“நாம பேசிக்கிடறதை ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்ல அடிக்கடி போட்டுடுவீங்க. சமீபமா எதுவும் போடலை.” –காலை நடை இறுதிக் கட்டமான பூங்கா இருக்கை உரையாடல் முடிந்து எழுந்தபோது நண்பர் கேட்டார்.
“ஆமா, பதிவு செய்ற அளவுக்கு நாம முக்கியமான எதையும் பேசலை. இன்னொரு காரணம், காலையிலேயே ஏதாவது புதுசா எழுதறதுல உட்கார்ந்துர்றனா, நம்ம பேச்சைத் தட்டச்சு பண்றதுல அந்த வேலை தாமதமாகிடக்கூடாதுன்னும் பதிவு செய்யலை.”
“ஆனா இன்னிக்கு நாம பேசினதைக் கண்டிப்பா போட்டுடுவீங்க பாருங்க,” உடன் இணையும் நண்பர் கணித்துச் சொன்னார்.
“ஹஹ்ஹஹ்ஹா… நிச்சயமா!”
அவருடைய கணிப்புக்கு ஆதாரமான உரையாடல் இதுதான்.
பூங்காப் பாதையில் சுற்றிவந்த மற்றொருவர் இருக்கையில் எங்களைப் பார்த்ததும் காலை வாழ்த்துச் சொன்னார். என்னை நோக்கினார். “சார், நாம பார்த்து நாளாயிடுச்சு. ஹெல்த் எப்படி இருக்கு?”
“நல்ல முன்னேற்றம் சார். உங்க உடல்நலம் எப்படி இருக்கு?”
“நல்ல ஹெல்த்தியா இருக்கேன். ஓகே, வாக்கிங்கை கன்டினியூ பண்றேன். காட் பிளெஸ் யூ.”
புன்னகையோடு தலையசைத்தேன்.
“என்ன சார், ரொம்ப மாறிட்டீங்க போல இருக்கு?”
“என்ன மாறிட்டேன்?”
“முந்தி நாங்க இதே மாதிரி ‘காட் பிளெஸ் யூ’ன்னு விஷ் பண்ணினா, ‘லெட் மீ ஆல்ஸோ பிளெஸ் காட்’னு சொல்வீங்க. இப்ப அவருக்கு நீங்க அப்படிச் சொல்லலையே, அதைச் சொன்னேன்.”
“நுட்பமா கவனிச்சிருக்கீங்களே! ஆனா, நல்லா யோசிச்சுப் பாருங்க. நீங்க வேணும்னே என்னைச் சீண்டுறதுக்காக, என்ன பதில் சொல்றேன்னு பார்க்கிறதுக்காக கடவுள் என்னை ஆசீர்வதிக்கட்டும்னு சொல்வீங்க. அதனால நானும் கடவுளை ஆசீர்வதிக்கிறேன்னு சொல்வேன். ஆனா அவரு இயல்பா, உள்நோக்கமில்லாம, மத்தவங்களை வாழ்த்துற மாதிரியே என்னையும் வாழ்த்தினாரு. அதனால அவரை சங்கடப்படுத்த வேணாமேன்னுதான்…”
“அது மட்டும்தான் காரணமா?”
“ஆமா, ஏன்னா இப்படிப்பட்டவங்க இயல்பாவே கடவுள் ஆசீர்வதிக்கட்டும்னு சொல்றப்ப உண்மையிலேயே அது அவங்களே அன்போட ஆசீர்வதிக்கிறதுதான்னு புரியுதுல்ல, அதுக்கு ஒரு மரியாதை கொடுக்கணும்ல…”
“அது மட்டுமில்லை சார். ஆஃப்டர் ஹார்ட் ஆபரேஷன் நீங்க லைஃபைப் புரிஞ்சிக்கிட்டீங்க. அந்த நிலைமையில எல்லாருடைய அப்ரோச்சுலேயும் ஒரு மெச்சூரிட்டி ஏற்படும். அதுதான் உங்களுக்கும் நடந்திருக்குங்குறேன்.”
“ஆனா, அவரு சொன்னதையே இப்ப நீங்க சொல்லியிருந்தீங்கன்னா நானும் முன்னால சொன்னது மாதிரியே இப்பவும் பதில் சொல்லியிருப்பேனே…”
“இல்லை சார். கண்டிப்பா உங்களுக்கு ஒரு பக்குவம் ஏற்பட்டிருக்கு.”
“சரி விடுங்க, இருந்துட்டுப் போட்டும், இப்ப என்ன அதனால?” எழுந்து புறப்படுவதற்குத் தயாரானேன்.
“பக்குவப்படுறது நல்லதுதானே.” நண்பர்களும் எழுந்தார்கள்.
புன்னகையோடு பூங்காவின் வாயிலை நோக்கித் திரும்பினேன்.
“சார், உங்களைப் பக்குவப்படுத்துனது கடவுள்தான்.”
அடக்க முடியவில்லை. வாய்விட்டுச் சிரித்தேன். “சிரிச்சதால பக்குவம் போயிடுச்சோ?”
அவர்களும் சிரித்தார்கள்.
[0]
முகநூல் பதிவு (ஜூன் 7, 2025)
No comments:
Post a Comment