட்கப்படுகிற ஒரு சமுதாயத்தை நாம் வாழும் காலத்திலேயே பார்க்கத்தான் போகிறோம். நம் நாட்டின் மொழிகள் நம் கலாசாரத்தின் ஆபரணங்கள் என்று நான் நம்புகிறேன். அவை இல்லாமல் நாம் பாரத மக்களாக இருக்க முடியாது. நமது நாடு, இதன் வரலாறு, இதன் கலாசாரம், இதன் தர்மம் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், அந்நிய மொழிகளில் அது முடியாது” என்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் (ஜூன் 19) அமித் ஷா பேசினார்.

ஐஏஎஸ் அதிகாரி ஆஷுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய “மெய்ன் பூண்ட் ஸ்வயம், குத் சாகர் ஹூன்” (நான் சிறு துளி, நானே பெரும் கடல்) என்ற புத்தக வெளியீடு அது. அமித் ஷா இவ்வாறு பேசிய காணொளிப் பதிவை ஏஎன்ஐ செய்தி முகமை நிறுவனம் தனது X தளத்திலும், செய்தியைத் தனது வலைத்தளத்திலும் வெளியிட்டது, பின்னர் விலக்கப்பட்டது என்று ‘தி ஹிண்டு’  தெரிவிக்கிறது. ஏன் விலக்கப்பட்டது என்று தெரியவரவில்லை. “சுயமரியாதையுடன் நாம் நமது மொழிகளிலேயே நம் நாட்டை நடத்திச் செல்வோம், உலகத்தையும் இட்டுச்செல்வோம்,” என்று ஷா பேசியதாகவும் ‘தி ஹிண்டு’ செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகப் பார்த்தால் அவருடைய இந்தக்  கருத்து வரவேற்கத் தக்கதுதான். எந்தவொரு நாடும் தனது சொந்த மொழிகளின் வலிமையிலேயே முன்னேறிச் செல்ல வேண்டும், வேற்று மொழிகளால் அல்ல, குறிப்பாக அடிமைப்படுத்தி அடக்கியாண்ட ஒரு அரசின் அடையாளமாக உள்ள மொழியால் அல்ல என்ற சிந்தனையை யார் மறுக்கப் போகிறார்கள்? அறிவியல் கண்ணோட்டத்துடன் தாய் மொழியையும் பிற மொழிகளையும் அணுகக்கூடிய எவரும் இதை ஏற்பார்கள்.

வீட்டிலும் அதே “கல்ச்சர்”

பொது இடங்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலேயே கூட ஆங்கிலத்தில் உரையாடும் “கல்ச்சர்” பரவியிருக்கிறது. உயர்நிலை (அதாவது உயர்ந்த கட்டண நிலை) தனியார் பள்ளிகளின் வளாகங்களுக்குள், மாணவர்கள் ஆங்கிலத்தில் அல்லாமல் சொந்த மொழியில் பேசினால் தண்டம் செலுத்தவும், முட்டிக்கால் போட்டு உட்காரவும் ஆணையிடப்படுவார்கள். அப்படிக் கறாராக நடத்தினால்தான் எதிர்காலத்தில் யுஎஸ், யுகே, கனடா, ஆஸ்திரேலியா என்று போகிற பிள்ளைகள் அங்கே “ஃபுளூயன்ட்  இங்கிலீஷ்” பேச முடியும் என்று பெற்றோர்கள் தண்டனையை ஏற்றுக்கொண்டு தண்டத்தைக் கட்டுவார்கள்.

இந்தப் பள்ளிப் பழக்கம் வீட்டுக்குள் தொற்றுகிறது. குடும்பச் சூழலிலும் ஆங்கில உரையாடல் இருந்தால்தான் பசங்கள் எளிதாகவும் விரைவாகவும் கற்பார்கள் என்று நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துகின்றன. இப்படியாக, வெளிநாடுகளில் பொது இடங்களில் எல்லோரும் அவரவர் மொழியில் பேசிக்கொண்டிருக்க, யாராவது இரண்டு பேர் ஆங்கிலத்தில் பேசுவார்களானால் அவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள், குறிப்பாகத் தமிழர்களாக இருப்பார்கள் என்ற அங்கதமே உண்டு.

தமிழில்தான் சொல்வளம் வறண்டுவிட்டதா, அல்லது அவர்களுக்குத்தான் சொல்லறிவு தேங்கிவிட்டதா என்று நினைக்கும் அளவுக்குத் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. ஓடிடி தளங்களில் பார்த்தால் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்ட படங்கள் வரிசை கட்டுகின்றன.

சென்னை மாநகர மையச் சாலைகளிலும் வீதிகளிலும் தமிழில் பெயர் எழுதப்பட்ட (தமிழ்ப் பெயர் சூட்டப்படுவதைச் சொல்லவில்லை) கடை வாசல்களைக் காண்பது அரிதான காட்சியாகிவிட்டது.

நிலைமை இப்படி இருக்கிறபோது, உள்துறை அமைச்சரின் இந்தப் பேச்சு பொருள் பொதிந்ததாகவே இருக்கிறது. ஆனாலும், “கையைக் கொடுங்கள் அமித் ஷா,” என்று மனமுவந்து, முழு நிறைவோடு கொண்டாடி வரவேற்க இயலவில்லையே! இந்தப் பேச்சின் உள் நோக்கம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைக்கிறதே!

இந்தியர்களும் ஹிந்தியர்களும்

ஏனென்றால், இந்திய மொழிகள் அனைத்திற்கும் சம மதிப்பும், சம வாய்ப்பும் என்ற ஒரு கொள்கை நிலைக்கு வந்து இப்படிப் பேசியிருந்தால் மகிழ்ந்து கைகுலுக்கலாம். ஆனால், என்ன இனம், என்ன மாநிலம், என்ன மொழியானாலும் நாமெல்லாம் “இந்தியர்கள்” என்ற பன்மைத்துவ உணர்வோடு இந்தக் கருத்து வந்ததாகக் கருத முடியவில்லை.

மாறாக, எல்லோரும் “ஹிந்தியர்கள்” என்று நிறுவ முயலும் ஒற்றைத்துவ நோக்கத்திலிருந்தே வந்திருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. அப்படித்தானே, கடந்த காலத்திலிருந்தே, ஹிந்தி மொழியின் மீதே ஒரு பகுதி மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்படி செய்திருக்கிறார்கள்.

இவர் அமைச்சராக உள்ள ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரும் புதிய சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டப்படுகிறது. ஆங்கிலப் பெயர் வேண்டாம், சொந்த மொழிகளில் இருக்கட்டும் என்பது ஏற்கத்தக்கது. ஆனால், ஹிந்தி மட்டுமே இந்திய மொழி அல்ல. அனைத்து மாநில மக்களும் மகிழ்ந்து வரவேற்கும் வகையில், ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு சட்டத்திற்கும் திட்டத்திற்கும், இந்த்தியாவின் ஒவ்வொரு மொழியாகப் பெயர் சூட்ட வேண்டியதுதானே? அப்படியொரு கொள்கையை உருவாக்க வேண்டியதுதானே?

மாநிலங்கள் இணைந்த ஒன்றிய கூட்டாட்சி என்ற அரசமைப்பை ஏற்றுள்ள பெருமைக்குரிய நாடு இந்தியா. மாநிலங்களின் மொழிகளுக்கு சம மரியாதை அளிக்கப்படுவதில்தான் அந்தப் பெருமை நிலைத்திருக்கும். ஆனால், நாட்டின் விடுதலைக்கு முன்பே மாகாணங்களில் ஹிந்தியைப் புகுத்தும் முயற்சி தொடங்கியது. சென்னை மாகாணத்தில் ராஜாஜி மூலம் அன்றைய காங்கிரஸ் தொடங்கிய முயற்சி அப்போது முறியடிக்கப்பட்டது வரலாறு.

விடுதலை பெற்ற இந்தியாவிலும் ஒன்றிய காங்கிரஸ் அரசு இதைச் செய்ய முயன்றது, மக்கள் இயக்கங்களின் உறுதியான எதிர்ப்பால் அது கைவிடப்பட்டு, இருமொழிக் கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆயினும் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு, அங்கெல்லாம் வரக்கூடிய பொதுமக்களுக்கும் கூட, கற்றுத் தருவதற்கென தினமொரு ஹிந்திச் சொல்லும், வாக்கியமும் எழுதிப்போடுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இன்று காங்கிரஸ் கட்சியும் இப்படிப்பட்ட ஹிந்தித் திணிப்பை எதிர்க்கிற நிலையில், முன்னோடிகளை விடவும் தீவிரமாக அந்தத் திணிப்புக் கைங்கரியங்களை ஒன்றிய பாஜக அரசாங்கம் செய்துவருகிறது. நேரடியாகவும் விசுவாசிகள் மூலமாகவும் ஹிந்திதான் தேசிய மொழி என்ற எண்ணத்தைப் பதிக்கிற உத்திகள் தொடர்கின்றன.

நிதி ஒதுக்கீடுகளில்

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சில அமைப்புகள் சேகரித்த விவரங்களின்படி,  2023–24ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், இந்திய மொழிகள் மேம்பாட்டு நிறுவனங்கள் அனைத்திற்குமாக ஒதுக்கப்பட்ட நிதி 300 கோடி ரூபாய் (முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகம்தான்). ஹிந்தி இயக்குநரகத்திமற்கு மட்டும் ஒதுக்கப்பட்டது ரூ.39.47 கோடி ரூபாய்.

இந்திய மொழிகள் மேம்பாட்டுக்கான நிறுவனங்களில் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், கேந்திரிய ஹிந்தி சன்ஸ்தான், தேசிய உருது மேம்பாட்டு நிறுவனம், தேசிய சிந்தி மேம்பாட்டு மையம், மத்திய செம்மொழி நிறுவனம், இந்திய மொழிகள் மத்திய நிறுவனம்,  இந்திய மொழிகளில் தரமான உயர் கல்விக்கான தேசிய முன்னெடுப்பு அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.

இந்த நிறுவனங்களுக்குள்ளேயே ஹிந்தி மேம்பாட்டு அமைப்புகளும் இருப்பது கவனத்திற்குரியது. இவை எல்லாவற்றுக்குமாக 300 கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டு, ஹிந்தி இயக்குநகரகத்திற்கு மட்டுமாக 39.47 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை எப்படி நியாயப்படுத்துவது? (செய்தி: ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’, 2023 பிப்.3).

குடிமக்களின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், மாநிலங்கள் தங்கள் மொழிகளிலேயே ஒன்றிய அரசுக்கு (அலுவலகங்களுக்கு) ஆவணங்களை அனுப்பி, அந்த மொழிகளிலேயே பதில் பெறுகிற ஏற்பாட்டைச்  செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு  தனது ஆவணங்களை அந்தந்த மாநில மொழியில் அனுப்புவதன் தேவையும் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. இதனால் ஒன்றியத்தில் கூடுதல் மொழிபெயர்ப்பாளர் பணியிடங்கள் உருவாகும்.  அத்துடன், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இது மிக எளிதானதாக நிறைவேற்றக் கூடியதுமாகும். எது கடினமானதாக இருக்கிறது என்றால் மைய ஆட்சியாளர்களின் மனம்தான்.

“இளமையில் கல்” என்கிறது தமிழ் – அதாவது இள வயதிலேயே கற்பது நல்லது, முதுமையில் அதுவே கைகொடுக்கும். “கேட்ச் தெம் யங்” (சின்ன வயதிலேயே அவர்களைப் பிடித்துப் போடு) என்பது ஆங்கிலச் சொலவடை. இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு! ஒரு பக்கம் இங்கிலீஷ் வேண்டாம் என்று கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் இந்த இங்கிலீஷ் போதனையின்படி, பள்ளிகளில்  சிறு வயதிலேயே பிடித்துப் போடுவது போல கட்டாய ஹிந்தி ஏற்புக்குக் குழந்தைகளைத் தயார்ப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சாட்சியாக கர்நாடகம்

இப்போது கூட, தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  முன்பு அண்ணா சொன்னதை மேற்கோள் காட்டி, மாணவர்கள் ஒரு புதிய மொழியைக் கற்பது அவர்களது விருப்பத் தேர்வாக இருக்க வேண்டுமேயன்றி கட்டாயப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் சுமார் 90,000 மாணவர்கள் ஹிந்தித் திணிப்பின் காரணமாகத் தேர்வுகளில் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்ற தகவலைக் குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்கள் தாங்களாக விரும்பித் தேர்ந்தெடுக்காத மொழியைக் கற்குமாறு கட்டாயப்படுத்துவதில் நியாயம் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்.

“பல மொழிகளையும் கற்க ஊக்குவிப்பதுதான் எப்போதுமே தமிழ்நாட்டின் நிலைப்பாடு. நீங்கள் விரும்புகிற எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். (அரசமைப்பு சாசனத்தின்) எட்டாவது அட்டவனையில் உள்ள 22 மொழிகளையும் கற்கலாம். ஆனால் திணிக்கப்படக் கூடாது,” என்று ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கூறியிருக்கிறார். அடிப்படையான ஜனநாயக சிந்தனை உள்ளவர்கள் இதனை முழுமையாக ஏற்பார்கள்.

அமித் ஷா ஏற்கிறாரா? குடிமக்களின் இணைப்பு மொழியாகவும் தேசத்தின் அடையாள மொழியாகவும் ஹிந்தியை முன்னிறுத்தி அவர் பல முறை பேசியிருக்கிறார். மாதிரிக்கு ஒன்று:

2019ஆம் ஆண்டில் ஹிந்தி தினம் (செப். 14) கொண்டாடப்பட்டதையொட்டி அவர், "இந்தியா பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் முக்கியத்துவம் உள்ளது. ஆனால், உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுவான மொழி இருப்பது மிகவும் அவசியம். நாட்டை ஒற்றுமை நூலால் பிணைக்கக்கூடிய ஒரு மொழி இருக்கிறதென்றால், அது பரவலாகப் பேசப்படும் ஹிந்தி மட்டுமே" என்று “ட்வீட்” செய்தார்.

2022 ஏப்ரல் 7இல் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்தில்,“வெவ்வேறு மாநிலங்களின் குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்,” என்று கூறினார். அதைத் தெளிவுபடுத்துவது போல, “ஹிந்தியை உள்நாட்டு மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல் ஆங்கிலத்திற்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டும்,” என்றார்.

2023இன் ஹிந்தி தின நிகழ்ச்சியில் அவர், “ஹிந்தி ஒருபோதும் மற்ற இந்திய மொழிகளுடன் போட்டியிட்டதில்லை, போட்டியிடாது. நாட்டின் அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமே ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க முடியும்," என்று பேசினார். அட, நியாயமான மொழிக் கொள்கையாக இருக்கிறதே என்று பலரும் கரவொலி எழுப்ப நினைத்திருப்பார்கள். ஆனால்,

“உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பல்வேறு மொழிகளுக்கு இடையே ஹிந்தி ஒரு ஒருங்கிணைக்கும் நூலாக இருந்து வந்துள்ளது. சுதந்திரப் போராட்டம் முதல் இன்று வரை, இந்தியாவை ஒன்றிணைப்பதில் ஹிந்தி முக்கியப் பங்காற்றியுள்ளது,” தனது பேச்சுக்குப் பொழிப்புரை வழங்கினார். கரவொலி எழுப்ப நினைத்தவர்கள் உயர்த்திய கைகளை  இறக்கியிருப்பார்கள்.

அமித் ஷா இப்படிப் பேசியது ஹிந்தித் திணிப்பின் இன்னொரு வடிவமே என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார். மேலும், ஹிந்தித் திணிப்பு என்பது ஹிந்துத்துவா மதவாதத்தோடும் ஹிந்து ராச்சிய அரசியல் நோக்கத்தோடும் தொடர்புள்ளது என்று சிபிஐ(எம்) தலைவர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்ததும் (சென்னையில்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய மொழி உரிமை மாநாடு) கவனத்தில் கொள்ளத் தக்கது.

சன்னலா வாசலா?

இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகும் ஆங்கிலம் கோலோச்சிக்கொணடு இருப்பதற்கு முடிவுகட்டியாக வேண்டும் – அதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ்நாட்டிலேயே கூட, ‘ஹிந்தித் திணிப்பு வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டாலும், தமிழின் தனிப்பெரும் ஆளுமையை நிலைநாட்டுவதற்கு மாறாக ஆங்கிலம் அமர்ந்துகொள்ள இடமளிக்கப்பட்டது என்ற விமர்சனமும் உண்டு. 

ஜவஹர்லால் சொன்னது போல, ஆங்கிலம் உலகத்தின் சன்னல்தான். ஆனால், சன்னலையே வாசலாக மாற்றிய சோகமல்லவா இங்கும் வேறு சில மாநிலங்களிலும் காட்சியானது?

ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பேத்திக் குழந்தை, “தி மூன் ஷைன்ஸ் இன் தி நைட் ஓவர் தி ஸ்கை” என்று தன் வகுப்பில் பயின்ற பாடலைப் பாடிக் காட்டினாள். பாட்டு ஆங்கிலமானாலும் பாடியது மழலையாயிற்றே, அதை ரசித்தேன். “இந்தப் பாட்டுக்கு என்ன பொருள்” என்று கேட்டேன். நான் கேட்பது புரியாமல் திகைத்தாள். “நீ பாடியதற்கு என்ன மீனிங்” என்று பொருளுக்கு மீனிங் சொன்னேன்.

“ஓ, மீனிங்கா! இந்த மூன் இருக்குல்ல, அது… ம் ம் ம் … நைட்ல  … ஸ்கையில … ம் ம் ம் … ஷைன் பண்ணுது” என்று சொல்லிவிட்டுக் கலகலவென்ற சிரிப்பை அந்த நடுக்கூடத்தில் விட்டுவிட்டு ஓடினாள். நிலா இரவில் வானத்தில் ஒளிர்கிறது எனும் இனிய தமிழ் அவளின் நாவிலிருந்து களவு போனதற்கு யார் பொறுப்பு? ஆசிரியர்களை மட்டும் குறை சொல்ல முடியுமா?

இன்னொரு கேள்வியும் கை உயர்த்துகிறது. நவீன உலகத்தில் ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட முடியுமா? வரலாற்றுப் பினைப்புகள், அரசியல் இணைப்புகள், வணிகத் தொடர்புகள், வேலை உறவுகள், பண்பாட்டுப் பகிர்வுகள் என்று ஆங்கிலம் தனக்கான இடத்தை நிலைப்படுத்திக் கொண்டிருப்பது உண்மை. ஆகவே, ஆங்கிலத்தை அறிவுக்கான ஒரு துணைக் கருவியாகத்தான் கையாள வேண்டும், ஆங்கிலமே அறிவு என்ற மயக்கம் தெளிய வேண்டும்.

இந்தப் புரிதல் உள்துறை அமைச்சரின் மேற்படி புதிய பேச்சிலும் எதிரொலிக்குமானால் இணைந்து குரல் கொடுக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லையே.. ஆங்கிலத்தின் பிடியைத் தகர்ப்பது தேவைதான் என்றாலும், ஹிந்தியின் பிடியில் சிக்க வைக்கிற முயற்சிகளில் மாற்றமில்லை.  எனவே, அமித் ஷாவின் பேச்சை சந்தேகத்துடனேயே கேட்க வேண்டியிருக்கிறது.


Thursday, 19 June 2025

உலோகத்தின் ஓசை

 





                        செவித்திறனை இழக்கும்
                        டிரம் இசைக்கலைஞனின் கதை


"ஊனம் ஒரு குறையல்ல" என்ற ஆழமான செய்தியை, கலை நேர்த்தியோடு வெளிப்படுத்தும் ஹாலிவுட் திரைப்படம் "சௌண்ட் ஆஃப் மெட்டல்" (2019). டேரியஸ் மார்டர் எழுதி இயக்கிய இந்தப் படம், 'பிரைம்' தளத்தில் காணக் கிடைக்கிறது. படத்தின் சிறப்புகளில் ஒன்று – ஆங்கிலம், சைகை இரு மொழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டிரம் இசைக் கலைஞன் ரூபென், பாடகி லூ இருவரும் "மரபு மீறல் உலோகம்" (அவான்ட்கார்டே மெட்டல்) எனப்படும் இசை வகையைச் சார்ந்த குழுவை நடத்துகின்றனர். அவர்கள் பயணிக்கும் வாகனமே அவர்களுடைய வீடு.

ரூபென் தன் கேட்புத் திறன் குறைந்துவிட்டதை உணர்கிறான். மருத்துவர், அவன் கேட்புத் திறனின் பெரும்பகுதியை இழந்துவிட்டதைத் தெரிவிக்கிறார். மீதமுள்ள திறனும் விரைவில் மறைந்துவிடும் என்கிறார். அதிரடித் தாளத்தால் அரங்குகளை ஆடவைத்தவன் கலங்கிப் போகிறான். கோக்லியர் எனும் கருவி உதவக்கூடும் என்றாலும், அதற்கான செலவை மருத்துவக் காப்பீடு வழங்குவதில்லை.

ஒரு நண்பரின் ஆலோசனைப்படி அவனும் லூவும் கிராமப்புறத்து மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கு வருகிறார்கள். வியட்நாம் மீது அமெரிக்க அரசு தொடுத்த போரில் செவித்திறன் இழந்தவரான ஜோ அந்த இல்லத்தின் பொறுப்பாளர். ரூபென் மட்டுமே தங்குவதற்கு அனுமதி என்பதால், லூ அவனை அங்கே விட்டுவிட்டுப் பிரிகிறாள்.

புதிய உலகம் - புதிய அமைதி
இல்லத்தில் ரூபென் மற்றவர்களுடன் சேர்ந்து புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறான். ஜோவிடமிருந்து அமெரிக்க சைகை மொழியைக் கற்கிறான். மன உளைச்சலில் இருக்கும்போது உணர்வுகளை எழுத்தாகப் பதிவு செய்ய ஜோ அறிவுறுத்துகிறார் –இது அமைதியை ஏற்க வைக்கும் ஒரு பயிற்சி.

குழந்தைகளுக்கு சைகை மொழி கற்பிக்கும் டியான் அறிமுகம் கிடைக்கிறது. அவளுடனும் மாணவர்களுடனும் அன்பை வளர்க்கிறான். அவர்களுக்கு டிரம் வாசிக்கப் பயிற்சியளிக்கிறான். நீண்ட மேசையின் மேல் கைகளை வைத்துக்கொண்டு ஒலியின் அதிர்வில் தாள லயத்தை அவர்கள் உணரும் காட்சியில் நாமும் அந்தப் பரவசத்தை உணர்கிறோம்.



லூ வேறொரு இசைக்குழுவில் இணைந்து பாரிஸ் நகரில் நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தெரிந்துகொள்கிறான். தனது இசைக் கருவிகளையும், வாகனத்தையும் விற்று, கிடைக்கும் தொகையை மருத்துவமனையில் செலுத்துகிறான். தலையில் அறுவை சிகிச்சை மூலம் கருவி பொருத்தப்படுகிறது. ஆனால், மனிதக் குரல்களும், பொருள்களின் ஒலிகளும் ஒருவித உலோகத் தன்மையுடன் கேட்கின்றன.

ரூபெனிடம் ஜோ. "காது கேட்காதது ஒரு குறைபாடு அல்ல என்ற நெறி இந்த இல்லத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதைச் சரிப்படுத்த செலவு செய்யும் நீ இங்கே இருப்பது சரியல்ல," என்று சொல்லிவிடுகிறார். மற்றவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக்கூடாது என்ற அவருடைய அக்கறையைப் புரிந்துகொள்கிறோம்.

பாரிஸ்சுக்குப் பறக்கிறான் ரூபென். அங்கே லூவின் வீட்டில் அவளுடைய தந்தை ரிச்சர்ட் இருக்கிறார். “உன்னை முதலில் வெறுத்தேன். லூவின் மகிழ்ச்சிக்கு நீதான் காரணம் என்று தெரிந்ததும் வெறுப்பு விலகிவிட்டது,” என்கிறார் அவர்.

மறுநாள், ரிச்சர்ட் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் பியானோ வாசிக்கிறார், லூ பாடுகிறாள். ஒழுங்கற்ற ஓசையாகவே கேட்கும் நிலையில் ரூபெனால் ரசிக்க முடியவில்லை. அடுத்த நாள், லூ உறங்கிக்கொண்டிருக்க, அவளுடைய புதிய வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாமெனக் கருதியவனாக ரூபென் வெளியேறுகிறான்.

ஒரு பூங்காவில் அமர்கிறான். சுற்றிலும் விளையாடுகிறவர்கள் எழுப்பும் கூச்சல், வாகனங்களின் ஒலி, கோபுர மணியோசை அனைத்தும் சீரற்ற இரைச்சல்களாகவே கேட்க, கோக்லியர் கருவிக்கான இணைப்பை அகற்றுகிறான். சட்டென ஏற்படும் அமைதியை உள்வாங்குகிறான். படம் இங்கே முடிகிறது. அமைதி ஏற்கப்படுவதன் முக்கியத்துவத்தை நாமும் ஏற்கிறோம்.

ரிஸ் அஹமது (ரூபென்), ஒலிவியா குக் (லூ) பால் ராசி (ஜோ), லாரன் ரிட்லாஃப் (டியான்) ஆகியோர் தங்கள் அற்புதமான நடிப்பால் பாராட்டுகளைக் குவித்தனர். ரிஸ் அஹமது சிறந்த நடிகர் விருது பெற்றார்.



2020 ஆஸ்கர் விழாவில் சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு விருதுகளைப் படம் வென்றது. படத்திற்காக டேரியஸ் மார்டர், ரிஸ் அஹமது இருவருமே சைகை மொழியைக் கற்றுக்கொண்டனர். பால் ராசி, லாரன் ரிட்லாஃப், குழந்தைகள் உட்பட பலரும் உண்மையிலேயே செவி மாற்றுத் திறனாளிகள்.

டேனியல் பௌகுயெட் ஒளிப்பதிவு, ஆபிரஹாம் மார்டர், நிகோலஸ் பெக்கர் இசை, மைக்கேல் இ.ஜி. நீல்சன் படத்தொகுப்பு என அனைத்தும் ஒருங்கிணைந்து படத்தின் செய்தியை வலுவாகக் கடத்துகின்றன.
இயல்பான மாற்றுத்திறனைப் பேணுவதன் சிறப்பைக் கூறும் கலையாக்கமாக ஒலிக்கிறது இந்த உலோகத்தின் ஓசை.

[0] [0] [0]

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் நடத்திவரும் ‘ஊனமுற்றோர் உரிமைக்குரல்’ காலாண்டிதழில் (ஏப்ரல்-மே-ஜூன், 2025) எனது கட்டுரை

Wednesday, 18 June 2025

இந்தியா–பாகிஸ்தான், இஸ்ரேல்–ஹமாஸ்: இரட்டைப் பார்வையுடன் டிரம்ப்

 



[‘தீக்கதிர்’ நாளேட்டில் (18 ஜூன் 2025) எனது கட்டுரை] 


 ந்தியா–பாகிஸ்தான் போர் முற்றிவிடாமல் தடுத்ததற்கான பெருமைக்கு அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் உரிமை கோருவது தெரிந்ததுதான். பலமுறை அவ்வாறு பெருமையடித்திருக்கிறார். அது குறித்து பிரதமர் அதிகாரப்பூர்வமாக ஏன் எதுவும் சொல்லவில்லை? இதை எதிர்க்கட்சிகள் கேட்பதும், அது குறித்துப் பேச நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட மோடி அரசு மறுப்பதும் டிரம்ப் கவனத்திற்குப் போயிருக்கும். அவர் சிரித்திருக்கவும் கூடும்.

அவரே அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லாத பிரச்சினை ஒன்று இருக்கிறது. இஸ்ரேல்–ஹமாஸ் மோதலை நிறுத்துவதற்கும், காஸா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் ராணுவம் வேட்டையாடுவதைத் தடுக்கவும் என்ன செய்தார்? இந்தியாவுடனும் பாகிஸ்தானுடமான வர்த்தக உறவுகள் துண்டிக்கப்படும் என்று கூறி நிர்ப்பந்தித்ததாகக் கூறினாரே, அது போல இஸ்ரேல் அரசிடம் ஏன் கூறவில்லை?

மதம் சார்ந்த தீவிரவாத அமைப்பாகிய ஹமாஸ், 2006இல் நடைபெற்ற பாலஸ்தீன தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட பல அரசுகள் அதனை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து நிதிஉதவிகளை நிறுத்தின. ஏற்கெனவே ஆட்சியில் இருந்த ஃபதா கட்சிக்கும் ஹமாஸ்சுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்தன.  2007 முதல் காஸா பகுதி ஹமாஸ் பிடியிலும், பி.ஏ. எனப்படும் பாலஸ்தீன நிர்வாகம் ஃபதா கட்டுப்பாட்டிலும் இருந்து வருகின்றன.

பயன்படுத்தாத செல்வாக்கு

இந்தப் பின்னணியில் ஹமாஸ்சுடன் டிரம்போ அவருடைய அதிகாரிகளோ பேச மாட்டார்கள், அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், இஸ்ரேல் அரசுடன் பேசாமல் இருப்பது ஏன்? இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்படுவது காஸாவின் குழந்தைகள் உள்ளிட்ட பாலஸ்தீன மக்கள் அல்லவா? இந்தப் பிரச்சினையில் தலையிடுகிற அளவுக்கு இஸ்ரேலுடன் நெருக்கமும் செல்வாக்கும் கொண்டது அமெரிக்க அரசு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தவும் சண்டையை நிறுத்தவும் டிரம்ப் முன்வராதது ஏன்?

அவர் எதுவுமே சொல்லவில்லை என்று சொல்லிவிட முடியாதுதான். சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று செய்திகள் வந்திருப்பது உண்மை. ஆனால், அப்படியான விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியதெல்லாம் சில கூட்டங்களின் மேடைகளில் பேசிய நேரத்தில்தான். அமெரிக்க அரசின் தலைவராக, இஸ்ரேல் அரசின் தலைவருடன் அவர் பேசினாரா, வலியுறுத்தினாரா, வர்த்தகத்தைத் துண்டித்துவிடுவேன் என்று கட்டாயப்படுத்தினாரா? அப்படிப்பட்ட செய்திகள் எதுவும் வரவில்லை.

இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் அடாவடித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அணு ஆற்றல் அறிவியலாளர்கள், ராணுவத் தளபதிகள் உள்பட பலரும் கொல்லப்பட்டுவிட்டனர். பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் நகரங்களில் ஏவுகணைகளைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஈரானின் அணு உலைத் தளங்கள் குறிவைக்கப்பட்டதால் இது பெரும் போராக, அணுகுண்டு வீச்சுகளாக மாறுமோ என்ற கவலை உலக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையிலும் டிரம்ப்,விரைவில் இது முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்று மேலோட்டமாகச் சொல்லிவிட்டு சொந்த அரசியலுக்குத் திரும்பிவிட்டார்.

பார்வையில் மாற்றமின்றி

 இந்த மாத நிலவரப்படி இஸ்ரேல்–ஹமாஸ் போர், மத்திய கிழக்கு மோதல் குறித்த தனது நிலைப்பாட்டில் சில மாற்றங்களைக் காட்டியுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த வட்டாரங்கள் தொடர்பான அவருடைய அடிப்படைப் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை என்ற செய்திகளும் வந்துள்ளன.

காஸா நொறுக்கப்படுவது தொடர்பாக இவ்வாண்டு பிப்ரவரியில் கருத்துத் தெரிவித்த அவர், அந்தப் பகுதி கைப்பற்றப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். காஸாவை யார்  கைப்பற்ற  வேண்டும் (“டேக் ஓவர்“) என்று சொன்னார் தெரியுமா? அமெரிக்க ராணுவம்!

எதற்காகக் கைப்பற்ற வேண்டும் என்று சொன்னார் என்பது இதை விட அதிர்ச்சி தருவது. காஸா மக்களுக்கு அமைதியை நிலைநாட்டித் தருவதற்காக அல்ல, அங்கே இன்னமும் உயிரோடு இருக்கிற குழந்தைகளின் பசியாறச் செய்வதற்காக அல்ல. மாறாக அந்தப் பகுதியை “மத்திய கிழக்கின் ரிவியெரா” என மாற்றுவதற்காக!

ரிவியெரா ஆசை

ரிவியெரா என்பது மத்திய தரைக்கடல் பகுதியில், ஒரே நீட்சியான நிலப்பரப்பாக அமைந்த, இத்தாலிய ரிவியெரா, பிரெஞ்சு ரிவியெரா என, இரு நாடுகளுக்கும் சொந்தமான கடற்கரைப் பகுதியைக் குறிப்பதாகும். செல்வச் செழிப்பு மிக்க கடலோர சுற்றுலாத் தலம் இது. பல நாடுகளிலிருந்தும் கடற்காற்று ஓய்வுக்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிற இந்தப் பகுதியில் உலக சுற்றுலாச் சந்தையின் கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் தங்கல்/உல்லாச விடுதிகளை அமைத்துள்ளன. பணக்காரப் பயணிகளுக்கான கிராண்ட் ஹோட்டல், ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல்,  பெல்மாண்ட் ஹோட்டல் ஸ்பிளெண்டிடோ, ஓட்கெர் கலெக்‘ஷன், மெரியாட் இன்டர்நேஷனல், ஹயாட் ஹோட்டல்ஸ் கார்ப்பரேஷன்,அக்கார், பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டமைப்பாகிய தி லீடிங் ஹோட்டல்ஸ் ஆஃப் தி வொர்ல்ட் ஆகியவற்றின் ஆடம்பர விடுதிகள் இங்கே இருக்கின்றன. இவையன்றி சில குடும்பங்கள் பரம்பரையாக நடத்தி வரும் விடுதிகளும் இருக்கின்றன.

அதுபோன்ற கடற்கரை சுற்றுலா மையமாக காஸாவை மாற்றுவதுதான் டிரம்ப் விருப்பம். அந்தப் பன்னாட்டு நிறுவனங்களுககு மத்திய கிழக்குக் கடலோரத்திலும் விடுதிகள் அமைக்க நிலத்தைக் கைப்பற்றிக் கொடுப்பதுதான் அந்த விருப்பத்தின் உள்நோக்கம். ஆம், காஷ்மீர் மண்ணைக் கார்ப்பரேட் மனைகளாக மாற்றும் “லட்சியம்” போன்றதுதான்.

இன அழிப்புத் திட்டம்

காஸாவைக் கைப்பற்றி, அந்த நிறுவனங்களும் அவற்றை நாடிவரும் பணக்காரப் பயணிகளும் நுழைவதற்குத் தோதாக, பாலஸ்தீன மக்களைக் கூண்டோடு வெளியேற்றுவது அந்தத் திட்டத்தின் இன்னொரு பகுதி. கிட்டத்தட்ட 20 லட்சம் பாலஸ்தீனர்களை அப்புறப்படுத்தி, அண்டை நாடுகளிலும் இதர பாதுகாப்பான சமூகங்களோடும் இருக்க வைக்கலாம் என்றார் டிரம்ப்.  அவ்வாறு அனுப்பப்படும் பாலஸ்தீனர்கள் திரும்பி வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், டிரம்பின் இந்த மோசமான  மோசடி முன்மொழிவுக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. “இது ஒரு வகையான இன அழிப்பு போன்றதுதான். பன்னாட்டுச் சட்டத்திற்கு எதிரானதுதான்,”  என்று ஐ.நா. சபையின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு விசாரணை ஆணையத் தலைவர் நவி பிள்ளை எதிர்ப்புத் தெரிவித்தார். “எந்த வகையான இன அழிப்பையும் ஏற்பதற்கில்லை,” என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்தது. பல்வேறு அரபு நாடுகள், சில மேற்கத்திய நாடுகளின் அரசுகளோடு பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் கண்டித்தன. பல பத்திரிகையாளர்கள், கருத்தாளர்கள், சட்ட வல்லுநர்கள் தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்த எதிர்வினைகளை எதிர்பாராத டிரம்ப், “இது ஒரு பரிந்துரைதான். இதை நான் கட்டாயப்படுத்த மாட்டேன்,” என்று அறிவித்தார். அத்துடன், யாரும் எந்த பாலஸ்தீனரையும் வெளியேற்றிவிடவில்லை என்று கூறினார். உலகளாவிய எதிர்ப்பின் காரணமாகத்தான் டிரம்ப் இப்படி தனது “கைப்பற்றல்” ஆசையின் தொனியைக் குறைத்திருக்கிறார் என்றும் கருத்தாளர்கள் சுட்டிக்காட்டத்‘ தவறவில்லை. அதற்கு ஆதாரமாக, இவ்வாண்டு மார்ச் மாதம் “யாரும் பாலஸ்தீனர்களை வெளியேற்றப் போவதில்லை” என்று கூறியவர், மே மாதத்தில் மறுபடி முருங்கை மரம் ஏறி, “காஸாவை ஒரு சுதந்திர மண்டலமாக மாற்ற அமெரிக்கா விரும்புகிறது,” என்று அறிவித்ததை எடுத்துக்காட்டுகிறார்கள்.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்திற்கு முன் ஜோ பைடன் முயற்சியில் சென்ற ஆண்டு ஒரு போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அதைத் தொடர்வதில் டிரம்ப் அக்கறை காட்டவில்லை. தற்காலிக சமரசத்திற்கான பெருமைக்குச் சொந்தம் கொண்டாடுவதில் காட்டுகிற ஆர்வத்தை, நிலையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அவர் காட்டவில்லை. ஆகவேதான் போர்நிறுத்த உடன்பாடு முறிந்து போனது என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

பட்டம் சூட்ட ஆசை

இதுவொருபுறம் இருக்க, இரண்டாவது ஆட்சிக்காலம் தொடங்கியதிலிந்து, தனக்கொரு “சமாதானத் தூதுவர்” அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் அவர் ஆசைப்படுகிறாராம். அதற்கான முயற்சிகளில் உண்மையாக ஈடுபடாமல், அந்த மகுடம் தானாக வந்து தலையில் அமர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. காஸா மக்களுக்கென செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அனுப்பி வைக்கும் உணவு மற்றும் இதர உதவிப் பொருள்கள் உரிய இடத்தைச் சென்றடையவிடாமல் இஸ்ரேல் ராணுவம் தடுக்கிறது, அழிக்கிறது. இத்தகைய சில நடவடிக்கைகளில் தனக்கு உடன்பாடில்லை என்பதாக அறிவித்துக்கொண்டாலும், இஸ்ரேல் அரசுக்கு அளித்துவரும் ஆதரவைக் கொஞ்சமும் விலக்கிக்கொள்ளவில்லை.

மாறாக, காஸாவில் “வேலையை முடிக்க” இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்தையும் அமெரிக்கா அனுப்பும் என்று இந்த ஜனவரியில் கூறியிருக்கிறார். இதனிடையே, சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் டிரம்ப் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “கூறப்படுகிறது” என்றுதான் சொல்ல முடிகிறதேயன்றி திட்டவட்டமாக உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாஹூவைச் சந்தித்த பிறகு பேட்டியளித்த டிரம்ப், “போர் நிற்பதைக் காண நான் விரும்புகிறேன். ஏதோவொரு கட்டத்தில் போர் நின்றுவிடும் என்று நான் நினைக்கிறேன். அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்,” என்று கூறினார். போரை நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் உதவிகள் நிறுத்தப்படும் என்று நேதன்யாஹூவிடம் சொன்னதாகச் செய்தியாளர்களிடம் அவர் சொல்லவில்லை.

தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கு டிரம்ப் முயல்வதன் நோக்கம் கூட,  செய்தித் தலைப்புகளில் இடம்பெறுவதுதானேயன்றி மோதலை நிலையாக முடிப்பதற்குரிய ஆழமான முயற்சிகளை மேற்கொள்வதல்ல என்று உலக அரசியல் விமர்சகர்கள் கூறுவது கவனத்திற்குரியது. நிலையான போர் முடிவு ஏற்பட்டுவிட்டால் பிறகு எப்படி “ரிவியெரா ரியல் எஸ்டேட்” கடையைத் திறக்க முடியும்?

 

Saturday, 14 June 2025

“2026 தேர்தலில் கூடுதல் இடங்கள் கேட்போம்!” – திமுக கூட்டணிக்குள் எழும் குரல்கள்… என்ன சிக்கல்?




“2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களைக் கேட்போம்,” என்று கூறியிருக்கிறார் சிபிஎம் மாநிலச்  செயலாளர் பெ. சண்முகம். இதனால் திமுக–வினரும், சிபிஎம் கட்சியினரும் சமூக வலைத்தளங்களில் உரசிக்கொள்ளும் போக்கு தலைதூக்கியிருக்கிறது.


“2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்,” என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் எழுப்பிய குரல் திமுக தரப்பில் சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களை பெ. சண்முகம் சந்தித்தபோது, “தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணி பலமாக உள்ளது, அதேவேளையில் மேலும் வலுவடைய என்ன செய்ய வேண்டும்,” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.


அதற்குப் பதிலளித்த பெ. சண்முகம், தனது தோழமைக் கட்சிகளை திமுக அரவணைத்துச் செல்வதன் அவசியம். தற்போது இருக்கும் ஒற்றுமையை மேலும் கட்டிக்காப்பது மிகவும் அவசியம்.. கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் திமுக–வை எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும். 2021 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கட்சி கேட்டது. அன்றைய சூழலில் அதிமுக–பாஜக கூட்டணி எந்த நிலையிலும் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில், திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது கிடையாது. கட்சியின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த தொகுதிகளில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டடது அதுவே முதல்முறை. அத்தகைய அணுகுமுறை இந்தத் தேர்தலில் தொடரக்கூடாது. ஏனென்றால் அது தமிழ்நாட்டு மக்களுக்கும் கட்சித் தோழர்களுக்கும் நிச்சயமாக நல்லதாக இருக்காது.,” என்று கூறியிருக்கிறார். இது தொடர்பான செய்தி ‘தீக்கதிர்’ நாளேட்டில் (10–6–2025) விரிவாக வெளியாகியிருக்கிறது. 


இது தனிப்பட்ட குரல் அல்ல


இதனை அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் நலன் என்ற கோணத்தில் மட்டும் சொல்லவில்லை, கூட்டணியின் நலன், தமிழ்நாட்டில் மறுபடியும் திமுக ஆட்சி அமைவதை உறுதி செய்வது, அதனால் மாநில மக்களுக்குக் கிடைக்கும் நலன் என்ற கோணங்களிலும் இந்தக் கோரிக்கையை பெ. சண்முகம் முன்வைக்கிறார். அதற்காக, இப்படியொரு கோரிக்கையை ஒரு கட்சி முன்வைப்பதாலேயே “கூட்டணியில் விரிசலா” என்ற கோணத்தில் விவாதிப்பது பொருத்தமற்றது. ஏனெனில், தமிழகத்தில் பாஜக காலூன்றுவதைத் தடுப்பதற்கு திமுக கூட்டணியில் உறுதியாக இருப்போம் என்பதை சண்முகம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். 


கூடுதல் இடங்கள் தொடர்பான பெ. சண்முகத்தின் கோரிக்கை அவருடைய தனிப்பட்ட வலியுறுத்தல் அல்ல. சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் மாநில மாநாட்டில் (ஜனவரி 2025) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.


கூட்டணியில் இருக்கக்கூடிய வேறு சில கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருகினற்ன. மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தில் கூடுதல் பங்கு கோருகிறது.


விசிக–விலிருந்தும் அதே குரல்!


கூட்டணியில் மற்ற கட்சிகளும் இவ்வாறு கோரும். உதாரணமாக, தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், ‘கூடுதல் இடங்களைக் கேட்போம்’ என்று குரல் எழுப்புகிறார். கூட்டணிக் கட்சிகளின் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, இந்தக் கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் கூடுதல் இடங்கள் கிடைத்தால், அதன் பலன் ஒட்டுமொத்த கூட்டணிக்கும்தான் போய்ச்சேரும். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்றால், தமிழ் மண்ணில் என்னவெல்லாம் நடக்கும் என்ற எச்சரிக்கையும், மக்களின் நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்தாக வேண்டும் என்ற நோக்கமும் இந்த கோரிக்கைக்குள் அடங்கியிருக்கின்றன.


மக்களைத் தாக்கும் மத்திய அரசின் சட்ட நடவடிக்கைகள், பள்ளிக் கல்விக்கான நிதியைக் கூட வழங்க மறுக்கும் அடாவடிகள், ஆளுநர் வழியாக மாநில உரிமைகளில் அத்துமீறல்கள், திசை திருப்பும் மதவாத அரசியல் உத்திகள், அரசமைப்பு சாசன மாண்புகளைச் சீர்குலைக்கும் முனைப்புகள் போன்றவற்றை உறுதியாக எதிர்ப்பதில், யாரும் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு சி.பி.எம் உள்ளிட்ட இடதுசாரிகள் முன்னணியில் நிற்கின்றன. நாடாளுமன்றத்திலும் இடதுசாரிகளின் குரல் வலுவாக ஒலிக்கிறது. இந்தக் குரல் இன்னும் வீரியத்துடன் ஒலிப்பது நாட்டுக்கு நல்லதுதானே.


இடதுசாரிகள் ஆதரவோடு அமைந்த, திமுக–வும் அங்கம் வகித்த ஒன்றிய அரசுகள் கொண்டு வந்த புதிய சட்டங்களும் திட்டங்களும் நாட்டு மக்களுக்குப் பெரும் நன்மைகளை ஏற்படுத்தின. எடுத்துக்காட்டாக, காங்கிரஸ் தலைமையிலான, திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் சுற்று ஆட்சிக்கு (2004–2009) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,  புரட்சிகர சோசலிஸ்ட், அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் வெளியேயிருந்து ஆதரவளித்தன. மக்களுக்கு அதுவொரு நற்காலம்.

இடதுசாரிகளின் விளைச்சல்

அந்த ஆட்சிக்காலத்தில்தான்,  கிராம மக்கள் நகரங்களுக்குப் புலம்பெயரும் நிலைமையைப் பெரிதும் தடுத்த தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், தனியார் பள்ளிகளிலும் நலிவுற்றோர் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் கல்வி உரிமைச் சட்டம், அரசு நிதி பாயும் நிறுவனங்கள், அலுவலகங்கள் தொடர்பான நிலவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கான தகவல் உரிமைச் சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டன.

மேலும், பழங்குடிகளும் பாரம்பரிய வனவாழ் மக்களும் வனப்பொருள்களை அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் வன உரிமைச் சட்டம்,  பெரும்பகுதி மக்களுக்கு விலையின்றியும் மலிவு விலையிலும் தானியங்கள் கிடைக்கச் செய்த உணவு பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவைபயும் அந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டன.


தாய்–சேய் நலனுக்கு முக்கியத்தும் அளித்த தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம், அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்த கணினிவழி மின் ஆளுகைத் திட்டம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, சிறு–குறு–நடுத்தர தொழில்களுக்கான அரசு ஆதரவு உள்ளிட்ட திட்டங்களும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. அந்த அமைச்சரவையில் தி.மு.க–வும் இடம்பெற்றிருந்தது. அந்த வகையில், இந்தச் சட்டங்களும், திட்டங்களும் தி.மு.க-வுக்கும் நற்பெயர் ஈட்டித்தந்தன.

குறைந்தபட்ச பொது செயல் திட்ட உடன்பாட்டின் அடிப்படையில் செயல்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இடதுசாரிகளின் முன்முயற்சிகளாலும், வலியுறுத்தல்களாலுமே இத்தகைய சட்டங்களும், திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. இதில், சி.பி.எம் கட்சியின் பங்கு முக்கியமானது. தமிழகத்திலும் இடதுசாரிகளின் ஆதரவோடு நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் வரவேற்கத்தக்க பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் 13 உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மக்களின் பல்வேறு பிரச்னைகளைப் பேசி, தீர்வுக்கு இட்டுச் சென்ற காலம் உண்டு.

அதற்கு முன்பு, கம்யூனிஸ்ட்டுகளின் நீண்டகாலப் போராட்டமாக இருந்து வந்த நில உச்சவரம்புச் சட்டம், ஏழைகளுக்குக் குடியிருப்பு வசதியை ஏற்படுத்திய குடிசை மாற்று வாரியம், விவசாயிகள் நலன்களுக்கான கோரிக்கைகளின் பலனாக உழவர் சந்தை, சாதியப்பாகுபாட்டு ஒழிப்புக்காக பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை அகற்றும் வகையில், கம்யூனிஸ்ட்டுகளும் உறுதியாகக் குரல்கொடுத்துப் போராடி வந்ததன் வெற்றியாக வந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் ஆகியவை சில மாதிரிகள். 

அருந்ததி மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் சிபிஎம் இயக்கத்தின் விளைச்சலே. தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் பரவியபோது,  சிபிஎம் தலைவர் என்.  சங்கரய்யா ஆலோசனைப்படி 1998இல் மதுரையில் சமூக ஒற்றுமை மாநாடு நடத்தினார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்காற்றிய அந்த மாநாடு திமுக அரசுக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. 

 மு.க. ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய ஆட்சியில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு இடதுசாரிகள் உறுதியான ஆதரவளித்து வருகின்றனர். மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து சேவை அறிவிக்கப்பட்டதை எதிர்த்துக் கருத்துகள் கூறப்பட்டபோது, அது பெண்களின் சமூக நடமாட்டத்தை ஊக்குவிக்கும் திட்டம் என்று கம்யூனிஸ்ட்டுகள் வரவேற்றார்கள்.

மாநிலத்திலும் கூட்டணி அரசு!

இத்தகைய தகுதிவாய்ந்த வரலாற்றுப் பின்னணியோடுதான் வரும் தேர்தலில் கூடுதல் இடம் என்ற வலியுறுத்தல் வருகிறது. கடந்த காலத்தில் இடங்கள் சுருக்கப்பட்டதன் பின்னணியில், ஆட்சியமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையைக் கட்சி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கக்கூடும்.  கூட்டாளிகளின் குறுக்கீடுகள் இல்லாமல் ஆட்சியைக் கொண்டு செல்ல அதுவே வழி என்றும் நினைத்திருக்கலாம். பேட்டி தொடர்பாகப் பேசியபோது, இதைப் பற்றிக் கேட்டதற்கு, “இருக்கலாம். ஆனால், 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் நம்பிக்கையோடு சொல்கிறாரே? அதை உறுதிப்படுத்தவே விரும்புகிறோம். அத்தனை இடங்களில் வெற்றி கிடைக்குமென்றால், அதில் 10 இடங்களை விட்டுக்கொடுப்பதில் எந்தக் குறையும் ஏற்படப் போவதில்லை,” என்றார் பெ. சண்முகம்.

அவர் சொல்லாத இன்னொரு கருத்தையும் நானாகச் சொல்கிறேன். ஒருவேளை இப்போதும் இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப்படுமானால் அது தமிழக மக்களுக்கு நல்லதல்ல. கூட்டணிக்கு நல்லதல்ல. திமுக–வுக்கும் நல்லதல்ல.

இன்னொரு சிந்தனையும் தோன்றுகிறது. சிபிஎம் வேண்டுகோளோடு தொடர்பற்றது என்றாலும், அதை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. கூட்டணயாகத் தேர்தல், கூட்டணியாக அரசு என்ற மாறிய காலச் சூழலில், புதிய அரசியல் எதார்த்தத்தில், அப்படிக் கட்சி தனியாக ஆட்சியமைப்பதுதான் பெருமை என்ற எண்ணம் கூடத் தேவையில்லை.

கூட்டாகத் தேர்தல், தனியாக ஆட்சி என்பது ஒரு முரண்தான். கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தும், அமைச்சரவையில் இடது ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்திருக்கிறது. தமிழகத்தில் அப்படியொரு கோரிக்கையை அந்தக் கட்சி முன்வைக்கவில்லை என்றாலும், வேறு கட்சிகள் பல வகைகளில் அந்த விருப்பத்தை வெளிப்படுத்தவே செய்திருக்கின்றன.

ஒன்றிய கூட்டணி ஆட்சிகளில் திமுக முக்கியமான பொறுப்புகளைப் பெற்றிருக்கிறது. மாநில ஆட்சி என்று வருகிறபோது, கோரிக்கை வைக்கிற மற்ற கட்சிகளைச் சேர்த்துக்கொள்வதில் ஏன் மாறுபட வேண்டும்? அது பன்மைத்துவ அணுகுமுறையோடு ஆட்சியை வெற்றிகரமாகக் கொண்டுசெல்லவே பயன்படும். இதைப் பற்றிய ஒரு மறு ஆய்வும் திமுக தலைமைக்குத் தேவைதான் என்பது என் கருத்து.

தொடர்வெற்றிக்கான முகவரி

இப்போது கூடுதல் இடங்கள் கோரும் கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்கலாம். தற்போது அதிமுக–வை பாஜக வளைத்துப் போட்டிருக்கிறது. புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளைத் தன் பரப்புரையாளர்களாக்கியுள்ள பாஜக  தமிழ்நாட்டில் வலுவாகக் காலூன்றத் திட்டமிட்டுக் களமிறங்கியிருக்கிறது. இந்த நிலையில், பாஜக–வை எதிர்கொள்வதற்குக் “கூட்டணிக் கட்சிகளுக்குக் கூடுதல் இடங்கள்” கோரிக்கை ஏற்கப்படுவது முக்கியம். தமிழ் மண்ணின் மதநல்லிணக்கமும், பகுத்தறிவும் இணைந்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க விரும்புவோர் இதை எதிர்பார்க்கிறார்கள்.

கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகத் தொகுதிகள் உறுதியாவது அந்தக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, திமுக–வுக்கும் நன்மை பயக்கும். மக்களின் தேவைகளும் தீர்வுகளும் சட்டமன்றத்தில் பன்முகத்தன்மையோடு ஒலிப்பதும், அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் ஒட்டுமொத்தத்தில் திமுக ஆட்சிக்கு நற்சான்றிதழ்களையே பெற்றுத் தரும். அந்த நற்சான்றிதழ்கள் தொடர் வெற்றிக்கான அடையாள முகவரிகளாக மாறும் என்பதில் ஐயமில்லை!

[0]

விகடன்டிஜிட்டல் பதிப்பில் (14 ஜூன் 2025) எனது கட்டுரை


.






Tuesday, 10 June 2025

வெளியுறவுக் கொள்கையில் தோல்வியா?


(‘டிஜிட்டல் விகடன்’ தளத்தில் எனது கட்டுரை)

“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை குறித்து வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிப்பதற்காக நாடாளுமன்றக் குழுவினர் சென்று வந்துள்ள நிலையில், மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட்டே வெள்ளியன்று (ஜூன் 6) செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

 

“ஒரு நாடு கூட இந்தியாவுக்கு ஆதரவாகக் கருத்துக் கூறவில்லை…. இங்கிருந்து சென்ற நாடாளுமன்றக் குழுக்கள் அந்த நாடுகளின் உயர்நிலைத் தலைவர்களைச் சந்திக்க வைக்க இயலவில்லை… ஆனால் பாகிஸ்தான் அரசு ஐஎம்எஃப் நிதி பெற்றது உள்ளிட்ட அங்கீகாரங்களை ஈட்டியுள்ளது… அரசுறவு அடிப்படையில் தனிமைப்பட்டுவிட்டதையே இது காட்டுகிறது…” -இவைதாம் சுப்ரியா கூறியவற்றின் சாறான கருத்துகள்.

 

“வெளிநாடு சென்ற குழுக்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்ற ஒரு வரம்பு இருந்திருக்கும். ஆனால் நாட்டின் முதன்மை எதிர்க்கட்சி என்ற முறையில் இதுபற்றிக் கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது,” என்றும் அவர் கூறியிருக்கிறார். ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கை பற்றிய விமர்சனங்கள் அவ்வப்போது எழுந்துள்ளன என்றாலும், தற்போதைய சூழலில் இதை  எதிர்க்கட்சியின் வழக்கமானதோர் எதிர்க்கருத்தாகக் கடந்துவிட முடியவில்லை.

 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே முதல் இடதுசாரி கட்சிகள், பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் வரை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ள ஒரு விசயத்தையே எடுத்துக்கொள்ளலாம். சிந்தூர்

தவறவிட்ட வாய்ப்புகள்

நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடியாகவே போர் மூண்டது. பயங்கரவாதிகளைத் தாக்கினால் பாகிஸ்தான் அரசுக்கு ஏன் கோபம் வருகிறது என்று எல்லா நாடுகளும் கேட்க வைத்திருக்க முடியும். அதற்கு முன்னதாக, சிந்தூர் நடவடிக்கைக்கே கூட பாகிஸ்தான் அரசை ஒத்துழைக்க வைத்திருக்க முடியும் – பயங்கரவாதிகள் பிரச்சினையும் பாதிப்புகளும் அங்கேயும் இருக்கின்றன என்ற முறையில். ஒருவேளை அவ்வாறு ஒத்துழைக்க அந்நாட்டு அரசு மறுத்திருக்குமானால் அதையே பன்னாட்டு விவாதப் பொருளாக்கியிருக்க முடியும். இத்தகைய அணுகுமுறைகள் இந்தியாவுக்கு ஒரு அற வலிமையை உருவாக்கிக் கொடுத்திருக்கும்.

 

இந்த வாய்ப்புகள் தவறவிடப்பட்டன.  உடனே நடவடிக்கையைத் தொடங்கியாக வேண்டிய கட்டாயச் சூழல் இருந்திருக்கக்கூடும். ஆட்சி அதிகாரத்திலும் அரசாங்க நிர்வாகத்திலும் இருப்பவர்களுக்கு அந்தச் சூழல் துல்லியமாகத் தெரிந்திருக்கக்கூடும். அதையெல்லாம் நாட்டு மக்களிடம் சொல்ல வேண்டியதுதானே? முதலிலேயே சொல்லியிருக்க முடியாதுதான், பஹல்காம் படுகொலைத் தாக்குதலைத் திட்டமிட்ட கும்பலுக்கும் அந்தத் தகவல்கள் போய்ச்சேரும், அவர்கள் முன்னெச்சரிக்கையாகப் பதுங்கிவிடுவார்கள் அல்லது பறந்துவிடுவார்கள். ஆகவே, எதிர்பாராத தாக்குதல்களை நடத்துவதில் அரசுமுறை உத்தி அல்லது வியூகம் இருக்கிறதென்று புரிந்துகொள்ளலாம்.

 

ஆனால், நடவடிக்கைக்குப் பிறகு சொல்லியிருக்கலாமே? நாட்டு மக்களின் பிரதிநிதிகள் சபையாகிய நாடாளுமன்றத்தைக் கூட்டிச் சொல்லியிருக்கலாமே? சொல்லவில்லை. இரு நாடுகளுக்கும் போர் மூண்டது, இரு நாட்டு மக்கள் மனங்களில் போரின் பின்விளைவுகள் பற்றிய கலக்கங்கள் சூழ்ந்தன. நான்கே நாட்களில் போர் முடிவுக்கு வந்தது, யார் அதற்குக் காரணமானாலும், போர் நின்றதில்  மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுத்தார்கள் – இரு தரப்பிலுமே போர் மோகத்தோடு கூச்சலிட்டவர்கள் தவிர்த்து. ஆனால் மூண்ட போர் முடிந்துவிட்டாலும், எழுந்த கேள்விகள் முடியாமல் தொடர்கின்றன.

 

இறுதிப் பலன்?

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், பாகிஸ்தான் எல்லையிலும் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்களில் விமானப்படை வீரர்கள் நடத்திய துல்லியத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டார்கள். அவர்களில்  எத்தனை பேர் பஹல்காம் வந்து திரும்பியவர்கள்? லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை என்று கூறப்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆர்எஃப்) அந்தப் படுகொலையைச் செய்ததற்குப் பொறுப்பேற்பதாக அறிவித்தது. இந்தியாவுக்குள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் இந்த அமைப்பு.  2019இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு நிலை விலக்கப்பட்டதற்குப் பின்பு உருவாக்கப்பட்டது. இதன் பின்புலம் பாகிஸ்தானில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

விமானப்படை நடவடிக்கையில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இந்த டிஆர்எஃப் குழுவைச் சேர்ந்த, பஹல்காமின் அழகான அமைதியைக் குருதியால் குலைத்த கொலைவெறியில் நேரடியாக இறங்கியவர்களும் கொல்லப்பட்டார்களா? ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றாலும், பஹல்காமில் 26 பேர் நெற்றிகளில் தோட்டாக்களைப் பாய்ச்சிய ஐந்து பேர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்படியானால், சிந்தூர் நடவடிக்கையின் இறுதிப் பலன் என்ன?

 

உள்நாட்டில்  இத்தகைய கேள்விகள் எழுகிற நிலையில், வெளிநாடுகளில் வேறு பல கேள்விகள் எழும். அவற்றுக்கான பதில்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியும் எழும். அந்த பதில்களை ஏற்கத்தக்க வகையில் உலகத்தின் முன்வைப்பதற்கு வலுவான, இணக்கமான, வெளியுறவுக் கொள்கை தேவை. மோடி அரசின் அந்தக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்பதே காங்கிரஸ் குற்றச்சாட்டு.

 

கேள்விகளுக்கான மூலங்கள்

 

அப்படியான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பொறுப்பும் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்ட நாடாளுமன்றக் குழுக்களுக்குத் தரப்பட்டிருக்கும். அந்தப் பொறுப்பை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடிந்தது? என்ன பதில்கள் கூறப்பட்டன? குழுக்களின் உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியவர்களான குடிமக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

 

காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது போல, நாடாளுமன்றக் குழு சென்றதற்கு முன்பு மட்டுமல்லாமல், பணி முடிந்து திரும்பி வந்ததற்குப் பின்பும் கூட எந்த நாடும் வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவைத் தெரிவிக்கவில்லை. பல நாடுகளும் இரு தரப்பிலும் பதற்றம் தணிய வேண்டும், மோதலைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றன. பயங்கரவாதிகளின் மனிதத்துவமற்ற கொடுஞ்செயலைக் கண்டித்திருக்கின்றன. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குத் தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவித்திருக்கின்றன. இவை குறிப்பிடத்தக்கவைதான் என்றாலும், மிகவும் பொதுப்படையானவை. எந்தவொரு நாடும் இத்தகைய நாகரிகமான அரசுறவு நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது இயல்பானதே.

 

ஆனால் இதனைத் திட்டவட்டமான ஆதரவு நிலை என்று கூறுவதற்கில்லை. குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான்  நேருக்கு நேர் மோதலில் அந்த நாடுகள் இந்தியாவின் பக்கம் நிற்க முன்வந்துள்ளன என்று கருதுவதற்கில்லை. பாகிஸ்தான் பக்கமும் நிற்கவில்லைதான், ஆனால் பாகிஸ்தான் அரசு தனது குழுக்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பவில்லையே?

 

மாறாக, இது பற்றிப் பேச வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தானால் முடிந்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு நாடுகளிடை நாணய நிதியம் (ஐஎம்எஃப்) நிதியுதவியை அளித்தது. இப்போது அமைக்கப்பட்டுள்ள பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா. சிறப்புக் குழுவின் துணைத் தலைவர் பொறுப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மோடி அரசால் தடுக்க முடியவில்லை.

 

டிரம்ப் சரவெடி

 

மோடி அரசால் தடுக்க முடியாமலிருக்கிற மற்றொரு சங்கதி, இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்த வைத்தது தான்தான் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் திரும்பத் திரும்பக் கூறிவருவது. அதுவும், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், பெரிய யுத்தமாக மாறினால் உலகம் தாங்காது, ஆகவே போரைக் கைவிடுங்கள் என்றெல்லாம் கேட்டுக்கொள்ளவில்லை. மாறாக, சண்டை நிறுத்த உடன்பாட்டிற்கு வராவிட்டால் இரண்டு நாடுகளுக்கும் வர்த்தகத் தடை விதிக்கப்படும் என்று அச்சுறுத்திப் பணிய வைத்தாராம். வீடுகளில் அடித்துக்கொள்ளும் சிறுவர்களிடம், “சண்டை போடுறதை நிறுத்துங்கடா, இல்லாட்டி இன்னிக்கு சோறு போட மாட்டேன்,” என்று அம்மாக்கள் சொல்வது போல இல்லை? இப்படி மிரட்டியதாக அவரே சொல்கிறார்.  இதுவரையில் 11 முறை சொல்லிவிட்டார் என்று ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி ஏன் ஒரு முறை கூட இதை மறுத்து எதுவும் சொல்வில்லை என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

 

டிரம்ப் இப்படி மிரட்டியதால்தான் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதென்றால், இந்தியாவின் உயர் தன்னாளுமைக்கும், “மூன்றாம் தரப்பின் நாட்டாமைக்கு இடமில்லை“ என்ற நீண்ட கால வெளியுறவுக் கொள்கைக்கும் எதிரானது என்று பல்வேறு தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் விமர்சித்துள்ளன. பாஜக-வின் அடுத்த மட்டத் தலைவர்கள், வெளியுறவு அதிகாரிகள் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் பிரதமரிடமிருந்து நேரடியாக எந்த பதிலும் வரவில்லை. வரவிருக்கும்  தேர்தல்களுக்கான பரப்புரைகளில் போர் வெற்றியைப் பயன்படுத்திக்கொள்ள பாஜக ஆசைப்படும். அந்த ஆசைக்கு அணை போடுவதாக   போர் நிறுத்தத்திற்குப் பெருமை கோருகிறார் டிரம்ப்.

 

இந்திய பிரதமர்தான் பதில் சொல்லவில்லையே தவிர, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். இரு நாட்டு மோதலைத் தணிப்பதில் டொனால்ட் டிரம்ப் முக்கியப் பங்காற்றினார், ஒரு சமாதான மனிதராகச் செயல்பட்டார் என்று இந்த ஜூன் 4 அன்று பேசியிருக்கிறார். பத்திரிகையாளர் நண்பரொருவர் இவ்வாறு கேட்டார்: “தோல்வியடைந்த நாட்டின் பிரதமர், மோதல் முடிவுக்கு வந்ததில் டிரம்ப்  தலையீடு இருந்தது என்று வெளிப்படையாகக் கூறுகிறார். வெற்றியைக் கொண்டாடும் நாட்டின் பிரதமர், அத்தகைய தலையீடு இல்லை என்று தானே நேரடியாகச் சொல்லத் தயங்குவது ஏன்? அந்தத் தயக்கம் மூன்றாம் தரப்பின் தலையீடு இருந்தது என்று ஒப்புக்கொள்வதாக இருக்கிறதே?”

 

முந்தைய காட்சிகள்

 

வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைத்தைத்தான் இந்த மௌனமும் எடுத்துக் காட்டுகிறது என்று  வேறு பல ஊடகவியலாளர்களும் கூறுகிறார்கள். அதே வேளையில், இந்தத் தோல்வி இப்போது மட்டும் வெளிப்படவில்லை, இதற்கு முன்பும் காட்சிக்கு வந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. டிரம்ப் அறிவித்த புதிய வர்த்தக வரி விகிதங்கள்  குறித்துப் பல நாடுகளின் தலைவர்கள் தங்கள் ஏற்பின்மையையும் கண்டனத்தையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள். சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் எதிரடி நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

 

ஆனால், அனைத்து நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படுகிற பொருள்களுக்கு 10% அடிப்படை வரி, அதனுடன் கூடுதலாகப் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பொருள்களுக்கு 49% சமன்பாட்டு வரி, இந்தியப் பொருள்கள் மீது 26% சமன்பாட்டு வரி என்ற அறிவிப்புக்கு மோடி அரசிடமிருந்து உடனடியாக எதிர்வினை வரவில்லை. அனைவரும் அந்த மௌனத்தை விமர்சித்த பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சரும், வணிகத்துறை அதிகாரிகளும் இந்த வரிகள் நியாயமற்றவை என்று கருத்துத் தெரிவித்தார்கள். இரு நாடுகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்று நன்மையளிக்கும் ஒப்பந்தம் தேவை என்றும் கூறினார்கள்.

 

ஒரு பக்கம் அவர்களாவது இந்த அளவுக்கேனும் சொல்கிறார்களே என்று பார்த்தால், இன்னொரு பக்கம் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருள்களுக்கான வரி விகிதங்களையும்,  வரி அல்லாத பிற கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதில் மும்முரம் காட்டப்படுகிறது. அமெரிக்காவுடன் மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம், நியூஜிலாந்து மற்றும் பிற நாடுகளுடன் “சுதந்திர வணிக உடன்பாடுகள்’‘ செய்துகொள்கிற முயற்சிகளிலும் தீவிரம் காட்டப்படுகிறது. இது இந்தியத் தயாரிப்புகளுக்கான உள்நாட்டுச் சந்தைப் பரப்பைச் சுருக்கிவிடும் என்று சிபிஐ(எம்) கூறியிருக்கிறது.

 

மற்ற தயாரிப்புகள் ஒருபுறமிருக்க, இந்தியாவின் பொருளாதார அடித்தளமான  விவசாயத்தின் மீது இதே போன்ற அடி விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவின் வணிகத்துறைச் செயலர் ஹோவர்ட் லூட்னிக், இந்தியா தனது வேளாண் சந்தையைத் திறந்துவிட வற்புறுத்தியிருக்கிறார். “இரு தரப்பு வணிக உடன்பாட்டில் வேளாண் சந்தையை விலக்கி வைக்க முடியாது” என்று கூறியிருக்கிறார். இதற்கு ஒன்றிய அரசு பதிலளிக்கவில்லை என்பதோடு, வரும் நாட்களில் இதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடும் எனத் தெரிகிறது என்றும் சிபிஐ(எம்) இது தொடர்பான ஒரு தீர்மானத்தில் கவலை தெரிவித்திருக்கிறது.

 

இந்தியாவில் இன்னமும் பல்வேறு உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இது தங்களுடைய தயாரிப்புகளை விட இந்தியப் பொருள்களின் விலை குறைவாக இருக்க வழி செய்கிறது என்று அமெரிக்க வேளாண் தொழில் பெருநிறுவனங்களின் அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. அந்த எதிர்ப்புக்குப் பணிந்து இங்கே வரிவிகிதங்களும் சந்தைக் கட்டுப்பாடுகளும் விலக்கப்படுமானால்,  அமெரிக்கா ஏற்றுமதிகள் பெரிய அளவுக்கு எகிறிவிடும். அது, குறிப்பாக பால் உற்பத்தித் தொழிலை முடக்கிவிடும் என்று இடதுசாரிகள் உள்ளிட்ட தலைவர்களும் பொருளாதார வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர். அரசின் வெளியுறவுக் கொள்கைத் தடுமாற்றமே இந்த எச்சரிக்கைக்கு அடிப்படை.

 

வர்த்தகம் மட்டுமல்ல

 

ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்ற நாடுகளுடனான வர்த்தகம் தொடர்பானது மட்டுமல்ல (அது மையமானது). உலக அரசியல் உள்பட வேறு களங்கள் தொடர்பானதுமாகும். அந்தக் களங்களில் விட்டுக்கொடுக்கப்படும் போக்குகள் பற்றியே தனிக்கட்டுரை எழுதலாம். மாதிரிக்கு ஒன்று: பாரம்பரியமாக இந்தியா பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், சுதந்திர நாடு லட்சியத்திற்கும் ஆதரவளித்து உற்ற தோழமையாக இருந்து வந்திருக்கிறது. அது உலக நாடுகளிடையே இந்தியாவுக்கு ஒரு பெருமிதமான இடத்தை ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.

 

இப்போது அந்த இடம் சரிவடைந்திருக்கிறது. காஸா மக்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் இஸ்ரேல் அரசுக்கு உறுதியான கண்டனத்தைப் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது. இஸ்ரேலுக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்களும் ராணுவத் தளவாடங்களும் ஏற்றுமதி செய்ய பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் இவ்வளவு மூர்க்கமடைந்துள்ள நிலையிலும் இவ்வாறு அனுமதிக்கப்படுகிறது. இது முன்னெப்போதும் நடவாதது என்று பாலஸ்தீன மக்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி வருவோர் கூறுகிறார்கள்.

 

ஜப்பானின் முன்முயற்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றோடு இந்தியாவும் இணைந்த நாற்கரப் பாதுகாப்பு கூட்டமைப்பு (குவாட்ரிலேட்டரல் அலையன்ஸ்) ஒன்றை உருவாக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்போது பேச்சுவார்த்தைகளைத் தாண்டி தலைவர்களின் உச்சி மாநாடுகள், வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்புகள் என தொடர்ச்சியாக நடக்கின்றன. பருவநிலை மாற்றம், விண்வெளி உள்கட்டமைப்பு, முக்கிய தொழில்நுட்பங்கள், இணையவழிச் செயல்பாடுகள் பாதுகாப்பு,  என பல்வேறு பணிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. “நேட்டோ” போன்ற ராணுவக் கூட்டாக உருவாகாவிட்டாலும், இந்தக் கூட்டமைப்பை சீனாவுக்கு எதிரான அரசியலுக்குப் பயன்படுத்த மற்ற மூன்று நாடுகளின் அரசுகளும் முயல்கின்றன. இதற்கு  ஒத்துழைப்பான நிலைபாட்டை இந்திய அரசு எடுக்கிறது என்ற விமர்சனமும் கவனத்திற்கு உரியது.

 

பெருமை தந்த கொள்கைகள்

 

நாட்டின் பெருமைக்குரியதாக இருந்து வந்த வெளியுறவுக் கோட்பாடு அரிக்கப்பட்டுவிட்டது என்ற கவலைக்கான முன்வரலாறு என்ன? 1954இல் ஜவஹர்லால் நேரு முன்முயற்சியில், சீனாவுடனான உடன்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது பஞ்சசீலக் கொள்கை. உலக நாடுகள் பலவும், குறிப்பாகப் புதிதாக விடுதலையடைந்த நாடுகள் தங்களுக்குமானதாக அந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டன.  வல்லரசுப் போட்டிகளில் சிக்கிக்கொள்ளாமல் உயர்தன்னாளுமை உரிமையையும் தேசிய நலன்களையும் பாதுகாக்க, அமைதியான முறையில் மற்ற நாடுகளுடன் உறவைப் பேண அந்தக் கொள்கை உதவியது.

 

1961இல், அமெரிக்கா-சோவியத் யூனியன் பனிப்போர் கடுமையாக நிலவிய சூழலில் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, யூகோஸ்லாவியாவின் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ, எகிப்தின் கமால் அப்தெல் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ, கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோர் முன்னெடுப்பில் கட்டப்பட்டது அணிசாரா இயக்கம். நடுநிலையோடு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வழி செய்த அந்த இயக்கமும் புதிய சுதந்திர நாடுகளின் சுயேச்சையான வளர்ச்சிக்குப் பேருதவியாக அமைந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்து, சோவியத் யூனியனே இல்லாமல் போன பிறகு அணிசாரா இயக்கத்தின் பொருத்தப்பாடு குறித்த விவாதங்கள் இருக்கின்றன என்றாலும் உலக அமைதி, நாடுகளின் தன்னாளுமை உள்ளிட்ட அதன் அடிப்படைக் கொள்கைகள் இன்றும் உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே உள்ளன.

 

“சரணாகதி” என்று விமர்சிக்கப்படுகிற இன்றைய சமரசங்களும் மௌனங்களும் உறுதியின்மைகளும் இந்த இரண்டின் மூலமாக நிலைநாட்டப்பட்ட மாண்புகளைக் கேலிக்குரியாக்குகின்றன என்பதே அக்கறையாளர்களின் ஆழ்ந்த வேதனை. அதனை உற்றுநோக்குகிறபோது, எந்த நாடானாலும் அதன் அரசு கடைப்பிடிக்கிற உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகத்தான் வெளியுறவுக் கொள்கை இருக்க முடியும் என்ற கருத்தும் கல்வெட்டாக நிற்கிறது. உள்ளுறவு சரியாக பேணப்பட்டால்  வெளியுறவும் நேர்த்தியாக அமையும். உள்கொள்கை சீர்குலைவாக, மக்களைக் கைவிடுவதாக, யாருக்கோ சேவை செய்வதாக இருக்குமானால் வெளிக்கொள்கையும் அதைத்தான் பிரதிபலிக்கும். வெளியுறவுக் கோட்பாட்டின் பெருமைகளை மீட்பது, உள்ளுறவுக் கோட்பாட்டின் சிறுமைகளை எதிர்த்துப் போராடுவதோடு இணைந்ததே.