Thursday, 5 June 2025

பாஞ்சாலிகளும் சீதைகளும் பாரதத்தையும் ராமாயணத்தையும் சொல்லியிருந்தால்…

 


லகின் புகழ்பெற்ற பெருங்காப்பியங்கள் ஆண்களின் அறிவு, அரசியல், வலிமை, வீரம் பற்றியே பேசுகின்றன. கிரேக்கத்தின் இலியட், ஒடிஸி, ஆங்கிலத்தின் பியோவுல்ஃப், பாரசீகத்தின் ஷாஹ்நாமா ஆகியவை அரண்மனை ஆண்களின் வல்லமைகளைக் கூறுகின்றன. அவர்களின் வெற்றி அல்லது தோல்விக்குக் காரணமானவர்களாகவே பெண்கள்  சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

இதற்கு ஒரு நிச்சயமான காரணம் அன்றைய ஆணாதிக்க சமுதாயச் சூழல். இன்னொரு காரணம் அந்தக் கதைகளை சொன்னவர்கள் ஆண்கள். ஆகவே ஆண்களின் தொலைநோக்கில், ஆண்களை மையப்படுத்தியே கதைகள் புனையப்பட்டன.

 

இக்காட்சியை இங்கேயும் பொருத்திப் பார்க்கலாம். இந்திய மக்களின் பெருமைக்குரிய இரண்டு பெருங்காப்பியங்கள் மகாபாரதம், ராமாயணம். நாடறிந்த மகாபாரதத்தை எழுதியவர் வியாசர், நாடறிந்த ராமாயணத்தை எழுதியவர் வாலி. இருவரும் தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்ட வெவ்வேறு கதைகளோடு இணைத்துத் தங்களுடைய செய்யுளாக்கத் திறனோடு தொகுத்தளித்தார்கள்.


இவ்வாறு நடந்தது

இக்கதைகள் பெண்களின் தொலைநோக்கில், பெண்களாலேயே சொல்லப்பட்டிருந்தால் எப்படி வந்திருக்கும்? ‘டைம்ஸ்லைஃப் – எம்எஸ்என்’ தளத்தில் படித்த இரண்டு பதிவுகள் இந்தக் கோணத்தில் சிந்திக்க வைக்கின்றன. தமிழில் பேராசிரியர் அருணன் எழுதிய ‘பூரு வம்சம்’, ‘சரயு’ இரு நாவல்களும் அந்தப் பெண்களின் உளவியலைத் தொட்டுக் காட்டுபவைதான். சில சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். இவையனைத்துமே  அந்த இதிகாசங்களிலிருந்தே எடுத்தாளப்பட்ட மறுவாசிப்பு முயற்சிகள்தான். இதிகாசம் என்றால் சமஸ்கிருதத்தில் “இவ்வாறு நடந்தது” என்று பொருள்.

 

“இவ்வாறு நடந்தது” என்று பாஞ்சாலியின் பார்வையிலும், சீதையின் தொலைநோக்கிலும் பெண்கள் சொல்லி வந்திருந்தால்? பெண்ணின் உணர்ச்சிகளும் உரிமைகளும்  முன்வைக்கப்பட்ட கதைகளாகப் பார்த்திருப்போமோ? சகிப்பும் தியாகமுமே பெண்ணின் சிறப்பெனும் முள்கிரீடம்  தொடர்ந்திருக்காதோ? விதியின் அலைகளில் சிக்கியவர்களின் நிலைமைகளைப் பார்த்து உருகும் நிலை ஏற்பட்டிருக்காதோ? பெண்கள் வாளெடுக்காமலே பெற்ற வெற்றிகள் தலைமுறைகளுக்குத் தெரியவந்திருக்குமோ?

பாஞ்சாலிகள் பேசியிருந்தால்…

மகாபாரதம் – இவ்வளவு அரசியல் அடர்த்தியும் வாழ்க்கை நுட்பங்களும் நிரம்பிய பெருங்காப்பியம் உலகில் வேறெங்கும் உண்டா என வியக்க வைக்கிற படைப்பு. இன்றைக்கும் அரசியல் சூதுகளுக்கு ஒப்பீடுகளாகக் காட்டக்கூடிய பல காட்சிகள் அதில் உண்டு. அரண்மனை சூழ்ச்சிகளும்  போர்க்களத் திருப்பங்களும் மிகுந்த நிகழ்வுகளைக் கட்டியவர்கள் பெண்கள்.

 

அவர்கள் வெறும் அன்னைகளாகவும் மனைவிகளாகவும் இயங்கியவர்கள் அல்ல. அறிவுக் கூர்மையுடன் வியூகங்களை வகுத்தவர்கள். ஆனால் அத்தனை திறமையையும் அவர்கள் சார்ந்திருந்த ஆண்களின் மகத்துவத்திற்கென்றே அர்ப்பணித்துப் “பெருமை” பெற்றவர்கள். ஆண்கள் சொல்லிவந்த கதைகளில் அந்தப் பெண்களின் இடம் இப்படித்தான் இருந்திருக்கிறது. பெண்கள் சொல்லிவந்திருந்தால்?


பாஞ்சாலியாகிய திரௌபதி, ஐந்து சகோதரர்களின் மனைவியாகவே நாம் அறிவோம். கதைப்படி தீயில் பிறந்தவளான அவள் வாளைப் போல் கூரிய எண்ணங்களைக் கொண்டவள். ஐவரில் அறிவும் அறமும் நிறைந்த
  மூத்தவனான தர்மனாகிய யதிஷ்டிரன் சூதாட்ட மோகத்தால் அனைத்தையும் இழக்கிறான், தன்னையும் இழக்கிறான். கடைசியில் சகுனியின் தூண்டுதலால், பாஞ்சாலியையே பணயம் வைத்தாடுகிறான், தோற்கிறான். சபைக்கு இழுத்து வரப்படுகிறவள் கதறித்துடிக்காமல் சீற்றத்தோடு கணவனைப் பார்த்துக் கேட்கிறாள்: "நீ முதலில் இழந்தது உன்னையா, இல்லை என்னையா?"

 

அவன் முதலில் தன்னை இழந்திருந்தால் கௌரவர்களின் அடிமையாகிவிடுகிறான். அடிமைக்கு என எந்த உரிமையும் உடைமையும் கிடையாது. பிறகு எப்படி அவன் தன் மனைவியைப் பணயம் வைக்க முடியும்? வாய்மூடி நின்ற அவனோடு,  நான்கு தம்பியரோடு, பெண்களை உடைமைப் பொருளாகக் கருதும் பாரம்பரியத்தையே தலைகுனிய வைத்தது இந்த ஒற்றைக் கேள்வி. பாஞ்சாலிகளால் சொல்லப்பட்டிருந்தால் இந்தக் கேள்வியே மகாபாரதத்தின் உள்ளடக்கமாகியிருக்கும்.

 

மற்றொரு முக்கியமான பெண் குந்தி. அவளுக்கு ஒரு முனிவரிடமிருந்து தெய்வீக வரம் கிடைக்கிறது. தேவர்களில் யாரை நினைத்து மந்திரத்தை உச்சரிக்கிறாளோ அவனது அம்சமாக அவள் வயிற்றில் குழந்தை உருவாகும். அந்த வரத்தால்தான் தர்மதேவனை எண்ணி மந்திரத்தை உச்சரித்ததால் தர்மன், வாயுதேவனை நினைத்ததால் பீமன், இந்திரனைக் கருதியதால் அர்ஜுனன் ஆகியோரைப் பெற்றெடுக்கிறாள். கணவன் பாண்டு கேட்டுக்கொண்டதால் இரண்டாவது மனைவி மாத்ரிக்கு மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கிறாள். அஸ்வினி தேவர்களை நினைத்துக்கொள்ளும் மாத்ரிக்கு  நகுலன், சகாதேவன் பிறக்கிறார்கள். அறிவியல்பூர்வமாக இப்படியெல்லாம் நடக்க முடியுமா என்று கேட்கவும் செய்யலாம், உண்மையில் என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்கவும் செய்யலாம்.

 

பாண்டுவும் மாத்ரியும் இறந்துபோக ஐந்து குழந்தைகளையும் வளர்க்கிற குந்தியின் மன உறுதி, ஆட்சியைப் பாண்டவர்களுக்கு மீட்கும் அரசியல் லட்சியம் ஆகியவை பேசப்பட வேண்டியவை. முன்னதாக அவளே, வரத்தைச் சோதித்துப் பார்ப்பதற்காக சூரியனை எண்ணி மந்திரத்தை உச்சரித்து கர்ணனைப் பெறுகிறாள். அவளுக்கு மூத்த மகன் அவன்தான், ஆனால் அவனை அவள் வளர்க்க முடியாமல் போன  சோகத்தைப் பற்றிப் பேசலாம். துரியோதனனால் தம்பியாக ஏற்கப்பட்டவனும், அளப்பரிய வீரனுமான கர்ணனை, போர் மூண்டுவிட்ட நிலையில் சந்திக்கும் குந்தி, அவனிடம் மட்டும் பிறப்பு ரகசியத்தைச் சொல்கிறாள். போரில் அவன் தம்பிகளைக் கொல்லாமலிருக்க வாக்குறுதி பெறுகிறாள். அவள் இந்த முடிவை  எடுத்ததன் அரசமைப்புச் சூழலைப் பேசலாம். சொந்த ரகசியங்களையும் பேரரசுச் சுமைகளையும் சுமந்தவளின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தால் இவையெல்லாம் பேசுபொருளாகியிருக்கும்.

காந்தாரி சாபம்

பார்வைத் திறனை இழந்த கௌரவர் மன்னன் திருதிராஷ்டிரனின் மனைவி காந்தாரி, கணவனால் பார்க்க முடியாததைத் தானும் பார்க்கக்கூடாது என்று கண்ணைக் கட்டிக்கொண்டவள். பெண்கள் பாரதக் கதையைச் சொல்லிவந்திருந்தால் இப்படிக் கண்ணைக் கட்டிக்கொள்வதற்குப் பதிலாக, கணவனின் கண்களாக நாட்டு நடப்புகளைக் கவனித்து சரியான முடிவுகள் எடுக்க உதவியிருக்கலாமே என்ற பேச்சு முன்னுக்கு வந்திருக்கும்.

 

கண்ணைக் கட்டிக்கொண்டாலும் சுற்றிலும் நடப்பதைத் தெளிவாகப் பார்த்தவள் அவள். தன் அறிவுரையையும் எச்சரிக்கையையும் புறக்கணிக்கும் மகன்கள்  அழியப் போவதை ஊகிக்கிறாள். போரை நிறுத்த முயலாத கிருஷ்ணனை வயிறெரிந்து சபிக்கிறாள். “என் பிள்ளைகளைப் போலவே உன் குலமும் அழியும்,” என்ற காந்தாரியின் சாபம் பலிக்கிறது. கிருஷ்ணனின் வழிவந்த யாதவ அரசர்கள் உட்பூசலால் சண்டையிட்டு அழிகிறார்கள். பெண்ணின் தொலைநோக்கில் சொல்லப்பட்டிருந்தால், போரின் கொடூரம் ஒரு தாயின் பதைப்பிலிருந்து பேசப்பட்டிருக்கும்.

 

துணைக் கதைகளில் ஒன்றாகிவிட்ட சத்யவதி வாழ்வும் மையத்திற்கு வந்திருக்கும். அரண்மனையில் அல்ல, ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தவள் அவள். அரசன் சாந்தனு அவள் மீது மையல் கொள்கிறான். காதலை ஏற்க வேண்டுமானால்,  அவனுக்கும் தனக்கும் பிறக்கிறவர்கள்தான் அரசர்களாக வேண்டும் என்று கோருகிறாள், சாந்தனு அதை ஏற்கிறான். இதனால்தான் அவனுடைய முதல் மனைவியான கங்காதேவிக்குப் பிறந்த தேவவிரதன் அரசனாக முடியாமல் போகிறது. சபதமெடுத்து மணமுடிக்காமல் இருந்ததால் “பீஷ்மர்” (சபதத்தில் உறுதியானவர்) என்று போற்றப்பட்டவர், இரு தரப்பினரின் மரியாதையையும் பெற்ற மூத்தவராக வாழ்ந்து போரில் மடிகிறார். அரச பரம்பரையாக உருவெடுக்கும் குரு வம்சத்தின் குலத்தாயாகிறாள் சத்யவதி. அவளுடைய இந்தக் கோரிக்கைதான் மகாபாரதப் புனைவின் திசையைத் தீர்மானிக்கிறது. பெண்கள் இந்தக் கதையைச் சொல்லிவந்திருந்தால், ஆண்களின் சாகசங்களும் சதிகளும் மட்டுமே அந்தப் பெருங்காப்பியம் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்காது.

 

சத்யவதி மீனவப் பெண் என்றால், உலூபி நாகலோக இளவரசி. நாகர் இனத்தவர் வாழும் பகுதிக்கு வரும் அர்ஜுனன் அங்கிருக்கும் நச்சுக் குளத்தில் விழுந்துவிடுகிறான். அவனுடைய உடலில் நஞ்சு பரவுகிறது. உலூபி அவனை மீட்டு, ஒரு மூலிகை மருந்தால் நஞ்சை முறிக்கிறாள். போர்க்களத்திற்குச் செல்லும் அளவுக்கு அவனுடைய உடல்நிலை முன்னேறுகிறது. தெய்வீக நிகழ்வுகளாலேயே அற்புதங்கள் நிகழ்வதாகச் சொல்லிச் செல்லும் கதையில் மனிதச் செயலால், உலூபியால் அர்ஜுனன் மீள்வது குறிப்பிடத்தக்கது.  விதியையும் பெண் கட்டுப்படுத்துவாள் என்று காட்டிய நாகராணியின் இந்தக் கதை பெண்களால் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

சுபத்திரையின் புரட்சி

பெற்றோர் யாரைக் காட்டுகிறார்களோ அவரையே மணப்பேன் என்று அடக்க ஒடுக்கமாகவெல்லாம் சொல்லிக்கொண்டிராமல், தன் இணையைத் தானே தேர்வு செய்தவள் சுபத்திரை. அன்றைய அரச குடும்பக் கட்டுப்பாடுகளோடு இணைத்துச் சிந்தித்தால், அர்ஜுனனோடு ஓடிப்போன அவள் அந்த அளவில் ஒரு புரட்சிக்காரியாகத்தான் தெரிகிறாள்.  அவள் அரசியல் அரங்கிலும் பங்கைச் செலுத்தினாள். மகன் அபிமன்யுவை பெரும் வீரனாக வளர்த்தாள். அவனை கௌரவர்கள் ஒரு பொய்யைப் பரப்பித்தான் வீழ்த்த முடிந்தது. காதல்–அரசியல் இரு களங்களிலும் வீரத்துடன் நின்றவளைப் பற்றிப் பெரிதாகத் தெரியாமல் போனதில், கதையை யார் சொன்னார்கள் என்ற பின்னணி இருக்கத்தானே செய்கிறது?

 

விதியை மாற்றிய மற்றொரு பெண் சாவித்திரி. கணவன் சத்தியவான் காலம் முடிந்து அவனை அழைத்துச் செல்ல எமன் வருகிறான். அவள் கெஞ்சிக் கதறாமல் அவனுடன் வாதத்தில் இறங்குகிறாள். தனது அறிவுத்திறனே துணையாக வாதிடும் சாவித்திரியிடம் தோற்கும் எமன், விதிப்படி கொண்டு செல்ல வேண்டிய சத்தியவானை விட்டுவிட்டுப் போகிறான். அறிவால்  அகால மரணத்தையும் வெல்லலாம் என்று மெய்ப்பித்தவளின் கதையைப் பெண்கள் பலமடங்கு அழுத்தமாகக் கூறியிருப்பார்களே.

 

பாண்டுவுக்கு இருந்த சாபத்தால் (உடல் சார்ந்த பிரச்சினையால் என்று இப்போது புரிந்துகொள்ளலாம்) குழந்தை பிறக்காது என்ற நிலையில், குந்தியிடமிருந்து மந்திரத்தைக் கற்றுக்கொண்டு இரட்டையரைப் பெற்றெடுக்கிறாள் மாத்ரி. பாண்டு இறந்ததும், பிள்ளைகளைக் குந்தியிடம் ஒப்படைத்துவிட்டு, கணவனின் சிதையில் குதிக்கிறாள். அக்காலத்தில் “ஸதி” கலாச்சாரத்தின் பெயரால் தற்கொலைகள்/கொலைகள் சர்வசாதாரணமாக இருந்தன என்றாலும், பெண் கதைசொல்லிகள் அந்த நடைமுறையின் கொடுமையைப் பற்றிக் கொஞ்சமாவது சேர்த்துப் பேசியிருப்பார்கள்தானே? கணவன்மார்கள் ஏன் உடன்கட்டை ஏறியதில்லை என்றும் கேட்டிருப்பார்கள்தானே?

சீதைகள் பேசியிருந்தால்

ராமாயணம் –ஆட்சி நெறி, குடும்ப அறம் பற்றிய பேச்சுகளில் தவறாமல் இடம்பெறும் பெருங்காப்பியப் படைப்பு.  பெண்களால் இந்தக் கதை சொல்லப்பட்டு வந்திருக்குமானால், ராவணனால் கடத்தப்பட்ட சீதையின் மன உளைச்சல் முன்வைக்கப்பட்டிருக்கும். மீட்கப்பட்டு அயோத்திக்கு வந்தவள் தனது புனிதத்தை – வெளிப்படையாகச் சொல்வதென்றால் தனது பாலியல் தூய்மையை –  நிறுவிக் காட்ட வேண்டியிருந்த சமூகக் கட்டாயத்தில் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று யோசிக்க வைத்திருக்கும். நெருப்பில் எரிந்து போகாமல் வந்தவளென வணங்குவதில் நீதி இருக்கிறதா என்று பேச வைத்திருக்கும்.



 ராமன் சமூகக் கட்டுப்பாட்டின்படி செயல்பட்டுத் தனது மேன்மையை நிலைநாட்டியது சரி, ஆனால் அதற்காக சீதைக்கு வலி ஏற்படுத்தியதை எப்படி ஏற்பது என்று, திறனாய்வாளர்கள் போல, எளிய பெண்களையும் ஆண்களையும் கேட்க வைத்திருக்கும்.  தர்மத்தின் பெயரால் பெண்கள் அன்று எவ்வாறு நடத்தப்பட்டார்கள், இன்றும் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்ற உறுத்தலையும் கூட ஏற்படுத்தியிருக்கும். நெருப்பைத் தோற்கடித்து, அனைவராலும் வணங்கப்பட்டபோதும் கூட சீதை ஏன் ராமனோடு செல்லாமல் தனக்கான வனவாசத்தை மேற்கொண்டாள் என்று விரிவாக விவாதிக்கச் செய்திருக்கும். பெண் சுயமரியாதையின் கனத்தை உணர்த்தியிருக்கும்.

 

சீதையின் பார்வையில் சொல்லப்பட்டிருக்குமானால் இலங்கையில் அனுமனுடனான உரையாடல்கள் அவளுக்குள் இருந்த கேள்விகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தியிருக்கலாம். அன்புக்கும் கடமைக்கும் இடையில் சிக்கிய சராசரி மனிதர்களில் ஒருவனாக ராமன் சித்தரிக்கப்பட்டிருக்கலாம்.  பெண்ணின் மாண்பை (அவள் மீது திணிக்கப்பட்ட) தியாகங்களால் மதிப்பிடக்கூடாது என்று அப்போதே வாதிடப்பட்டிருக்கலாம்.

கைகேயியும் மந்தரையும்

பெண்களால் சொல்லப்படும் ராமாயணம் மற்ற பெண்களின் நியாயங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கும். தசரதன் ஆணைப்படி ராமன் அரசனாகப் பொறுப்பேற்க இருந்ததைத் தடுத்து, அவனைப் பதினான்கு ஆண்டுகள் கானகத்திற்கு அனுப்பிய கைகேயி ஒரு வஞ்சகி என்றே ஆண்வழிக் கதைசொல்லிகள் விவரித்திருக்கிறார்கள். அவளுடைய கடந்தகாலக் கசப்புகள், பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவை பெண்வழிக் கதைசொல்லிகளால் தெரியவந்திருக்கும். முக்கியமாக, ஆண் பிள்ளைகளில் மூத்தவன்தான் அரியனையில் அமர வேண்டும் என்ற விதியில் அறிவார்ந்த அறம் இல்லையே என்ற வினாவை எழுப்பியிருக்கும். போர்க்களம் புகுந்து தசரதனைக் காப்பாற்றக்கூடிய அளவுக்குச் செயல்பட்டவள் கைகேயி. எவ்வளவு திறமை இருந்தாலும் பெண் முடிசூட்டிக்கொள்ளக் கூடாதா என்ற குரலும் ஒலித்திருக்கும்.

 

கைகேயியைத் தூண்டியவள், வெறுப்புக்கு உரியவள் என்றே காட்டப்பட்டு வந்திருக்கும் மந்தரை பற்றியும் கூடுதலாகத் தெரிய வந்திருக்கக்கூடும். முதுகில் கூன் இருந்ததால் அவள் அவமதிப்புகளைச் சந்தித்தாளா, ராமன் மீது அவளுக்கு ஏன் அவ்வளவு கோபம் என்ற விளக்கங்கள் கிடைத்திருக்கக்கூடும்.

 

ராவணனின் மனைவி மண்டோதரி  அமைதியானவளாக அல்லாமல், கணவன் மீதான அன்புக்கும் அவனது செயல்கள் மீதான வெறுப்புக்கும் இடையே அல்லாடியவளாக வெளிப்பட்டிருப்பாள். சீதைக்குக் காவலிருந்த அரக்கிகளும் கூட மனிதப் பிறவிகளாகச் சுற்றி வந்திருப்பார்கள். அவர்களின் சொந்தச் சிக்கல்களும் கூட சொல்லப்பட்டிருக்கும்.

 

கதைகளைச் சொல்பவர்களாக மட்டுமல்ல, அந்தக் கதைகளின் மையப் பாத்திரங்களாகவே பெண்கள் இருந்திருப்பார்களானால், இதிகாசப் போர்களே கூட தடுக்கப்பட்டிருக்கலாம். அந்தக் கதைகளை இப்போது மாற்றியெழுத முடியாது, மாற்ற வேண்டிய தேவையுமில்லை. ஆனால், இன்றைய புதுமைப் பெண்கள், அவர்களுக்குத் துணை நிற்கும் ஆண்களும் கூட, அந்தக் கதைகளுக்குள் இந்தக் கேள்விகளை வைத்துச் சொல்லலாம்.

[0]

மகளிர் சிந்தனைஜூன் 2025 இதழில் என் கட்டுரை

 

 

 

 

 

No comments: