“2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களைக் கேட்போம்,” என்று கூறியிருக்கிறார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம். இதனால் திமுக–வினரும், சிபிஎம் கட்சியினரும் சமூக வலைத்தளங்களில் உரசிக்கொள்ளும் போக்கு தலைதூக்கியிருக்கிறது.
“2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்,” என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் எழுப்பிய குரல் திமுக தரப்பில் சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களை பெ. சண்முகம் சந்தித்தபோது, “தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணி பலமாக உள்ளது, அதேவேளையில் மேலும் வலுவடைய என்ன செய்ய வேண்டும்,” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பெ. சண்முகம், தனது தோழமைக் கட்சிகளை திமுக அரவணைத்துச் செல்வதன் அவசியம். தற்போது இருக்கும் ஒற்றுமையை மேலும் கட்டிக்காப்பது மிகவும் அவசியம்.. கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் திமுக–வை எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும். 2021 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கட்சி கேட்டது. அன்றைய சூழலில் அதிமுக–பாஜக கூட்டணி எந்த நிலையிலும் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில், திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது கிடையாது. கட்சியின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த தொகுதிகளில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டடது அதுவே முதல்முறை. அத்தகைய அணுகுமுறை இந்தத் தேர்தலில் தொடரக்கூடாது. ஏனென்றால் அது தமிழ்நாட்டு மக்களுக்கும் கட்சித் தோழர்களுக்கும் நிச்சயமாக நல்லதாக இருக்காது.,” என்று கூறியிருக்கிறார். இது தொடர்பான செய்தி ‘தீக்கதிர்’ நாளேட்டில் (10–6–2025) விரிவாக வெளியாகியிருக்கிறது.
இது தனிப்பட்ட குரல் அல்ல
இதனை அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் நலன் என்ற கோணத்தில் மட்டும் சொல்லவில்லை, கூட்டணியின் நலன், தமிழ்நாட்டில் மறுபடியும் திமுக ஆட்சி அமைவதை உறுதி செய்வது, அதனால் மாநில மக்களுக்குக் கிடைக்கும் நலன் என்ற கோணங்களிலும் இந்தக் கோரிக்கையை பெ. சண்முகம் முன்வைக்கிறார். அதற்காக, இப்படியொரு கோரிக்கையை ஒரு கட்சி முன்வைப்பதாலேயே “கூட்டணியில் விரிசலா” என்ற கோணத்தில் விவாதிப்பது பொருத்தமற்றது. ஏனெனில், தமிழகத்தில் பாஜக காலூன்றுவதைத் தடுப்பதற்கு திமுக கூட்டணியில் உறுதியாக இருப்போம் என்பதை சண்முகம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
கூடுதல் இடங்கள் தொடர்பான பெ. சண்முகத்தின் கோரிக்கை அவருடைய தனிப்பட்ட வலியுறுத்தல் அல்ல. சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் மாநில மாநாட்டில் (ஜனவரி 2025) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
கூட்டணியில் இருக்கக்கூடிய வேறு சில கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருகினற்ன. மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தில் கூடுதல் பங்கு கோருகிறது.
விசிக–விலிருந்தும் அதே குரல்!
கூட்டணியில் மற்ற கட்சிகளும் இவ்வாறு கோரும். உதாரணமாக, தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், ‘கூடுதல் இடங்களைக் கேட்போம்’ என்று குரல் எழுப்புகிறார். கூட்டணிக் கட்சிகளின் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, இந்தக் கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் கூடுதல் இடங்கள் கிடைத்தால், அதன் பலன் ஒட்டுமொத்த கூட்டணிக்கும்தான் போய்ச்சேரும். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்றால், தமிழ் மண்ணில் என்னவெல்லாம் நடக்கும் என்ற எச்சரிக்கையும், மக்களின் நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்தாக வேண்டும் என்ற நோக்கமும் இந்த கோரிக்கைக்குள் அடங்கியிருக்கின்றன.
மக்களைத் தாக்கும் மத்திய அரசின் சட்ட நடவடிக்கைகள், பள்ளிக் கல்விக்கான நிதியைக் கூட வழங்க மறுக்கும் அடாவடிகள், ஆளுநர் வழியாக மாநில உரிமைகளில் அத்துமீறல்கள், திசை திருப்பும் மதவாத அரசியல் உத்திகள், அரசமைப்பு சாசன மாண்புகளைச் சீர்குலைக்கும் முனைப்புகள் போன்றவற்றை உறுதியாக எதிர்ப்பதில், யாரும் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு சி.பி.எம் உள்ளிட்ட இடதுசாரிகள் முன்னணியில் நிற்கின்றன. நாடாளுமன்றத்திலும் இடதுசாரிகளின் குரல் வலுவாக ஒலிக்கிறது. இந்தக் குரல் இன்னும் வீரியத்துடன் ஒலிப்பது நாட்டுக்கு நல்லதுதானே.
இடதுசாரிகள் ஆதரவோடு அமைந்த, திமுக–வும் அங்கம் வகித்த ஒன்றிய அரசுகள் கொண்டு வந்த புதிய சட்டங்களும் திட்டங்களும் நாட்டு மக்களுக்குப் பெரும் நன்மைகளை ஏற்படுத்தின. எடுத்துக்காட்டாக, காங்கிரஸ் தலைமையிலான, திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் சுற்று ஆட்சிக்கு (2004–2009) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோசலிஸ்ட், அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் வெளியேயிருந்து ஆதரவளித்தன. மக்களுக்கு அதுவொரு நற்காலம்.
இடதுசாரிகளின் விளைச்சல்
அந்த ஆட்சிக்காலத்தில்தான், கிராம மக்கள் நகரங்களுக்குப் புலம்பெயரும் நிலைமையைப் பெரிதும் தடுத்த தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், தனியார் பள்ளிகளிலும் நலிவுற்றோர் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் கல்வி உரிமைச் சட்டம், அரசு நிதி பாயும் நிறுவனங்கள், அலுவலகங்கள் தொடர்பான நிலவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கான தகவல் உரிமைச் சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டன.
மேலும், பழங்குடிகளும் பாரம்பரிய வனவாழ் மக்களும் வனப்பொருள்களை அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் வன உரிமைச் சட்டம், பெரும்பகுதி மக்களுக்கு விலையின்றியும் மலிவு விலையிலும் தானியங்கள் கிடைக்கச் செய்த உணவு பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவைபயும் அந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டன.
தாய்–சேய் நலனுக்கு முக்கியத்தும் அளித்த தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம், அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்த கணினிவழி மின் ஆளுகைத் திட்டம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, சிறு–குறு–நடுத்தர தொழில்களுக்கான அரசு ஆதரவு உள்ளிட்ட திட்டங்களும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. அந்த அமைச்சரவையில் தி.மு.க–வும் இடம்பெற்றிருந்தது. அந்த வகையில், இந்தச் சட்டங்களும், திட்டங்களும் தி.மு.க-வுக்கும் நற்பெயர் ஈட்டித்தந்தன.
குறைந்தபட்ச பொது செயல் திட்ட உடன்பாட்டின் அடிப்படையில் செயல்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இடதுசாரிகளின் முன்முயற்சிகளாலும், வலியுறுத்தல்களாலுமே இத்தகைய சட்டங்களும், திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. இதில், சி.பி.எம் கட்சியின் பங்கு முக்கியமானது. தமிழகத்திலும் இடதுசாரிகளின் ஆதரவோடு நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் வரவேற்கத்தக்க பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் 13 உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மக்களின் பல்வேறு பிரச்னைகளைப் பேசி, தீர்வுக்கு இட்டுச் சென்ற காலம் உண்டு.
அதற்கு முன்பு, கம்யூனிஸ்ட்டுகளின் நீண்டகாலப் போராட்டமாக இருந்து வந்த நில உச்சவரம்புச் சட்டம், ஏழைகளுக்குக் குடியிருப்பு வசதியை ஏற்படுத்திய குடிசை மாற்று வாரியம், விவசாயிகள் நலன்களுக்கான கோரிக்கைகளின் பலனாக உழவர் சந்தை, சாதியப்பாகுபாட்டு ஒழிப்புக்காக பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை அகற்றும் வகையில், கம்யூனிஸ்ட்டுகளும் உறுதியாகக் குரல்கொடுத்துப் போராடி வந்ததன் வெற்றியாக வந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் ஆகியவை சில மாதிரிகள்.
அருந்ததி மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் சிபிஎம் இயக்கத்தின் விளைச்சலே. தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் பரவியபோது, சிபிஎம் தலைவர் என். சங்கரய்யா ஆலோசனைப்படி 1998இல் மதுரையில் சமூக ஒற்றுமை மாநாடு நடத்தினார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்காற்றிய அந்த மாநாடு திமுக அரசுக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய ஆட்சியில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு இடதுசாரிகள் உறுதியான ஆதரவளித்து வருகின்றனர். மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து சேவை அறிவிக்கப்பட்டதை எதிர்த்துக் கருத்துகள் கூறப்பட்டபோது, அது பெண்களின் சமூக நடமாட்டத்தை ஊக்குவிக்கும் திட்டம் என்று கம்யூனிஸ்ட்டுகள் வரவேற்றார்கள்.
மாநிலத்திலும் கூட்டணி அரசு!
இத்தகைய தகுதிவாய்ந்த வரலாற்றுப் பின்னணியோடுதான் வரும் தேர்தலில் கூடுதல் இடம் என்ற வலியுறுத்தல் வருகிறது. கடந்த காலத்தில் இடங்கள் சுருக்கப்பட்டதன் பின்னணியில், ஆட்சியமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையைக் கட்சி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கக்கூடும். கூட்டாளிகளின் குறுக்கீடுகள் இல்லாமல் ஆட்சியைக் கொண்டு செல்ல அதுவே வழி என்றும் நினைத்திருக்கலாம். பேட்டி தொடர்பாகப் பேசியபோது, இதைப் பற்றிக் கேட்டதற்கு, “இருக்கலாம். ஆனால், 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் நம்பிக்கையோடு சொல்கிறாரே? அதை உறுதிப்படுத்தவே விரும்புகிறோம். அத்தனை இடங்களில் வெற்றி கிடைக்குமென்றால், அதில் 10 இடங்களை விட்டுக்கொடுப்பதில் எந்தக் குறையும் ஏற்படப் போவதில்லை,” என்றார் பெ. சண்முகம்.
அவர் சொல்லாத இன்னொரு கருத்தையும் நானாகச் சொல்கிறேன். ஒருவேளை இப்போதும் இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப்படுமானால் அது தமிழக மக்களுக்கு நல்லதல்ல. கூட்டணிக்கு நல்லதல்ல. திமுக–வுக்கும் நல்லதல்ல.
இன்னொரு சிந்தனையும் தோன்றுகிறது. சிபிஎம் வேண்டுகோளோடு தொடர்பற்றது என்றாலும், அதை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. கூட்டணயாகத் தேர்தல், கூட்டணியாக அரசு என்ற மாறிய காலச் சூழலில், புதிய அரசியல் எதார்த்தத்தில், அப்படிக் கட்சி தனியாக ஆட்சியமைப்பதுதான் பெருமை என்ற எண்ணம் கூடத் தேவையில்லை.
கூட்டாகத் தேர்தல், தனியாக ஆட்சி என்பது ஒரு முரண்தான். கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தும், அமைச்சரவையில் இடது ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்திருக்கிறது. தமிழகத்தில் அப்படியொரு கோரிக்கையை அந்தக் கட்சி முன்வைக்கவில்லை என்றாலும், வேறு கட்சிகள் பல வகைகளில் அந்த விருப்பத்தை வெளிப்படுத்தவே செய்திருக்கின்றன.
ஒன்றிய கூட்டணி ஆட்சிகளில் திமுக முக்கியமான பொறுப்புகளைப் பெற்றிருக்கிறது. மாநில ஆட்சி என்று வருகிறபோது, கோரிக்கை வைக்கிற மற்ற கட்சிகளைச் சேர்த்துக்கொள்வதில் ஏன் மாறுபட வேண்டும்? அது பன்மைத்துவ அணுகுமுறையோடு ஆட்சியை வெற்றிகரமாகக் கொண்டுசெல்லவே பயன்படும். இதைப் பற்றிய ஒரு மறு ஆய்வும் திமுக தலைமைக்குத் தேவைதான் என்பது என் கருத்து.
தொடர்வெற்றிக்கான முகவரி
இப்போது கூடுதல் இடங்கள் கோரும் கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்கலாம். தற்போது அதிமுக–வை பாஜக வளைத்துப் போட்டிருக்கிறது. புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளைத் தன் பரப்புரையாளர்களாக்கியுள்ள பாஜக தமிழ்நாட்டில் வலுவாகக் காலூன்றத் திட்டமிட்டுக் களமிறங்கியிருக்கிறது. இந்த நிலையில், பாஜக–வை எதிர்கொள்வதற்குக் “கூட்டணிக் கட்சிகளுக்குக் கூடுதல் இடங்கள்” கோரிக்கை ஏற்கப்படுவது முக்கியம். தமிழ் மண்ணின் மதநல்லிணக்கமும், பகுத்தறிவும் இணைந்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க விரும்புவோர் இதை எதிர்பார்க்கிறார்கள்.
கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகத் தொகுதிகள் உறுதியாவது அந்தக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, திமுக–வுக்கும் நன்மை பயக்கும். மக்களின் தேவைகளும் தீர்வுகளும் சட்டமன்றத்தில் பன்முகத்தன்மையோடு ஒலிப்பதும், அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் ஒட்டுமொத்தத்தில் திமுக ஆட்சிக்கு நற்சான்றிதழ்களையே பெற்றுத் தரும். அந்த நற்சான்றிதழ்கள் தொடர் வெற்றிக்கான அடையாள முகவரிகளாக மாறும் என்பதில் ஐயமில்லை!
[0]
‘விகடன்‘ டிஜிட்டல் பதிப்பில் (14 ஜூன் 2025) எனது கட்டுரை
.
No comments:
Post a Comment