தீக்கதிர் – வண்ணக்கதிர் பகுதியில் (ஜூன் 1) எனது கட்டுரை
“முன்பு சொன்னதை இப்போது மாற்றிச் சொல்கிறார்கள். அறிவியலுக்கு நிலையான கருத்தே கிடையாது,” என்று கூறி அறிவியல் கண்ணோட்டத்திற்கு மாறான பாதைக்கு இழுக்க முயல்கிறவர்களைப் பார்க்கலாம். ஆனால், அப்படியப்படியே நின்றுவிடாமல் என்றென்றும் நிகழ்கிற தொடர்ச்சிப்போக்குதான் அறிவியல்.
இயற்கை உண்மைகள் அறிவியலாளர்களின் தொடர் தேடல்களால் கண்டறியப்பட்டவையே. ஆனால், அந்தத் தொடர் தேடல்களைக் குறைத்து மதிப்பிட்டு, ஏற்கெனவே உள்ள தகவல்களின் தொகுப்புதான் அறிவியல் என்று மேம்போக்காகச் சிலர் விளக்கமளிக்கிறார்கள். அந்தத் தேடல்கள் பல்வேறு இடங்களில், அடுத்தடுத்த காலக்கட்டங்களில் நடந்துகொண்டே இருக்கும். புவியீர்ப்பு விசை என்ற உண்மையை ஐசக் நியூட்டன் தன்னுடைய ஆராய்ச்சியால் கண்பிடிக்காமல் விட்டிருந்தால் அது நமக்குத் தெரியவந்தது தாமதமாகியிருக்கும். அந்த விசையை மீறுவதற்கு மற்றவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளால் விமானங்களும், செயற்கைக் கோள்களும், ஏவூர்திகளும் வந்தது மேலும் தாமதமாகியிருக்கும்.
அறிவியலின் பரிணாமம் ஏற்கெனவே நிலவிவரும் நம்பிக்கைகளை மறுக்கிற ஆதாரங்களால் நிகழ்கிறது. அந்த நம்பிக்கைகள் மதம், சமூகம், அரசியல் என எதையும் சார்ந்தவையாக இருக்கலாம். அந்த நம்பிக்கைகளுக்கு சவால் விடுக்கும் ஆதாரங்களைத் தேடிப் பிடிப்பதாலேயே ஒட்டுமொத்த அறிவியலையே புறக்கணிக்கும் முயற்சிகள் நடப்பதுண்டு. “புற வசதிகளைத்தான் அறிவியல் வழங்கும், அக அமைதியை ஆன்மீகம்தான் வழங்கும்,” என்று வசனம் பேசுவார்கள் மகாக்குருமார்கள்.
மறுக்கப்படும் நம்பிக்கைகள் முந்தைய ஆராய்ச்சிகளில் உருவானவையாகவும் கூட இருக்கலாம். பூமியைத்தான் அண்டம் சுற்றுகிறது என்று நீண்டகாலம் ஏற்கப்பட்டிருந்தது. சூரியன்தான் அண்டத்தின் மையம் என்ற கருத்தை 2,300 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கத்தின் அர்ஸ்டார்கஸ் முன்மொழிந்தார். அப்போது அதற்கு ஆதாரமும், ஆதரவும் கிடைக்கவில்லை. 16ஆம் நூற்றாண்டில் போலந்து வானியலாளர் கோப்பர்நிகஸ் தனது கணித மாதிரிகளால் சூரிய மையக் கோட்பாட்டை நிறுவினார். சூரியனுமே கூட சூரிய மண்டலத்தில் மட்டுமே மையமாக இருக்கிறது, விரிந்துகொண்டே இருக்கிற பேரண்டத்தில் குறிப்பிட்ட மையம் என்ற ஒன்று இல்லை என்ற கருத்துக்கும் இப்போது அறிவியலுலகம் வந்திருக்கிறது.
எரியக்கூடியது எதுவானாலும் அதில் ஃபிளாஜிஸ்டன் என்ற நெருப்புப் பொருள் இருகிறது என்ற கோட்பாட்டை 17ஆம் நூற்றாண்டில் ஜோஹான் யோவாசிம் பெக்கர், ஜார்ஜ் எர்ன்ஸ்ட் ஸ்டால் என்ற இரு வேதியல் ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்தனர். ஒரு பொருள் எரியும்போது ஃபிளாஜிஸ்டன் வெளியேறுகிறது, எரிந்த பொருள் எடையிழக்கிறது, சாம்பலாகிறது என்று விளக்கமளிக்கப்பட்டது. உயிரினங்கள் மூச்சு விடுவதும் கூட எரிதல் செயல்தான் என்றும் அந்தக் கோட்பாடு கூறியது.
ஃபிளாஜிஸ்டன் ஒரு திட்டவட்டமான பொருள் என்றால், அது வெளியேறிய பிறகு, இரும்பு, ஈயம் உள்ளிட்ட பொருள்களின் எடை அதிகரிப்பது எப்படி என்ற கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியும் தீயாகப் பரவ, ஆக்சிஜன் வாயு செயல்பாடு பற்றிய கண்டுபிடிப்பு சேர்ந்துகொள்ள, பொருள்கள் ஆக்சிஜனுடன் வினைபுரிகிறபோது ஒளியும் வெப்பமும் ஏற்படுவதை 18ஆம் நூற்றாண்டில் அன்டோயின் லவாய்சியர் துல்லியமாக நிறுவினார்.
ஆதாரத் தூண்
ஒரு கண்டுபிடிப்பாளரின் முன்மொழியும் கோட்பாட்டை, சக வல்லுநர்கள் மறுஆய்வுக்கு உட்படுத்துவது அறிவியல் ஆராய்ச்சியின் ஆதாரத் தூணாகும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் ஹாக்கிங், சி.வி. ராமன், மேரி கியூரி, லைஸ் மெய்ட்னர், சுப்பிரமணியன் சந்திரசேகர், மேக்நாத் சாஹா உள்ளிட்ட உலகம் போற்றும் அறிவியலாளர்கள் முந்தைய கோட்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றவர்கள்தான்.
ஆனால், மாற்றுக் கருத்தை அக்கறையோடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல், அந்தக் குரலை ஒடுக்குகிற போக்கு கவலைக்குரியது. மறு ஆய்வு விவாதங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, உரிய முகாந்திரம் இல்லை என்பதால் அல்லாமல், ஏற்கெனவே ஊன்றப்பட்டுள்ள கருத்துகளுக்கு சவாலாக ஒலிப்பதால் அந்த விவாதங்களுக்கு முன்னணி அறிவியல் ஏடுகள் இடமளிக்க மறுக்கின்றன. இந்த முன்தணிக்கையால், புதிய சிந்தனைகளைச்செயல்படுத்திப் பார்ப்பதற்கு அறிவியலாளர்கள் தயங்குகிறார்கள். புத்தாக்க முயற்சிகள் முடங்குகின்றன. இது அறிவியலாளர்களின் இழப்பல்ல, உலகத்தின் இழப்பு.
அறிவியலாளர்களுடைய ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்படுவது நிதியாதாரம். அதற்கு அவர்கள் பெருமளவுக்கு அரசாங்கங்களையும் பெரும் தொழில் நிறுவனங்களையும், ஓரளவுக்கு அறிவியல் ஆதரவு அமைப்புகளையும் சார்ந்திருக்கிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய சரக்குகளின் விற்பனைக்கு உதவும் ஆராய்ச்சிகளுக்கே ஆதரவளிக்கின்றன. இது சுதந்திரமான ஆராய்ச்சியைத் தடுக்கிறது.
கைப்பேசி வணிகத்தை எடுத்துக்கொள்வோமே. ஒரு நிறுவனம் அதன் விற்பனையை விரிவுபடுத்துவதற்குத் தோதான ஆராய்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கும். ஒரு புதிய கண்டுபிடிப்பு எந்த அளவுக்கு சந்தையில் எடுபடும் என்ற கணிப்பு இல்லாததால் அதைப் பின்னால் தள்ளிவைத்துவிடும். வேறொரு நிறுவனம் துணிந்து முன்வருவதாகவும், அதன் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதாகவும், அது விற்பனைப் பந்தயத்தில் முன்னோடுவதாகவும் வைத்துக்கொள்வோம். அப்போது, அந்த முதல் நிறுவனம் கூச்சமே இல்லாமல் அதைப் படியெடுத்துச் சில மாற்றங்களோடு சந்தைக்குக் கொண்டுவரும்! உலகில் எத்தனை நவீன நுகர்பொருள்கள் இருக்கின்றன? அவற்றின் பின்னால் அத்தனை கதைகள் இருக்கும்!
பல நாடுகளின் அரசாங்கங்கள் தங்களுடைய அரசியல் கொள்கைகளுக்கும் செல்வாக்கிற்கும் வாகாக அமையக்கூடிய ஆராய்ச்சிகளுக்கே நிதி ஒதுக்குகின்றன. போர் ருசி கொண்ட அரசானால், அது நவீன ஆயுதங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்குகிற நிதியைப் போல பட்டினியைப் போக்கும் ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்குவதில்லை.
உள்நாட்டு ஆதங்கம்
இந்தியாவில், நீண்டகால அறிவியல் முன்னேற்றங்களுக்கு இன்றியமையாத இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற துறைகளில் அடிப்படை ஆய்வுகளுக்குப் போதுமான நிதி, உள்கட்டமைப்பு கிடைப்பதில்லை என்ற ஆதங்கத்தை அறிவியலாளர்கள் திரும்பத் திரும்பத் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பல வளர்ந்த நாடுகளில் ஆராய்ச்சிகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% முதல் 4% வரை நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவில் இது சுமார் 0.7% அல்லது 0.8% மட்டுமே. புதுமைக் கண்டுபிடிப்புகளில் நாடு பின்தங்கியிருப்பதற்கு இதுவுமொரு காரணம்.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற இடத்தைப் பிடித்துவிட்டாலும், புதிய நோய்களைக் கண்டறிதல், உள்நாட்டிலேயே தடுப்பு மருந்துகளை உருவாக்குதல் போன்ற முக்கிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை. ஆகவே பல நேரங்களில் வெளிநாட்டுக் கண்டுபிடிப்புகளைச் சார்ந்திருக்க நேர்கிறது.
கொரோனா தாண்டவமாடிய காலக்கட்டத்தில் இந்தியா தடுப்பூசி மருந்துகளை உருவாக்கவில்லையா எனக் கேட்கலாம். உண்மை, அதையும் அதன் பலனையும் மறுப்பதற்கில்லை. இந்தியா கோவிட் தடுப்பூசி உற்பத்தியில் ஒரு பெரிய மையமாகவே திகழ்ந்தது. ஆனால், இங்கே தயாரிக்கப்பட்ட எல்லாத் தடுப்பூசிகளும் இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. கோவாக்சின், ஜைகோவ் டீ ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. கோவிஷீல்டு, ஸ்புட்னிக், கோர்ப்வேக்ஸ் ஆகியவை வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு இங்கே உற்பத்தி செய்யப்பட்டன.
ஊடக ஆட்டம்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அறிவியல் தகவல்களைப் பரப்புவதில் ஊடகங்கள் ஒரு முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால், தவறான தகவல்கள் என்று முத்திரை குத்தி முக்கியமான மாற்றுக் கருத்துகளை வாயடைக்கச் செய்கிற வேலையிலும் ஊடகத்தினர் பலர் இறங்குகின்றனர். இது சில நாடுகளில், அரசாங்கங்களும் நிறுவனங்களும் புதிய கருத்துகளைத் தடுப்பதற்குத் தோதாகிறது.
வெளியிடக் கேட்டுக்கொண்டு வருகிற மாற்றுக் கருத்துகளைப் பல பெரிய ஊடக நிறுவனங்கள் மதிப்பதில்லை. ஒருவேளை வெளியிட்டாலும் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடுகின்றன. யாரிடமிருந்து வரும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதென்று அவைகளே முடிவு செய்கின்றன. ஆம், இதிலேயும் கூட்டுக்களவு முதலாளிய ஆட்டம்!
போலிகள்
ஆனால், வரலாற்றில் இதுதான் இறுதியான அறிவியல் என்று நம்பவைக்கப்பட்டிருந்த பல கருத்துகள் பிற்காலத்தில் போலியானவை என்று நிறுவப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. சார்லஸ் டார்வின் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கான ”இயற்கைத் தேர்வு” பற்றிச் சொன்னார் அல்லவா? இயற்கை மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளாத இனங்கள் அழிந்தது பற்றியும் கூறிய அவர் அதை விளக்குவதற்காக “தக்கது தாக்குப் பிடிக்கும்” என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். அதற்குத் தாறுமாறான விளக்கமளித்து, “யூஜெனிக்ஸ்” என்ற “அறிவியல்(?) கொள்கை” உருவாக்கப்பட்டது. மனிதர்களிலும் தகுதியற்ற பிரிவுகளின் இனப்பெருக்கத்தைத் தடுப்பது, “தகுதியான” இனங்களை மட்டும் வளர்ப்பது என்ற விபரீதமான கோட்பாடு கட்டமைக்கப்பட்டது. டார்வினின் ஒன்றுவிட்ட சகோதரரான ஃபிரான்சிஸ் கால்டன் உருவாக்கிய “செயற்கைத் தேர்வு” கொலைப்பாடு அது.
ஹிட்லர், முசோலினி வகையறாக்கள் தங்களுடைய இனப்படுகொலைப் பாசிச அரசியலுக்கு அந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தினர். இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளைச் சந்தித்த அறிவியல் உலகம், யூஜெனிக்ஸ் ஒரு போலி அறிவியல் என்று திட்டவட்டமாகத் தள்ளுபடி செய்தது. “மரபணு அடிப்படையிலேயே எங்கள் இனம்/சாதி உயர்வானது” எனும் உள்ளூர் யூஜெனிக்ஸ் பிதற்றல்களை அவ்வப்போது கேட்கத்தானே செய்கிறோம்.
தேசப்பற்றும் உலகக் கடமையும்
பல நாடுகளில் அறிவியல் களத்திலும் அரசியல் தலையீடுகள் சரியான ஆய்வுகளுக்கு முட்டுக்கட்டையாகவும், தவறான கருத்தியல்களுக்கு முட்டுக்கொடுப்பவையாகவும் செய்யப்படுகின்றன. மாசுக் கட்டுப்பாட்டையும் பசுமைப் பரப்புப் பாதுகாப்பையும் அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறபோது, அதை அரசுகள் அலட்சியப்படுத்துகின்றன, அந்த ஆராய்ச்சிகளுக்கு சும்மா ஒப்புக்கு நிதியளிக்கின்றன. இதன் பின்னால் உலகச் சந்தை தாதாக் கும்பல்கள் இருப்பது சட்டென்று கண்ணுக்குப் புலப்படாத கார்ப்பரேட் அரசியல்.
அதுவாவது பரவாயில்லை, இங்கே ‘பஞ்சகவ்யம்’ (கோமியம், சாணம், பால், தயிர், நெய்) எனப்படுவதன் மருத்துவ குணங்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்குத் தாராளமாக நிதியளிக்கப்படுகிற பழமைவாத அரசியலை என்னவென்று சொல்வதென அறிவியல் இயக்கங்கள் விசனப்படுகின்றன. புராணங்களின் கற்பனை வளத்தை ரசித்துவிட்டுப் போகாமல், அதெல்லாம் உண்மையென்று நிறுவுவதற்காக பண்டைக் கால விமானப் போக்குவரத்து, மாற்று அங்க சிகிச்சை உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்கு நிதிநீர் பாய்ச்சப்படுவது, முக்கியத் தேவைகளாக உள்ள ஆராய்ச்சிகள் வறட்சியாக விடப்படுவது குறித்துத் தலையில் அடித்துக்கொள்கின்றன.
போதாதென்று, மாணவர்களின் பாடச்சுமைமையக் குறைப்பது என்ற பெயரில் சில மாநிலங்களின் பள்ளிப் புத்தகங்களில் சார்லஸ் டார்வினின் கோட்பாடு பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிக் குழந்தைகள் பரிணாம உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டாம் என்ற கல்விக்கொள்கையின் நோக்கம் என்ன? அறிவியல் செயல்பாட்டாளர்களோடு, மாணவர்களின் பெற்றோர்கள் உள்பட குடிமக்கள் அனைவருமே இதை விவாதிப்பது ஒரு தேசப்பற்றுக் கடமை.
“அறிவியலைப் பின்பற்றுவீர்” (ஃபாலோ சயின்ஸ்) என்ற சொற்றொடர் ஒன்று உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது நம்பிக்கை வைக்கக் கோருவது அது. அப்படியானால், கேள்வியின்றி ஒப்புக்கொள்ள வேண்டுமா? இல்லை கேள்விதான் அறிவியலின் வலிமை. அது தான் சொல்வதுதான் சரியென்று அப்படியே பழசாகித் தேங்கிப்போகிற நம்பிக்கை அமைப்பன்று. கேள்விகளுக்கும் மறுஆய்வுகளுக்கும் உட்படுகிற, தான் சொன்னது தவறாகக்கூடும் என ஏற்பதற்கும் தயாராக இருக்கிற, புத்தூற்று போலத் தன்னைப் புதுப்பித்துப் பாய்ந்துகொண்டே இருக்கிற ஒரு நிகழ்முறையே அறிவியல். போலிகளைகளையும் புறக்கணிப்புகளையும் விலக்கி, புத்தாக்க அறிவியலுக்குத் தோள் கொடுப்பது உலகக் கடமை.
[0]
தகவல்கள் ஆதாரம்: ‘கிளைமேட் காஸ்மோஸ்‘ மற்றும் இணையப் பகிர்வுகள்
No comments:
Post a Comment