Tuesday, 3 June 2025

ஊசிகளால் குத்தப்பட்டவளின் கதை

தி கேர்ள் வித் தி நீடில்

(2024)



ழைய காலத்துக் கதை, கறுப்பு வெள்ளையில் புதிய காலத்து சினிமா – ‘தி கேர்ள் வித் தி நீடில்’. ஸ்வீடன் நாட்டவரான மேக்னஸ் வோன் ஹார்ன் இயக்கிய இந்த டென்மார்க் சினிமா, சிறந்த படம், திரைக்கதை, நடிப்பு, தயாரிப்புத்தரம் ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறது. வலியோரின் முதல் உலகப்போர் முடிவடைந்த காலக்கட்டத்தில் சூறையாடப்பட்ட எளியோரின் வாழ்க்கையை, ஓர் ஏழைப் பெண்ணின் வலிகளாகச் சொல்லும் கதை.


போர்க்களம் சென்ற பீட்டர்  இறந்துவிட்டதாக அறிவிக்கப்படாத நிலையில், விதவை நிதி மறுக்கப்படும் மனைவி  கரோலின் ஆடைத் தொழிற்சாலையில்  வேலைக்குச் சேர்கிறாள். சொற்ப வாடகையில் ஒரு மோசமான வீடுதான் கிடைக்கிறது. கழிப்பறை இல்லாத வீட்டின் மூலையில் அதற்கென வைக்கப்பட்டிருக்கும் வாளியை அவள் பயன்படுத்தும் காட்சியே இப்படிப்பட்ட ஆட்களைப் பார்த்திருக்கிறீர்களா என்று நம்மைக் கேட்கிறது.


ஆலை முதலாளி ஜோர்கன் அவளுக்கு  உதவுகிறான். அது காதல் உறவாகிறது, கர்ப்பத்தில் முடிகிறது. அப்போது பீட்டர், போர் அவனுக்குப் பரிசளித்த முகச்சிதைவுடன் திரும்பி வருகிறான். ஜோர்கனுடன் வாழப்போகும் நம்பிக்கையுடன் பீட்டரை நிராகரிக்கிறாள். ஆனால் ஜோர்கனின் தாயால் நிராகரிக்கப்படுகிறாள்.


கரோலின் ஆலையிலிருந்து ஒரு  நீளமான ஊசியை எடுத்துக்கொண்டு நகரத்தின் பொதுக் குளியல் கூடத்திற்குச் செல்கிறாள். தனக்குத் தானே கருக்கலைப்புக்கு முயன்று, அது முடியாதபோது சாகத் துணிகிறவளின் உடல் வாதையை நாமும் உணர்கிறபோது டாக்மர் அவளைக் காப்பாற்றுகிறாள். கைவிடப்படும் குழந்தைகளைப் பிள்ளையில்லாதவர்களுக்குக் கொடுப்பதை ஒரு தொழிலாக, இரு தரப்பிலும் பணம் பெற்றுக்கொண்டு, சட்டத்திற்குப் புறம்பாக  நடத்துகிறவள் டாக்மர்.


பீட்டரும் கரோலினும் மீண்டும் இணைகிறார்கள். போர்க்கள மிரட்சிகளால் அவனுக்கு மனச் சிதைவும் ஏற்பட்டிருக்கிறது. கரோலினுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. பீட்டர் அக்குழந்தையை வைத்துக்கொள்ள விரும்புகிறான். ஜோர்கனுக்குப் பிறந்தவள் வேண்டாமெனக் கூறும் கரோலின் குழந்தையை டாக்மரிடம் பணம் தராமல் ஒப்படைக்கிறாள்.


பால் சுரப்பு வற்றிய தாய்களின் குழந்தைகளுக்காகப் பால் செவிலியாக வேலை செய்து கடனை அடைக்கலாம் என்கிறாள். பால்குடி மாறாதவளாகத் தன்னுடன் இருக்கும்  எரேனா என்ற 7 வயது சிறுமிக்கு அவளே பாலூட்டக் கூறுகிறாள். கரோலின்–டாக்மர் இருவரும் போதை மருந்து எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகிறார்கள்.


ஓர் இளம் பெண் ஆண் குழந்தையோடு வருகிறாள். அவளை அழைத்து வரும் ஃபிரிடா, கரோலினின் தோழிதான். அந்தக் குழந்தைக்குக் கரோலின் பால் கொடுத்து வரக் கூறுகிறாள் டாக்மர். தொடுகை சார்ந்த அந்தத் தொடர்பு குழந்தையின் மீது கரோலினுக்கு வாஞ்சையை ஏற்படுத்துகிறது. சிறுமி எரேனா தனக்குப் பால் மறுக்கப்பட்டதால் குழந்தையைக் கொல்ல முயல்கிறாள். அவளை அடித்துக் குழந்தையைக் கரோலின் காப்பாற்றுகிறாள்.


மறுநாள் டாக்மர், குழந்தைக்குப் புதிய குடும்பம் கிடைத்துவிட்டதெனக் கூறி எடுத்துச் செல்கிறாள். எரேனாவை அடித்ததால்தான் குழந்தையைப் பிரிக்கிறாள் என்று கருதும் கரோலின் பின்தொடர்கிறாள். போகிற வழியில் டாக்மரின் செயலைப் பார்க்கும் கரோலினோடு நாமும் அதிர்கிறோம். தன்னுடைய குழந்தைக்கும் அந்த முடிவுதான் ஏற்பட்டதா என்று மறுகுகிறவளோடு நாமும் மறுகுகிறோம்.


சந்தேகம் கொள்ளும் ஃபிரிடாவும் வேறொரு தாயும் டாக்மரிடம் ஒரு குழந்தையை விட்டுச் செல்கிறாள். அதையாவது காப்பாற்றிவிட கரோலின் முயல்கிறபோது ஏற்படும் மோதலில் குழந்தை உயிரிழக்கிறது. மறுநாள் திரும்பி வருகிற அந்தத் தாய், முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறி குழந்தையைக் கேட்கிறாள். நடக்கப் போவதை ஊகிக்கும் கரோலின் தற்கொலை முயற்சியாக மாடியறைச் சன்னலிலிருந்து வெளியே குதிக்கிறாள். காவல்துறையினர் உள்ளே நுழைகிறார்கள். 


நீதிமன்றத்தில் டாக்மர், பல குழந்தைகளைக் கொன்றதை ஒப்புக்கொள்கிறாள். வெறுக்கப்படும் குழந்தைகள் சந்திக்கக்கூடிய கொடுமைகளிலிருந்து அவர்களை விடுவித்ததாக அவள் கூறுகிறாள். தற்கொலை முயற்சி தோல்வியடைந்த கரோலின் நீதிமன்றத்திற்கு வருகிறாள். குற்றத்திற்கு ஒத்துழைத்தவர்களுக்கும் தண்டனை உறுதி என்ற நிலையில், டாக்மர் அவளைக் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுகிறாள். கரோலின் ஆதரவற்றோர் இல்லத்தில் விடப்பட்டிருக்கும் எரேனாவை சட்டப்படி தத்தெடுத்து  அழைத்துச் செல்கிறாள்.


தனி மனித மனங்களின் நேர்மறை–எதிர்மறை இயல்புகளைச் சித்தரிக்கும் இயக்குநரின் புனைவுக்கு மெய்நிகர் நடிப்பால் விக்டோரியா கார்மன் மார்ட்டின்ஸ், ட்ரைன் டார்ம்கோவ் உள்ளிட்டோர் உயிர்ப்பூட்டியிருக்கிறார்கள். மைக்கேல் டைமெக்  படப்பதிவு, கறுப்பு–வெள்ளைப் படங்களின்  காலச்சூழலுக்கு இட்டுச்செல்வதுடன், கதை நிகழ்வுகளுக்கு ஒரு கனத்தையும் ஏற்றுகிறது. சிறந்த படைப்பாக்கத்திற்கு  ஃபிரெட்ரிக் ஹோஃப்மிலேர் இசையும், அக்னீஸ்கா கிளின்ஸ்கா தொகுப்பும் பங்களித்துள்ளன.


மேக்னஸ் வோன் ஹார்ன் இயக்கிய ‘தி ஹியர் ஆஃப்டர்’, ‘ஸ்வெட்’ உள்ளிட்ட படங்களும் உளவியல், சமூகவியல் உள்ளடக்கங்களுக்காகவும் கலை நேர்த்திக்காகவும் விருதுகளைப் பெற்றிருக்கின்றன.


டாக்மர் கதாபாத்திரம், 1920களில் பல குழந்தைகளைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் சிறையாகக் குறைக்கப்பட்டு, சிறையிலேயே இறந்துபோன  டாக்மர் ஓவர்பை என்ற பெண்ணின் சாயலில் உருவாக்கப்பட்டது. அந்த வழக்கு டென்மார்க்கில் குழந்தை நலச் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு வழிசெய்தது. பெண்ணின் உடல் சார்ந்த ஆளுமையுரிமை இன்றளவும் போராட்டமாகத் தொடர்வதைச் சொல்வதற்காக ஊசியை எடுத்தவளை ‘மூபி’ மேடையில் சந்திக்கலாம்.

[0]

செம்மலர்ஜூன் 2025 இதழ் ‘ஓடிடி மேடையில் உலக சினிமா’ பக்கத்தில் எனது பதிவு


No comments: