(‘டிஜிட்டல் விகடன்’ தளத்தில் எனது கட்டுரை)
“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை குறித்து வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிப்பதற்காக நாடாளுமன்றக் குழுவினர் சென்று வந்துள்ள நிலையில், மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட்டே வெள்ளியன்று (ஜூன் 6) செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
“ஒரு நாடு கூட இந்தியாவுக்கு ஆதரவாகக் கருத்துக் கூறவில்லை….
இங்கிருந்து சென்ற நாடாளுமன்றக் குழுக்கள் அந்த நாடுகளின் உயர்நிலைத் தலைவர்களைச் சந்திக்க
வைக்க இயலவில்லை… ஆனால் பாகிஸ்தான் அரசு ஐஎம்எஃப் நிதி பெற்றது உள்ளிட்ட அங்கீகாரங்களை
ஈட்டியுள்ளது… அரசுறவு அடிப்படையில் தனிமைப்பட்டுவிட்டதையே இது காட்டுகிறது…” -இவைதாம்
சுப்ரியா கூறியவற்றின் சாறான கருத்துகள்.
“வெளிநாடு சென்ற குழுக்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்ற
ஒரு வரம்பு இருந்திருக்கும். ஆனால் நாட்டின் முதன்மை எதிர்க்கட்சி என்ற முறையில் இதுபற்றிக்
கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது,” என்றும் அவர் கூறியிருக்கிறார். ஒன்றிய அரசின்
வெளியுறவுக் கொள்கை பற்றிய விமர்சனங்கள் அவ்வப்போது எழுந்துள்ளன என்றாலும், தற்போதைய
சூழலில் இதை எதிர்க்கட்சியின் வழக்கமானதோர்
எதிர்க்கருத்தாகக் கடந்துவிட முடியவில்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே முதல் இடதுசாரி கட்சிகள்,
பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் வரை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ள ஒரு
விசயத்தையே எடுத்துக்கொள்ளலாம். சிந்தூர்
தவறவிட்ட வாய்ப்புகள்
நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்
இடையே நேரடியாகவே போர் மூண்டது. பயங்கரவாதிகளைத் தாக்கினால் பாகிஸ்தான் அரசுக்கு ஏன்
கோபம் வருகிறது என்று எல்லா நாடுகளும் கேட்க வைத்திருக்க முடியும். அதற்கு முன்னதாக,
சிந்தூர் நடவடிக்கைக்கே கூட பாகிஸ்தான் அரசை ஒத்துழைக்க வைத்திருக்க முடியும் – பயங்கரவாதிகள்
பிரச்சினையும் பாதிப்புகளும் அங்கேயும் இருக்கின்றன என்ற முறையில். ஒருவேளை அவ்வாறு
ஒத்துழைக்க அந்நாட்டு அரசு மறுத்திருக்குமானால் அதையே பன்னாட்டு விவாதப் பொருளாக்கியிருக்க
முடியும். இத்தகைய அணுகுமுறைகள் இந்தியாவுக்கு ஒரு அற வலிமையை உருவாக்கிக் கொடுத்திருக்கும்.
இந்த வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. உடனே நடவடிக்கையைத் தொடங்கியாக வேண்டிய கட்டாயச்
சூழல் இருந்திருக்கக்கூடும். ஆட்சி அதிகாரத்திலும் அரசாங்க நிர்வாகத்திலும் இருப்பவர்களுக்கு
அந்தச் சூழல் துல்லியமாகத் தெரிந்திருக்கக்கூடும். அதையெல்லாம் நாட்டு மக்களிடம் சொல்ல
வேண்டியதுதானே? முதலிலேயே சொல்லியிருக்க முடியாதுதான், பஹல்காம் படுகொலைத் தாக்குதலைத்
திட்டமிட்ட கும்பலுக்கும் அந்தத் தகவல்கள் போய்ச்சேரும், அவர்கள் முன்னெச்சரிக்கையாகப்
பதுங்கிவிடுவார்கள் அல்லது பறந்துவிடுவார்கள். ஆகவே, எதிர்பாராத தாக்குதல்களை நடத்துவதில்
அரசுமுறை உத்தி அல்லது வியூகம் இருக்கிறதென்று புரிந்துகொள்ளலாம்.
ஆனால், நடவடிக்கைக்குப் பிறகு சொல்லியிருக்கலாமே? நாட்டு
மக்களின் பிரதிநிதிகள் சபையாகிய நாடாளுமன்றத்தைக் கூட்டிச் சொல்லியிருக்கலாமே? சொல்லவில்லை.
இரு நாடுகளுக்கும் போர் மூண்டது, இரு நாட்டு மக்கள் மனங்களில் போரின் பின்விளைவுகள்
பற்றிய கலக்கங்கள் சூழ்ந்தன. நான்கே நாட்களில் போர் முடிவுக்கு வந்தது, யார் அதற்குக்
காரணமானாலும், போர் நின்றதில் மக்கள் நிம்மதிப்
பெருமூச்சு விடுத்தார்கள் – இரு தரப்பிலுமே போர் மோகத்தோடு கூச்சலிட்டவர்கள் தவிர்த்து.
ஆனால் மூண்ட போர் முடிந்துவிட்டாலும், எழுந்த கேள்விகள் முடியாமல் தொடர்கின்றன.
இறுதிப் பலன்?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், பாகிஸ்தான்
எல்லையிலும் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்களில் விமானப்படை வீரர்கள் நடத்திய துல்லியத்
தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டார்கள். அவர்களில் எத்தனை பேர் பஹல்காம் வந்து திரும்பியவர்கள்? லஷ்கர்-இ-தொய்பா
அமைப்பின் கிளை என்று கூறப்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆர்எஃப்) அந்தப் படுகொலையைச்
செய்ததற்குப் பொறுப்பேற்பதாக அறிவித்தது. இந்தியாவுக்குள், காஷ்மீர் பள்ளத்தாக்கில்
செயல்படும் இந்த அமைப்பு. 2019இல் ஜம்மு காஷ்மீர்
மாநிலத்தின் சிறப்பு நிலை விலக்கப்பட்டதற்குப் பின்பு உருவாக்கப்பட்டது. இதன் பின்புலம்
பாகிஸ்தானில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
விமானப்படை நடவடிக்கையில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹமது
ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இந்த
டிஆர்எஃப் குழுவைச் சேர்ந்த, பஹல்காமின் அழகான அமைதியைக் குருதியால் குலைத்த கொலைவெறியில்
நேரடியாக இறங்கியவர்களும் கொல்லப்பட்டார்களா? ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்
என்றாலும், பஹல்காமில் 26 பேர் நெற்றிகளில் தோட்டாக்களைப் பாய்ச்சிய ஐந்து பேர் தலைமறைவாகிவிட்டதாகக்
கூறப்படுகிறது. அப்படியானால், சிந்தூர் நடவடிக்கையின் இறுதிப் பலன் என்ன?
உள்நாட்டில் இத்தகைய
கேள்விகள் எழுகிற நிலையில், வெளிநாடுகளில் வேறு பல கேள்விகள் எழும். அவற்றுக்கான பதில்கள்
இருக்கின்றனவா என்ற கேள்வியும் எழும். அந்த பதில்களை ஏற்கத்தக்க வகையில் உலகத்தின்
முன்வைப்பதற்கு வலுவான, இணக்கமான, வெளியுறவுக் கொள்கை தேவை. மோடி அரசின் அந்தக் கொள்கை
தோல்வியடைந்துவிட்டது என்பதே காங்கிரஸ் குற்றச்சாட்டு.
கேள்விகளுக்கான மூலங்கள்
அப்படியான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பொறுப்பும் வெளிநாடுகளுக்குப்
பயணப்பட்ட நாடாளுமன்றக் குழுக்களுக்குத் தரப்பட்டிருக்கும். அந்தப் பொறுப்பை எந்த அளவுக்கு
நிறைவேற்ற முடிந்தது? என்ன பதில்கள் கூறப்பட்டன? குழுக்களின் உறுப்பினர்கள் தங்களைத்
தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியவர்களான குடிமக்களுக்கு விளக்கமளிக்கக்
கடமைப்பட்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது போல, நாடாளுமன்றக் குழு சென்றதற்கு
முன்பு மட்டுமல்லாமல், பணி முடிந்து திரும்பி வந்ததற்குப் பின்பும் கூட எந்த நாடும்
வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவைத் தெரிவிக்கவில்லை. பல நாடுகளும் இரு தரப்பிலும்
பதற்றம் தணிய வேண்டும், மோதலைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றன. பயங்கரவாதிகளின்
மனிதத்துவமற்ற கொடுஞ்செயலைக் கண்டித்திருக்கின்றன. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும்
நடவடிக்கைகளுக்குத் தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவித்திருக்கின்றன. இவை குறிப்பிடத்தக்கவைதான்
என்றாலும், மிகவும் பொதுப்படையானவை. எந்தவொரு நாடும் இத்தகைய நாகரிகமான அரசுறவு நிலைப்பாட்டை
வெளிப்படுத்துவது இயல்பானதே.
ஆனால் இதனைத் திட்டவட்டமான ஆதரவு நிலை என்று கூறுவதற்கில்லை.
குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் நேருக்கு நேர்
மோதலில் அந்த நாடுகள் இந்தியாவின் பக்கம் நிற்க முன்வந்துள்ளன என்று கருதுவதற்கில்லை.
பாகிஸ்தான் பக்கமும் நிற்கவில்லைதான், ஆனால் பாகிஸ்தான் அரசு தனது குழுக்களை மற்ற நாடுகளுக்கு
அனுப்பவில்லையே?
மாறாக, இது பற்றிப் பேச வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு
சபையின் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தானால் முடிந்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி
பாகிஸ்தானுக்கு நாடுகளிடை நாணய நிதியம் (ஐஎம்எஃப்) நிதியுதவியை அளித்தது. இப்போது அமைக்கப்பட்டுள்ள
பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா. சிறப்புக் குழுவின் துணைத் தலைவர் பொறுப்பு பாகிஸ்தானுக்கு
அளிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மோடி அரசால் தடுக்க முடியவில்லை.
டிரம்ப் சரவெடி
மோடி அரசால் தடுக்க முடியாமலிருக்கிற மற்றொரு சங்கதி, இந்தியா-பாகிஸ்தான்
போரை நிறுத்த வைத்தது தான்தான் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் திரும்பத்
திரும்பக் கூறிவருவது. அதுவும், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், பெரிய யுத்தமாக மாறினால்
உலகம் தாங்காது, ஆகவே போரைக் கைவிடுங்கள் என்றெல்லாம் கேட்டுக்கொள்ளவில்லை. மாறாக,
சண்டை நிறுத்த உடன்பாட்டிற்கு வராவிட்டால் இரண்டு நாடுகளுக்கும் வர்த்தகத் தடை விதிக்கப்படும்
என்று அச்சுறுத்திப் பணிய வைத்தாராம். வீடுகளில் அடித்துக்கொள்ளும் சிறுவர்களிடம்,
“சண்டை போடுறதை நிறுத்துங்கடா, இல்லாட்டி இன்னிக்கு சோறு போட மாட்டேன்,” என்று அம்மாக்கள்
சொல்வது போல இல்லை? இப்படி மிரட்டியதாக அவரே சொல்கிறார். இதுவரையில் 11 முறை சொல்லிவிட்டார் என்று ராகுல்
காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் பிரதமர் மோடி ஏன் ஒரு முறை கூட இதை மறுத்து எதுவும் சொல்வில்லை என்று அவர்கள்
கேட்டிருக்கிறார்கள்.
டிரம்ப் இப்படி மிரட்டியதால்தான் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதென்றால்,
இந்தியாவின் உயர் தன்னாளுமைக்கும், “மூன்றாம் தரப்பின் நாட்டாமைக்கு இடமில்லை“ என்ற
நீண்ட கால வெளியுறவுக் கொள்கைக்கும் எதிரானது என்று பல்வேறு தேசியக் கட்சிகளும் மாநிலக்
கட்சிகளும் விமர்சித்துள்ளன. பாஜக-வின் அடுத்த மட்டத் தலைவர்கள், வெளியுறவு அதிகாரிகள்
அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் பிரதமரிடமிருந்து நேரடியாக
எந்த பதிலும் வரவில்லை. வரவிருக்கும் தேர்தல்களுக்கான
பரப்புரைகளில் போர் வெற்றியைப் பயன்படுத்திக்கொள்ள பாஜக ஆசைப்படும். அந்த ஆசைக்கு அணை
போடுவதாக போர் நிறுத்தத்திற்குப் பெருமை கோருகிறார் டிரம்ப்.
இந்திய பிரதமர்தான் பதில் சொல்லவில்லையே தவிர, பாகிஸ்தான்
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். இரு நாட்டு மோதலைத் தணிப்பதில் டொனால்ட் டிரம்ப் முக்கியப்
பங்காற்றினார், ஒரு சமாதான மனிதராகச் செயல்பட்டார் என்று இந்த ஜூன் 4 அன்று பேசியிருக்கிறார்.
பத்திரிகையாளர் நண்பரொருவர் இவ்வாறு கேட்டார்: “தோல்வியடைந்த நாட்டின் பிரதமர்,
மோதல் முடிவுக்கு வந்ததில் டிரம்ப் தலையீடு
இருந்தது என்று வெளிப்படையாகக் கூறுகிறார். வெற்றியைக் கொண்டாடும் நாட்டின் பிரதமர்,
அத்தகைய தலையீடு இல்லை என்று தானே நேரடியாகச் சொல்லத் தயங்குவது ஏன்? அந்தத் தயக்கம்
மூன்றாம் தரப்பின் தலையீடு இருந்தது என்று ஒப்புக்கொள்வதாக இருக்கிறதே?”
முந்தைய காட்சிகள்
வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைத்தைத்தான் இந்த மௌனமும்
எடுத்துக் காட்டுகிறது என்று வேறு பல ஊடகவியலாளர்களும்
கூறுகிறார்கள். அதே வேளையில், இந்தத் தோல்வி இப்போது மட்டும் வெளிப்படவில்லை, இதற்கு
முன்பும் காட்சிக்கு வந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. டிரம்ப் அறிவித்த
புதிய வர்த்தக வரி விகிதங்கள் குறித்துப் பல
நாடுகளின் தலைவர்கள் தங்கள் ஏற்பின்மையையும் கண்டனத்தையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் எதிரடி நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. ஐரோப்பிய
ஒன்றியமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ஆனால், அனைத்து நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு இறக்குமதி
செய்யப்படுகிற பொருள்களுக்கு 10% அடிப்படை வரி, அதனுடன் கூடுதலாகப் பல்வேறு நாடுகளிலிருந்து
வரும் பொருள்களுக்கு 49% சமன்பாட்டு வரி, இந்தியப் பொருள்கள் மீது 26% சமன்பாட்டு வரி
என்ற அறிவிப்புக்கு மோடி அரசிடமிருந்து உடனடியாக எதிர்வினை வரவில்லை. அனைவரும் அந்த
மௌனத்தை விமர்சித்த பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சரும், வணிகத்துறை அதிகாரிகளும் இந்த
வரிகள் நியாயமற்றவை என்று கருத்துத் தெரிவித்தார்கள். இரு நாடுகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்று
நன்மையளிக்கும் ஒப்பந்தம் தேவை என்றும் கூறினார்கள்.
ஒரு பக்கம் அவர்களாவது இந்த அளவுக்கேனும் சொல்கிறார்களே என்று
பார்த்தால், இன்னொரு பக்கம் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருள்களுக்கான வரி
விகிதங்களையும், வரி அல்லாத பிற கட்டுப்பாடுகளையும்
தளர்த்துவதில் மும்முரம் காட்டப்படுகிறது. அமெரிக்காவுடன் மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம்,
நியூஜிலாந்து மற்றும் பிற நாடுகளுடன் “சுதந்திர வணிக உடன்பாடுகள்’‘ செய்துகொள்கிற முயற்சிகளிலும்
தீவிரம் காட்டப்படுகிறது. இது இந்தியத் தயாரிப்புகளுக்கான உள்நாட்டுச் சந்தைப் பரப்பைச்
சுருக்கிவிடும் என்று சிபிஐ(எம்) கூறியிருக்கிறது.
மற்ற தயாரிப்புகள் ஒருபுறமிருக்க, இந்தியாவின் பொருளாதார
அடித்தளமான விவசாயத்தின் மீது இதே போன்ற அடி
விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவின் வணிகத்துறைச் செயலர் ஹோவர்ட் லூட்னிக்,
இந்தியா தனது வேளாண் சந்தையைத் திறந்துவிட வற்புறுத்தியிருக்கிறார். “இரு தரப்பு வணிக
உடன்பாட்டில் வேளாண் சந்தையை விலக்கி வைக்க முடியாது” என்று கூறியிருக்கிறார். இதற்கு
ஒன்றிய அரசு பதிலளிக்கவில்லை என்பதோடு, வரும் நாட்களில் இதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடும்
எனத் தெரிகிறது என்றும் சிபிஐ(எம்) இது தொடர்பான ஒரு தீர்மானத்தில் கவலை தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் இன்னமும் பல்வேறு உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு
மானியம் வழங்கப்படுகிறது. இது தங்களுடைய தயாரிப்புகளை விட இந்தியப் பொருள்களின் விலை
குறைவாக இருக்க வழி செய்கிறது என்று அமெரிக்க வேளாண் தொழில் பெருநிறுவனங்களின் அமைப்புகள்
எதிர்த்து வருகின்றன. அந்த எதிர்ப்புக்குப் பணிந்து இங்கே வரிவிகிதங்களும் சந்தைக்
கட்டுப்பாடுகளும் விலக்கப்படுமானால், அமெரிக்கா
ஏற்றுமதிகள் பெரிய அளவுக்கு எகிறிவிடும். அது, குறிப்பாக பால் உற்பத்தித் தொழிலை முடக்கிவிடும்
என்று இடதுசாரிகள் உள்ளிட்ட தலைவர்களும் பொருளாதார வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.
அரசின் வெளியுறவுக் கொள்கைத் தடுமாற்றமே இந்த எச்சரிக்கைக்கு அடிப்படை.
வர்த்தகம் மட்டுமல்ல
ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்ற நாடுகளுடனான வர்த்தகம்
தொடர்பானது மட்டுமல்ல (அது மையமானது). உலக அரசியல் உள்பட வேறு களங்கள் தொடர்பானதுமாகும்.
அந்தக் களங்களில் விட்டுக்கொடுக்கப்படும் போக்குகள் பற்றியே தனிக்கட்டுரை எழுதலாம்.
மாதிரிக்கு ஒன்று: பாரம்பரியமாக இந்தியா பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும்,
சுதந்திர நாடு லட்சியத்திற்கும் ஆதரவளித்து உற்ற தோழமையாக இருந்து வந்திருக்கிறது.
அது உலக நாடுகளிடையே இந்தியாவுக்கு ஒரு பெருமிதமான இடத்தை ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.
இப்போது அந்த இடம் சரிவடைந்திருக்கிறது. காஸா மக்களைக் கொன்று
குவித்துக்கொண்டிருக்கும் இஸ்ரேல் அரசுக்கு உறுதியான கண்டனத்தைப் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்களும் ராணுவத் தளவாடங்களும் ஏற்றுமதி செய்ய பொதுத்துறை
நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. காஸா
மீது இஸ்ரேல் தாக்குதல் இவ்வளவு மூர்க்கமடைந்துள்ள நிலையிலும் இவ்வாறு அனுமதிக்கப்படுகிறது.
இது முன்னெப்போதும் நடவாதது என்று பாலஸ்தீன மக்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி
வருவோர் கூறுகிறார்கள்.
ஜப்பானின் முன்முயற்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றோடு
இந்தியாவும் இணைந்த நாற்கரப் பாதுகாப்பு கூட்டமைப்பு (குவாட்ரிலேட்டரல் அலையன்ஸ்) ஒன்றை
உருவாக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்போது பேச்சுவார்த்தைகளைத் தாண்டி தலைவர்களின் உச்சி மாநாடுகள், வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்புகள் என தொடர்ச்சியாக
நடக்கின்றன. பருவநிலை மாற்றம், விண்வெளி உள்கட்டமைப்பு, முக்கிய தொழில்நுட்பங்கள்,
இணையவழிச் செயல்பாடுகள் பாதுகாப்பு, என பல்வேறு
பணிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. “நேட்டோ” போன்ற ராணுவக் கூட்டாக உருவாகாவிட்டாலும்,
இந்தக் கூட்டமைப்பை சீனாவுக்கு எதிரான அரசியலுக்குப் பயன்படுத்த மற்ற மூன்று நாடுகளின்
அரசுகளும் முயல்கின்றன. இதற்கு ஒத்துழைப்பான
நிலைபாட்டை இந்திய அரசு எடுக்கிறது என்ற விமர்சனமும் கவனத்திற்கு உரியது.
பெருமை தந்த கொள்கைகள்
நாட்டின் பெருமைக்குரியதாக இருந்து வந்த வெளியுறவுக் கோட்பாடு
அரிக்கப்பட்டுவிட்டது என்ற கவலைக்கான முன்வரலாறு என்ன? 1954இல் ஜவஹர்லால் நேரு முன்முயற்சியில்,
சீனாவுடனான உடன்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது பஞ்சசீலக் கொள்கை. உலக நாடுகள்
பலவும், குறிப்பாகப் புதிதாக விடுதலையடைந்த நாடுகள் தங்களுக்குமானதாக அந்தக் கொள்கையை
ஏற்றுக்கொண்டன. வல்லரசுப் போட்டிகளில் சிக்கிக்கொள்ளாமல்
உயர்தன்னாளுமை உரிமையையும் தேசிய நலன்களையும் பாதுகாக்க, அமைதியான முறையில் மற்ற நாடுகளுடன்
உறவைப் பேண அந்தக் கொள்கை உதவியது.
1961இல், அமெரிக்கா-சோவியத் யூனியன் பனிப்போர் கடுமையாக நிலவிய
சூழலில் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, யூகோஸ்லாவியாவின் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோ, எகிப்தின் கமால் அப்தெல் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ, கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோர் முன்னெடுப்பில் கட்டப்பட்டது
அணிசாரா இயக்கம். நடுநிலையோடு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வழி செய்த அந்த இயக்கமும்
புதிய சுதந்திர நாடுகளின் சுயேச்சையான வளர்ச்சிக்குப் பேருதவியாக அமைந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்து, சோவியத் யூனியனே இல்லாமல்
போன பிறகு அணிசாரா இயக்கத்தின் பொருத்தப்பாடு குறித்த விவாதங்கள் இருக்கின்றன என்றாலும் உலக அமைதி, நாடுகளின் தன்னாளுமை உள்ளிட்ட அதன் அடிப்படைக் கொள்கைகள் இன்றும் உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே உள்ளன.
“சரணாகதி” என்று விமர்சிக்கப்படுகிற இன்றைய சமரசங்களும் மௌனங்களும்
உறுதியின்மைகளும் இந்த இரண்டின் மூலமாக நிலைநாட்டப்பட்ட மாண்புகளைக் கேலிக்குரியாக்குகின்றன
என்பதே அக்கறையாளர்களின் ஆழ்ந்த வேதனை. அதனை உற்றுநோக்குகிறபோது, எந்த நாடானாலும் அதன்
அரசு கடைப்பிடிக்கிற உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகத்தான் வெளியுறவுக் கொள்கை இருக்க
முடியும் என்ற கருத்தும் கல்வெட்டாக நிற்கிறது. உள்ளுறவு சரியாக பேணப்பட்டால் வெளியுறவும் நேர்த்தியாக அமையும். உள்கொள்கை சீர்குலைவாக,
மக்களைக் கைவிடுவதாக, யாருக்கோ சேவை செய்வதாக இருக்குமானால் வெளிக்கொள்கையும் அதைத்தான்
பிரதிபலிக்கும். வெளியுறவுக் கோட்பாட்டின் பெருமைகளை மீட்பது, உள்ளுறவுக் கோட்பாட்டின்
சிறுமைகளை எதிர்த்துப் போராடுவதோடு இணைந்ததே.
No comments:
Post a Comment